ஹாலந்து தேசத்திலிருந்து வந்து அமெரிக்காவின் வட பாகத்திலிருந்த எலிஸபெத் போர்ட் என்னும் ஊரில், 1730 ஆம் ஆண்டில் எடிசன் என்பவர் குடியேறினார். அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசனின் பாட்டனார். அவரது தந்தை ஸாமியல் எடிசன் காலத்தில் அமெரிக்காவின் வடபாகத்திலிருந்தவர்களுக்கும், தென் பாகத்திலிருந்தவர்களுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக, தெற்கே மிலான் என்னும் ஊரில் 1842 ஆம் ஆண்டு ஸாமியல் எடிசன் குடியேறினார். மிலான் நகரம் ஓர் ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. இதனால், அங்கே தானியங்களின் ஏற்றுமதி , இறக்குமதி வியாபாரம் அதிகமாக நடைபெற்று வந்தது. ஸாமியல் எடிசன் படகுகள், வீடுகள் முதலிய கட்டுவதற்கு பயன்படுத்தப்டும் பலகைகள் அறுத்து ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் ஒரு பட்டறையை ஆரம்பித்தார். ஸாமியல் எடிசனுக்கு, 11-02-1847 ஆம் நாள் மகனாகப் பிறந்தார் தாமஸ் ஆல்வா எடிசன். ஏழு வயது வரை மிலான் நகரத்தில் வளர்ந்தார். இளம் வயதில் அதிக விளையாட்டுப் புத்தியுடையவராயிருந்தார். அதேவேளை எதையும் கூர்ந்து கவனிக்கிற தன்மையும் இருந்தது. மற்ற குழந்தைகளோடு இயல்பாக விளையாடுவது இல்லை. அதற்கு மாறாக, தமது தந்தையிடம் சென்று ஏதேனும் கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருப்பார்.

thomas edison

                தந்தையின் வியாபாரம் குறைந்தது. எனவே, குடும்பத்தோடு ‘ஹியூரான் போர் ‘ (ழரசடிn ஞடிசவ) என்னும் துறைமுகப்பட்டினத்திற்குச் சென்று குடியேறினார். அந்த ஊரில் தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லவில்லை. மூன்று மாதம் வரையில்தான், பள்ளிக் கூடம் சென்றார். ஆசிரியர்கள் இவரை முட்டாளென்று பரிகசித்தார்கள். எடிசனுடைய தாயார் , தன் மகனைப் பள்ளிக்கு அனுப்பாமல் , தானே வீட்டில் பாடம் கற்பித்து வந்தார்; மகனும் உற்சாகத்தோடு, ஆர்வமாக படித்தார். எடிசன் சிறுவயது முதற் கொண்டே வரலாறு, வானஇயல், அறிவியல், வேதியியல் முதலியவை சம்பந்தப்பட்ட நூல்கள் மீது ஆர்வங்கொண்டு படித்தார். தான் படித்தவற்றைப் பரிசோதனை செய்து பார்ப்பதில் எடிசனுக்கு ஆர்வம் மிக அதிகம். இதற்காக வீட்டின் அறையொன்றில் , தனக்கு வேண்டிய கண்ணாடிப் புட்டிகள், சில திராவகங்கள் முதலியவற்றைச் சேகரித்து, தனது முதல் பரிசோதனைச் சாலையை அமைத்தார். பெற்றோர்கள் கைச்செலவுக்கென்று கொடுக்கும் பணத்தில், மருந்துக் கடைக்குச் சென்று தேவையான ரசாயனப் பொருள்களை வாங்கி வந்து விடுவார். இவரது உற்சாகமும், உழைப்பும் ரசாயனப் பரிசோதனையிலேயே சென்றன.

                ரசாயனப்பொருள்கள் வாங்க எடிசனுக்கு பணம் தேவைப்பட்டது. எனவே, தாமே பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். இரயில் வண்டிகளில் பத்திரிக்கைகள் விற்றுப் பணம் சம்பாதிக்கத் தீர்மானித்தார். ஹியூரான் பட்டினத்திற்கும் டெட்ராயிட் என்னும் ஊருக்கும் இடையே சென்று கொண்டிருந்த ‘ கிராண்ட் ட்ரங்க் ‘ இரயிலில் பத்திரிகைகளை விற்க இரயில்வே அதிகாரிகளிடம் அனுமதி பெற்றார். காலை முதல் இரவு வரை இரயிலில் பத்திரிகைகள் விற்றுப் பணம் சம்பாதித்தார் எடிசன். பிறகு, கையிலிருந்த பணத்தைக் கொண்டு ஹியூரான் இரயில் நிலையத்தில் பத்திரிகைகளை விற்பதற்கென்று ஒரு கடையும், கறிகாய்கள் விற்பதெற்கென்று ஒரு கடையும் ஆரம்பித்து நடத்தினார். இரவு பகலாக உழைத்துச் சம்பாதித்தார். அப்பொழுது எடிசனுக்கு வயது பன்னிரண்டு தான் !

