...முந்தைய பகுதி: மதங்கள் பற்றி பாரதியின் பார்வை

golwalkarஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925 ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று என்ன என்ன கொள்கைகள் மேற்கொண்டிருக்கிறதோ, அவை அனைத்தையும், அவ்வியக்கம் உருவாகும் முன்பே எடுத்துக் கூறி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே ஆவார். அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

“இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வெண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை. எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.” (1)

“இந்திரன், அக்கினி, வாயு, வருணண் என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்த மூர்த்திகளை தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்துமதம் ஒற்றுமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதீக ஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று பூமண்டலத்தின் ஆசார்ய பதவி கொண்டு வாழ வேண்டுமாயின் அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன” என பாரதி கூறுகிறார்.

1. “வேதம், உபநிஷத்துகள், புராணங்கள் இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்க வேண்டும்.

2. புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப்படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொதுவேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸனை, யோகம் முதலியவற்றை விளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ராமணமாகக் கொண்டு, இதர தேவ தூஷணை செய்யும் அம்சங்களையும் பிராணமில்லாதன என்று கழித்துவிட வேண்டும்

3. வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்தோரும் ஸமரஸ ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும் புஸ்தகம், பத்திரிகை, உபந்யாஸங்கள் முதலியவற்றால் பிரமாண்டமான பிரச்சாரத் தொழில் நடத்த வேண்டும். ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்.” (2)

மதமாற்றம் குறித்து அப்போதே பாரதி மிகவும் கவலைப்பட்டார்.

“இந்த மாதம் முதல் தேதி, சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறித்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது...

ஆம் ... ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதான் அது. ஹிந்துக்கடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல வாலில் நெருப்பு பிடித்தெரியும்போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள். ஜனத்தொகை குறையும்போது பார்த்துக் கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும்போது தூங்குகிறார்கள். அவர்கள் கண்ணிருந்தும் குருடர்” (3) என்றார் பாரதி. பொருளாதார வளர்ச்சிக்கு வழி சொல்லாமல் மதக் கண்ணோட்டத்தில் மக்களைப் பெருக்க வேண்டும் என்கிறார்.

மேலும் இவர் இந்து தர்மத்தைப் பற்றிக் கூறும்போது, “ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை அதனால் தொல்லைப்படுவோமேயன்றி அழிந்து போய் விட மாட்டோம். ஹிந்துக்களுக்குள் இன்றும் வறுமை மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள் புண்படும். இருந்தாலும் நமக்குச் சர்வ நாசம் ஏற்படாது. ஹிந்து தர்மத்தை கவனியாமல் அசிரத்தையாக இருப்போமேயானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும். அதில் சந்தேகமில்லை” (4) என்கிறார் பாரதியார். 1917 ம் ஆண்டு நவம்பர் 19 ம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் உலகம் முழுவதும் ஹிந்து தர்மத்தைப் பரப்ப வேண்டும் என எழுதியுள்ளார். சோவியத்தில் அக்டோபர் (நவம்பர்) புரட்சி ஏற்பட்ட பிறகுதான் பாரதி இதை எழுதுகிறார் என்பது குறிப்படத்தக்கது.

“வாரீர் நண்பர்களே, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஹிந்து தர்மம் பரவும்படிச் செய்ய வேண்டுமானால் அதற்கு இதுவே மிகவும் ஏற்ற தருணம். ஆஹா, ஸ்வாமி விவேகானந்தரைப் போலப் பத்துப் பேர் இப்போது இருந்தால் இன்னும் ஒரு வருஷத்துக்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகமெங்கும் நாட்டலாம்... சண்டை காலந்தான் நமக்கு நல்லது (முதல் உலகப்போர் 1914 முதல் 1918 வரை நடைபெற்றது. அந்தச் சமயத்தில்தான் பாரதி இதை எழுதியுள்ளார்). இவ்விஷயத்தை ஆழ்ந்து யோசனை பண்ணி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு நூற்றுக்கணக்கான பிரசங்கிகளை அனுப்பும்படி ராஜாக்களையும், ஜமீன்களையும், செட்டியார்களையும், மடாதிபதிகளையும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.” (5)

