நேர்காணல்: சி.இராவணன்
ஒட்டன்சத்திரம் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கடைப்பிடிக்கப்படும் தீண்டாமை கொடுமைகள் பற்றிக் கூறுங்கள்?
ஒட்டன்சத்திரம் பகுதி முழுக்க தீண்டாமைக்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது. தீண்டாமையின் அனைத்து வடிவங்களும் இந்தப் பகுதியில் நடைமுறையில் உள்ளன. காலில் செருப்பணிந்து செல்லக்கூடாது, சைக்கிளில் செல்லக்கூடாது, பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது, தேனீர் கடைகளில் இரட்டைக்குவளை, உணவகங்களில் தரையில் அமர்ந்து உண்பது, வணிக நிறுவனங்களில் கடை வாடகைக்கு விட மறுப்பது, பஞ்சாயத்து தலவர்களை தரையில் அமர்ந்து பணி செய்ய சொல்வது, பஞ்சாயத்து அலுவலர்கள் தரையில் அமர்ந்து பணி செய்வது என பல்வேறு கொடுமைகள் இந்த பகுதியில் உள்ளன. சில மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால் பல இடங்களில் இந்தக் கொடுமைகள் உள்ளன. என்னுடைய வாழ்க்கையிலே கூட நடந்துள்ளன.
நான் முதல்முறையாக அஞ்சல் பணியாளராக புதுஅத்திக்கோம்பை என்ற பகுதிக்குச் சென்றேன். அந்தப் பகுதியில் பலவிதமான தீண்டாமைக்கொடுமைகள் நடைமுறையில் உள்ளன. அந்த ஊரில் கொங்கு வேளாளர், காப்பிலியக் கவுண்டர், பிள்ளைமார், அருந்ததியர் என, பல சமூகங்கள் உள்ளன. அந்த ஊரின் தலைவர் வெள்ளைசாமி என்பவர் ஒக்கலிகர் சமூகத்தில் பரவலாக தமிழகம் முழுவதும் அறியபட்டவர். யாரும் அங்கே செருப்பணிந்து செல்ல முடியாது. நான் வேலைக்குச் செல்லும் போது எனக்கும் அந்த நிலை ஏற்பட்டது. நான் தைரியமாக அவர்களிடம் வாதம் செய்தேன்.
“நான் ஒரு அரசு உழியன். என்னை பணி செய்ய விடாமல் தடுத்தால் எனக்கு ஒன்றும் இழப்பு கிடையாது. அதனால் செருப்பணிந்து தான் வருவேன், உங்கள் ஊருக்கு தபால் வெண்டுமென்றால் என்னை அனுமதியுங்கள். இல்லையென்றால் நான் செல்லுகிறேன்” எனக் கூறினேன்”
அவர்கள் ஊர்கூட்டம் போட்டு இவன் தி.க கட்சிசியில இருக்கான்,ஏற்கனவே நமது மக்கள் மீது பி.சி.ஆர் வழக்கு கொடுத்துள்ளான். இவனிடம் நாம் வீம்பு பிடிக்க வேண்டாம், இவனை மட்டும் செருப்பு போட்டு செல்ல அனுமதிப்போம்னு முடிவு செய்தாங்க.
அரசுப் பணியில் இருந்தவர்களுக்கும் தீண்டாமைக் கொடுமைகள் இருந்தா?
இன்று வரை அஞ்சலகப் பணியாளர்களுக்குத் தீண்டாமைக் கொடுமைகள் இருக்கின்றது. அரசு அலுவலகங்களில் அஞ்சல் துறை மட்டுமல்ல, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சத்துணவு, காவல்துறை என அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒட்டன்சத்திரம் பகுதியில் தீண்டாமை உள்ளது. அதிலும் குறிப்பாக அஞ்சல் ஊழியர்களுக்கு உள்ள தீண்டாமை மிகவும் கொடுமையானது. 2009 ல் ஆனந்தவிகடனில் ஒட்டன்சத்திரம் பகுதியில் நடக்கும் தீண்டாமைகள் பற்றிச் செய்தி வெளியானது. அதில் அஞ்சலகத்தில் நடக்கும் தீண்டாமை பற்றி பதிவு செய்யப்பட்ட்து அதன் பிறகு ஓரளவிற்கு மாறியுள்ளது. ஜாதி வலுவாக கட்டமைக்கப்பட்டிருப்பது கிராமங்களில்தான். அதனால் கிராமபுறங்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தீண்டாமை உள்ளது. இது இந்தியாமுழுவதும் உள்ளது.
