lovers 350தமிழ்நாட்டின் மேற்கு எல்லையில் பொள்ளாச்சியைக் கடந்து, கேரளா செல்லும் சாலையில் உள்ள கா.க.புதூர் என்ற ஒரு மிகச்சிறிய கிராமத்தில் பிறந்து, வளர்ந்து தமிழ்நாடு முழுவதும் பெரியாரியலைப் பரப்பி வருபவர் தோழர் கா.சு.நாகராசன். பெரியாரியலைப் பரப்புவதைப் போலவே, தனது வாழ்விலும் நடைமுறைப் படுத்தியவர்  என்ற பெருமைக்கு அவரை உயர்த்தி வருபவர் அவரது துணைவியார் சாந்தி. இவர்களது திருமணமானது, ஜாதி - தாலி - தேசிய இனம் - மதச்சடங்குகள் கடந்த திருமணமாகும்.

கா.சு.நாகராசனின் குடும்பம் பற்றி..

நான் அடிப்படையில் ஒருகிராமத்துக்காரன். கிராமத்திலும் குலத் தொழிலையே வாழ்வாகக் கொண்ட ஒடுக்கப்பட்ட குடும்பத்துப்பிள்ளை. எங்கள் வீட்டின் கடைசிப்பையன் என்கிற செல்வாக்கில் பள்ளிப்படிப்பைப் படிக்கின்ற வாய்பைப் பெற்றவன். எனது பெற்றோர் காவேரி - சுப்பிரமணியம். குலத்தொழிலை உயிராய் மதித்து உண்மையாய் உழைத்த நேர்மையாளர்கள். நல்ல அடிமைகள். அதேநேரத்தில் வாழ்வில் முன்னேற வேண்டும். நாம் பட்ட கஷ்டங்கள் நம்பிள்ளைகள் படக்கூடாது என்கிற கவலை கொண்ட பாமரப்பெற்றோர்.

கால்வயிறு, அரைவயிறுக் கஞ்சிகுடித்து எங்களைக் காப்பாற்றினார்கள். நாங்கள் மூன்றுபேர் சகோதரர்கள். எங்கள் மூவருக்கும் தனித்தனியேவீடு, இடம், தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டே என்தந்தை தன் உழைப்பை நிறுத்தினார்.

என்னுடைய பெரியாரியல் பணிகளுக்கு என்மொத்தவீடும் ஆதரவளித்துத் துணைநின்றது. இந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தில் நான்மேற்கொண்ட சாதிஒழிப்பு, சுயமரியாதை-சமதர்மப் பணிகள் எனது கிராமத்திற்குள் மாற்றத்தைக் கொடுத்ததோ இல்லையோ, எனது குடும்பச்சூழலை அடியோடு புரட்டிப்போட்டு விட்டது.

சமூகரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும், நாங்கள் மீளமுடியாத பள்ளத்தாக்கில் வீழ்த்தப்பட்டுவிட்டோம். கடந்த 20 ஆண்டுகளில் என்பொருட்டு என்குடும்பத்தினர் அடைந்த, அடைந்துவருகிற இன்னல்கள் கடுமையானது. ஆனால், ஒருபோதும் என்னால், என்கொள்கையால் தான் நாம் இவ்வளவு சிரமத்திற்கு ஆளாகிறோம் என்கிற எண்ணமோ, சின்ன சலிப்போ, சங்கடமோ, என்பெற்றோர், சகோதரர்களிடமிருந்தோ, என்துணைவியாரிடமிருந்தோ எந்தநிலையிலும் வந்தில்லை.

என்னளவில் இருந்த பெரியாரியலை நான் கிராமத்துத் தெருக்களில் பேசத் தொடங்கும் போதே எனது வீட்டிற்குள்ளும் நடைமுறைப்படுத்திவிட்டேன். கடந்த 20 ஆண்டுகளில் என் குடும்பத்திற்குள் எந்தவொரு மதசடங்கு –சம்பிரதாயங்களும் நடத்தப்படவில்லை. குறிப்பாக, பெண்குழந்தைகளுக்கு நடத்தப்படும் சீ?? சடங்குகள்கூட நிறுத்தப்பட்டுவிட்டது.

