இன்றைக்கு தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியல் மேலோங்கியுள்ளது. அரசியலுக்கு வரும் புதிய இளைஞர்கள் பெரும்பாலோர் தமிழ்த் தேசிய அரசியலில்தான் நுழைகின்றனர்.

ஈழச் சிக்கல், காவிரி - முல்லைப் பெரியாறு - பாலாறு ஆற்றுநீர் சிக்கல், கச்சத் தீவுச் சிக்கல், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுதல் போன்ற சிக்கல்கள் கூர்மையடை வதாலும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இவர்கள் நுழைகின்றனர். இவர்கள் நுழைவதாலும் தமிழ்த் தேசிய அரசியல் சிக்கல் கூர்மையடைகிறது. மேலும் சில மார்க்சிய - லெனினிய அமைப்புகளும் தலித் அமைப்புகளும் வெள்ளையன் தலைமையிலான வணிகர் அமைப்பும் தமிழ்த் தேசிய அரசியலை கூர்மையாக பார்க்க ஆரம்பித்து திட்டங்களும் செயல்பாடுகளும் அதை நோக்கியே இருக்கின்றன. தமிழ்த் ரேசிய அரசியலின் தாக்கமானது சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகளிலும் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய அரசியலுக்கு தடையாக உள்ள சாதியத்தை அடிப்படையாக கொண்ட பா.ம.க. மற்றும் கொங்கு கட்சிகளும் ஏன் இந்திய தேசிய பிரதிநிதியான அதிமுகவும் தமிழ்த் தேசிய பிரதிநிதியாக தங்களைக் காட்டிக் கொள்கின்றன. இதைப் புரிந்துகொண்ட இந்து தேசியம் அதைத் தனக்குள் அடக்க முடியுமா என்று எத்தனிக்கிறது. அதைப் பற்றியே இக்கட்டுரை.

எவ்வாறு மராத்தி தேசியத்தைத் தனது அரசியலுக்குள் கொண்டு வந்ததோ, அதேபோல் தமிழ்த் தேசியத்தை தனது அரசியலுக்குள் கொண்டுவர தனது எத்தனிப்புகளைத் தொடங்கிவிட்டது இந்து தேசியம்.

ஈழச் சிக்கல் 2008இல் தீவிரமடைந்தபோது எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற கணக்கில் சிவாஜிலிங்கம் வகையறாக்கள் இந்திய விரிவாக்க நலனுக்கு உட்பட்டே இச்சிக்கலை கையாண்டு வரும் நெடுமாறனின் ஆலோசனையின்பேரில் காஞ்சி மடத்திற்குச் சென்றார்கள். டெல்லிக்கும் சென்று அத்வானி மற்றும் வி.எச்.பி. தலைவர்களையும் சந்தித்தார்கள்.

முள்ளிவாய்க்காலுக்கு ஆறு மாதங்களுக்கு முன் நடந்த இச்சந்திப்புகள் முள்ளிவாய்க்காலை தடுக்காததோடு ஈழ விடுதலைப் போராட்ட தலைமைகளின் அரசியல் / இராணுவ பலவீனத்தையே இந்து தேசிய கும்பலுக்கு பறைசாற்றின.

1983இல் ஈழத் தமிழர்கள் மீது நடைபெற்ற இனப்படுகொலைத் தாக்குதலுக்குப் பின், இந்திரா காந்தி தலைமையிலான இந்திய விரிவாதிக்க அரசாங்கமானது ஈழ விடுதலைப் போராட்டம் தனது கையை மீறி சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும் முதன்மையாக முந்நாளைய சோவியத் ஒன்றிய ஆதரவு நிலையினை மேற்கொண்டிருந்த இந்திரா அரசாங்கம் அமெரிக்க ஆதரவு நிலையினை மேற்கொள்ளத் தொடங்கியிருந்த ஜெயவர்த்தனே தலைமையிலான இலங்கை அரசாங்கத்தை தலையில் தட்டி வைப்பதற்காகவும், ஈழ விடுதலை அமைப்புகளுக்கு ஆயுதங்களையும் இராணுவ பயிற்சிகளையும் நிதியையும் கொடுத்து இறுதியில் இன்று முள்ளிவாய்க்காலை கொண்டு விடுவதற்கு வழிவகுத்தது.