அதிலும் அஞ்சல் துறையில் உள்ள தீண்டாமை வித்தியாசமானது. போஸ்ட் மாஸ்டர் தலித்துகளாக உள்ள பகுதிகளில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் அஞ்சலகங்களை அதிகமாக பயன்படுத்துவதே இல்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டு பல அஞ்சலகங்கள் மூடும் நிலைக்கே சென்றது. போஸ்ட் மேன்களாக தலித் உள்ள பகுதிகளில் அவர்கள் சைக்கிளில் செல்லக்கூடாது, செருப்பணிந்து செல்லக்கூடாது தரையில் அமர்ந்துதான் பணி செய்யவேண்டும் என பல கொடுமைகளை அனுபவிக்கின்றனர். ஒரளவிற்கு விழிப்புணர்வுள்ள எனக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களூக்கு சொல்லவா வேண்டும்?
லெக்கையன் கோட்டை என்ற பகுதியில் 30 க்கும் மேற்பட்ட தொட்டிய நாயக்கர் குடும்பம் வசிக்கிறது. அந்தத் தெருவில் தலித்துகள் வீதிக்குள்ளேயே செல்ல முடியாது. பிற்படுத்தப்பட்டவரே செருப்பணிந்து செல்ல முடியாது. ஜக்கம்மா என்ற அவர்களின் குலதெய்வம் பழிவாங்கிவிடும், பில்லியை ஏவிவிடுவார்கள், கைகால் முடக்கிவிடுவார்கள் என்ற பயத்தை ஏற்படுத்தி தங்கள் தீண்டாமையை நிலைநிறுத்திவந்தார்கள்.
அந்த ஊருக்கு நான் பணிக்குச் சென்றபின்பு முதலில் மீண்டும் ஒரு சண்டை வேண்டாம் என அந்த தெருவில் யோசித்து யோசித்து சென்றேன். அப்போது ”பார் அவனே பயந்து செல்கிறான்” என மக்கள் பேச ஆரம்பித்தனர். அப்போது நான் முடிவு செய்தேன். ஜாதிக்கலவரமே வந்தாலும் பரவயில்லை என முடிவு செய்து அந்தத் தெருவில் செருப்பணிந்து வேகமாக நடக்க ஆரம்பித்தேன். இப்போது இரண்டு ஊர்களிலும் மக்கள் செருப்பணிந்து நடக்கிறார்கள். 1992 வரை யாரும் செருப்பணிந்து வரமுடியாது.
மற்ற துறைகளைப் பொருத்த வரை வருவாய் துறை மிகவும் மோசமாக இருந்தது. கிராம உதவியாளராக (தலையாரி) இருப்பவர்கள் கீழேதான் அமரவேண்டும். அந்தப் பதவியில் 90ரூ பேர் தலித்துகளாக இருப்பார்கள். அவர்கள் கீழே பாய் விரித்து அமர்ந்து எழுதுவார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் கிராம அதிகாரியைப் பார்க்க வந்தால் அவர்கள் இருக்கையில் அமர்வார்கள். ஆனால் கிராம உதவியாளராக இருக்கும் தலித்துகள் கிழே அமர்வார்கள். அவர்கள் அதை எதிர்த்து அவர்கள் எதுவும் பேசவில்லை. நாம் அரசுக்குப் புள்ளிவிவரங்களோடு தெரிவித்தபோதும் எந்த நடவடிக்கையும் இல்லை. சமீபத்தில் கிராம அரசு உதவியாளர் சங்க ஒன்றிய பொறுப்பாளர் சின்னச்சாமி பணி ஓய்வு பெற்றபோது அவருக்கு நடந்த பாரட்டுவிழாவில் காட்டாறு ஏட்டின் சட்ட ஆலோசகர் தோழர் ஜெயராஜ் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் டி.ஆர்.ஒ, ஆர்.டி.ஒ,தாசில்தார் என பலரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ஜெயராஜ் அவர்கள் ஒட்டன்சத்திரம் பகுதியில் கிராம உதவியாளர்களுக்கு நடக்கும் தீண்டாமை பற்றி அவர் தனது கண்டனத்தை பதிவு செய்தார். அதன் பிறகு சில மாற்றங்கள் வந்துள்ளதாக தெரிகிறது. எங்கள் பகுதி கிராம உதவி அலுவலர்க்கு இருக்கை வழங்கப்பட்டுள்ளது.