எனது திருமணம் முழுமையான சாதி - தாலி - சடங்குமறுப்புத் திருமணம். எனது தந்தையின் மரணத்தில் எள்முனையளவும் சடங்கின்றி அத்தனை உறவுக்காரர் களையும் உடன்படவைத்து உடலை மருத்துவக்கல்லூரிக்கு வழங்க முடிந்தது. இப்படி பெரியாரியலை முழுமையாக ஏற்று அதை மக்களிடையேயும் பரப்புகிற எளிய குடும்பமாக எனது குடும்பம் பெரியார்வழியில் தொடர்ந்து பயணிக்கிறது.

இயக்கப்பணி…

1983 ல் நான் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது ஈழத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டு அதன் எதிராலியாகத் தமிழகமெங்கும் திரண்ட போராட்டக்களம் என்னையும் இழுத்துவந்தது தொடர்ச்சியாக நடந்த ஈழஆதரவுப் போரட்டங்கள் அன்றைய திராவிடர்கழகத் தோழர்களை அறிமுகப்படுத்தியது. நெற்றிநிறைய சந்தனப்பூச்சோடும் அய்யப்பன்மீது அளவுகடந்த பக்தியோடும் இருந்த என்னை திராவிடர்கழகத் தோழர்களோடு இணைத்துவிட்டது ஈழஆதரவுப் போராட்டங்களே!

1986 என்று நினைக்கிறேன். தோழர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் தி.க விலிருந்து நீக்கப்பட்டபின் “அடுத்து என்ன செய்வது?” என்கிறஆலோசனைக்கூட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. அந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் தோழர் மனோகரன் அழைப்பின்பேரால் நான் கலந்துகொண்டேன். அதுதான் எனது அதிகாரப்பூர்வ இயக்கப்பங்கேற்பு.

சரியாக முப்பதாண்டுகளுக்குப் பிறகு 2016 பிப்ரவரி மாதம். ஒருநாள் என் வீட்டிற்கு வந்த அஞ்சலில் நான், கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் என்னை அமைப்பிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்திருந்தார்கள். காரணம் வேடிக்கையாகத் தெரிந்தாலும் என்னுள் மிகக் கடுமையான வலியை உண்டாக்கியது. அந்தக்கடிதம் படித்த இரவு கண்ணீரில் கரைந்த இரவாகவே போனது.

பெரியாரியல் என்பது ஒருவாழ்வியல் என்றும், அது இந்தச்சமூகத்தை நேசிக்கவும், வாசிக்கவும் கற்றுத்தருகிறது என்றும், அது இந்தச் சமூகத்திற்காகச் சுவாசிக்கச் சொல்கிறது என்பதுமே எனது பணிவானகருத்தாகும்.  இந்தக் கருத்தின் அடிப்படையில் நான் கற்றுணர்ந்த பெரியாரியலுக்கு எதிராக அணுவளவும் நான் செயல்பட்டவனில்லை. நான் முப்பதாண்டுகள் பணியாற்றிய இயக்கமும் அப்படிப்பட்டதே என்பதுதான் எனதுமுடிவு. அப்படியிருக்க எதிரிகள்கூட சொல்லத்துணியாத அந்தச்சொல் தோழர்களால் சொல்லப்பட்டதே என்கிறவலி என்னுள் இன்னமும் இருக்கிறது.

மற்றபடிசோர்ந்து போவதும் பின்தங்கிப் போவதும் பெரியாரிஸ்ட்டுகளுக்குப் பொருந்தாத குணங்கள் என்பதால் ஏற்றுக்கொண்ட கொள்கையில் முன்னைவிடவும் வேகமாக, வீச்சாக என்செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

பெரியார்தி.க - சுயமரியாதை – சமதர்ம இயக்கம் என்கிற பெயரில் கொஞ்சம் தோழர் களோடு பொள்ளாச்சி அளவில் இயங்கிக்கொண்டிருந்தாலும் இப்போது தமிழ்நாடு முழுமையும் சென்று பல்வேறு இயக்கக் கூட்டங்களில் பங்கேற்று இயன்றளவு பணியாற்றிவருகிறேன்.