1983 ஜூலை கலவரமானது ஈழ விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்தியதைப் போலவே முள்ளிவாய்க்காலும் அதையே தோற்றுவிக்கலாம் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் இந்து தேசியமானது மதப் போர்வையில் முள்ளிவாய்க்கால் அரங்கேறிய சில மாதங்களிலேயே ஈழத்தில் நுழைந்துவிட்டது. பௌத்தத்திற்கு எதிராக சைவத்தை ஊக்குவித்தல் என்பதாக அங்கு செயற்பட்டு வருகிறது. ஈழ விடுதலை அரசியலில் சைவத்தின் கருத்தியலான வெள்ளாளியமானது தலைமைப் பாத்திரமாற்றுவதால் இது சுலபம் என்றே அது கருதுகிறது.

இந்து தேசியமானது தமிழ்த் தேசியத்தை வீழ்த்துவதற்கு இராணுவ ரீதியாக மட்டுமின்றி கருத்தியல் ரீதியாகவும் செயற்படவேண்டும் என்பதாலேயே இவ்வாறு செயற்பட்டு வருகிறது. வெறும் காங்கிரஸ் எதிர்ப்பு என்பதாக மட்டும் செயற்படும் ஈழ ஆர்வலர்களும், தமிழ்த் தேசியவாதிகளும் இந்து தேசியத்தைப் பெரிதாக எதிர்ப்பதில்லை. இதனால்தான் வைகோ போன்றோர் உள்ளிட்டு தேர்தலில் பா.ஜ.க. அணியில் நின்றனர். புலம் பெயர் மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தினரும் மோடியே பிரதமராக வேண்டும் எனவும் விரும்பினர்.

இந்து தேசியப் பிரதிநிதியான மோடி பலமான பிரதமராக இருந்து ராஜபக்சேவை வழிக்கு கொண்டுவருவார் எனவும் மன்மோகன் சிங் பலவீனமானவர் எனவும் எதிர்பார்த்த தமிழ்த் தேசிய வாதிகள் ஏமாந்து போயினர். அகண்ட பாரதக் கொள்கையினை இந்து தேசியம் முன் வைப்பதால் அது அவ்வாறு செய்யும் என நம்பினோர் ஏமாந்தனர். முழு இலங்கையானது இந்து தேசிய அடிப்படையிலான இந்திய விரிவாக்க எல்லையில் ஏற்கெனவே இருந்து வருவதால் இந்து தேசியமானது ஈழச் சிக்கலை இவ்வாறுதான் கையாளும். ஈழத்தை வாங்கிக் கொடுத்து ஈழ விரோத சிங்கள ஆளும் வர்க்கத்தை முழுமையாக சீனாவிடம் செல்லவிடாது இந்து தேசியம்.

அதே போல் இந்து தேசியம் அகண்ட பாரதக் கொள்கையின் அங்கமாக கச்சத் தீவை மட்டும் மீட்கும் என்பதாகவும் இத்தமிழ்த் தேசியவாதிகள் நம்பி ஏமாறுகின்றனர். ஈழமும் கிடைக்காது; கச்சத் தீவும் கிடைக்காது; முள்ளிவாய்க்காலை மட்டுமே தரும் இந்து தேசியம்.

அடுத்ததாக, ஈழச் சிக்கலிலும் கச்சத் தீவு நடப்பிலும் தமிழ்த் தேசியத்திற்கு அல்வா கொடுத்த இந்து தேசியமானது ராசேந்திரசோழனைக் கையிலெடுத்திருக்கிறது. அவர் அரியணையேறிய ஆயிரமாவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. கப்பற்படை வைத்திருந்த அவருடைய பெயரை இந்தியக் கப்பற்படையின் கப்பலுக்கு வைத்து இந்தியக் கப்பற்படையே இவ்விழாவைக் கொண்டாடுமாறு கோருகிறது.

