கனவு காணவும் அந்த கனவுகள் நனவாகவும் மனிதனை ஊக்குவிப்பது வானின் வர்ணஜாலங்களே. நட்சத்திரங்கள் தாலாட்டு பாடும் இரவில் பல அற்புதங்கள் ஒளிந்திருக்கும் வானம் ஒரு அதிசய உலகமே. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மனிதனின் கவனத்தை எப்போதும் ஈர்ப்பவை. நாள் தவறாமல் சூரியன் கிழக்கில் உதிக்கிறது; மேற்கில் மறைகிறது. சூரியன் பூமியைச் சுற்றுகிறது என்று ஆதிகால மனிதன் நம்பினான்.

galaxy 550பிரபஞ்சம் எந்த அளவிற்குப் பெரியது? அதற்கு எல்லைகள் உண்டா? அதற்கும் அப்பால் என்ன? அறிய வேண்டும் என்ற மனிதனின் ஆவலில் பிறந்ததே வானியல். நட்சத்திரக் கூட்டங்கள், சந்திரன் உட்பட்ட அன்றாட வான் காட்சிகளைத் தேதியிட்டுப் பதிவு செய்வதே வான் உற்றுநோக்கலில் ஆரம்பப் படி. படிப்படியாக புதிய நட்சத்திரங்களைக் காணும்போது அவற்றின் பெயர்களையும் பதிவு செய்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். செய்தித்தாள்களில் வெளியிடப்படும் நட்சத்திர வரைபடங்கள், ஸ்டெல்லாரியம் (Stellarium), மொபைல் ஸ்டார் மேப் (Mobile Star Map), ஸ்கை வியூ (SkyView), ஐஎஸ்எஸ் டிடெக்டர் (ISS Detector) போன்ற மொபைல் போன் செயலிகள் இதற்கு உதவும்.

ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களையும் சந்திரனையும் உற்றுநோக்குபவர்களுக்கு வானத்தைப் பார்த்தே சரியான நேரத்தைக் கண்டுபிடிக்க முடியும். மொபைல் போன் சிக்னல்கள் கிடைக்காத இடங்களில் கூட நேரமறிய வானத்தை உற்றுநோக்கி அறியலாம். சூரியனும் எட்டு கோள்களும் அடங்கிய சூரிய மண்டலமும், அதன் பகுதியாக உள்ள கோள்கள், குறுங்கோள்கள் (சிறிய கோள்கள்), வால் நட்சத்திரங்கள், விண்கற்கள் ஆகியவை அனைத்தும் சூரிய மண்டலத்தின் பகுதிகளே.

ஆகாய கங்கை அல்லது பால்வீதி (Milky Way) என்பது நாம் வாழும் பூமி இருக்கும் சூரிய மண்டலம் உட்பட கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் அடங்கும் வியூகமே. இதற்கு அருகில் ஏராளமான நட்சத்திர மண்டலங்களும் அவற்றில் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் உள்ளன. நட்சத்திரங்களில் சில மங்கலானவை; வேறு சில பிரகாசமானவை. ஒளி வீசும் நட்சத்திரங்கள் எப்போதும் பெரியவையாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

பிரகாசமான நட்சத்திரங்களுக்கு அருகில் அவை இருக்கக்கூடும்; கோடிக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ளன. இந்த பிரம்மாண்டமான தூரத்தைக் கிலோமீட்டரைப் பயன்படுத்தி அளக்க முடியாது. அதனால் இது ஒரு ஆண்டில் ஒளி பயணிக்கும் தூரத்தைக் கொண்டு 'ஒளி ஆண்டு' (Light year) என்ற அலகினால் அளக்கப்படுகிறது. சூரியன் தவிர நமக்கு மிக அருகில் இருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் ஆல்ஃபா செண்டாரி (Alpha Centauri) மற்றும் பீட்டா செண்டாரி (Beta Centauri). இவை நான்கு ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் தொலைவில் உள்ளன.

நான்கு ஒளி ஆண்டுகள் என்பது ஒரு ஒளிக்கீற்று அங்கிருந்து பூமியை அடைய நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என்று பொருள். பிரபஞ்சத்தில் பலதரப்பட்ட நட்சத்திரக் கூட்டங்கள் உள்ளன. இவற்றில் இருந்து வரும் பலவித சிக்னல்களை வைத்தே பிரபஞ்சத்தைப் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர். குவாசார்கள் (Quasars), பல்சார்கள் (Pulsars), நியூட்ரான் நட்சத்திரங்கள், ரேடியோ நட்சத்திரங்கள், கருந்துளைகள் (Black holes) போன்றவை இவற்றில் ஒரு சில. ஆனால் இவை எவற்றிலும் பூமியைப் போல மண்ணும் நீரும் இல்லை.