இன்றைய அரசியல் சூழல்கள் பெரியாரியலுக்குக் கடும்சவாலானதாக இருக்கிறது. பார்ப்பன வல்லாதிக்கம் சகல வலிமையோடும் வெகுசிறப்பான தொலைநோக்குத் திட்டங்களோடும்  தன் இருப்பைக் காத்துக்கொள்ளும் போரைச் செயல்படுத்தி வருகிறது. பார்ப்பனர் அல்லாதார் சமூகத்திற்கான ” பார்ப்பன எதிர்ப்புப் ” போர் அப்படிஒரு மிகப்பெரிய வலிமையோடு தொடுக்கப் படுகிறதா? என்று நம்மை நாமே சுயபரிசோதனை செய்யவேண்டிய நேரம் வந்திருப்பதாக நான் சிலஆண்டுகளாகவே கூறிவருகிறேன்.

பகுத்தறிவுத் தொலைநோக்குக்கொள்கை கொண்ட நம்மைக்காட்டிலும் வேகமாகவும், வலிமையாகவும் பிற்போக்காளர்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டு வருகிறார்கள் என்பதும் அதற்கான எதிர்நடவடிக்கைகளில் நாம் தொடர்ந்து பின்தங்கி வருகிறோம் என்பதும் எனது எண்ணமாக இருக்கிறது. இதுதவறாகக் கூடஇருக்கலாம். ஆனால் எனக்கு அப்படித்தோன்றுகிறது.

எனவே, பெரியார், அம்பேத்கரிய, மார்க்சியக் களப்பணியாளர்கள் ஒன்றுகூடிச் சிந்திக்க வேண்டிய தருணம் இது என்பதும் அதற்கானமுயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பதும் எனது தாழ்மையானகருத்து. நான்அந்தமுயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறேன்.

திருமணம்…

காதல்திருமணம்தான். நானும் தோழர் சாந்தியும் மணம் முடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது என்கிற எங்கள் முடிவைவீட்டில்சொல்லிஅவர்களை நிச்சயிக்க வைத்தோம்.

எதிர்ப்புகள்…

தோழர் சாந்தியின் சகோதரர்கள் எனது நெருங்கிய நண்பர்கள். குறிப்பாக, சாந்தியின் மூத்த சகோதரர் இராமு அண்ணன் என்னிடம் மிகுந்த மதிப்போடும் அன்போடும் பழகுவார். குடும்பத்து ஆலோசனைகள் எல்லாம் என்னோடு கலந்து கொள்வார். ஆனால், சாந்தியை நான் பெண் கேட்டபோது ‘சாதிமாறி’ மணம் முடிக்கமுடியாது என்று எதிர்ப்புக் காட்டினார். அதேபோல என்னுடைய பெற்றோருக்கும் சாந்தியின் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் இருந்தது. நானும் சாந்தியும் மணம்முடித்துக் கொள்வதில் விருப்பமும் இருந்தது. ஆனால், எனதுபெற்றோரின் ஓர்ஓரத்தில் இருந்த ‘ஜாதகம்’ எனும் மூடநம்பிக்கையால் எங்கள் திருமணத்தை அவர்களும் உடனே ஏற்கத்தயங்கினர். ஆக, ஜாதியும், ஜாதகமும் தவிர எங்கள் திருமணத்திற்கு வேறு எதிர்ப்புகள் ஏதுமில்லை என்றே கருதுகிறேன்.

திருமணம் எங்கு? எப்படி?