சத்துணவு, மற்றும் ஊட்டச்சத்து மய்யங்களில் நிலவும் தீண்டாமை மிகவும் கொடுமையானது. ஆயா வேலையில் தலித்துகள் இருந்தால் பிரச்சனை இல்லை. ஏனெனில் அவர்கள் வேலை குழந்தைகளைச் சுத்தம் செய்வது ஆகும். ஆனால் சமையல்காரராகவோ ஊக்குனராகவோ இருந்தால் அவர்கள் சந்திக்கும் கொடுமைகள் அதிகம். தலித்துகள் மேற்கண்ட பொறுப்பில் இருந்தால் அங்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் குழந்தைகளை அனுப்புவதில்லை. ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தில் 2008 – 2009 களில் வேலை செய்த மகாமுனி என்கிற உதவி ஆய்வாளராக (சட்டம்-ஒழுங்கு) இருந்தவர் ஒரு தலித், அவருக்குக் கீழே வேலை செய்த பெருமாள் (வன்னியர்) என்கிற தலைமைக்காவலருக்கு பணி பிரித்து கொடுப்பது சம்மந்தமாக இருவருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டில் பணியில் இருந்த உதவி ஆய்வாளரை நகரத்தின் மய்யப்பகுதியில், கடைவீதியில் சீருடையில் பணியில் இருந்த உதவி ஆய்வாளரை திட்டித் தாக்கினார். இருவரும் கட்டிப் பிடித்துச் சண்டை போட்டனர், அனைவரும் வேடிக்கை பார்த்தனர். யாரும் அதைத் தட்டிக் கேட்கவில்லை. சண்டையை வேடிக்கை பார்த்த யாரும் சாட்சி சொல்ல வரவில்லை. நான் சாட்சி சொல்லி வழக்குப் பதிய வைத்தேன். தலைமைக்காவலர்க்கு தண்டனை அளித்து பணி மாறுதல் செய்யப்பட்டார்.
அரசு ஊழியர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் கடை நிலை ஊழியர்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக்கொடுமைகள் பற்றி பேசியதா?
இல்லை. இடதுசாரித் தொழிற்சங்கங்கள்கூட தீண்டாமை பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை. மேலும் அவர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டபோதுகூட அமைதியாகத்தான் இருந்தார்கள். இந்த நேரத்தில் தான் தோழர் பெரியார் தொழிற்சங்கங்களை பற்றிக் கூறியது நினைவுக்கு வருகிறது. தொழிற்சங்கங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் போதவில்லை, போனஸ் போதவில்லை, விடுப்பு குறைவாக இருக்கிறது என போரடுகிறார்களே ஒழிய மானத்தைப் பற்றியோ, சுயமரியாதை பற்றியோ அவர்கள் கவலைப்படுவதில்லை. தொழிற்சங்கம் என்பது சங்கத் தொழிலாக உள்ளது என்றார். இன்றைக்கும் அதேநிலைதான் நிடிக்கிறது. யாரும் அரசு ஊழியர்களுக்கான தீண்டாமை, வன்கொடுமை பற்றிப் பேசுவதில்லை.
அரசு அலுவலகம் அல்லாமல் மற்ற இடங்களில் நடைபெறும் தீண்டாமைக்கொடுமைகள் பற்றி கூறுங்கள்
ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அனைத்து இடங்களிலும் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. தேனீர்க்கடைகளில் 147 ஊர்களில் 200க்கும் மேற்பட்ட கடைகளில் இரட்டைக்குவளை முறை நடைமுறையில் உள்ளது. பொருளூர் என்ற ஊரில் 3 டம்ளர் முறை உள்ளது. கிராமங்களில் உள்ள அனைத்து உணவகங்களிலும் தீண்டாமை கடைபிடிக்கப் படுகிறது. உணவகங்களில் சரிக்கு சரியாக அமர்ந்து உண்ன முடியாமை, பொதுஇடங்களைப் பயன்படுத்த முடியாமை, பேருந்து நிறுத்தங்கங்களில் சமாக அமர முடியாது, தனிச்சுடுகாடு, கோவில் திருவிழாக்களில் பங்கேற்க முடியாமை, பொதுச்சாவடிகளில் அமர முடியாது, பொது நிகழ்ச்சிகளில் இருக்கையில் அமர முடியாமை, 100 நாள் வேலைத்திட்டங்களில் பாகுபாடு என அனைத்து வடிவங்களிலும் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிற ஒரு பகுதியாகும்.
இரட்டைச் சுடுகாடுகளை அரசே கட்டிக்கொடுக்கிறது. அனைத்துக் கிராமங்களிலும் அரசு நிதியிலே தனி சுடுகாடு கட்டப்படுகிறது. ரிசர்வ் பஞ்சாயத்துக்களில் தலைவராக வரும் தலித்துகள் அனுபவிக்கும் கொடுமைகள் மிகமிகக் கொடுமையானது. அவர்கள் இருக்கைகளில் அமர முடியாது. துனைத் தலைவர் தலைவர் போல நடந்து கொள்வார். சிந்தலப்பட்டி, வாகரை, அப்பனூத்து, இன்னும் நிறைய பஞ்சாயத்துகள் உள்ளன.
கம்யூனிஸ்ட்டுகளின் அலட்சியம்
கேதையறும்பு பஞ்சாயத்து தலைவர் ஒரு கம்யுனிஸ்ட் அவருக்கே பல தீண்டாமைக் கொடுமைகள் நடைபெறுகிறது. ஒட்டன்சத்திரத்திலே மிகப்பெரிய ஜாதி வெறியரான லெக்கையன்கோட்டை பஞ்சாயத்து தலைவர் பூபதி இவருக்கு நற்சான்றிதழ் கொடுப்பார்.