                எடிசன் தாம் சம்பாதித்த பணத்தில் ஒரு டாலரைத் தாயாரிடம் கொடுத்து விடுவார். மீதிப் பணத்திலிருந்து தனது சோதனைக்கு வேண்டிய இரசாயனப் பொருள்கள் வாங்குவதற்கு செலவிட்டார். பத்திரிகைகளைச் சேமித்து வைத்து விற்பதற்காக, இரயில்வே அதிகாரிகள் எடிசனுக்கு, சாமான்களை போட்டு வைக்கும் பெட்டியில் ஒர் இடம் கொடுத்திருந்தார்கள். பத்திரிகைகள் விற்கிற நேரம் போக மற்ற நேரங்களில் , இந்தப் பெட்டியிலேயே ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்பார்.

                ஜெர்மன் இரசாயன அறிவியலாளர் எழுதிய நூலொன்று இவருக்குக் கிடைத்தது. அதைப் படித்து, அதில் கூறப்பட்டடுள்ள ஒவ்வொரு பரிசோதனையையும் செய்து பார்த்தார் எடிசன்!

                பத்திரிகைச் செய்திகளைப் படிப்பதில் மக்களுக்கு உள்ள ஆர்வத்தை அறிந்த எடிசன், தாமே ஒரு பத்திரிகையை நடத்திட முடிவு செய்தார். டெட்ராயிட் நகரத்திலிருந்து ஒரு சிறிய அச்சு இயந்திரத்தையும், அதற்கு வேண்டிய எழுத்துக்களையும் வாங்கினார். அச்சுக் கோப்பது முதலிய அனைத்து வேலைகளையும் விரைவிலேயே கற்றுக் கொண்டு ‘ தி வீக்லி ஹெரால்ட் ‘ என்னும் வாரப் பத்திரிகையை வெளியிட்டார். இவரே ஆசிரியர், அச்சுக் கோர்ப்பவர், அச்சடிக்கிறவர், விளம்பரம் சேகரிப்பவர், பத்திரிகைகளை விநியோகிப்பவர் - என அனைத்தும் அவரே செய்தார். இந்தக் காலத்தில் எடிசனுக்கு மின்சார சக்தி எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.

                இரயில் வண்டியில் நடந்து கொண்டிருந்த எடிசனுடைய பத்திரிகாலயமும், பரிசோதனைச் சாலையும் நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால், ஒரு நாள் இரயில் வண்டி வேகமாகச் சென்று கொண்டு இருந்த போது , எடிசனுடைய பெட்டியிலிருந்த ஒரு கந்தக வத்தி திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. இந்தத் தீ இரயில் வண்டி முழுவதும் பரவியது. உடனே வண்டியை நிறுத்தி, தண்ணீரைக் கொண்டு தீயை அணைத்தார்கள். இரயில்வே கார்டு மிகுந்த கோபத்தோடு, எடிசன் பெட்டியிலிருந்த அச்சு இயந்திரத்தையும், பரிசோதனைக் கருவிகளையும் மவுண்ட் கிளமென்ஸ் என்ற இரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் தூக்கியெறிந்து விட்டான். எடிசனுடைய காதை திருகி , கன்னத்திலும் ஓங்கி அறைந்து விட்டான். எடிசனுக்கு அன்று முதல் சரியாகக் காது கேளாதவனாகவே தமது வாழ்நாள் முழுவதும் இருந்தார். இதன் பிறகு அச்சு இயந்திரத்தையும், பரிசோதனைச் சாலையையும் தமது வீட்டிற்கே கொண்டு வந்து விட்டார். சிறிது காலத்தில் பத்திரிகை நின்றுவிட்டது.

                டெட்ராயிட் நகரத்தில் உள்ள அரசாங்க புத்தக சாலைக்குச் சென்று பல நூல்களைப் படித்து அறிவை பெருக்கிக் கொண்டார். மேலும், இரயில்வே பணிமனைக்குச் சென்று , அங்கே இயந்திரங்கள் எப்படி இயங்குகிறது என்பதை கவனித்து வந்தார். அங்கே பணிபுரிந்தவர்களுடன் நட்பு கொண்டு , இரயில்வே இஞ்சினையும் தானே ஓட்டினார்.

