“இந்தியா வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல வேண்டுமென்றால் மோடிக்கு வாக்களியுங்கள்” என்று மக்களுக்கு வாக்குறுதியை வாரி வழங்கி மோடியை வளர்ச்சியின் அடையாளமாக்கி ஆட்சியைப் பிடித்தது பி.ஜே.பி. கட்சி. “இந்தியா வேகமாக வளர” மோடி உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்குப் பறந்து பறந்து செல்கிறார். பல்வேறு நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களைப் போடுகிறார்.

இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் என்று பல்வேறு நாடுகளின் முதலாளிகளை இரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறார். தொழில் தொடங்குவதற்கான அனுமதியை எனது அரசு “ஒரே நாளில் முடித்துக் கொடுக்கும்” என்று அன்னிய முதலாளிகளுக்கு நம்பிக்கை ஒளியை ஊட்டுகிறார். அன்னிய முதலாளிகள் இந்தியாவில் தொழில் தொடங்க விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க “இந்திய அரசு சித்தமாய்” இருப்பதாய் சிரம் தாழ்த்தி வாக்குறுதி அளிக்கிறார்.

காங்கிரசு அரசும், பா.ஜ.க. அரசும் முதலாளிகளால் மட்டும்தான் அனைத்து சிக்கல்களையும் தீர்க்க முடியும் என்கின்றனர். முதலாளிகளின் முதலீட்டை அதிகரிப்பதே நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் ஒரே வழி என்ற கொள்கையை முன்வைக்கின்றனர்.

உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராள மயமாக்கல் பொருளாதார கொள்கை அடிப்படையில் இந்திய பிராந்திய பெருமுதலாளிகளின், அன்னிய முதலாளிகளின் முதலீட்டை அதிகரிப்பதால் நாடும், நாட்டு மக்களும் வளம் பெற முடியுமா? “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதைப் போல, “ஒரு நோக்கியா ஆலை மூடலை” உதாரணமாகக் கொண்டு மோடியின் “மேக் இன் இந்தியாவின்” உண்மை நோக்கத்தை அறிய முயற்சிப்போம்.

நோக்கியா...

அன்னிய முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து பொருளாதார முன்னேற்றத்தை இந்நாடு அடைய முடியும் என்ற கவர்ச்சி முழக்கத்தை முன்வைத்து, “எந்த ஆட்சி அதிக அளவில் அந்நிய முதலீட்டை ஈர்க்கிறதோ அதுவே மக்களுக்கான ஆட்சி” என்ற போட்டியில் அனைத்து கட்சிகளும் களமிறங்கினர். களத்தில் நின்ற கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு 2006ஆம் ஆண்டில், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நாடு கடந்த நிறுவனமான ( Transnational Company – TNC) நோக்கியா தமிழகத்தில் முதலீடு செய்ய முன் வந்த போது,

- மலிவு விலையில் நிலம்

- தடையில்லா மின்சாரம்

- பல்வேறு வரிச் சலுகைகள்

- தொழிலாளர் சட்டத்தை தளர்த்துதல்...

என்று பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி தமிழ்நாட்டில் திருப்பெரும்புதூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (SEZ - Special Economical Zone) தொழில் தொடங்க வரவேற்று அனுமதி அளித்தது.

அப்பொழுது கைப்பேசி பயன்படுத்துவது அதிகரித்து வந்த வேளையில், கைப்பேசியின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட வேளையில், நோக்கியாவின் தமிழக வருகை தி.மு.க.வால் தமிழக வளர்ச்சியின் அடையாளமாக உயர்த்தி பிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

கைப்பேசி என்றாலே “நோக்கியாதான்” என்ற உச்சத்திற்கு “நோக்கியா கைப்பேசி விற்பனை” கொடி கட்டி பறந்தது.

உழைப்பு சுரண்டல்

சுமார் 6,600 தொழிலாளர்கள் நோக்கியாவில் பணிபுரிந்தனர். மேலும் நோக்கியா தனது உதிரி பாகங்களை வெளியில் கொடுத்து (Out Sourcing) உற்பத்தி செய்தது. உதிரி பாகங்களை வெளியில் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் எண்ணிக்கையையும் சேர்ந்து நோக்கியா நிறுவனம் 25.000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி கொழுத்தது. இதிலும் பெண் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி கொடுத்தும், அதிகப்படியான ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி மிக குறைந்த கூலி கொடுத்தும் சுரண்டியது.

