அண்மையில் ஜார்ஜியாவில் ஒருவர் வீட்டின் மீது வந்து விழுந்த விண்கல் பூமியை விட 20 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வானில் ஒரு நெருப்புப் பந்து போல காட்சியளித்த அந்த விண்கல் ஜார்ஜியாவில் உள்ள மக் டனால்ப் (McDonough) என்ற நகரில் இருந்த வீட்டின் மீது வந்து விழுந்தது.

ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் (UGA) சேர்ந்த விஞ்ஞானிகள் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட விண்கல்லில் அடங்கியிருந்த பொருட்களை ஆராய்ந்தபோது அது 4.56 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கண்டறிந்தனர். இது அந்த விண்கல் பூமியை விட 20 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதைக் காட்டுகிறது.

“குறிப்பிட்ட இந்த விண்கல் பூமியின் வளி மண்டலத்திற்கு வந்து மக்டனால்ப் நகரத்தின் தரையில் விழும் முன்பு ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்தது” என்று ஜார்ஜியா பல்கலைக்கழக புவியியல் துறை ஆய்வாளர் ஸ்காட் ஹாரிஸ் (Scott Harris) கூறுகிறார். மக்டனால்ப் விண்கல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய விண்கல் செவ்வாய் கோளிற்கும் அப்பால் இருந்து வந்ததாகக் கருதப்படுகிறது.

மிகப் பெரிதாக இருந்த இது அரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உடைந்த பிரம்மாண்ட விண்கல் ஒன்றின் ஒரு சிறு பகுதியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதன் ஒரு சில துண்டுகள் பூமியின் சுற்று வட்டப் பாதையைக் கடந்து பூமிக்கு வருவதற்கு முன்பு சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் ஒரு வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருந்தது. 2025 ஜூன் 26 அன்று இந்த விண்கல் பூமியில் வந்து விழுந்தது.

3 அடி அல்லது ஒரு மீட்டர் அகலம் உள்ள இது மணிக்கு 29,000 மைல் அல்லது 47,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது என்று நாசா விண்கல் சூழல் அலுவலகம் (NASA's Meteoroid Environment Office) கூறுகிறது. அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதியில் ஒரு நெருப்புப் பந்து 240 இடங்களில் தென்பட்டது என்று அமெரிக்க விண்கல் சங்கம் (American Meteor Society) கூறுகிறது.

விண்கல் விழும் முன்பு பெரும் சத்தத்தைக் கேட்டு பலர் அது ஒரு நிலநடுக்கம் என்று தவறாக நினைத்தனர் என்று ஸ்மித்ஸோனியன் இதழ் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் செய்தி வெளியிட்டது. "பூமியின் வளி மண்டலத்தில் பயணம் செய்யும் போது அதன் வேகம் குறைந்தது. தரையை நெருங்கியபோது உடைந்து சிதறியது. என்றாலும் அப்போதும் அது பெரும் வேகத்துடன் பயணித்தது. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நமது வளி மண்டலம் இத்தகையவற்றின் வேகத்தைக் குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் 50 காலிபர் ஷெல் அல்லது 14 அடி ஷெல் துப்பாக்கியை (caliber shell) போல இரண்டு மடங்கு பெரிய இந்த விண்கல் குறைந்தபட்சம் விநாடிக்கு ஒரு கிலோமீட்டர் அல்லது 0.6 மைல் வேகத்தில் பயணித்தது. பத்து கால்பந்தாட்ட மைதானங்களை ஒரு விநாடியில் ஓடிக் கடப்பதற்கு சமமானது இது.

மக்டனால்ப் நகரின் வீட்டு மேற்கூரையின் மீது இந்த விண்கல் பளீரென்ற ஒளியுடன் ஒரு நேர்க்கோட்டில் வந்து விழுந்தது. சாளரங்கள், குளிர் சாதன வசதிகளை சேதப்பட்டுத்தியது. வீட்டின் முதன்மை அறையின் தரையில் பள்ளம் ஏற்பட்டது. குறைந்த தொலைவில் இருந்து சுட்டால் உண்டாகும் ஒரு துப்பாக்கியின் பேரோசை இது விழும்போது உண்டானது என்று ஸ்மித்ஸோனியன் இதழ் கூறுகிறது.

விழுந்த வேகத்தில் விண்கல் பொடியாக்கப்பட்ட நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. விண்வெளி தூசு அறை முழுவதும் சிதறியது. விண்கல்லின் 0.8 அவுன்ஸ்/23 கிராம் எடையுள்ள துண்டுகளை ஒளி மற்றும் எலக்ட்ரான் நுண்ணோக்கியைப் (optical and electron microscopy) பயன்படுத்தி விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர். இந்த பகுப்பாய்வில் இருந்து இது கல்லால் ஆன ஒரு விண்கல் (chondrite) என்று தெரிய வந்தது.

ஆய்வாளர்கள் விண்கல்லின் பாறைத் துண்டுகளை மேலும் ஆராயத் திட்டமிட்டுள்ளனர். விழுந்த விண்கல்லின் கூடுதல் பகுதிகள் கார்ட்டஸ்வில் (Cartersville) என்ற இடத்தில் உள்ள டெலஸ் அறிவியல் அருங்காட்சியகத்தில் (Tellus Science Museum) காட்சிப்படுத்தப்படும். ஜார்ஜியா வரலாற்றில் இது ஆவணப்படுத்தப்பட்ட 27வது சம்பவம். இதற்கு முன்பு ஐந்து முறை விண்கற்கள் இங்கு விழுந்துள்ளன.

விண்கற்களின் வருகை ஒரு சில பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக இது போன்ற சம்பவம் ஏற்படவில்லை. இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இப்போது அதிகரித்துள்ளதால் இந்த வான் பொருட்கள் விழும்போது அவற்றை மக்கள் சேகரித்து ஆய்வாளர்களுக்குத் தருவார்கள் என்ற நம்பிக்கை இப்போது ஏற்பட்டுள்ளது.

விண்வெளியில் தொலை தூரத்தில் இருந்து பூமிக்கு வரும் விண்கற்கள் நாம் வாழும் பூமியின் தோற்றம், அதன் வரலாறு பற்றிய அரிய பல தகவல்களை நமக்குத் தரும் என்று விண்வெளியியலாளர்கள் கூறுகின்றனர்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன் 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.