எப்படி எனில் “அவன் ரெம்ப நல்லவண்டா, நாம உக்காரச் சொன்னாலும் உக்கார மாட்டான், தண்ணீரை ஊற்றச்சொல்லித்தான் குடிப்பான்” என் ஜாதித் திமிரோடு பதில் சொல்லுவார். கேதையறும்பு பஞ்சாயத்துத் தலைவருக்காக இதுவரை கம்யுனிஸ்ட்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அத்திக்கோம்பை பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பேபிபெருமாள் என்பவர். அவருக்கு அடுத்து துணைத்தலைவராக இருப்பவர் தேன்மொழி குணசேகரன் என்பவர் ஆவார். தலைவர் பெயருக்கு வரும் கடிதங்கள் அனைத்தும் துனைத்தலைவர் பெயர் போட்டு வரும். தலைவர் தலித் என்பதால் அவருக்கு வரவேண்டிய அரசு கடிதங்கள்கூட தேன்மொழி குணசேகரன் பெயருக்கு தலைவர் என பெயர் போட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகளில் 22 ஊராட்சிகளில் அருந்த்தியர்தான் எழுத்தர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பல பேர் கீழே அமர்ந்து எழுத்து பணி செய்கிரார்கள். அவர்களுக்கான சங்கங்கள் இந்த தீண்டாமைக்கொடுமை பற்றி பேசுவது இல்லை.
ஃபண்டு கிராமங்கள்
ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஜாதிக் கொடுமைகளைச் செய்வற்காக நிதி சேர்க்கப்படுகிறது, ஜாதிமறுப்புத் திருமணங்களைத் தடுப்பதற்கும், அவர்களை அடியாட்கள் மூலம் பிரிப்பதற்கும், பிரிக்க முடியவில்லை என்றால் கொலை செய்வதற்கும் அதை மறைக்க அரசு அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்கவும் நிதி சேகரிக்கப்படுகிறது. அதனால் இப்பகுதி கிராமங்களுக்கு ( குரனே ) கிராமங்கள் என்றே பெயர் உள்ளது.
பண்ணை அடிமைகள்
விவசாய நிலங்களுக்கு வேலைக்குப் போகிறவர்கள் அனுபவிக்கும் தீண்டாமைக் கொடுமைகள் அளவுக்கு அதிகமானது. விவசாயக்கூலி என்று சொல்லுவதை விட பண்ணை அடிமைகள் என சொல்லலாம். இப்போது சில மாறுதல் வந்துள்ளது. ஆனால் எனக்குத் தெரிய நானே பண்னை அடிமையாகச் சென்றுள்ளேன். எனது அண்ணனுக்குத் திருமணம் ஆன போது அவருக்குப் பதிலாக நான் பண்னை அடிமையாகச் சென்றுள்ளேன்.
24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைக்க வேண்டும். ஆடு மாடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள மாட்டு கொட்டகையில் படுத்து கொள்ளவேண்டும். காலையில் 4 மணிக்கு மேல் எழுந்திருத்து வேலை செய்ய ஆரம்பித்தால் இரவு 8 மணி வரை வேலை செய்ய வேண்டும். அதற்குக் கூலி ஆண்டுக்கு 2, 3 மூடை சோளம் கொடுப்பார்கள். பண்டிகைக் காலங்களில் மீந்து போன உணவு, கெட்டுப்போன உணவு எனக் கொடுப்பார்கள். வேலைக்குப் போகும் பெண்கள் பாலியல் தொல்லைக்கும் ஆளானார்கள். பெண்களுக்குச் சம்பளம் மிகவும் குறைவு. ஆண்களுக்கு 5 ரூபாய் என்றால் பெண்களுக்கு 1.75 ரூபாய் ஆகும். பண்ணையில் அடிமையாக இருப்பவர்கள் திருமணம் ஆகிவிட்டால் தங்கள் மனைவிகளை நிலவுடமையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அதை ஒரு விழாவாகவே நடத்துவார்கள். இந்த நிலை 1985 காலங்களில் மாறுகிறது. உணவுப்பயிரிலிருந்து, பணப்பயிருக்கு மாறும் போது பண்ணை அடிமை முறை மாறியது. ஆனால் அதற்குப் பின்பும் குறைந்த கூலி, தீண்டாமைக் கொடுமை என எதுவும் குறையவில்ல.100 நாள் வேலைத் திட்டம் இந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஆகும்.