எங்கள் திருமணம் கா.க.புதூர் கிராமத்தில் எங்கள் வீட்டுவாசலில் கட்சிமாநாடுபோல் நடைபெற்றது. த.பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில், தோழர்கள் வெ.ஆறுச்சாமி, ஆழியாறு நாச்சிமுத்து. பொள்ளாச்சி மனோகரன், கருமலையப்பன் ஆகியோர் முன்னிலையில், ஓர் இயக்கநிகழ்வாகவே நடைபெற்றது. அன்றைய கோவை மாவட்ட த.பெ.தி.க தோழர்கள் பெருமளவில் பங்கேற்றிருந்தனர்.

நானும் தோழர் சாந்தியும் சேர்ந்து வாழ்வது இயக்கப்பணிகளுக்கும் சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்கிற எண்ணத்தில் எங்கள் திருமணத்தை முன்னின்று நடத்தியவர்களுள் ஒருவர் அன்றைய தி.மு.கழக ஒன்றியச்செயலாளராகவும், மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும் இருந்த சாந்திதேவி அவர்கள் மணவிழாவில் முன்னிலை வகித்து வாழ்த்துரை நிகழ்த்தியவர். அண்ணா தி.மு.க வின் சார்பில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக இருந்த சாந்திபாலு அவர்கள். இருவருமே காதல்மணம் புரிந்தவர்கள்.

அதேபோல பொள்ளாச்சி நகரில் முதல் சுயமரியாதைத்திருமணம் செய்துகொண்ட கழகத் தோழர் வே.வெள்ளிங்கிரி, திருமணம் என்கிற சடங்கையே தூக்கி எறிந்துவிட்டு, இயல்பான சேர்ந்து வாழ்தலில் வாழ்ந்து, பெரியாரியலை அழுத்தமாகப் பின்பற்றும், எனது மூத்த அண்ணன் சி. விசயராகவன் ஆகியோர் எனது மணவிழாவில் வாழ்த்துரைத்தார்கள்.  பலரும் சொல்வார்கள் செயலில் மாறுபடுவார்கள். ஆனால், சத்தமே இல்லாமல் தன்னுடைய சொந்தவாழ்வைப் பெரியாரியலோடு இணைத்துக் கொண்ட தோழன் தட்சு மற்றும் கா.க.புதூர் தோழர்களின் பெரும் துணையோடு எங்கள் வாழ்க்கைத்துணை ஏற்புவிழா நடைபெற்றது. ஒருவகையில் பெரியாரியல் குடும்பவிழாவாகவே எங்கள் திருமணம் நடைபெற்றது.

ஜாதி ஒழியுமா?

ஜாதிஒழியுமா? ஒழிந்துபோய்விடுமா? என்றால் இதனால் மட்டும் அதுநடந்துவிடாது. முதற்கட்டமாக ஜாதிமறுப்புத் திருமணங்களால் ஜாதி புறக்கணிக்கப்படுகிறது. அல்லது ஜாதிஉறவுகளால் இந்த ஜாதிமறுப்பாளர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். எப்படியானாலும் அது ஜாதிக்கு எதிரான நடவடிக்கை என்றே நான் கருதுகிறேன்.

ஆனால், ஜாதிமறுப்புத் திருமணங்களை முன்னின்று நடத்துகிற ஆதரிக்கிற நம்போன்ற இயக்கங்களின் கடைமையாக நான் இரண்டு கருத்துக்களை முன்வைக்கிறேன்.

1. ஜாதிமறுப்புஇணையர்கள் இயன்றளவு சுயசாதி வட்டத்திற்குள் சங்கமித்துவிடாமல் நம்மைப் போன்ற இயக்கவாதிகளாக அல்லது இயக்க ஆதரவாளர்களாகத் தொடர்ந்து தொடர்பில் வைத்திருப்பது.

2. கட்டாயம் அவர்களது வாரிசுகளை ‘சாதியற்றோர்’ என்ற பட்டியலில் அடையாளப்படுத்தச் செய்வது.