இராசேந்திரச் சோழன் வேத பாட சாகைளை நிறுவினார் என்றும் தனது கப்பற் படையின் மூலமாக தென்கிழக்காசிய நாடுகளையும் ஆப்பிரிக்காவையும் ஆட்சி புரிந்தார் எனவும் இவ்விழாவைக் கொண்டாடுவதென முடிவெடுத்ததாக அறிவித்துள்ளது இந்து தேசிய தாய் அமைப்பி£ன ஆர்.எஸ்.எஸ். அகண்ட பாரத வரைபடத்தில் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியா இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவானது கச்சத் தீவை இலங்கைக்குக் கொடுத்து 40 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுவதும் கொல்லப்படுவதும் கடந்த பல ஆண்டுகளாக அதிகரித்து நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்த் தேசிய வாதிகளில் பெரும்பாலோர் இச்சிக்கலுக்குக் கச்சத் தீவு மீட்பு என்பதைத் தீர்வாக முன்வைத்து வருகின்றனர். இந்து தேசியமானது தமிழ்த் தேசியத்தை விழுங்கியாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பின்னர்தான், அண்மைய ஆண்டுகளாக கச்சத் தீவு மீட்பு என்பதையும் பேசி வருகிறது. ஆனால் ஆட்சிக்கு வந்த இந்து தேசியமானது அது குறித்து மூச்சையும் விடுவதில்லை. தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறையிலிருப்பதை விடுவிக்கவும் தயாராக இல்லை. மாறாக தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றமானது தூக்குத் தண்டனை வழங்கிய விவகாரத்திலும் அற்பத்தனமாக ஆதாயமடைய எத்தனித்தது.

மும்மொழித் திட்டத்தையும் செயற்படுத்தாமல் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் வேலையில் ஈடுபாட்டோடு மோடி அரசாங்கமானது ஆட்சியில் உள்ள நிலையில் தருண் விஜய் என்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் தமிழ் ஆதரவு பேச்சுகள் வெறும் நாடகமே. அதை இங்குள்ள பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் வைரமுத்து வகையறாக்களும் நம்மை உண்மை என நம்ப வைத்து இந்து தேசியத்திற்கு நம்பகத் தன்மையை வழங்குகின்றன. இதன் மூலமாகவும் இந்து தேசியமானது இதுகாறும் தமிழை நீசப் பாணை என தான் கூறிவந்ததை மறைக்க முடியும் எனவும் தமிழும் இந்து தேசியமும் பன்மையான வெவ்வேறல்ல; ஒன்றேதான் எனவும் காட்டி ஏமாற்றுகிறது. தமிழக நடுத்தர வர்க்கத்தினர் இந்தியை கற்றுத் தருகிற பள்ளிகளில் தமது குழந்தைகளைப் பரவலாக சேர்த்து வருகிற நிலையில் அம்மக்களிடையே மோடி ஆதரவு உள்ள நிலையில் இந்தியைத் திணிப்பதை சுலபம் என்றே இந்து தேசியம் எண்ணக்கூடும்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் இந்து தேசியமானது மேலும் மேலும் தமிழ் அடையாளம் சார்ந்து குறியீடுகளை தமதாக்கிக் கொள்வதற்குப் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டவண்ணம் இருக்கிறது. அதன் அங்கம்தான் திருவள்ளுவர் பிறந்த நாளையும் பாரதியின் பிறந்த நாளையும் இந்தியாவெங்கும் கொண்டாடுவது / கடைப்பிடிப்பது எனவும் அதேபோல் திருக்குறளையும் கொண்டு செல்வதெனவும் முடிவெடுத்து நடைமுறைக்குக் கொண்டு வருகிறது. முள்ளிவாய்க்காலுக்கு சில மாதங்கள் முன்பாக ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என தனது உண்மையான உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்திய, தமிழ் என பேசினாலே சிறையிலடைத்த இந்து தேசிய பாசிஸ்டாக காட்சியளித்த ஜெயா, 2009 பிப்ரவரி முதற்கொண்டு ‘திடீர்’ தமிழ்த் தேசியப் போராளியாக வேடமிடத் தொடங்கி ‘இந்தா வாங்கிக்கோ! இலவச சட்டமன்றத் தீர்மானங்களை ஈழத்திற்காகவும் தமிழ் நாட்டிற்காகவும்’ என கபட வேடம் போட்டு தமிழ்த் தேசியவாதிகளை கபளீகரம் செய்து வருகிறாரோ அதேபோல் இந்து தேசியமும் முனைந்து வருகிறது. இனி, இதுபோன்ற நிறைய மோசடி அறிவிப்புகளையும் வெற்று வாய்ச் சவடால்களையும் இந்து தேசியத்திடம் எதிர்பார்க்கலாம்.