கந்து வட்டியில் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், கோவில் திருவிழாக்களை ஒட்டி பணம் வாங்குகிறார்கள், பணம் செலுத்துவதற்காக கடுமையாக உழைக்கிறார்கள், கட்ட முடியாத போது வட்டி கொடுத்தவர்கள் ஜாதி வெறியோடு திட்டுவது, பாலியல் சுரண்டல்கள் என பல கொடுமைகள் நடைபெறுகிறது. அரசு கந்துவட்டியை ஒழிக்க சட்டம் போட்டாலும் நடைமுறையில் இல்லை. மக்களும் தங்களுடைய மூடநம்பிக்கைகளை கைவிட்டால்தான் இந்த கொடுமையிலிருந்து மாற முடியும். மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் பெரிய தொழில் அதிபர்கள் மக்களை சுரண்டுகிறார்கள்.
திருவிழாக்களில் தீண்டாமை
திருவிழாக்களில் தீண்டாமை அதிகம். பறை அடித்தல், தெருக்கூட்டுவது, கழிவுகளைச் சுத்தம் செய்வது என அனைத்து விதமான இழிவுகளை செய்யவேண்டும். அவர்கள் வீடுகளில் போய்ச் சாப்பாடு வாங்குவது என பல அவமானங்கள் நடக்கும். எங்கள் பகுதித் திருவிழாவில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றாகச் சாமி கும்பிடுவார்கள். ஆனால் சக்கிலியருக்கு மட்டும் அனுமதி கிடையாது. இதில் பள்ளர்களை மட்டும் தனியாக அழைப்பார்கள். அம்பிளிக்கை அருகில் அம்மன் தேர் எங்கள் பகுதிக்கு வர வேண்டும் என்று கேட்ட இளைஞர்கள்களை காவல் நிலையத்தில் வைத்தே 4 நாட்கள் கடுமையாகத் தாக்கினார்கள், அனைத்து அருந்ததிய மக்களும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பின்பு விடுதலை செய்தனர். இதை முன்னின்று நடத்தியவர் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆவார்.
காய்கறி மார்க்கெட்டில் கொத்தடிமைகள்
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் நடக்கும் கொடுமை மிகவும் கொடியது. அங்கு அனைவருக்கும் சங்கம் உள்ளது. முதலாளிக்கு, தரகர்களுக்கு, லாரி டிரைவர்க்கு, கிளினர்க்கு என அனைவருக்கும் சங்கம் உள்ளது. ஆனால் மூட்டை துக்குபவர்களுக்கு மட்டும் சங்கம் இல்லை. எனெனில் 90 சதம் பேர் அருந்ததியர். அதனால் யாரும் சங்கம் வைக்க முடியாது. அதை மீறி முயற்சி செய்தால் அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள். 300க்கும் மேற்பட்ட கடைகளில் வேலை செய்யும் லோடுமேன் யாருக்கும் அமைப்பு சார தொழிலாளர் வாரியத்தில் பதிவு இல்லை. இதுவரைக்கும் 10க்கு மேற்பட்ட தொழிலாளி பணியின்போது இறந்திருப்பார்கள். அவர்களுக்கு எந்த இழப்பீடும் கிடையாது. நகரங்களில் யாருக்கும் கடை கொடுக்க மாட்டார்கள்.
இந்து இயக்கங்கள் இந்துக்களுக்காக போரடுவதாக கூறுகிறார்களே இந்த தீண்டாமைக்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்களா?
தீண்டாமையைக் கொடுமைகளுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பவர்களே, இங்குள்ள இந்து இயக்கங்களின் மாவட்ட நிர்வாகிகள்தான். இங்கு மதமும் ஜாதியும் கை கோர்த்து கொள்கிறது. அப்பாவி தலித் இளைஞர்களை ஏமாற்ற வேண்டுமென்றால் அவர்கள் ”இந்துக்களே ஒன்று படுங்கள்” என்று கூறலாமே தவிர களத்தில் ஒன்றும் செய்யவில்லை. இந்து அமைப்புகள் ஒரு இடத்தில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்த வரலாறே இல்லை. ஜாதியும் தீண்டாமையும் தான் இந்து மதம்.
இந்த ஜாதி - தீண்டாமைக் கொடுமைகளை மாற்ற ஒட்டன்சத்திரம் பகுதியில் வேலை செய்தவர்கள் யார்?
ஜேக்கப் செரியன், ஜேக்கப் தரியன்
1960 களில் கிறித்துவ நிறுவனங்கள் செய்த வேலையை நாம் நினைவு கூரவேண்டும். பெரிய நிறுவனம் எதுவும் செய்யவில்லை. இரண்டு தனி நபர்கள் செய்த வேலை மிகவும் முக்கியமானது. ஜேக்கப் செரியன், ஜேக்கப் தரியன் என இரு கிறித்துவர்கள் ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து வேலை செய்தார்கள். ஜேக்கப் தரியன் ஒட்டன்சத்திரத்தை மட்டும் மய்யமாக வைத்து வேலை செய்தார்கள். டாக்டர் செரியன் தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்களை மய்யமாக வைத்து வேலை செய்தார்கள். மதத்தைப் பரப்ப வந்தாலும் மனிதநேயம் அவர்களிடம் இருந்தது. தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக தலித்துகள் இருப்பதால் அவர்கள் மத்தியில் வேலை செய்தனர்.
