அமீர் ஹன்ஸ்லா (Amir Hanzla), பீகார் ஹருன் நகரைச் சார்ந்த 18 வயது இளைஞன். உங்களைப் போல, என்னைப் போல ஓர் அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவன்.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக டிசம்பர் 21ம் தேதி புல்வாரி ஷெரீப்-ல் Shaheed Chowk - என்னுமிடத்தில் நடந்த Anti-CAA போராட்டத்தில் கலந்து கொண்டான், அதுதான் அவனுடைய வாழ்க்கையின் கடைசிப் போராட்டம் என்று தெரியாமல் .
அங்கு நுழைந்த ஆர்.எஸ்.எஸ் - பாஜக ஆட்கள் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கினர். அதற்குள் போலீசார் வந்ததால் கூட்டம் கலைந்து சென்றது.
சிதறடிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் அமீர் ஹன்ஸ்லா காணாமல் போனான், காணாமல் ஆக்கப்பட்டான்.
அன்று கூட்டம் கலைந்த பிறகு அவன் திரும்பி விடுவான் என்று அவனுக்காக காத்திருந்த அவனது குடும்ப உறுப்பினர்கள், இரவு வரை அமீர் வீடு திரும்பாததால் ஏமாற்றமடைந்து வீடு திரும்பினர்.
மருத்துவமனை உட்பட எல்லா இடங்களிலும் அவர்கள் தேடினார்கள். ஆனால் அமீரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து, புல்வாரி ஷெரீப் காவல் நிலையத்தில் அமீரின் குடும்பத்தினர் புகார் செய்தனர்.
10 நாட்களுக்குப் பிறகு, புதிய ஆண்டு புது நம்பிக்கைகளைத் தரும் என்று நம்பியிருந்த புத்தாண்டின் முந்தைய நாளில், டிசம்பர் 31 ஆம் தேதி காலை 6 மணிக்கு அமீரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, பின்னர் தகனம் செய்யப்பட்டது.
உயிராக எதிர்பார்க்கப்பட்டவன் உடலாய் வந்து சேர்ந்திருக்கின்றான். இதுதான் இன்றைய டிஜிட்டல் இந்தியாவின் நிலை.
எவர் செய்தார்கள் என்று தெரியவில்லையாம். விசாரணை நடந்து கொண்டிருக்கிறதாம். கொடுமை!
"என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்." என்று இயேசுநாதர் சொன்னது போல , அவர்கள் நம்மை மேய்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அவர்கள் நம்மை மேய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
மேய்ப்பானின் குரலுக்கு செவி சாய்க்கும் ஆட்டுக்குட்டிகளாய் எவ்வளவு நாள் இருக்கப் போகிறோம்?
கசாப்புக் கடைக்குள் செத்துக் கிடக்கும் ஆட்டுக் குட்டியை வெளியில் இருந்து வந்தவனா வெட்டியிருக்கப் போகிறான்?
போராட்டக்காரர்கள் காணாமல் ஆக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் இனி வழக்கமான நடைமுறையாக மாறப் போகும் ஒரு பயங்கரமான காலகட்டத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
அலுவலகத்தில் ஒரு பூனை , தினமும் சாப்பிடும் நேரத்தில் ஓடி வந்துவிடும். பக்கத்தில் வருவதற்கு அதற்குப் பயம். உணவு கொடுத்தால் கூட தயங்கித் தயங்கி எடுத்துக் கொண்டு ஓடிவிடும். தினமும் அது வழக்கமாயிற்று. ஒருநாள் அதற்கு உணவு கொடுக்க வில்லை. காலைப் பிராண்ட ஆரம்பித்தது. சீற ஆரம்பித்தது.
தயங்கித் தயங்கி சாப்பிட்ட பூனைக்கு, காலைப் பிராண்டும் கோபம் எப்படி வந்தது? பசியால் செத்துப் போவதை விடவும் போராடலாம் என்ற எண்ணம்தானே...!
உணவுக்கே இந்த சீறல் என்றால் , உனக்கு வாழ்க்கையே கிடையாது, இந்த பூமியே கிடையாது என்று எல்லா வழிகளையும் அவர்கள் அடைக்க ஆரம்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
"எல்லா வழிகளையும் அடைத்து விட்டு
பூனையை மறித்துப் பார்.
ஒரு புலியை காண்பாய் - இன்குலாப்"
பிணமாய் வாழ்வதும், வாழ்ந்து பிணமாவதும் நம் கைகளில்தான் இருக்கின்றது. தோற்று விடுவோமோ என்று நாம் எதுவும் செய்யாமல் இருந்தால், நம் தலைமுறைகள் தோற்றுவிடும்.
நம் தலைமுறைகள் வாழ்வதற்கான இந்த பூமியை , நாம் வாழ்ந்த இந்த பூமியை, அவர்களுக்கு நரகமாக்கிவிட்டு செல்ல வேண்டுமென விரும்புபவர்கள் மட்டும் கள்ள மௌனிகளாக இருங்கள்.
ஆனால் எதிரிகளை விடவும் ஆபத்தானவர்கள் இந்த கள்ள மௌனிகள்.
“You may never know what results come of your actions, but if you do nothing, there will be no results.” ― Mahatma Gandhi
- ரசிகவ் ஞானியார்