ஈழச் சிக்கல், கச்சத் தீவு மீட்பு போன்றவற்றில் இந்து தேசியத்தின் எத்தனிப்புகளை எவ்வாறு வெள்ளாளிய தமிழ்த் தேசியவாதிகள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களோ அதேபோல் இராசேந்திரச் சோழனுடைய ஆட்சியை உயர்த்திப் பிடிக்கும் விவகாரத்திலும் மவுனத்தையே கடைப்பிடிக்கிறார்கள்.

இந்து தேசியமானது இத்தகைய வெள்ளாளிய தமிழ்த் தேசியத்தை மிக எளிதாக விழுங்க முடியும். ஏனெனில், இந்து தேசியத்தின் கருத்தியலான பார்ப்பனியத்துடன் கூட்டும் சேர்ந்துதான் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் வெள்ளாளியத்தால் சாதிய நிலவுடைமைச் சமூகம் கட்டியமைக்கப் பட்டது. இராசேந்திரச் சோழனுடைய ஆட்சிக் காலத்தில்தான் ஈழத்தின்மீது படையெடுத்து அங்கு சாதிய நிலவுடைமை அடிப்படையிலான தமிழ்ச் சமூகம் கட்டியமைக்கப்பட்டது. இராசேந்திரச் சோழனுடைய அரச சமயமான சைவத்தை ஈழத்திற்கு ஏற்றுமதி செய்துதான் அங்கு சாதியம் சமூகம் கட்டியமைக்கப்பட்டது.

அதனால்தான் இராசராச சோழன் மற்றும் இராசேந்திரச் சோழனுடைய ஆட்சிக் காலத்தைப் பொற்காலம் என இந்து தேசியமும், வெள்ளாளிய தமிழ்த் தேசியமும் ஒரே குரலில் பேசுகின்றன. விழா எடுக்கின்றன. மாவீரர்கள் என பிதற்றுகின்றன.

சாதிச் சிக்கல், பாலினச் சிக்கல், மத சிறுபான்மைச் சிக்கல் போன்றவற்றிலும் இந்து தேசியத்திற்கும் வெள்ளாளிய தமிழ்த் தேசியத்திற்கும் ஒரே நிலைப்பாடுதான். மேற்காணும் சிக்கல்களை ஒற்றைப் பரிமாண அடிப்படையில்தான் அணுகி இந்து தேசியமும் வெள்ளாளிய தமிழ்த் தேசியமும் கட்டியமைக்கப்படுகின்றன.

சாதியச் சிக்கலில் சாதி மறுப்பு திருமணம், கோவில் நுழைவு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றை எதிர்ப்பதிலும் கௌரவக் கொலை விவகாரத்திலும் இரண்டுமே ஒரே நிலையைத்தான் மேற்கொள்கின்றன. சொல்லப் போனால் ஆதிக்கச் சாதி என்ற சொல்லையே இரண்டும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்து ஒற்றுமை, தமிழன் ஒற்றுமை என ஒற்றை அடையாளத்தின் கீழ் தமது அரசியலை வைப்பதற்கு ஆதிக்கச் சாதி என்ற சொல்லை இடையூறாக கருதுகின்றன. அதிகபட்சமாக இரண்டுமே பொத்தாம் பொதுவாக சாதி சமத்துவம் பேசி ஆதிக்கச் சாதி அரசியலையே கட்டியமைக்கின்றன.