காஞ்சிபுரம் அருகே உள்ள கலவை என்ற ஊரைச் சேர்ந்த அம்பிகா (வயது 23) என்ற பெண் தொழிலாளியைக் குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தி என்ற லாபவெறிக்கு பலியாக்கி தொழிலாளியின் ரத்தத்தை உறிஞ்சியது.

ஐரோப்பிய நாடுகளில் தனது தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளிக்கு ஆண்டொன்றுக்கு சராசரி ஊதியமாக 29 லட்சத்தை வழங்குகிறது. இது திருப்பெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையில் வேலைப் பார்க்கும் தொழிலாளர்களுக்கு தரப்படும் ஆண்டு ஊதியத்தை விட 45 மடங்கு அதிகமாகும்.

மத்திய - மாநில அரசுகள் நோக்கியா நிறுவனத்திற்கு வழங்கிய வரிச் சலுகைகள்

மத்திய அரசானது இந்தியாவினுள் விற்கும் கைப்பேசிகள் மீது விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரி உள்ளிட்ட பிற வரிகள் அனைத்தையும் நோக்கியா நிறுவனத்திற்கு மானியமாக அளிப்பதாக ஒப்புக்கொண்டது. இதனால் 2006லிருந்து 2013 வரையிலான 7 ஆண்டுகளில் வரிச்சலுகையாக 645,4 கோடி ரூபாயைப் பெற்றது.

நோக்கியா நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (SEZ) தொடங்கப்பட்டதால் 2005 - 2006 மற்றும் 2006 - 07 ஆகிய இரு ஆண்டுகளில் மைய அரசு நோக்கியா நிறுவனத்திற்கு அளித்துள்ள சுங்க வரி மற்றும் உற்பத்தி வரி விலக்கு சலுகை ஏறத்தாழ 681,38 கோடியாகும். மேலும் 2006 - 09 வரையிலான மூன்று ஆண்டுகளில் இந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிச் சலுகைகள் மற்றும் ஏற்றுமதி வரிச் சலுகைகள் ஆகியவை காரணமாக இந்நிறுவனம் அடைந்துள்ள மறைமுக லாபம் ஏறத்தாழ 8,000 கோடி ரூபாய் ஆகும்.

வரி ஏய்ப்பு

வரிச் சலுகைகளாக நோக்கியா நிறுவனம் பல கோடிகளை வாரி சுருட்டியது. அத்தோடு அதனுடைய லாப வெறி நின்றுவிடவில்லை. 2006-லிருந்து 2013ஆம் ஆண்டு வரியிலான 7 ஆண்டுகளில் 21,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது. (தி இந்து)

உள்நாட்டு தேவைக்கான உற்பத்தியைச் செய்கிறோம் என்று அரசிடம் ஏமாற்றி பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. அதாவது ஏற்றுமதிக்கான வரியைச் செலுத்தாமல் ஏப்பம் விட்டது. இது தொடர்பான உச்சநீதி மன்ற உத்தரவையும் காலில் போட்டு மிதித்தது.

நோக்கியா நிறுவனம் பின்லாந்திலுள்ள அதன் தாய் நிறுவனத்திடமிருந்து ‘மென்பொருளை’ இறக்குமதி செய்ததில் 3,000 கோடி முதல் 13,000 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது. அதாவது பின்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘மென்பொருள்களை’ ‘கச்சா பொருள்களாக’ காட்டி இந்த வரி ஏய்ப்பைச் செய்தது.

2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருப்பெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையிலும், பெருங்குடியில் அமைந்துள்ள அதன் அலுவலகத்திலும், டெல்லியை அடுத்துள்ள குர்கானில் அமைந்துள்ள அதன் துணை நிறுவனங்களிலும் ஒரே சமயத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டபோது மேற்கூறிய வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு வெளிக் கொணரப்பட்டது.

கொள்ளை லாபம்

1125 கோடி ரூபாய் மொத்த மூலதனம் போட்டு மலிவு விலை நிலம், மின் கட்டண சலுகை, தடையில்லா மின்சாரம், பல்வேறு வரிச் சலுகைகள், வரி ஏய்ப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாளர்களுக்கு மிக குறைந்த கூலி கொடுத்து கொடுமையாக சுரண்டி 7 வருடத்தில் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு கொள்ளைலாபம் அடித்தது. கொள்ளையடித்த லாபம் முழுவதையும் இந்தியாவிலிருந்து பின்லாந்திற்கு எடுத்துச் சென்றது.