                 எந்த இரயில் நிலையத்தில் எடிசனுடைய சாமான்களெல்லாம் தூக்கியெறியப்பட்டனவோ, அதே மவுண்ட் கிளாமன்ஸ் இரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் எடிசன் ஒரு வண்டிக்காகக் காத்துக் கொண்டிருந்தார். அங்கு, ஸ்டேசன் மாஸ்டரான மெக்கன்ஸி என்பவரது குழந்தை இரயில் பாதையில் விளையாடிக் கொண்டிருந்தது. இதன் பின்னால் ஒரு சரக்கு இரயில் வந்து கொண்டிருந்தது. குழந்தைக்கு இது தெரியவில்லை. இதனைக் கவனித்த எடிசன், தன் கையிலிருந்த பத்திரிகைக் கட்டையும், தலைத் தொப்பியையும் தூக்கியெறிந்து விட்டுக் கீழே இறங்கிக் குழந்தையைக் காப்பாற்றினார். ஸ்டேசன் மாஸ்டரான மெக்கன்ஸி, இவருக்கு நன்றி செலுத்தினார். மேலும், எடிசனை இரயில்வே தந்தியடிக்கும் தொழிலில் சேர்த்து விட்டார். இறுதியில் ஓண்ட்டாரியா மாநிலத்திலுள்ள ‘ஸ்ட்ரா போர்ட் ‘ இரயில் நிலையத்தில் எடிசனுக்கு ஒரு தந்தி குமாஸ்தா வேலை கிடைத்தது. காலை முதல் மாலை வரை பன்னிரண்டு மணி நேரம் பணிபுரிந்தார். எடிசன், பல ஊர்களில் தந்தி குமாஸ்தாவகப் பணி புரிந்தார் . தான் ஏற்றுக் கொண்டுள்ள தொழிலில் மனப்பூர்வமாக ஈடுபட்டு, அதில் இன்னும் என்னென்ன விதமான முன்னேற்றங்களைச் செய்யலாம் என்பதில் கவனம் செலுத்தினார். ஒரு நாள் இவர் பரிசோதனை செய்து கொண்டிருந்த போது, திராவகம் இரயில் நிலைய மேலாளருடைய மேஜை விரிப்பை எரித்துப் பாழாக்கிவிட்டது. இதனால் கோபம் கொண்ட மேலாளர், எடிசனை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.

                மீண்டும் வேலை தேடி அலைந்தார். எப்படியோ முயற்சி செய்து, மின்சார சாமான்கள் செய்கிற ஒரு பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார். இங்கே வேலை செய்து கொண்டிருக்கும் போதுதான் , சட்டசபைகளில் ஒட்டுகள் எடுப்பதற்கு ஒரு கருவியைக் கண்டுபிடித்து அதன் உரிமையைப் பதிவு செய்தார். இதுதான் இவர் முதன் முதலாகக் கண்டுபிடித்த கருவி.1869 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நாளன்று இதற்கான உரிமையை பதிவு செய்தார். இக்கருவியைப் பற்றி சட்டசபை அதிகாரிகள் முன்னிலையில் விளக்கிச் சொல்ல வாஷிங்டன் நகருக்குச் சென்றார். ஆனால், அதிகாரிகள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

                பின்னர், எடிசன் வேலைக்காக பல ஊர்களிலும் அலைந்து திரிந்தார். இறுதியில் பாஸ்ட்டன் நகரில் ஒரு தந்தி அலுவலகத்தில் வேலையில் சேர்ந்தார். தனது ஊதியத்தின் பெரும் பகுதியை நூல்கள் வாங்குவதிலும், ஆராய்ச்சிக் கருவிகள் வாங்குவதிலும் செலவழித்தார். தினம் பதினெட்டு மணி நேரம் பணி புரிந்தார். ஒரு நாள் தமது நண்பனான ஆடம்ஸ் என்பவரிடம், “ நான் செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. வாழ்க்கையோ மிகக் குறுகியது. ஆதனால் நான் மிக வேகமாக வேலை செய்யப்போகிறேன்”. – என்று சொன்னார். எடிசனின் மனமெல்லாம் ஆராய்ச்சியில் சென்றதே தவிர, தந்தி ஆபிஸ் வேலையில் ஈடுபடவில்லை. இதற்காக எடிசன் சோர்வு அடையவில்லை. அதற்குப் பதிலாக புதிய சாதனங்கள் பலவற்றைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று உறுதிபூண்டார்.

                நியூயார்க் நகரத்தில் தங்க நாணயத்தை விற்பனை செய்கிற ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். இவர் , தங்க விலையின் ஏற்றத்தையும், இறக்கத்தையும் அறிவிக்கிற மின்சாரக் கருவியை, பல வகையிலும் மேம்படுத்தி, வியாபாரிகள் எளிதாக தங்க விலையை அறிந்து கொள்கிற மாதிரி செய்தார். அப்பொழுது எடிசனுக்கு வயது இருபத்திரெண்டு !