சண்டை காலந்தான் நமக்கு நல்ல காலம். மதத்தை வெளிநாடுகளில் நிலைநாட்ட இதுவே ஏற்ற தருணம் என்கிறார் பாரதியார். அவரைப் பின்பற்றித்தான் இன்றைய இராமகோபாலன் போன்றோர் “மூன்றாம் உலகப்போர் மூளுகிறது என்று நினைத்துக் கொள்வோம். அந்த வேளையில் ஆசிய நாடுகள் தங்களைக் காத்துக்கொள்ள ஒன்றுபட்டு நிற்க வேண்டி வரும். அப்போது இயல்பாகவே பாரதம் ஆசியக் கூட்டமைப்பின் தலைமை ஏற்கும். அந்த நிலையில் அகண்ட பாரதமோ, அதற்குச் சமமான நிலவரமோ உதயமாவது சாத்தியம்” என எழுதியுள்ளார் போலும்.

மேலும், “இப்பொழுது நம்முடைய தேசத்தில் இருக்கும் தாழ்ந்த ஜாதியார்களையெல்லாம் கிறிஸ்துவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் நம்முடைய குடியைக் கெடுக்கக் கோடாலியாய் இருக்கும்” (6) என்கிறார் பாரதியார்.

இந்தியாவிற்குப் பாரத தேசம் என்ற பெயர்தான் வேண்டும் என்பதற்கான காரணத்தை பாரதி கூறுகிறார். “பாரதம் பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன் துஷ்யந்த் ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்னியாகுமரி முனை வரையிலுள்ள நமது நாட்டை இவன் ஒன்றுசேர்த்து அதன்மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்தியபடியால் இந்நாட்டிற்கு ‘பாரததேசம்’ என்ற பெயர் உண்டாயிற்று.” (7)

இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்தப் பெயர் தான் வேண்டும் என்கின்றனர். பாரதி கூறுவதுபோல் இந்தியா முழுவதையும் பரதன் ஆண்டதாக வரலாற்றுச் சான்று ஏதும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. இந்தியாவில் 56 தேசம் இருந்ததாகவும், 56 அரசர்கள் ஆண்டதாகவும் தான் பாரதக் கதையிலும் காண முடிகிறது. ஆங்கிலேயர் வருவதற்கு முன் இந்தியா என்ற ஒரே நாடு இருந்ததற்கான சான்று எதுவுமே இல்லை.

இசுலாமியர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது மதமாற்றம் ஏற்பட்டது குறித்துப் பாரதியார் குறிப்பிடுவதாவது: “திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாதிபதியொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல் யாதொரு சண்டையுமின்றி தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்கோட்டில் ஹிந்துக்களை அடக்க ஆரம்பித்த போது இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கி கோமாமிசம் புசிக்கச் செய்தான்” (8) என்கிறார் பாரதியார்.

ஆனால் உண்மையில் திப்பு சுல்தான் அவ்வாறு செய்ததற்குச் சான்றாதாரம் நமக்குக் கிடைக்கவில்லை. மாறாக, திப்பு சுல்தான் பார்ப்பனர்களை ஆதரித்த செய்திகள்தான் நமக்குக் கிடைக்கின்றன. திப்புவின் ஆட்சியின் 45,000 முதல் 50,000 பார்ப்பனர்கள் அரசுப் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் தவறு செய்தால் தண்டிக்கும் உரிமையைக் கூட அவன் ஏற்றுக் கொள்ளாமல் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடமே ஒப்படைத்துள்ளான். திப்பு சிருங்கேரி சங்கரமடத்திற்கு 1791இல் எழுதிய கடிதம் மூலம் இதை அறிய முடிகிறது.

aasuThere are more than 45 to 50 thousand Brahmins in our service it is wondered if the Government alone is bestowed with judiciary powers of handing their cases and punishing them for offences like theft, liquor and Brahmahati. Hence the authority to punish such offences in your premises is given to you. You could punish them in any manner as given in sastras. (9)

இன்னும் ஒருபடி மேலே சென்று திப்புவின் ஆட்சி நிலைத்திருக்கச் சாஸ்தரா சண்டி ஜபம் நடத்த திப்பு சிருங்கேரி சங்கராச்சாரியைக் கேட்டுக் கொண்டார். ஓராயிரம் பார்ப்பனர்கள் 40 நாட்கள் ஜபம் செய்தார்கள். அந்தச் செலவு முழுவதையும் திப்புவே ஏற்றுக் கொண்டார். (10)