நோக்கியா ஆலை மூடல்

நோக்கியா நிறுவனத்தை பில்கேட்சின் டைன்ரோ சாப்ட் நிறுவனம் வாங்கியது. அதே நேரத்தில் திருப்பெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலை சந்தை சரிவைச் சந்தித்துள்ள நிலையில், வரி ஏய்ப்பிலும் சிக்கி இருந்ததால், பில்கேட்ஸ் நிறுவனம் திருப்பெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையை மட்டும் வாங்காமல் தவிர்த்தது. அதே வேளை திருப்பெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையிடம் கைப்பேசியை மட்டும் வாங்குவதாக ஒப்பந்தம் போட்டது.

இந்நிலையில் நோக்கியா நிறுவனம் 25,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர் வாழ்க்கையை விட லாபம் ஒன்றே குறிக்கோளாகக் கொள்ளும் முதலாளித்துவத்தின் அடிப்படை பண்பிலிருந்து கொஞ்சமும் மாறாமல் திருப்பெரும்புதூரில் உள்ள ஆலையை மூட முடிவெடுத்து அதற்கான காய்களைக் கவனமாக நகர்த்தியது.

* 2013ஆம் ஆண்டு நவம்பர் 7இல் ஒப்பந்த தொழிலாளர்கள் 200 பேரை வெளியேற்றியது.

* பேருந்து சேவை, கேன்டீன் சேவை செல்லாது என அச்சுறுத்தி எண்ணற்ற பெண் தொழிலாளர்களை விருப்ப ஓய்வின் மூலம் வெளியேற்றியது.

* வேறு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆண்களுக்கு விருப்ப ஓய்வூதியம் கொடுத்து வெளியேற்றியது.

* ஏற்கெனவே விருப்ப ஓய்வில் வெளியேறியவர்களுக்கு 3 லட்சம் முதல் 5.5 லட்சம் வரை கொடுத்தது. பிறகு எஞ்சியுள்ள தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு 9 லட்சம் வரை இழப்பீடு வழங்கி, நிறுவனம் மீண்டும் செயல்பட்டால் வேலையில் முன்னுரிமை அளிப்பதாக வாக்குறுதியை வாரி வழங்கி வெளியேற்றியது.

இறுதியில் நவம்பர் 1 முதல் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்து ஆலையை மூடி 25,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து வீதியில் தூக்கியெறிந்தது.

நோக்கியா மட்டுமல்ல

2005-2006 நிதியாண்டில் மட்டும் 1,915 பன்னாட்டு நிறுவனங்களில் 411 நிறுவனங்கள் ஏய்ப்பில் ஈடுபட்ட உண்மையை நாடாளுமன்றத்தில் போட்டுடைத்தார் அப்பொழுதைய நிதித்துறை துணை அமைச்சராக இருந்த எஸ். பழனிமாணிக்கம்.

* “வோடாபோன்” நிறுவனத்தின் 11,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு 2012இல் அம்பலமாகியது.

* பெட்ரோலிய நிறுவனமான ஷெல், இணையதள நிறுவனமான கூகுள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது 2013இல் அம்பலமாகியது.

* 2009 முதல் 2013 வரையிலான நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 95,000 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து அந்நிய நாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கிறது.

* தமிழகத்தில் தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை மூலம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல லட்சம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

வரி விலக்கு

* 2004-லிருந்து 2014 வரையிலான 9 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு அளித்த வரி விலக்கு 30 லட்சம் கோடியாகும்.

* 2008இல் அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரி விலக்கு ஆண்டுக்கு சராசரி 2.5 லட்சம் கோடி, 2008-லிருந்து இரண்டு மடங்கு உயர்ந்து ஆண்டிற்கு 5 லட்சம் கோடியானது.

சுங்கவரி குறைப்பு

* 2007 - 08இல் சுங்கவரி மூலம் கிடைத்த வருவாய் 1 லட்சம் கோடியாகும். இதுவே 2009 - 10இல் 0.83 லட்சம் கோடியாகக் குறைந்தது. அதே வேளை 2007-08இல் 8.4 லட்சம் கோடியாக இருந்த இறக்குமதி 13.74 லட்சம் கோடியாக அதிகரித்தது.

அதாவது 2007லிருந்து 2010க்குள் இறக்குமதி 56 சதவீதம் அதிகரித்தது. அதே வேளை சுங்கவரி 17 சதவீதம் குறைந்ததுள்ளது.