இயக்கங்களிடம் ஆதரவு கேட்டு வருகிற காதல் இணையர்களிடம் இந்த இரண்டையும் முன் நிபந்தனையாகக்கூட வைத்து அவர்களது திருமணத்தை நடத்தி வைக்கலாம். இதை ஏற்காதவர்களாயிருந்தாலும் நாம் ஆதரிக்கிறோம் என்பது வேறு. இயன்றளவு இவற்றை ஏற்கச்செய்யலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

மற்றபடி பகுத்தறிவு – சுயமரியாதைப் பரப்புரைகள், சாதிக்கெதிரான தொடர் பயணங்கள் மூலமாகவே காலப்போக்கில் ஜாதியை ஒழிக்கமுடியும். ஜாதிக்கு ஆதாரமான சடங்குகள், சம்பிர தாயங்கள், பழக்கவழக்கங்கள், கடவுள், மதம், மதச்சார்பு அதிகாரமையம், அரசு என அனைத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு ஜாதிமட்டும் ஒழியவேண்டும் என்று கருதுவதும் ஒருவகையில் மூடநம்பிக்கையே!

இதிலே, பெரியாரிஸ்ட்டுகள் என்போரது பணி முக்கியமானது. குறைந்தபட்சமாக தங்கள் குடும்பத்திலாவது, சுயஜாதித் திருமணங்களை நடத்த அனுமதிக்காமல் தங்கள் சொந்த வாழ்விலாவது ஜாதி, சடங்கு மறுப்பாளர்களாக வெளிப்படையான வாழ்வை வாழ்ந்துமற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதன் மூலம் (பெரியார் காலத்தைப்போல) ஜாதிஒழிப்புக்கான முயற்சிகளுக்கு உரிய மதிப்பைக் கூட்டமுடியும் என்பதை உணர்ந்துசெயல்படவேண்டும். இவையெல்லாம் ஜாதிஒழிப்புக்கு வாய்ப்புள்ள முயற்சிகள் என்பது என்கருத்து.

சுயசாதித் திருமணங்கள்…

அறிவியல் பூர்வமாக சுயசாதி திருமணங்கள் தவறு, கூடாது என்கிற செய்திகள் ஒருபுறம் சொல்லப்படுகின்றன. நீங்கள் (காட்டாறு)கூட அதுகுறித்த அறிவியல் விளக்கங்களுடன் சிறுவெளியீட்டை வெளியிட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் கருதுவது தந்தைபெரியார் அவர்கள் சொன்னதன் அடிப்படையில்.

மனித சமுதாயத்தைப் பிரித்து, பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கிற ஒரு காட்டு மிராண்டித்தனம்தான் சாதி என்பது. அதுமட்டுமல்ல, உழைக்காமல் ஒருவன் உழைப்போரை மேலாண்மை செய்வதற்கான ஏற்பாடுகளையும் அதற்கான பாதுகாப்பையும் வழங்குவதே சாதி அமைப்பு.

இந்தக் கொடுமையான சாதிஅமைப்பு காலங்காலமாக எதன் பாதுகாப்பில் உயிர்ப் போடிருக்கிறது என்றால், கடவுள், மதம் என்கிற ஏற்பாடுகளையும் தாண்டி, சாதிக்கான ஆதாரங்களான சடங்குகள், சம்பிரதாயங்கள்,  பழக்க வழக்கங்களில்தான் சாதி உயிர்த்துடிப்போடு இருந்துவருகிறது. ஆக, இவை அனைத்தையும் சுயசாதித் திருமணங்கள் பாதுகாத்து உறுதிப்படுத்துகின்றன.

பி.இ பொறியியல் படித்தவன், மருத்துவம்படித்தவன்கூட ஜாதகம் பார்ப்பதும், காரணமே இல்லாத மூடச்சடங்குகளில் கூச்சமின்றி மூழ்கி எழுவதும், சம்பிரதாயங்கள் என்று அறிவுக்குப் பொருந்தாதவற்றைச் செய்வதும் சுயசாதித் திருமணங்களில் மட்டும்தான் மிகுந்து நிற்கிறது. அந்த அடிப்படையில் இவற்றை ஒரு சமூகத்தீங்காக, அறிவியலுக்கும், மனித நேயத்திற்கும் எதிரான ஒரு நோயாகக் கருதுகிறோம்.