இப்படிப்பட்ட திப்புவா, பாரதி கூறுவது போல, பார்ப்பனரைக் கொடுமைப்படுத்தி இருப்பார்? பாரதிக்கு இஸ்லாமியரின் மீது இருந்த வெறுப்பையே இது காட்டுகிறது. பறையர்களின் பேரில் பாரதி இரக்கங்காட்டுவதாகப் பலர் எழுதுகிறார்கள். ஏன் பாரதி அவ்வாறு செய்தார் என்றால், அவர்கள் கிறிஸ்துவ மதத்திற்குப் போய் விடுகிறார்கள் என்ற எண்ணத்தில்தான்.

“1200 வருஷங்களுக்கு முன்பு, வட நாட்டிலிருந்து மதம் மாறியவர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்தபோது, நம்மவர்களின் இம்சை பொறுக்க முடியாமல் வருத்திக் கொண்டிருந்த பின்னர், பறையர் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிகாசம் சொல்கிறது. அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது.”

“... எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக்கணக்கான மனிதர்களையும், முக்கியமாக திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்தவ மதத்திலே சேர்த்துக் கொள்கிறார்கள். ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. மடாதிபதிகளும், ஸந்திதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கண்டு ஆனந்தமடைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள், ஹிந்து ஜனங்கள்! நமது ரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர். கோமாமிசம் உண்ணாதபடி அவர்களைச் சுத்தப்படுத்தி, அவர்களை நமது சமூகத்திலே சேர்த்து, அவர்களுக்குக் கல்வியும் தர்மமும் தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களெல்லாரும் நமக்குப் பரிபூரண விரோதிகளாக மாறி விடுவார்கள். (11)

சாதிக் கொடுமையினால் ஒடுக்கப்பட்டவர்கள் அதிக அளவில் மதம் மாறிய காரணத்தால் பாரதியார் கிழச்சாம்பன் கூறுவதைப் போல மதமாற்றம் வேண்டாம் என்பது பற்றி எழுதியுள்ளார். கிழச்சாம்பான் சொல்லுகிறார்: “ஹிந்து மதத்திலே எங்களுடைய நிலைமை தாழ்ந்திருக்கிறதென்றும், கிறிஸ்து மதத்தில் சேர்ந்தால் எங்களுடைய நிலைமை மேன்மைப்படுமென்றும் சொல்லி கிறிஸ்துவப் பாதிரிகள் எங்களிலே சிலரைக் கிறிஸ்து மதத்தில் சேர்த்தார்கள். அதில் யாதொரு பயனையும் காணவில்லை. நூற்றிலொருவனுக்குப் பத்துப் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்கிறது. மற்றவர்களெல்லாரும் துரைமாரிடத்தில் சமையல் வேலை பண்ணுதல், பயிரிடுதல், குப்பை வாருதல் முதலிய பழைய தொழில்களைதான் செய்து வருகிறார்கள். எனக்கு முன்னோருடைய மதமே பெரிது. கிறிஸ்துவர்களுடன் எங்களுக்குக் கொடுக்கல் வாங்கல், சம்மந்தம், சாப்பாடு ஒன்றுமே கிடையாது. என்ன கஷ்டமிருந்தாலும் நாங்கள் ஹிந்து மதத்தை விடமாட்டோம்.” (12)

பாரதி இந்து மதத்தை நிலைநிறுத்த எப்படியெல்லாம் சிந்திக்கிறார் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. ஆக முகமதியர்களையும், கிறித்துவர்களையும் எதிரிகள் என்றே பாரதியார் குறிப்பிடுகிறார். இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். போடுகின்ற பசுவதைத் தடுப்புச் சட்டம் என்ற கூச்சலை அன்றே போட்டவர் பாரதியார் ஆவார். 1917 நவம்பர் 8ஆம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் பசுவதைத் தடுப்பைப் பற்றி எழுதியுள்ளதாவது:

“பசுவின் சாணத்துக்கு நிகரான அசுத்த நிவாரண மருந்து உலகத்தில் அக்னியைத்தான் சொல்லலாம். வீட்டையும், யாகசலையையும், கோவிலையும், நாம் பசுவின் சாணத்தால் மெழுகிச் சுத்தப்படுத்துகிறோம். அதனைச் சாம்பல் ஆக்கி அச்சாம்பலை வீபூதி என்று ஜீவன் முக்தியாக வழங்குகிறோம். பசுமாடு பத்தினிக்கும் மாதாவுக்கும் ஸமானம். அதன் சாணமே வீபூதி. அதன் பால் அமிர்தம், வைத்தியரும், யோகிகளும் பசுவின் பாலை அமிர்தம் என்கிறார்கள். வேதமும் அப்படியேதான் சொல்கிறது.

பசுவை இந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும்பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்தாகிய இந்தத் தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலையை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதையாகும். இதைத்தான் ஆப்கானிஸ்தானத்து அமீர் சாஹெப், தமது தேசத்து முஸல்மான்களிடம் சொல்லிவிட்டுப் போனார். ஹிந்துக்களின் கண்ணுக்குப் படாமல் என்ன எழவு வேண்டுமானாலும் செய்து கொண்டு போங்கள்” (13) என்கிறார் பாரதியார்.

இன்றைக்குக் கிறித்துவ மிஷனரி பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். கூறுவதை, பாரதியார், 18.8.1906 இலேயே மிஷின் பாடசாலைகளை விலக்கி வைத்தல் வேண்டும் என்று கூறி இந்தியா ஏட்டில் தலையங்கம் எழுதியுள்ளார். “அதில் படிப்பவர்கள் இந்து மதக் கடவுள்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு தேசபக்தி வராது. கிறிஸ்துவர்களாக மாறிவிடுவார்கள். எனவே அவர்களை அப்பள்ளிகளில் சேர்க்க வெண்டாமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.” (14)

1906 முதலே பாரதியார் கிறித்தவர்களைத் தேசபக்தி அற்றவர்கள்; இந்து மதத்தைக் கெடுக்க வந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 1909இல் இசுலாமியர்கள் தேசபக்தி அற்றவர்கள் என்றும் ‘இந்தியா’ ஏட்டில் கருத்துப் படம் போட்டு எழுதியுள்ளார். இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், “இந்தியாவிற்குப் பொது மொழிப் பிரச்சனை தீர ஒரேவழி - சமசுகிருதம்தான் இந்தியாவின் பொது மொழியாக வேண்டும்” (15) என்கின்றனர். இதே கருத்தைப் பாரதி, இந்தியாவிற்குப் பொது மொழியாக சமசுகிருதம்தான் வர வேண்டும் என்று 1920இலேயே எழுதியுள்ளார். (16)

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சமசுகிருதம் மட்டும்தான் (தேவ பாஷை) தெய்வ மொழி என்கின்றனர். பாரதியும் இதே கருத்தைத் தான் கூறியுள்ளார். (17) பாரதி, இன்னும் ஒரு படி மேலே போய், இந்தியாவிற்குச் சுதந்திரம் ஏன் தேவையென்றால் இந்து தர்மத்தைக் காப்பாற்றவே என்று, 1921இல் ‘லோக குரு பாரதமாதா’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

“எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியாவின் நெஞ்சில் வேதாந்தக் கொள்கை ஊறிக் கிடக்கிறது. ஆனால் இக்கொள்கையை முற்றும் அனுஷ்டித்தல் அன்னிய ராஜ்ஜியத்தின் கீழே ஸாத்யப்படவில்லை. ஆதலால் நமக்கு ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ்வராஜ்யம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும் வழி. (18)

பாரதி அகன்ற பாரதக் கொள்கை உடையவர். என்றைக்கும் இந்தியா உடையக் கூடாது என்பதில் மிகவும் உறுதியானவர். பாரதியின் காலத்திலேயே 1917இல் தெலுங்கர்கள் தங்களுக்குத் தனி மாகாணம் தேவை என்ற கொள்கையை முன்வைத்தார்கள். அப்போது பாரதி கீழ்க்கண்ட கருத்துகளை முன் வைக்கிறார்:

“என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கண்ட கொள்கையெல்லாம் நியாயமென்றே தோன்றுகிறது. ஆனாலும் அந்தச் சமயத்தில் ஆந்திரத்தைத் தனிப்பிரிவாக ருஜுபடுத்துவதைக் காட்டிலும், ஆப்கான் முதல் குமரி வரை உள்ள ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம், வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர், பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகள், நமக்குள் மதபேதம், ஜாதிபேதம், குலபேதம், பாஷாபேதம் ஒன்றும் கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது. ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடல், ஒன்று.” (19)

பாரதி பாப்பா பாட்டில் கூட,

சேதமில்லாத இந்துஸ்தானம் அதை
தெய்வமென்று கும்பிடடி பாப்பா

என்றுதானே கூறியுள்ளார்?

இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களைப் போலவே பாரதியும் உடன்கட்டை ஏறி இறந்து போனவர்களை உத்தமிகள் என்று கூறுகிறார். (20) இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கொள்கைகளை அன்றைக்கு வகுத்துக் கொடுத்தவர் பாரதியார் என்று ஆணித்தரமாக நாம் சொல்லலாம்.

சுருங்கக் கூறின் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருதல், இசுலாமியரும் கிறித்துவரும் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள், அவர்கள் தேசபக்தி அற்றவர்கள், கிறித்தவர் பள்ளிகளில் இந்து மாணவர்களைச் சேர்க்கக் கூடாது, முகமதியர்களும் கிறித்துவர்களும் இந்துக்களின் விரோதிகள், இந்தியா முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்து மதத்தைப் பரப்ப வேண்டும்; இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; பிளவுண்டு மடியக் கூடாது, வேதத்தையும், தர்மத்தையும் நிலைக்கச் செய்ய வேண்டும், மீண்டும் நால்வருணம் வர வேண்டும், வகுப்புரிமை கூடாது, ஆரியர், திராவிடர் என்பது பொய், பாரதமாதா லோக குரு, பசுவதை கூடாது, சமஸ்கிருதம் உயர்ந்த மொழி; அது இந்தியாவிற்குப் பொதுமொழியாக வர வேண்டும் முதலான ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் எல்லாக் கொள்கைகளையும் வகுத்துக் கொடுத்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அன்றே கெட்டியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் பாரதியாரே என்பதை அவரது எழுத்துகளிலிருந்து அறிய முடிகிறது.

அடிக்குறிப்பு

1. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம்,ப.423
2. மேற்படி நூல், ப.121-123
3. மேற்படி நூல், ப.379
4. மேற்படி நூல், ப.381
5. பாரதி தமிழ் (தொ,ஆ) பெ.தூரன், வானதி பதிப்பகம்,ப.281-282
6. பாரதியார் புதையல் பெருந்திரட்டு,(தொ.ஆ) ரா.அ. பத்மநாபன், வானதி பதிப்பகம், சென்னை 1982,ப.478
7. பாரதியார் கட்டுரைகள்,ப.53
8. மேற்படி நூல், ப.176
9. Tippu Sulran,A Fanatic? V.Jalaja Sakthidasan, Ninhyananda jothi nilayam, P25, chennai-28.
10. மேற்படி நூல், ப
11. பாரதியார் கட்டுரைகள்,ப.334,335
12. பாரதி தமிழ் (தொ,ஆ) பெ.தூரன், வானதி பதிப்பகம்,ப.241
13. மேற்படி நூல், ப.278-280
14. பாரதி தரிசனம் தொகுதி 1,நி.செ.பு.நி, ப.258
15. M.S.Golwaker Bunch of Thoughts. Page 150
16. பாரதியார் புதையல் பெருந்திரட்டு, ப.274,275
17. பாரதியார் கட்டுரைகள்,ப.46
18. பாரதியார் புதையல் பெருந்திரட்டு, ப.500,501
19. பாரதி தமிழ் (தொ,ஆ) பெ.தூரன்,ப.255
20. பாரதியார் புதையல் பெருந்திரட்டு, ப.331,332

(வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் எட்டாம் அத்தியாயம்)

வெளியீடு: தமிழ்க் குடியரசு பதிப்பகம்
14/12, மியான் முதல் தெரு,
சேப்பாக்கம், சென்னை - 600 005
பேசி: 9444321902
Pin It