பெரும்பாலான நட்சத்திரங்கள் வாயுக்கோளங்களே. சூரியனே ஒரு பெரிய வாயுக் கோளம்தான். ஹைட்ரஜனும் ஹீலியமும் உள்ள சூரியனில் ஹைட்ரஜன், ஹீலியமாக மாறிக்கொண்டேயிருக்கிறது. அப்போது உருவாகும் ஆற்றலே சூரிய ஆற்றல். சூரியனில் எப்போதும் அணு இணைவு (Nuclear fusion) நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால் இது ஒரு பிரம்மாண்டமான அணு உலை. இவ்வாறு ஹைட்ரஜன் ஹீலியமாக மாறிக்கொண்டே இருந்தால் என்றேனும் ஒரு நாள் சூரியன் மறைந்து விடாதா?

ஒரு காலத்தில் சூரியன் இல்லாமல் போய்விடும். ஆனால் இதற்கான சாத்தியம் நூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகே நிகழும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதுவரை இந்த பூமியில் நாம் சுகமாக வாழலாம். சுமார் 10,000 கோடி கிலோமீட்டர் அளவுள்ள நம் பால்வீதி நட்சத்திர மண்டலம் நிற்காமல் சுழன்று கொண்டேயிருக்கிறது. மற்ற விண்மீன் மண்டலங்களிடம் இருந்து விலகிக்கொண்டிருக்கிறது. பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் அளவு நாம் ஊகிப்பதைக் காட்டிலும் பல மடங்கு அதிகம்.

விண்மீன் மண்டலங்களில் நட்சத்திரங்கள் பிறந்துகொண்டும் மரணமடைந்தும் கொண்டிருக்கின்றன. இதனால் அவற்றில் இருந்து கிடைக்கும் அலைகளில் வேறுபாடு உருவாகிறது. இந்திய விஞ்ஞானி டாக்டர் எஸ். சந்திரசேகர் (சுப்பிரமணியன் சந்திரசேகர்) இதில் பெரும் பங்காற்றியுள்ளார். முதன்முதலாகத் தொலைநோக்கி மூலம் உற்றுநோக்கிச் சூரிய மண்டல கோள்களைப் பற்றிக் கூறியவர் இத்தாலியரான கலிலியோ கலிலி. வியாழன், யுரேனஸ், சனி ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பூமி சிறிய ஒரு கோள் என்று அவர் கூறினார்.

அவரே வான் அறிவியலுக்கு அடித்தளம் அமைத்தவர். இங்கிலாந்தில் ஒரு தேவாலயத்தில் இசைக்கருவி வாசிப்பவராக இருந்த வில்லியம் ஹெர்ஷல் 1781-ல் யுரேனஸைக் கண்டுபிடித்தார். விண்மீன்களை உற்றுநோக்குவதே அவரது முதன்மைப் பொழுதுபோக்கு. யுரேனஸின் கண்டுபிடிப்பு தற்செயலான ஒன்று. தொலைநோக்கி மூலமே அதைக் காண முடியும். இக்கண்டுபிடிப்பினால் மகிழ்ந்த அரசர் அவருக்குப் பெரியதொரு தொகையைப் பரிசாகக் கொடுத்தார்.

தொடர்ந்து அவர் முழுநேரமும் வானை ஆராயத் தொடங்கினார். முன்பின் தெரியாத ஏதோ ஒரு கோள் யுரேனஸின் மீது தாக்கம் செலுத்துகிறது என்பதை விஞ்ஞானிகள் ஊகித்தனர். இது பற்றி மேலும் ஆராய்ந்தபோதே நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டது. 1846-ல் அர்பன் லேவேரியர் (Urbain Le Verrier) என்ற பிரெஞ்சு விஞ்ஞானி புதியதொரு கோளைக் கணக்கிட்டார். தொடர்ந்து நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டது. பெர்லின் உற்றுநோக்கல் மையத்தில் யோகான் காலே (Johann Galle) மற்றும் ஹெய்ன்ரிச் டாரஸ்ட் (Heinrich d'Arrest) ஆகியோர் நெப்டியூனைக் கண்டறிந்தனர்.