இந்திய பார் சேல்

வரி ஏய்ப்பு செய்த நோக்கியா உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள் ‘தங்கள் மீது வருமான வரித் துறை அதிகாரிகள் வேட்டை நாயை போல் பாய்வதாகவும், இது முதலீட்டு சூழலைப் பாதிக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்தனர்.

அப்பொழுது ப. சிதம்பரம் “வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக கொண்டு வரப்படவிருந்த வரி ஏய்ப்பு தடுப்பு சட்டம் என்ற பூதத்தை நாங்கள் புதைத்துவிட்டோம்” என்று முதலாளித்துவ கும்பலின் கொள்ளைக்கு உத்திரவாதம் அளிக்கிறார்.

மன்மோகன் சிங் “தொழிற் சங்க சட்டங்களை மேலும் தாராளமயமாக்க வேண்டும்” என்று கொஞ்ச நஞ்சம் இருக்கும் தொழிலாளர் உரிமைகளையும் பறித்துத் தொழிலாளர்களை முதலாளிகளின் கொத்தடிமைகள் ஆக்கத் துடித்தார்.

காங்சிரசு ஆட்சிக்கு சற்றும் சளைத்தது அல்ல பா.ஜ.க. ஆட்சி. முதலாளித்துவ விசுவாசத்தில் எங்களை விஞ்ச ஆளில்லை என்று களத்தில் குதித்துள்ள மோடி “மேக் இன் இந்தியா” திட்டத்தை முன்வைத்துள்ளார்.

சீனாவானது தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களை ஒழித்தது, முதலாளிகள் தொழிலாளர்களை மிக கடுமையாக சுரண்டிக் கொழிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்தது. பன்னாட்டு முதலாளிகள் சீனாவில் தாராளமாக முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்காக முதலாளிகளின் கொள்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலான சட்டதிருத்தங்களையும் கொண்டு வந்தது. இதனால் பன்னாட்டு முதலாளிகளின் மூலதனம் சீனாவில் மிக அதிகமாக குவிந்தது.

தொழிலாளர்கள் மிக கடுமையாக சுரண்டப்பட்டனர். எண்ணற்ற தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையும் உருவானது. இதே வேளை தற்காலிகமாக சீன பொருளாதாரம் உயர்ந்தது. இது காற்று ஊதப்பட்ட பலூனை போன்ற ஒரு உயிர்வே தவிர சீனாவின் சுய சார்பான, திடப்படுத்தப்பட்ட பொருளாதார உயர்வு இல்லை. ஒரு சிறிய துளை எப்படி பலூனில் உள்ள காற்றை வெளியேற்றி விடுமோ, அதைப்போல் சீனாவின் ஊதி பெருக்கப்பட்ட பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை எந்த நேரத்திலும் சந்திக்கும்.

தற்காலிகமாக ஊதி பெருக்கப்பட்டுள்ள சீன பொருளாதாரத்தை (முதலாளித்துவ தற்காலிக வளர்ச்சியை) கண்ட மோடி அதே போன்று இந்திய பொருளாதாரத்தையும் ஊதி பெருக்க முன் வைத்துள்ள திட்டம்தான் “மேக் இன் இந்தியா” ஆகும். இத்தகைய “மேக் இன் இந்தியா” திட்டத்தை நிறைவேற்ற இந்தியாவை முழுக்க முழுக்க முதலாளிகளின் சுரண்டல் காடாக்க மோடி விரைந்து செயல்பட தொடங்கிவிட்டார்.

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பேசிய மோடி “பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் இந்தியாவில் நிலவுகிறது என்றும், பல்வேறு சட்டங்கள் மற்றும் விதிகள் உங்களுக்காக திருத்தப்பட்டுள்ளது என்றும், இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரவேண்டும்” என்று அனைத்து முதலாளிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

ஜி. 20 மாநாட்டில் “சீர்திருத்த நடவடிக்கைகள் அரசியல் நெருக்கடியில் இருந்து விடுவிக்கப் படவேண்டும்” என்று அனைத்து சனநாயக உரிமைகளையும் குழி தோண்டி புதைத்து “பாசிஸ்டு” முழக்கமிடுகிறார்.

மோடி கூறும் “சீர்திருத்தம்” என்னவாக இருக்கும்? “உகந்த சூழல்” “சட்டம் மற்றும் விதிகள் திருத்தம்” எப்படிப்பட்டதாக இருக்கும்?