சாதிஒழிப்பு என்கிற சமூக மருத்துவத்தில் சுயசாதித் திருமணம் என்பது ஒருவகை நோய்க்கிருமி என்றும் சாதிமறுப்புத்திருமணம் என்பது ஒருவகை ஆண்டிபயாட்டிக் என்றும் நான்நம்புகிறேன்.

மாற்று தேசியஇனத்தில்...

(பலமான சிரிப்பு) நாம் மனிதர் உரிமைக்காகத்தான் போராடுகிறோம். அதேநேரத்தில் இயற்கைச் சூழலுக்காகவும் கூடப்போராடுகிறோம். அதுபோல தமிழர் என்பதால் மறுக்கப்படும் நியாயங்களுக் காகவும் போராடவேண்டிய நிலை தமிழ்மண்ணில் பிறந்து, தமிழ்மண்ணில் வாழ்வதனால் உண்டாகியிருக்கிறது அவ்வளவே.

திருமணம் என்பது வயது வந்த ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்காகச் செய்து கொள்கிற ஓர் ஒப்பந்தம் என்று பெரியார் சொல்லுவார். இதில், ஜாதிக்கும், ஜாதகத்திற்கும், சடங்கு களுக்கும், சம்பிரதாயங்களுக்கும், பார்ப்பான்களுக்கும் என்னவேலை? என்றுதான் நாம் கேட்கிறோம். இதேகேள்விதான் இந்தக் கேள்விக்கான பதிலும்

கேரளா மக்களிடம் ஆணவப்படுகொலைகள்...

இதற்கான பதிலை நான் சொல்வதைக்காட்டிலும் தோழர் சாந்தி அவர்கள் சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்.

கேரளாவில் மலையாள மக்களிடமும் ஜாதி இருக்கிறது. ஜாதிக்கு ஆதரவான அனைத்தையும் நம்மை விடவும் கூடுதலாகவே பாதுகாக்கிறார்கள். ஒரு சின்னவேறுபாடு மலையாளிகளின் மேட்டுக்குடிகளில் சாதிக்கலப்புமணங்கள் நடைபெறுவதில்லை. ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகங்களில் ஜாதிக்கலப்புமணங்கள் அதிகம். பெரிய எதிர்ப்பு இருப்பதில்லை. மற்றபடி, சாதி ஆணவம் யாரிடமும் பெரிதாக இருப்பதில்லை. எனவே, ஆணவப் படுகொலைகளுக்கான வாய்ப்பும் சூழலும் அங்கு எழவில்லை என்றே கருதுகிறேன்.

தோழர் சாந்தி…

எங்கோ கேரள மண்ணிலிருந்து மைசூர் தேயிலைத் தோட்டங்களுக்கு வாழ்வுதேடிப்போன செல்லம்மாள் -  - மாணிக்கம் இணையரின் கடைசிமகளாகப் பிறந்து பின்தமிழ்நாட்டின் பொள்ளாச்சி நகரில் குடியேறினோம்.

தந்தையின் மறைவுக்குப்பின் அண்ணன்களின் பராமரிப்பில் நானும் எனது தாயாரும் இருந்தோம். அப்போது தோழர் காசு.நாகராசன் அறிமுகமாகி எங்கள் நட்பு தோழமை யாகி இன்று கொள்கைப் படியான ஒரு வாழ்வில் நாங்கள் இணைந்து பயணிக்கிறோம்.

பள்ளிப்படிப்பு மட்டுமே படித்திருந்த நிலையில் குழந்தைக்கல்வியின் மீது நான் கொண்ட ஈடுபாடு இன்றைக்குக் கல்லூரிக்கல்வி படிக்கிற பிள்ளைகள்வரை என்னோடு படிப்பு குறித்துக் கலந்துரையாடும் அளவுக்கு, கற்கும் அளவு என்னைத் தயார்படுத்தியது.