வான் அறிவியலின் வரலாற்றைப் பார்த்தால் கி.மு 624-ல் கிரேக்கப் பகுதியில் ஒன்றில் பிறந்த தாலீஸில் (Thales) இருந்து தொடங்கி கி.பி 180-ல் இறந்த தாலமியுடன் (Ptolemy) எட்டு நூற்றாண்டு காலம் நீடித்த புராதன கிரேக்க வானியலின் பொற்காலம் முடிவிற்குக் வந்தது. கி.மு 330-ல் பிறந்த ஆர்க்கிமிடிஸ் உட்பட்டவர்கள் சூரியன் பூமியைச் சுற்றுகிறது என்று நம்பினர். அரிஸ்டார்க்கஸ் (Aristarchus) என்ற கிரேக்க விஞ்ஞானி பூமியே சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்னார். ஆனால் அதை எவரும் நம்பவில்லை. பல நூறாண்டுகளுக்குப் பிறகே அறிவியல் உலகம் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டது.

சந்திரனையும் சூரியனையும் புரிந்துகொண்டு அவற்றின் அன்றாடப் பயணப் பாதையைக் கொண்டு பொழுது, நாள், மாதம், ஆண்டுகளைக் கணக்கிட்டனர். எகிப்தியர்கள் சிரியஸ் (Sirius) விண்மீனின் உதயத்தை வைத்தே நைல் நதியில் வெள்ளப்பெருக்கு எப்போது ஏற்படும் என்பதை அறிந்தனர். பூமி அதன் அச்சில் சுழல்வதாலேயே இரவு பகல் ஏற்படுகிறது என்று ஆரியபட்டர் கூறினார். ஆனால் இந்தச் சிந்தனைக்கு அன்று போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அன்று புகழ்பெற்றிருந்த வானியலாளர்கள் அவருடைய கொள்கையை ஏற்க மறுத்தனர்.

ஒரு வால் நட்சத்திரத்தின், ஒரு சந்திர கிரகணத்தின், ஒரு சூரிய கிரகணத்தின் வரவு அன்று மனிதரிடையில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது. 1986-ல் பூமிக்கு வருகை தந்த ஹேலி வால் நட்சத்திரத்தைப் பார்த்த நினைவு இன்றும் நம்மில் பலர் மனதில் பசுமையாக இருக்கும். வால் நட்சத்திரங்களின் வரவு எப்போதும் அதிசயங்கள் நிறைந்த காட்சிகளைத் தந்து செல்கின்றன. ஹேலி பூமிக்கு வந்த காலம் உற்றுநோக்குபவர்களின் திருவிழாக் காலம்.

கேரளாவில் இந்த வால் நட்சத்திரத்தை வரவேற்று எல்லா இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. எட்மண்ட் ஹேலி 1682-ல் ஒரு வால் நட்சத்திரத்தின் பயணப் பாதையை ஆராய்ந்தபோது அது சூரியனைச் சுற்றுவதை அறிந்தார். 1758-ல் அது மீண்டும் பூமிக்கு வரும் என்று ஊகித்தார். பிறகு அது 1835, 1910, 1986 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் பூமிக்கு வந்தது. இனி 2062-ல் அது பூமியைக் காண மறுபடியும் வருகை தரும்.

ரேடியோ வானியல், புறஊதாக் கதிர் வானியல், எக்ஸ்-கதிர் வானியல், ஆப்டிகல் வானியல், காமா வானியல் போன்றவை இன்று உருவாகியுள்ள சில பிரிவுகள். உலகின் பல பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ள பெரிய தொலைநோக்கிகள் வாயு மண்டலத்தின் தடைகள் இல்லாமல், பிரபஞ்சத்தில் இருந்து வரும் சிக்னல்களைக் கண்டறிய உதவுகின்றன. 1990-ல் நிறுவப்பட்ட ஹப்பிள் (Hubble) தொலைநோக்கி இதில் முக்கியமானது.

அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து இத்தொலைநோக்கியை ஏவின. ஒரு செயற்கைக்கோள் போல இது விண்வெளியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து 1999-ல் சந்திரா மற்றும் 2009-ல் கெப்லர் தொலைநோக்கிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இந்திய விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகரின் பெயரில் 'சந்திரா' தொலைநோக்கி ஏவப்பட்டது. 2021-ல் ஜேம்ஸ் வெப் (James Webb) தொலைநோக்கி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய முகமையால் ஏவப்பட்டது.