அதேபோல் பாலினச் சிக்கல் விவகாரத்திலும் கற்பு என்ற கருத்தாக்கம், சாதி மறுப்பு, மத மறுப்பு திருமணம் போன்றவற்றிலும் ஒரே நிலைப்பாட்டையே மேற்கொள்கின்றன. கற்பு என்ற கருத்தாக்கம் குறித்து 10 ஆண்டுகளுக்கு முன் குஷ்பு பேசியபோது தமிழ்ப் பாதுகாப்பு இயக்கமானது வெள்ளாளிய தமிழ்த் தேசிய அடிப்படையிலேயே அதை எதிர்கொண்டது. தற்போது சென்னையில் ஐஐடியில் நடந்த முத்தப் போராட்ட விவகாரத்திலும் இந்து தேசியத்தின் பிரதிநிதியான இந்து மக்கள் கட்சி புகார் கொடுத்தது. ராமதாஸ் எதிர்த்து அறிக்கை விடுகிறார்.

மதச் சிறுபான்மையினர் விவகாரத்திலும், இந்து தேசியமும் வெள்ளாளிய தமிழ்த் தேசியமும் ஒற்றைப் பரிமாணப் பார்வையையே முன் வைக்கின்றன. மதச் சிறுபான்மையினர் நலனை தத்தமது தேசிய அரசியலுக்குள் உள்ளடக்குவதில்லை.

மதச் சிறுபான்மையினர் தமது அடையாளத்தை முற்றிலும் இழந்து இந்து தேசியத்திற்குள் வரவேண்டும் என்றே இந்து தேசியவாதிகள் முன்வைக்கின்றனர். வெள்ளாளிய தமிழ்த் தேசியவாதிகளோ மதச் சிறுபான்மையினர் தமது வழிபாட்டு இடங்களில் தமிழ் அல்லாத மொழிகளில் வழிபடுவதை எதிர்க்கின்றனர். உருது மொழி பேசும் முஸ்லிம்களை தமிழ்த் தேசியத்திற்குள் உள்ளடக்குவதில்லை. ஈழத்தில் வாழும் முஸ்லிம்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்களின் பண்பாட்டு உரிமையினை மறுத்துதான் ஈழத்தமிழ்த் தேசியம் கட்டியமைக்கப்படுகிறது.

பார்ப்பனியமும் வெள்ளாளியமும் தமிழ்நாட்டில் சாதிய நிலவுடைமை சமூகத்தைக் கூட்டாக கட்டியமைத்தாலும் காலனிய ஆட்சி வந்தபின் பார்ப்பனியம் இந்து தேசியம் என்ற அரசியலையும் வெள்ளாளியமானது தமிழ்த் தேசியம் என்ற அரசியலையும் மேற்கொண்டன. அப்பொழுது இரண்டிற்கும் ஒரு முரண் ஏற்பட்டு ஒரு நூற்றாண்டு நீடித்தது. இன்றைக்கு இணக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்து தேசியமானது ஏற்கெனவே இது போன்ற விவகாரத்தில் வெற்றியடைந்த அனுபவத்தில் தமிழகத்தில் களமிறங்கியுள்ளது.

மராத்தி தேசியம், பஞ்சாபி தேசியம், அசாமி தேசியம், கன்னட தேசியம், போடோ தேசியம் ஆகியவற்றில் இந்து தேசியம் விழுங்கியோ அத்தேசியத்தை முன்னெடுத்தவர்களிடமிருந்து முஸ்லிம் விரோத (அ) ஒற்றைப் பரிமாணத்தை ஊக்குவித்தோ அத்தேசியங்கள் தமது தேசிய இன விடுதலையை அடையவிடாமல் வெற்றியடைந்துள்ளது இந்து தேசியம்.