1999 ல் தொடங்கி 2015 முடிய இந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தில் சுமார் 200 பட்டதாரிகளை உருவாக்கியதில் பெரும்பங்காற்றியிருக்கும் பூஞ்சோலை கல்விமய்யத்தின் களப்பணியாளராகப் பணியாற்றி வருகிறேன். எங்கள் பிள்ளைகள் பலர் படித்துவிட்டு வேலை தேடுகிறார்கள். இப்போது இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் சிந்தித்து வருகிறோம்.

பூஞ்சோலை கல்விமய்யம் வழியாக ஓர் அழகிய பெரியாரியல் சமூகத்தைப் படைக்கும் பணிகளைச் செய்துவருகிறோம். அதன் முயற்சிகளுக்கு என்னால் இயன்ற பங்களிப்பை வழங்கிவருகிறேன்.

எதிர்ப்பு - ஆதரவு

தோழர் காசு.நாகராசன் மீது என் குடும்பத்திற்கு எப்போதும் மிகுந்த மதிப்பும் அன்பும் உண்டு. அதற்குக் காரணம் அவரது கொள்கை, குணம், சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்த அவரது உண்மை. அவரோடு நான் இணைந்து வாழ்வது சிறப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கைகூட என் வீட்டாருக்கு இருந்தது. ஆனால், ஜாதிமட்டுமே அவர்களுக்குத் தடையாக இருந்தது.

ஜாதிமாறிமணம்முடித்தால் உறவுக்காரர்கள் ஏளனம் பேசுவார்களோ, அதனால் குடும்பமானம் –கவுரவம் பாதிக்கப்படுமோஎன்கிற அச்சம் காரணமாக எங்கள் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். எனது அண்ணனின் நண்பர்கள், தொழில்கூட்டாளிகள், குடும்ப நண்பர்கள் பலரும் எங்கள் மணவிழாவிற்கு வந்திருந்தனர். என்குடும்பத்தினர் யாரும் வராதது எனக்குப் பெரியவலிதான் என்றாலும், நண்பர்களின் வருகைஆ றுதலாக இருந்தது.

நான் வீட்டாரின் விருப்பத்திற்கு எதிராகச் சாதிமாறிமணம் முடித்துக்கொண்டதால் எனது தாயாரின் முகத்தைக்கூட என்னால் கடைசிவரை பார்க்க முடியவில்லை. எனது வீட்டைவிட்டு நான் கடைசியாக வரும்வரை, எனதுதாயாரை நான்தான் பாராமரித்து வந்தேன். கான்சர் நோயாளியான எனது தாயாருக்கு எனது உதவியும் ஆதரவும் தேவைப்பட்டது. மரணவாயிலில் என்னைக் காணவேண்டும் என என் தாயார் விரும்பியபோதும், அவரைப் பார்க்க நான் முயன்றபோதும் இந்தச்சாதி போலி கவுரவம் எங்களைஅனுமதிக்கவில்லை.

மகளின் முகத்தைக் காணமுடியவில்லையே என்கிற ஏக்கத்தில் எனது தாயின் மரணமும், கடைசியாக மரணவாயிலில் நின்ற அம்மாவைப் பார்த்து அவருக்கு அருகிலிருந்து ஏதும் செய்ய முடியவில்லையே என்கிற துயரம், என்பது எந்தக்காலத்திலும் சமன்செய்யமுடியாத இழப்பின்அடையாளங்கள்.

ஆனால், எதிர்ப்புகளையும், இழப்புகளையும், வலிகளையும் தாங்கிய எனது ஜாதிமறுப்புத் திருமணம் என்பது ஒரு சமூகமாற்றத்திற்கானது என்கிறபோது துயரங்களைக் கடந்த ஓர் ஆறுதல் கிடைக்கவே செய்கிறது. சேதாரம் இல்லாமல் நகையேது ? இழப்புகள் இல்லாமல் விடுதலையேது ?