தொழிலாளர் சட்டங்களை நீர்த்து போகச் செய்து அல்லது பறித்து முதலாளித்துவ சுரண்டலை கேள்வி கேட்பாரற்று அதிகரிக்கச் செய்வதே “சட்டத்திருத்தம்”. சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதியிலிருந்து, பழங்குடி மக்களை அவர்கள் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தி (கொன்று குவித்து அல்லது இந்தியாவின் வீதிகளில் தூக்கியெறிந்து) முதலாளிகள் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க வனங்களை தாரை வார்ப்பதே “உகந்த சூழல்”. இதேபோல் இந்திய துணை கண்டம் முழுக்க உழவர்கள், மீனவர்கள், பழங்குடிகள், நகர்ப்புற ஏழை மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து (ஏற்கெனவே காங்கிரசு ஆட்சி செய்ததைவிட) வேகமாக அப்புறப்படுத்தி சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி, முதலாளிகள் தொழில் தொடங்குவதற்கான “உகந்த சூழலை” உருவாக்கித் தருவது.

படிப்படியாக மக்களுக்கு அளிக்கும் மானியங்களைக் குறைத்து , முதலாளிகளுக்கான மானியங்களை அதிகரிப்பதற்கான சட்டத்திருத்தங்களைக் கொண்டுவருவது.

இத்தகைய சீர்திருத்த நடவடிக்கையின் போது யாரும் எத்தகைய எதிர்ப்பையும், ஏன் முனுமுனுப்பைக் கூட வெளிப்படுத்தக்கூடாது என்பதைத்தான் மோடி மிக அழகாக “சீர்திருத்த நடவடிக்கைகள் அரசியல் நெருக்கடியில் இருந்து விடுவிக்கப்படவேண்டும்” என்று பாசிச வெறியுடன் கொக்கரிப்பது. நான் முதலாளிகளுக்காக எத்தகைய சீர்திருத்தத்தை வேண்டுமானாலும் செய்வேன், எந்த அரசியல் கட்சியும் இயக்கங்களும் மக்களும் எத்தகைய எதிர்ப்பையும் தெரிவிக்க சனநாயகம் கிடையாது என்கிறார் “பாசிஸ்ட் மோடி”.

எம் தமிழ் தேசத்தை, இந்திய நாட்டைக் கூறுபோட்டு முதலாளிகளுக்கு விற்பேன், இதை எதிர்த்து தேசத்தை, நாட்டைப் பாதுகாக்கிறேன் என்று யாரும் வாயைத் திறக்கக் கூடாது என்று “தேச துரோகி மோடி” முழங்குகிறார். இந்திய இறையாண்மையை முதலாளிகளின் இறையாண்மையாக்கத் துடிக்கும் “இறையாண்மைக்கெதிரான மோடி” கொக்கரிக்கிறார். இதுதான் மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டமாகும். சீர்திருத்த நடவடிக்கைகள் மக்களுக்காக மக்களால் என்று மோடி கூறுவது நம் காதில் பூச்சுற்றத்தான். உண்மையில் மோடி செய்ய இருக்கின்ற சீர்திருத்த நடவடிக்கை முதலாளிகளுக்காக முதலாளிகளால் நடைபெறப் போகிறது.

மோடி பாசிசம்

உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராள மயமாக்கலுக்கு எதிராக பரந்துபட்ட மக்களின் சனநாயக முன்னணியைக் கட்டியமைப்போம் உள்நாட்டு இந்திய பிராந்திய பெரு முதலாளிகள், அன்னிய முதலாளிகளின் முதலீட்டை அதிகரிப்பதே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து சிக்கல்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணியாக முதலாளித்துவக் கட்சியால் காட்டப்படுகிறது.

முதலாளிகளால், முதலாளித்துவத்தால் அனைத்து சிக்கல்களையும் தீர்க்க முடியுமா? முதலாளிகளுக்கு லாபம் ஒன்றே குறிக்கோள். அதற்காக எதையும் செய்யத் தயாராய் இருப்பார்கள் என்பதை மார்க்சிய ஆசான் காரல் மார்க்ஸ் தெட்டத் தெளிவாக முன்வைக்கிறார்.