                லெப்பர்ட்ஸ் என்பவர், எடிசனுடைய ஆராய்ச்சிகளுக்கெல்லாம் ஊக்கமளித்து வந்தார். பல புதிய கருவிகளைக் கண்டுபிடித்தார். எடிசனுக்கு, லெப்பர்ட்ஸ் நாற்பதினாயிரம் டாலர் கொடுத்தார். அந்த பணத்தைப் போட வங்கியில் கணக்குத் திறந்தார் எடிசன் !

                 எடிசன், தமக்குக் கிடைத்த தொகையை மூலதனமாகக் கொண்டு, நேவார்க் என்னும் இடத்தில் ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்தார். அத்தொழிற்சாலையில் ஜம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். தொழிலாளர்களோடு இணைந்து தானும் உழைத்தார். நல்ல வருமானம் கிடைத்தது. அதைக் கொண்டு மேலும் ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்தார். இந்தத் தொழிற்சாலைகளை நடத்திக் கொண்டிருந்த காலத்தில் சுமார் நாற்பத்தைந்து விதமான புதிய கருவிகளைக் கண்டுபிடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்.

                ‘ ஸ்டென்சில்’  முறையைக் கண்டுபிடித்தவர் எடிசன் தான். டெலிபோன் முறையை அய்ரோப்பாவின் பல இடங்களில் பரப்புவதற்காகச் சில நிறுவனங்களையும் ஆரம்பித்தார். லண்டனில் நிறுவப்பட்ட , எடிசனின் நிறுவனமொன்றில் 1879 ஆம் ஆண்டு பிரபல ஆங்கில நாவலாசிரியரான பெர்னாட் ஷா ஒரு எழுத்தராகப் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                லௌட் ஸ்பீக்கர் என்ற ஒலிபரப்பும் கருவி எடிசனால் கண்டுபிடிக்கப்பட்டது.

                மேரி ஸ்ட்டில் வெல் என்ற பெண்மணியை மணந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார் எடிசன். தமது மனைவியுடன் நியூயார்க் நகரின் அருகில் உள்ள மென்லோ பார்க் என்னும் இடத்திற்குச் சென்று வசித்தார்.

                ‘ போனோகிராப்’ என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். எடிசன் கண்டுபிடித்த முதல் போனோகிராப் கருவி இப்பொழுது லண்டனிலுள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. பல செல்வந்தர்களின் துணையோடு ‘எலக்ட்ரிக் லைட் கம்பெனி ‘ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் எடிசன். அதிக பிரகாசமுடையதாகவும், மலிவாகவும் உள்ள மின்சார விளக்கை கண்டுபிடிக்க எடிசன் செய்த பரிசோதனை சுமார் 1600 என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. முதன் முதலாக மின்சார விளக்குகள் நியூயார்க் நகரத்தில் எரியத் தொடங்கியது 1882 ஆம் ஆண்டு செப்படம்பர் மாதம் நான்காம் நாள் ஆகும். 1890 ஆம் ஆண்டு சலனப்படக் கருவியைக் கண்டுபிடித்தார். இதற்கு ‘ கினிடோகிராப்’ என்று அப்பொழுது பெயர். இதுவே பின்னர் சினிமாவாயிற்று. எடிசன் முயன்று பேசும் சலனப்பட நிலைக்கு கொண்டு வந்தார்.

                                தாமஸ் ஆல்வா எடிசன் தமது அறுபத்து மூன்றாவது வயதிற்குள் 1328 புதிய சாதனங்களைக் கண்டுபிடித்து உரிமைகளைப் பதிவு செய்தார்.

                எடிசன் எப்பொழுதும் ஒய்வு எடுத்தது கிடையாது. ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்குச் செல்வது தான் அவருக்கு ஒய்வு. எடிசன் தமது எழுபத்தைந்தாவது வயதில் கூட மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்தார். நாள் ஒன்றுக்கு பதினெட்டு முதல் இருபது மணி நேரம் வேலை செய்வார். எடிசன் ஆடம்பரத்தை விரும்பாதவர். மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.

                எடிசன் , தமது ஆராய்ச்சி உரிமைகளைப் பதிவு செய்து கொண்டதன் மூலமாகவும் அவற்றைப் பிறருக்கு விற்பனை செய்ததன் மூலமாகவும் ஏராளமான பொருள் சம்பாதித்தார். ஆனால், அவர் பணமே தமது லட்சியமாகக் கொள்ளவில்லை.

                 விடா முயற்சி, சலியாத உழைப்பு இவை இரண்டும் தான் எடிசனுடைய வாழ்க்கையை நிர்ணயித்தது.

                எடிசன் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் நாள், தமது எண்பத்து நான்காவது வயதில் காலமானார். அவர் மறைந்தாலும், அவரது அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக மக்கள் மனதில் அவரது பெயர் என்றும் நிலைத்து நிற்கும்!

- பி.தயாளன்

Pin It