பெரியார் கொள்கை ஈடுபாடு

தோழர் கா.சு. நாகராசனின் நட்புக்குப் பிறகே எனக்குப் பெரியாரும், சுயமரியாதையும், பெண்விடுதலையும் அறிமுகமானார்கள். அரிதாரம் இல்லாத எதார்த்தமான புன்னகையின் வடிவமாகத் தான்; மகிழ்ச்சியின்அச்சாரமாகத்தான் பெரியாரியலை நான் பார்க்கிறேன். பெரியார் காண விரும்பிய சமத்துவ சமூகம்தான் உண்மையில் வாழ்வின் அர்த்தங்களாக இருக்கும் என்பது என் எண்ணம். அந்த இலக்கில் நாங்கள் பயணித்துக் கொண்டே மற்றவர்களையும் பயணிக்கச்செய்கிறோம்.

நாகராசனை விரும்பக்காரணம்

“நாம் நாமாகப் பிறக்கவில்லை. எனவே நமக்காக மட்டுமே வாழக்கூடாது” என்கிற பெரியாரின் கொள்கைப்படி தான்பிறந்த சமுதாயத்திற்குத் தன்வாழ்நாளில் ஏதாவது ஒரு பணியைச் செய்ய வேண்டுமே என்கிற எதிர்பார்ப்பில் தோழர் காசு. நாகராசன் செயல்படுகிறார் என்பதை உணர்ந்து என்னால் இயன்றளவு அவரது முயற்சிகளுக்குப் பங்காற்றினேன். உளப்பூர்வமான எனது பணிகள் திருமணம் எனும் காலஓட்டத்தில் மடைமாற வேண்டாம். அது தொடர்ந்து இந்தச் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்கிற உண்மையான அன்போடும் அக்கறையோடும் எனது கருத்தைக் கேட்ட தோழர் நாகராசனிடம் மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை. அவரது பணிகளில் என்னைப் பெருமிதத்தோடு இணைத்துக் கொள்ளச் சம்மதித்தேன்.

நாகராசனின்பணிகளில்பங்களிப்பு

“ எல்லாச் சீர்திருத்தங்களையும் உன்வீட்டிலிருந்தே தொடங்கு” என்று சொல்வார்களே அப்படி தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளைத் தன் வீட்டிலிருந்தே நடைமுறைப்படுத்திய தோழர் நாகராசன் தன் குடும்பத்தினரைப் பெரியாரியல்வாதிகளாய் மாற்றிய பிறகு ஊருக்குள் இளைஞர் கூட்டத்தை இயக்கம் நோக்கித் திருப்பி, தன் சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடின்றி வாழும் அவரது முயற்சி களின் விளைவாய், இன்றைக்கு கா.க.புதூர் கிராமத்தில் எவ்வளவோ மாற்றங்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்கள் பெரியாரைத் தலைவராகக் கொண்டாடும் கிராமமாக இன்றைக்கு கா.க.புதூர் மாறியிருக்கிறது.

இந்தச் சமூகத்தின் பெரும்கேடான சாதிக்கு எதிராக தோழர் நாகராசனும் தோழர்களும் தொடுத்திருக்கிற பெரியாரியல் போராட்டத்தின் வேகம் சாதி ஆதிக்கவாதிகளையும் மதவெறியர் களையும் கலக்கமடையச் செய்தது. அதன் விளைவே சாதி – மதவெறியர்களின் கூட்டுவன்முறை எங்கள் வீட்டில் நிகழ்த்தப்பட்டது.  அப்பட்டமான அந்தச் சாதி - மதவெறி வன்முறையை, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களும் அணிதிரண்டு எதிர்த்து நின்றதே நாகராசனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். இந்தச் சமூக மாற்றத்திற்கான தோழர்நாகராசனின் முயற்சிகளுக்கான நாற்றங்கால்களை வளர்த்தெடுக்கும் பணியையே நான் மேற்கொண்டு வருகிறேன்.

 

Pin It