“முதலாளித்துவம் தனது மூலதனத்திற்கான இலாபம் இல்லை அல்லது குறைவான இலாபம் என்பதைத் தவிர்க்கின்றது. 10 விழுக்காடு இலாபம் என்றால் எங்கு வேண்டுமானாலும் மூலதனம் செய்ய முன்வருகிறது. 20 விழுக்காடு இலாபம் வருமென்றால் ஆர்வத்துடன் முதலீடு செய்ய ஓடுகின்றது.

50 விழுக்காடு இலாபம் வருகிறது என்றால் எதையும் செய்யத் துணிவு கொள்கிறது. 100 விழுக்காடு இலாபம் வருமென்றால் அனைத்து சட்டங்களையும் காலில் மிதிக்கும் துணிவு பெற்று விடுகிறது.

300 விழுக்காடு இலாபம் என்றால் அதற்காக எந்தக் குற்றத்தையும் செய்யும், தூக்கிலிடுவோம் எனினும் துணிந்து எதையும் செய்யும்.

சமூக கொந்தளிப்பும், மோதலும் லாபம் தருமென்றால் அதையும் ஊக்குவிக்கும்.” (மூலதனம் - தொகுதி ஒன்று)

முதலாளிகள் தங்களுக்கு நட்டம் என்று அறிந்தால் தொழிலாளியின் வாழ்க்கையைப் பற்றியோ, நாட்டின் வளர்ச்சி பற்றியோ மக்களால் ஏற்படப் போகும் சமூகக் கொந்தளிப்பு பற்றியோ பொருளாதார முன்னேற்றம் குறித்தோ துளியளவு அக்கரையும் கொள்ளமாட்டார்கள். தொழிற்சாலையை மூடிவிட்டு நோக்கியா போல் முதலீட்டைத் திரும்பப் பெற்றுக் கொள்வார்கள்.

திருப்பெரும்புதூரில் நோக்கியா ஆலை 25,000 தொழிலாளர்களை எவ்வித கவலையுமின்றி வீதியில் தூக்கியெறிந்துவிட்டது. வரி ஏய்ப்பு செய்து 20,000 கோடியை ஏப்பம் விட்டு கம்பெனியை இழுத்து மூடிவிட்டுச் செல்கிறது. காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் வரி ஏய்ப்பைப் பற்றி பேசாமல் மௌனம் காக்கின்றனர். முதலாளிகளும் மேற்கூறிய அரசியல் கட்சிகளும் கூட்டு களவாளிகளே, முதலாளிகளைப் பாதுகாக்கத்தான் இத்தகைய கட்சிகள் உள்ளன.

புதிதாக ஆட்சி அமைந்துள்ள மோடி அரசு 100 விழுக்காடு இரயில்வே துறை தனியார் மயமாக்கப்படும், காப்பீட்டுத் துறையில் 49 விழுக்காடு அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும், கார்ப்பரேட் முதலாளிகளே முதலீடு செய்ய வாருங்கள்... வாருங்கள் என்று உலகில் உள்ள நாடுகளுக்கெல்லாம் பறந்து சென்று கூவி கூவி விற்பனை செய்கிறார் மோடி.

இந்திய நாட்டில் தொழிலாளர் சந்தை பெருமளவில் இருக்கிறது. தொழிலாளர் உழைப்பைச் சுரண்டி கொழுக்க வாருங்கள்... வாருங்கள், நான் தொழிலாளர் உரிமைகள் அனைத்தையும் பறித்து உங்களுக்கு அடிமை சேவகம் செய்ய வைக்கிறேன் என்று முதலாளிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் மோடி.

காங்கிரசு புதுப்புது சட்டங்களை இயற்றியது, நான் தேவையில்லாத சட்டங்களை எல்லாம் நீக்கி இந்திய நாட்டில் சுதந்திரமாக காற்று (அன்னிய முதலாளிகளின் முதலீட்டை) புக அனுமதிப்பேன் என்கிறார் மோடி.

மொத்தத்தில் மோடி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இந்திய நாட்டை, இந்திய நாட்டு மக்களை அடிமையாக்க உறுதி பூண்டுவிட்டார். இதற்கெதிராய் எழும் மக்கள் போராட்டத்தை திசை திருப்பவும், பாசிச வெறியுடன் ஒடுக்கவும் “இந்து பாசிசத்தைக்” கட்டியமைக்க முழு தயாரிப்பு செய்து வருகிறார்.