2023-ல் யூக்ளிட் (Euclid) தொலைநோக்கி ஐரோப்பிய முகமையால் அனுப்பப்பட்டது. இத்தொலைநோக்கிகளில் இருந்து புதிய அறிவுகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. 1972-ல் அனுப்பப்பட்ட பயோனியர் (Pioneer) விண்கலம் வியாழன், சனியை அருகில் சென்று ஆராய்ந்த பிறகு இப்போது சூரிய மண்டலத்திற்கும் அப்பால் பயணம் செய்து கொண்டிருக்கிறது. 2003-ல் கூட இதில் இருந்து சிக்னல்கள் கிடைத்தன.

வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் கோள்களை ஆராய 1977-ல் வாயேஜர் 1 மற்றும் 2 (Voyager 1 & 2) விண்கலங்கள் ஏவப்பட்டன. இவற்றில் வாயேஜர் 2 யுரேனஸ் மற்றும் நெப்டியூனை ஆராய்ந்தது. இரண்டு விண்கலங்களும் முடிவில்லாத விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளன. பூமியில் இருந்து எந்த உயிரினம் இந்த விண்கலனை அனுப்பியது என்பதை அடையாளப்படுத்த படங்கள், அடையாளங்கள் வைத்து அனுப்பப்பட்டுள்ளன. இசை, பல மொழிகளில் வாழ்த்துகள், இயற்கையின் ஒலிகள், மனிதர் மற்றும் பூமியின் படங்கள் அதில் பதிக்கப்பட்டுள்ளன.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த வாகனங்களில் இருந்து சிக்னல்கள் மெல்லிய அளவில் கிடைக்கின்றன. எல்லையில்லாத தொலைவிற்குச் சென்று கொண்டிருக்கும் இவற்றின் பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துவோம். விண்கற்கள், எரிகற்கள் ஆகியவை வானில் நாம் காணும் வேறு சில அதிசயக் காட்சிகள். நட்சத்திரங்கள் வழிமாறி பூமியின் மீது வந்து விழுகின்றன என்று முன்பு நம்பப்பட்டது.

உண்மையில் இவை பூமியின் வளிமண்டலத்திற்கு வழிமாறி வந்துவிழும் பெரிய பாறைகள் மற்றும் வால் நட்சத்திரங்களின் மிச்சமீதிகளே. அதிவேகத்தில் வரும் இவை பூமியின் வளிமண்டலத்தின் வழியாகப் பயணிக்கும்போது தீ பிடித்து ஆவியாகிப்போகின்றன. அபூர்வமாக அவற்றில் சில பகுதிகள் பூமியில் வந்து விழுவதும் உண்டு. இவ்வாறு வந்து விழுந்தவற்றில் சில பல நாடுகளின் அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 1947-ல் சைபீரியாவில் விழுந்த விண்கற்களில் 23 டன் எடையுள்ள ஒரு விண்கல்லின் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் பாறைகளே. இவற்றில் இரும்பு மற்றும் நிக்கல் அதிகம் உள்ளது. ஆகாயமே தேடலில் அடங்காத ஆர்வம் உடைய மனிதனை ஆதிகாலம் முதல் அற்புதப்படுத்தி வந்த ஒன்று. நட்சத்திரங்களை உற்றுநோக்குவது பிரபஞ்சத் தேடலின் முதல் படி. ஆகாயத்தில் ஒளிவீசும் பொருட்களைச் சிதறச் செய்தது போல காட்சி தருபவையே கோடிக்கணக்கான விண்மீன்கள். அவை ஒவ்வொரு நொடியிலும் மின்மினிப் பூச்சிகள் போல ஒளிவீசிக்கொண்டிருக்கின்றன.

ஐரோப்பியர்களே 17-ம் நூற்றாண்டில் தொலைநோக்கிகளை முதலில் கண்டுபிடித்தனர். ஜெய்பூர் மகாராஜா ஜெய் சிங் என்பவரே வான் உற்றுநோக்கலுக்காக முதலில் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்குத் தொலைநோக்கிகளை இறக்குமதி செய்தார். உற்றுநோக்கும் மையங்களை டெல்லி உட்பட பல இடங்களில் நிறுவினார். ஐரோப்பாவில் இருந்து வந்த கருவிகளை வைத்தே டெல்லியில் ஜந்தர் மந்திர் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் பல நகரங்களிலும் இன்று கோளரங்கங்கள், அருங்காட்சியகங்கள், விண்வெளி காட்சிக்கூடங்கள் உள்ளன. இவற்றிற்குச் சென்று பார்த்தால் பல அறிவுகளை நாம் பெறலாம் என்பது உறுதி.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.