இயற்கையின் படைப்பில் மனித மூளை என்னும் உறுப்பு மர்மமானது. அதிசயங்கள் நிறைந்தது. இன்றும் மூளையில் நிகழும் மாற்றங்கள் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர். எண்பது லட்சத்திற்கும் கூடுதலான நியூரான்கள் என்னும் நரம்பு செல்கள் ஒரு டிரில்லியன் முடிச்சுகளால் பிணைக்கப்பட்டுள்ள சிக்கலான செயல்பாடுகள் கொண்ட உறுப்பே மனித மூளை. இதன் ஒரு பகுதியாகக் கருதப்படும் மனதில் ஏற்படும் பல நோய்களில் அதிகம் அறியப்படாதவையே மனப்பிறழ்வு நோய்கள்.mental health 680இப்படியும் ஒரு நோய்:

மனப்பிரமை உடையவர்கள் தாங்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக நம்புவர். தன் உடல் அழுகிவிட்டதாக, உள்ளுறுப்புகள் செயலிழந்து விட்டதாக, உடல் உறுப்புகள் மறைந்துவிட்டதாக உணர்வர். சிலருக்குத் தான் இறந்துவிட்டதாக மாயக் குரல்கள் கூடக் கேட்பதுண்டு. மனிதர்களை இந்த நோய் நடைப்பிணமாக மாற்றிவிடுகிறது. இந்த நோய் உடையவர்கள் பிறரிடம் இருந்தும் சமூகத்திடம் இருந்தும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வர். பேசுவதை நிறுத்திவிடுவர். இதை 1880இல் முதல்முதலாக மருத்துவர் ஜூல்ஸ் கோடார்ட் (Jules Cotard) கண்டறிந்தார்.

அற்புத உலகில் ஆலிஸ் என்னும் மனப்பிறழ்வு நோய்

அரிதான ஒரு விசித்திர பிறழ்வு இது. பார்வை மற்றும் புலப்பாட்டு உணர்வில் இது ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தன்னைச் சுற்றியுள்ள பொருட்கள், மனிதர்கள், அவற்றின் உண்மையான அளவு, ரூபம் ஆகிய பரிமாணங்களில் உணர்வதில் பிறழ்வுகள் ஏற்படுகின்றன. சிலருக்குத் தன்னைச் சுற்றியுள்ளவை மிகச் சிறியதாகப் புலப்படும்.

விரல் அளவு மனிதர்கள், சிற்றுருவங்களாக உலகம் தெரியும். சில நேரம் உருவங்கள் இயல்பை விட பல மடங்கு பெரியதாகப் பிரம்மாண்டமானதாகத் தோன்றும். தன் சொந்த உடல் உறுப்புகளையே இவர்கள் இயல்பை விட பெரியதாக அல்லது மிகச்சிறியதாக உணர்வர். 1955இல் ஜான் டாட் (John Todd) என்ற ஆங்கில மனநல மருத்துவர் இந்நோயைக் கண்டறிந்தார்.

அந்நியக் கை மாய உணர்வு

அந்நியக் கை மாய உணர்வு என்பது இன்னொரு வகை பிறழ்வு நோய். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கையே தன்னில் இருந்து வேறுபட்டுப் பிரிந்து அந்நியமாகிவிட்டதாகக் கருதுவர். அந்தக் கை நம் கட்டுப்பாடு இல்லாமல் தான்தோன்றியாகச் செயல்படும். நம் விருப்பம் அல்லது கட்டுப்பாடு இல்லாமல் தானாக இயங்கும்; செயல்களைச் செய்யும்.

பாதிக்கப்பட்டவருக்கு வேறு யாரோ ஒருவர் தன்னுடைய கையைக் கட்டுப்படுத்துவது போலவும் அதை இயக்குவது போலவும் தோன்றும். தன் கைக்கு ஒரு தனி ஆன்மாவும், உயிரும் இருப்பதாக உணர்வர். கை தானாகவே முகத்தைத் தொடும். சட்டை பொத்தானைப் போடும். கட்டுப்பாடு இல்லாமல் திரும்பத் திரும்ப ஒரே செயலைச் செய்துகொண்டிருக்கும்.

சில சமயங்களில் விரும்பத்தகாத செயல்களையும் செய்யும். தன்னிச்சையாக தாறுமாறாக அந்தக் கை இயங்கும். இந்நோயை 1908இல் கர்ட் கோல்ட்ஸ்டீன் (Kurt Goldstein) என்ற மருத்துவர் கண்டுபிடித்தார்.

கேப்கிராஸ் மாய உணர்வு

உடன் பழகிய நண்பர்கள், உற்றார் உறவினரின் அடையாளத்தில் ஏற்படும் குழப்பத்தால் இந்நோய் வருகிறது. இந்த மனப்பிரமைக்கு ஆளானவர்கள் தனக்கு நெருக்கமான ஒருவர் வேறு யாரோ ஒருவரால் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டுள்ளதாக நம்புவர். தனக்கு மிக நெருக்கமான நண்பர், உறவினர், கணவர் அல்லது மனைவி, வளர்ப்புப் பிராணி, பயன்படுத்தும் பொருட்கள் கூட ஆள் மாறாட்டம் செய்யப்பட்டுள்ளதாக நம்புவர்.

அவர்கள் எல்லோரும் தன்னைச் சுற்றி நடிப்பது போலத் தோன்றும். பகுத்தறிவுப்பூர்வமாக எவ்வளவுதான் நிரூபித்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நபர் போலியானவராகவே தோன்றுவார். தன்னைச் சுற்றிய நபர்கள், சூழல், யதார்த்தம் போன்றவையனைத்தும் நிஜமா அல்லது புனையப்பட்ட கட்டுக்கதைகளா என்ற சந்தேகம் இவர்களிடம் அதிகமாகக் காணப்படும்.

1923இல் ஜோசப் கேப்கிராஸ் (Joseph Capgras) என்ற பிரெஞ்சு உளவியல் மருத்துவர் இந்நோயைக் கண்டறிந்தார். இதனால் இது அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.

மன நலமே மனித நலத்தின் அடிப்படை

மூளை என்னும் மகத்தான மனித உறுப்பிற்குள் நாம் உயிருடன் வாழும் ஒவ்வொரு நொடியும் எத்தனையோ விசித்திரமான அரிய மனப்பிரமை அல்லது பிறழ்வு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நோய்கள் எல்லாவற்றிற்கும் தீவிர மன அழுத்தம், பதற்றம், நரம்பியல் பிறழ்வுகள், மூளையின் வேதிமச் சமநிலையில் பிறழ்வு போன்றவையே அடிப்படைக் காரணம்.

ஐ.நா.வின் சுகாதார நிறுவனம் நலவாழ்வு என்பதற்கு உடல் நலம், மன நலம் மற்றும் சமூக நலம் ஆகிய மூன்றின் முழுமையே என்று வரையறுக்கிறது. மன நலமே மன வளம்; ஆரோக்கியமான உடல் நலத்தின், சமூக வாழ்வின் அடிப்படை.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.