தலித்துகளின் உணவு முறை, கெட்டுப்போன உணவு, சுகாதாரமில்லாமை என பல காரணங்களால் தலித்துகளை அதிகமாக பாதித்தது. எனவே அவர்களை மய்யமாக வைத்து வேலை செய்தார்கள். அப்படிச் செய்யும் போது அவர்களுக்குக் கல்வி விழிப்புணர்வு தேவை என முடிவு செய்து அம்பிளிக்கையில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார். அதில் தலித் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இந்தப் பகுதியில் அதிகம் அவருடைய சாந்தி நிகேதன் பள்ளியில் படித்தவர்கள் தான். நல்ல கல்வி மக்களுக்கு கிடைத்தது. ஒரு கலைக்கல்லூரியையும் ஆரம்பித்தார். தொழுநோய் ஒழிப்புக்கு என்று வந்த தொகை 90 லட்சத்திற்கு மேல் வந்ததைக் கல்விக்குச் செலவு செய்தார் அதிலும் தலித் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பள்ளியை அரசு உதவி பெறும் பள்ளியாக மாற்றினார்.
கீரனூர், வாடிப்பட்டி பகுதியில் அரசிடம் பேசி புறம்போக்கு நிலங்களைக் கேட்டு வாங்கி ஒவ்வொரு தலித்துக்கும் இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர் என பிரித்துக் கொடுத்து அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தினார். பெத்தேல்புரம் என்ற பகுதியை மலைப்பகுதியில் உருவாக்கி அருந்ததிய மக்களுக்கு வீடுகட்டிக் கொடுத்து அவர்களுக்கு நிலம் கொடுத்தார். இன்று அந்த பகுதியில் பணப்பயிர் விளையும் இடமாக உள்ளது. அவர் செய்த உழைப்பு நான்கு தலைமுறை பாதுக்காக்கப்பட்டது. அவர் இருக்கும் வரை பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார். 2014 ல் இறந்தார்.
பெரியார் தொண்டர் ரங்கசாமி
எங்கள் பகுதியில் தையல் தொழிலாளியாக இருந்த ரங்கசாமி என்பவர் பெரியார் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு சுயமரியாதை கொள்கைகளை மக்களிடையே பரப்புகின்றார். பள்ளர், மற்றும் அருந்ததிய மக்கள் இழிவு வேலைகளைச் செய்யக்கூடாது எனச் சொல்லி அவர்களை தடுக்கிறார். இதனால் பிற்படுத்த மக்களிடையே எதிர்ப்பு வருகிறது. பின்னாளில் ஊராட்சி மன்றத் தலைவராக வந்த பிறகுதான் எங்கள் பகுதிக்குக் குடிநீர் என்ற அடிப்படை வசதி கிடைத்தது. அதற்கு முன்பு தோட்டங்களில் காத்திருந்து அவர்கள் ஊற்றும் போது பிடிக்க வேண்டும். சாக்கடை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தார். மேலும் ஒரு தோட்டத்தை உருவாக்கி அதில் கிணறு வெட்டி தலித் இளைஞர்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கிறார். அதற்கு முன் பிற்படுத்தப்பட்டவர்களின் தோட்டங்களில் உள்ள கிணறுகளில் தலித்துகள் இறங்க முடியாது.ள இதனால் இவரை இவர் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஊர் விலக்கம் செய்தனர்.
திராவிடர் கழகம்
நான் வெறும் கடவுள் மறுப்பாளராக தி.க வுக்கு வந்தேன். எனக்கு, பெரியாரை அறிமுகம் செய்தவர்கள் வெறும் கடவுள் மறுப்பாளராகத் தான் அறிமுகம் செய்தனர். தோழர் தாமரைக்கண்னன் அவர்களின் தொடர்பு ஏற்பட்ட பிறகு, எங்களுக்குள் நாங்கள் செய்த விவாதங்கள் ஜாதிஒழிப்பு நோக்கி எங்களைத் தள்ளியது. பெரியார் என்றாலே ஜாதி ஒழிப்புக்கான தலைவர் தான் என உணர்ந்தோம். நான் அமைப்பில் உள்ள போது 1988 ல் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தேன். தோழர் எம்.ஏ. கிரிதரன் கலந்து கொண்டார். மாட்டுச்சந்தைக்குப் பெயர் பெற்ற இந்த ஊர் ஆன்மிகத்தலம், எனவே இங்கே கடவுள் இல்லை என்பது போன்ற கூட்டத்தை நடத்தக்கூடாது என ஊரே திரண்டு 300 க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து கையில் பயங்கர ஆயுதங்களுடன் ஊர்வலம் வந்தனர். நாங்கள் காவல்துறை உதவியுடன் பொதுக்கூட்டத்தை நட்த்தினோம்.