மோடியின் ஆசியுடன், திட்டத்துடன் இந்து பாசிசத்தை கட்டியமைப்பதற்கான சமூக அடித்தளத்தையும், அரசியல் தயாரிப்பையும் இந்துத்துவா சக்திகள் மிக வேகமாக முன்னெடுக்கத் தொடங்கிவிட்டனர்... இந்தியாவில் வாழும் அனைவரையும் இந்துக்கள் என்று அழைக்க வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வானொலியில் உரையாற்றுகிறார். இதற்கு வலுச் சேர்க்க நிரஞ்சன் ஜோதி இந்தியாவில் வாழும் அனைவரும் ராமரின் பிள்ளைகள் என்கிறார். 2015-2016 ஆம் கல்வியாண்டின் பாடத்திட்டத்தை காவி மயமாக்கும் வேலைகளை சுமிருராணி விரைந்து செய்துவருகிறார். சுஷ்மா சுவராஜ் பகவத் கீதையைத் தேசிய நூலாக்க வேண்டும் என்கிறார். வல்லபாய் படேலுக்கு வானுயர சிலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்படி நாளுக்கு நாள் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி, பா.ஜ.க.... போன்ற இந்து பரிவாரங்களினால் இந்து பாசிசத்திற்கான சமூக, அரசியல் அடித்தளங்கள் விரைவாக கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நம்முன் உள்ள ஒரே வழி

* மோடியின் பாசிசத்திற்கெதிராகவும்

* கார்ப்பரேட் முதலாளிகளிடம் இந்திய நாட்டு மக்களை அடிமையாக்குவதற்கு எதிராகவும்

தொழிலாளி வர்க்க தலைமையில் உழவர்கள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள், பெண்கள், தலித்துகள், பழங்குடிகள், மீனவர்கள், மத சிறுபான்மையின மக்கள், மொழிவழி தேசிய இனங்கள், பழங்குடி தேசங்கள் ஐக்கியப்பட்டு போராட வேண்டிய நிர்ப்பந்தம் நம்முன்னுள்ளது.

மேற்கூறிய குறைந்தபட்ச திட்டத்தை முன்வைத்து மாவோயிஸ்ட் கட்சி, மார்க்சிய - லெனினிய கட்சிகள், சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), எஸ்.யூ.சி.ஐ. மற்றும் பல்வேறு இடதுசாரி கட்சிகளும், அமைப்புகளும், தேசிய விடுதலை இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் பழங்குடியினர் இயக்கங்களும், தலித் இயக்கங்களும், பெண்கள் இயக்கங்களும், மீனவர் இயக்கங்களும், மத சிறுபான்மையினர் இயக்கங்களும் மேலும் சனநாயக சக்திகளும், அறிவுத் துறையினரும் ஒன்றிணைந்து பரந்த மக்கள் சனநாயக முன்னணியைக் கட்டியமைக்க வேண்டியுள்ளது.

சி.பி.ஐ. (எம்) மேற்கு வங்கத்தில் தனது ஆட்சியை இழந்ததாலும், இந்து பாசிச அபாயத்தின் நெருக்கடியாலும் தவிர்க்க முடியாமல் சந்தர்ப்பவாதமாகவும், மேலோட்டமாகவும் மேற்கூறிய முழக்கங்களை அடிப்படையாக வைத்து சி.பி.ஐ. (C.P.I..), எஸ்.யூ.சி.ஐ. (SUCI) விடுதலை ((Liberation) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்துள்ளது.

மேற்கூறிய ஒருங்கிணைப்பில் உள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களும், இடது சாரி சக்திகளும், பரந்த சனநாயக முன்னணியும், சி.பி.ஐ.(எம்)-ன் சந்தர்ப்பவாத, மேலோட்டமான போக்கையும் இதற்கு துணை போகும் அனைத்து சக்திகளையும் இந்து பாசிசம், உலக மயமாக்கல் சிக்கலின் ஆழத்தை உணர்ந்து உறுதிமிக்க எதிர்ப்பைக் கட்டியமைக்க நிர்ப்பந்திக்க வேண்டும்.

மாவோயிஸ்ட் கட்சியானது ஆயுத போராட்ட வடிவத்தில் மட்டுமே தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல் நாடு தழுவிய பரந்தமக்கள் போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டிய வரலாற்று அவசியத்தை உணர்ந்து, இந்து மதவெறி பாசிசம் மற்றும் உலக மயமாக்கலின் மூலம் இந்திய துணைக் கண்டத்திற்கு நிகழப்போகும் பேராபத்தை உணர்ந்து, பரந்துபட்ட மக்கள் முன்னணியில் இணைய முன்வர வேண்டியது காலத்தின் அவசியமாகும். மாவோயிஸ்ட் கட்சியில் உள்ள தோழர்களும், மாவோயிஸ்ட் ஆதரவாளர்களும் இடதுசாரி அறிவு ஜீவிகளும் மாவோயிஸ்ட் கட்சிக்கு மேற்கூறிய அவசியத்தை உணர்த்தவேண்டிய கடமை உள்ளது.