மராத்தி தேசியத்தைக் கடைப்பிடிக்கும் சிவசேனா மற்றும் ராஜ் தாக்கரேயின் MNS என்ற அமைப்புகளுக்கும் பாஜகவுக்கும் பெரிய வேறுபாடில்லை. முஸ்லிம் விரோத மற்றும் வேற்று மொழி பேசுவோரிடம் பாசிசத் தன்மையிலேயே நடந்து கொள்கின்றன.

கன்னட தேசியம் தமிழ் மக்களுக்கு எதிராகவே இருக்கிறது. உருது மொழியில் தொலைக் காட்சியில் ஒளிபரப்பியதை ஒட்டி முஸ்லிம்கள் மேல் பல ஆண்டுகளுக்கு முன் தாக்குதல் நடத்தப் பட்டது நினைவிருக்கலாம். அசாமிய தேசிய அரசியலின் அங்கமாக 1980களில் நடந்த அசாம் மாணவர் போராட்டத்தின்போது நெல்லி எனுமிடத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்பொழுது முதல் இன்று வரையிலும் அதன் முஸ்லிம் விரோத அரசியலுக்காகவே அப்போராட்டத்தின் கோரிக்கையை இன்றுவரையும் ஆதரித்துவருகிறது இந்து தேசியம். அதேபோல் அண்மையில் போடோக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலை தாக்குதலை ஆதரித்து நிலை எடுத்தது. அது வரையிலும் போடோக்களை மக்களாகவே மதிக்காத இந்து தேசியம்.

தமிழ்நாட்டிலோ இந்து தேசியமானது மண்டைக்காடு கலவரத்துடன் தனது கை வரிசையைக் காட்டி வருகிறது. அன்றைக்கு தமிழ்த் தேசிய அரசியல் பலமாக இல்லாததால் அதை விழுங்க எத்தனிக்கவில்லை இந்து தேசியம். இன்றைக்குத் தமிழ்த் தேசிய அரசியல் பலமாக மேலெழுந்து உள்ளதால் அதை இந்து தேசியம் விழுங்கப் பார்க்கிறது. தமிழக விடுதலை என்ற ஒற்றை கோரிக்கை தவிர மற்ற அனைத்து அம்சங்களிலும் இந்து தேசியத்துடன் ஒத்துப்போகிறது வெள்ளாளிய தமிழ்த் தேசியம்.

நிலப் பரப்பு என்ற காரணி தவிர பண்பு ரீதியாக வேறுபாடு ஏதுமிராத வெள்ளாளிய தமிழ்த் தேசியத்தை மிக எளிதாக விழுங்கிவிடும் இந்து தேசியம். அவ்வாறு விழுங்காமல் இருக்க வேண்டுமானால், அது ஆதிக்க சக்திகள் மற்றும் ஆதிக்க சாதிகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் உழைக்கும் மக்களின் நலனுக்கான மக்கள் சனநாயகம் மற்றும் சோசலிசத்தை உள்ளடக்கமாக கொண்டிருக்க வேண்டும். அதை மட்டுமே இந்து தேசியத்தால் விழுங்க முடியாது.

அத்தகைய மக்கள் சனநாயகம் மற்றும் சோசலிச தமிழ்த் தேசியமானது சாதி ஒழிப்பு, பாலின சமத்துவம், மதம், மொழி சிறுபான்மையினருக்கான சமத்துவம், அனைத்திலும் முக்கியமாக வர்க்க ஒழிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்து தேசியத்தால் தமிழ்த் தேசியத்தை விழுங்குவதைத் தடுக்க முடியாது. மேலே பார்த்தவாறு ஒற்றைப் பரிமாண, நிலவுடைமை அடிப்படையிலான வலதுசாரி பாசிச இனவாத அரசியலின்கீழ் கீழ்ப்படுத்தி இந்து தேசியத்தோடு தமிழ்த் தேசியத்தை சங்கமிக்க வைப்பதை அனுமதிக்க முடியாது. தமிழ்த் தேசியம் என்பது தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தோரின் வாழ்வாதார அடிப்படையான அரசியல் உரிமையாகும். அதை வெள்ளாளிய மாயையிலிருந்து மீட்பதே இந்து தேசியத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும்.

Pin It