அங்கே எனக்கு பொதுக்கூட்டம் நடத்த உதவியாக இருப்பவர் தி.முக வைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர், பெரியார் தலைமையில் மறுமணம் செய்து கொண்டவர். அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த்தவர். அவர் என்னிடம் நீ ஒரு எஸ்.சி என்பதால்தான் இவர்கள் மிரட்டுகிறர்கள். இவர்கள் மீது பி.சி.ஆர் சட்டத்தில் கேஸ் கொடு என்றார். எனக்கு பி.சி.ஆர் என்றாலே என்னவென்று தெரியாது. நான் மற்றவர்கள் முன்பு பொதுஇடத்தில் பொதுக்கூட்டத்தில் சேர் போட்டு உட்கார்ந்ததுதான் காரணம். எனவே நானும் 7 பேர் மீது வழக்கு கொடுத்தேன். மறுநாள் வரச்சொன்னார்கள். நானும் தோழர் தமிழ்தென்றலும் சென்றோம். எனக்கு எதிராகச் சாட்சி சொல்ல எங்கள் உறவினர்கள் இரண்டு லாரி நிறைய அழைத்து வரப்பட்டார்கள். அவர்கள் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றார்கள். நான் வழக்குப் பதிவு செய்ய முடியுமா? இல்லை எங்கள் தலைவர் வீரமணி அவர்களிடம் சொல்லி மேலே பார்த்துக்கொள்ளவா? எனக் கேட்டேன். அதன் பின்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சமாதானமாகப் போகலாம் என்று என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். அதன் பிறகு எனக்குப் பெரிய தைரியம் வந்தது. அதுதான் நான் தீண்டாமைக்கொடுமைக்கு எதிராக நடந்த முதல் நிகழ்வு.
என்னுடைய அஞ்சலக வேலையே ஒரு பெரியார் தொண்டர் நல்லை அழகுபண்டியன் என்பவர் பரிந்துரையில் கிடைத்ததுதான். அந்த வேலையில் இருக்கும் போதுதான் இரண்டு கிராமங்களில் செருப்பணிந்து செல்லும் உரிமையை நிலை நாட்டினோம்.
100 க்கும் மேற்பாட்ட ஜாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்துள்ளோம். அவற்றில் சில பயங்கர வன்முறையில் முடிந்துள்ளன. ஒரு திருமணத்திற்கு பழனி தோழர்கள் பெண்ணை அடைத்துவைத்துதள்ள வீட்டை முற்றுகையிட்டு அடித்து மிரட்டி பெண்ணை மீட்டு திருமணம் செய்தனர். மற்றொரு திருமணம் அன்றைய அமைச்சர் மடத்துக்குளம் சி.வி.சண்முகவேலு உறவுப்பெண். 100க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதனையும் மீறித் திருமணம் நடந்தது. இதனை ஒட்டி ஜு.வி யில் செய்தி வந்தது. பல எதிர்ப்புகளையும் மீறிப் பல்வேறு திருமணங்கள் நடந்துள்ளது. அனைத்திற்கும் திராவிடர் இயக்கங்களும், இந்தப் பகுதியின் திமுகவை சேர்ந்த அண்ணன் மோகன் அவர்களும் ஆதரவாக இருந்தனர்.
பெரியார் திராவிடர் கழகம்
தோழர் கொளத்தூர் மணி தலைமையில் செயல்படும் போது இரட்டைக்குவளை மற்றும் தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியெலெடுக்கத் தலைமைக் கழகம் வலியுறுத்தியதைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் பகுதியில் நிலவும் அனைத்து வடிவமான தீண்டாமைக்கொடுமைகள் பட்டியலிட்டு, கடையின் பெயர், நடத்துவபர் பெயர், தெரு, ஊர் என 200க்கும் மேற்பட்ட தேனீர்க்கடைகள், முடிதிருத்தகங்கள், உணவகங்கள், இரட்டைச் சுடுகாடு, அலுவலகங்களில் தரையி அமர வைப்பது என அனைத்தும் பட்டியலிட்டு பெரியார் முழக்கத்தில் வெளியானது. அந்தப் பட்டியலின் பிரதியை பெற்று தோழர் எவிடன்சு கதிர் அவர்களும் களத்தில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டார்.
அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. தமிழகத்தில் இரட்டைக்குவளையே இல்லை என டி.ஜி.பி. அறிக்கை வெளியிட்டார். அடுத்த அறிக்கையில் சமத்துவத் தேனீர் விருந்து நடத்த நிதி ஒதுக்கி செய்தி வெளியிட்டது. அரசிடம் பேச்சு வார்த்தையின் போது நீங்கள் நடவடிக்கை எடுங்கள் இல்லை என்றால் உடைப்போம் என அறிவித்தோம். திட்டமிட்டபடி ஒட்டன்சத்திரம் பகுதியில் தேனீர்க்கடைகள் உடைக்கப்பட்டன. 500க்கும் மேற்பட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையைத் தவிர வேறு எந்த தலித் அமைப்பும் கலந்து கொள்ளவில்லை. நமது பட்டியலும், போராட்டமும் உச்சநீதிமன்றம் வரை சென்றது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது தீர்ப்பு ஒன்றில் நமது பட்டியலை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்தார். ஆனந்தவிகடனில் வெளியான கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அரசு தீண்டாமை ஒழிப்புப் பிரச்சனையில் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
தீண்டாமை வழக்குகள் முறையாகப் பதிவு செய்ய வேண்டும். அரசு தீண்டாமைக் கொடுமைகள் ஒழிய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த வடிவத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டாலும் கடைபிடிப்பவர்கள் மீது அவர்களின் வாழ்வாதார உரிமைகளான வாக்களிக்கும் உரிமை, ரேசன் கார்டு ஆகியவற்றை பறிக்க வேண்டும். தீண்டாமையை கடைபிடிக்கும் வணிக நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஒரே சாதிக்குள் திருமணங்களைத் தடைசெய்யவேண்டும். சாதிக்கலவரத்தைத் தூண்டும் ஊர் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும். ஒரே சாதிக்குள் வரன் தேடும் நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டும். தனிச்சுடுகாடு முறையைத் தடைசெய்து மின்மயானங்களை மூன்று ஊராட்சிகளுக்கு ஒரு மின்மயானத்தை உருவாக்க வேண்டும்.
இந்தப் பகுதியில் தொழிற்சாலைகளை உருவாக்கி அனைத்து பிரிவினருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். அரசு நிவாரணங்கள் தலித் மக்களுக்குச் சரியாகக் கிடைக்கச் செய்ய வேண்டும். இப்படிபட்ட ஆதிக்கம் நிறைந்த பகுதியில் தாழ்த்தப்பட்டவரையே காவல்துறை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 25 சதவித இடஒதுக்கீட்டை நிரப்புவதில் தலித் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை 200 நாட்களாக மாற்ற வேண்டும். அரசு அலுவலகங்களில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமையைக் கண்டு கொள்ளாத அரசு தலைமை அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்ய வேண்டும். சாதி மறுப்புத் தம்பதியினரின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.
அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?
அரசியல் கட்சிகள் தங்களை ஆதிக்க சாதிகளின் பிரதிநிதியாகத்தான் காட்டிக் கொள்கிறார்கள். இந்தப் போக்கு மாற வேண்டும். இங்கு கம்யுனிஸ்ட்கள் கூட சாதிப் பிடியில் சிக்கியுள்ளனர். கட்சியின் மாவட்ட செயலாளர்களை இடஒதுக்கிட்டு அடிப்படியில் நிரப்ப வேண்டும். பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைக்க வேண்டும். சாதி ஒழிப்பு நடவடிக்கைகளில் கட்சி ஈடுபட வேண்டும். வன்கொடுமையில் ஈடுபடும் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சி பொறுப்பாளர்களுக்கு பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை வகுப்புகளாக எடுக்க வேண்டும்.
முற்போக்கு இயக்கங்கள் என்ன செய்ய வேண்டும்?
பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்ஸிய இயக்கத் தோழர்கள் தங்கள் இல்லங்களில் இந்து மத வாழ்வியலைக் கடைபிடிக்காமல் உண்மையான மதசார்பற்ற வாழ்க்கையைக் கடை பிடிக்க வேண்டும். சாதி மறுப்பு / சடங்கு மறுப்புத் திருமணங்களையே செய்ய வேண்டும். இயக்கத் தோழர்களும், தலைவர்களும் சாதிமறுப்புத் திருமணங்களுக்கே செல்வோம் என உறுதி எடுக்க வேண்டும். அதையே பரப்புரையாகவும் செய்ய வேண்டும். அரசியல் தளத்தில் சாதியற்றோர் இடஒதுக்கீடு வேண்டி போரட வேண்டும். பண்பாட்டுத் தளத்தில் இந்து ஆரியப் பண்பாட்டிற்க்கு எதிரான பண்பாட்டை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
தலித் மக்கள் என்ன செய்ய வேண்டும்?
தலித் மக்கள் நம்மை இழிவு செய்யும் இந்து மதத்தை புறக்கணிக்க வேண்டும். தோழர் அம்பேத்கர் மதம் மாறிய போது வெளியிட்ட 24 கட்டளைகள் அனைத்தையும் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். சுயமரியாதையோடு வாழவேண்டும். யாரிடமும் பணிந்து பேசக் கூடாது. குறிப்பாக இந்து மத்த்தை விட்டு வெளியேறி சுதந்திர மனிதர்களாக வாழ வேண்டும். பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை கடைப்பிடித்தால் விடுதலை உணர்ச்சி தானாக பீறிட்டுகிளம்பும்.