இந்திய துணை கண்டத்தில் உள்ள அனைத்து இடதுசாரி அமைப்புகளும், மேற்கூறிய பரந்துபட்ட மக்கள் சனநாயக முன்னணிக்கு தலைமையேற்க குறைந்தபட்ச திட்டத்துடன் ஐக்கியப்பட வேண்டிய வரலாற்றுத் தேவையுள்ளது.

மேற்கூறிய திட்டத்தை முன்னெடுக்கத் தவறும் கட்சிகளை, இயக்கங்களை அனைத்து மக்கள் இயக்கங்களும், நிர்ப்பந்தித்து பரந்துபட்ட மக்கள் சனநாயக முன்னணியில் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

வரலாற்றின் தேவையாய் உள்ள “பரந்துபட்ட மக்கள் சனநாயக முன்னணியைப்” புறக்கணிக்கும் எந்த கட்சியையும் குறிப்பாக இடது சாரிகளை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். வரலாறும் மன்னிக்காது.

***

1. மோடியின் ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) என்ற பொருளியல் கொள்கைக்கு எதிராக முதலாளித்துவ அரசு இயந்திரத்தில் இருந்தே எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற குறிக்கோள் ‘இந்தியாவுக்காக தயாரிப்போம்’ என்று மாற்றியமைக்கப் படும்போதுதான் பயனளிக்கும் என்று கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல்...

“பிரதமர் கூறுவதுபோல் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்று தயாரிப்புக்கு முன்னுரிமை அளித்து ஏற்றுமதியை இலக்காக கொண்ட வளர்ச்சியை சீனாவின் வழியில் நாமும் கடைபிடிக்க முயல்வோமானால் அது பயனளிக்காது. இன்னொரு ஏற்றுமதி நாட்டை பயன்படுத்தும் நிலையில் உலகப் பொருளாதாரம் இல்லை, சீனாவைப் போல் ஏற்றுமதியை முன்னிலைப்படுத்த விரும்பிய ஏனைய ஆசிய நாடுகளுக்கு ஏற்பட்ட பின்னடைவை நாமும் எதிர்கொள்ள நேரிடும்” என்று தனது எதிர்ப்பை முன்வைத்துள்ளார்.

2. உலக தயாரிப்புத் தளத்தில் 2012 புள்ளி விவரப்படி இந்தியாவின் பங்கு பெறும் 2.5% மட்டுமே. இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளும் ஏறத்தாழ 3% தயாரிப்புடன் இந்தியாவை போலத்தான் இருக்கின்றன. அமெரிக்கா 21%, சீனா 18%, ஜப்பான் 11%, கொரியா 7% ஆகியவைத் தன் தயாரிப்பு கேந்திரங்களாக இருக்கின்றன.

மேலே குறிப்பிட்ட நாடுகளுடன் நமது தயாரிப்புகள் உலகச் சந்தையில் போட்டி போடுவது என்பது எந்த அளவு சாத்தியம் என்பது இருக்கட்டும். எந்த அளவிற்கு புத்திசாலித்தனம் என்பதை நாம் யோசிக்கவேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியத் தொழில் துறை வளர்ச்சி 3%. இதுவே 12% என்று உயர்ந்தால் அமெரிக்கா, சீனா, ஜப்பான், கொரியாவுடன் இந்தியாவும் உலகச் சந்தையில் போட்டி போடலாம்தான். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜி.டி.பி.) 4% முதல் 5% என்று இருப்பது 10% மாக உயர வேண்டும. அது எளிதில் சாத்தியமில்லை.

நாம் ஏற்கெனவே பலமாக இருக்கும் துறைகளில் ஏற்றுமதியை அதிகப்படுத்த வழியில்லை. அதிகமாக நகை தயாரிப்பு, மோட்டார் வாகனங்கள், மின்சாரம் தொடர்பான கருவிகள், உதிரி பாகங்கள், இரும்பு உருக்கு, மருந்து தயாரிப்பு, தோல் பொருள்கள் போன்றவை நமது ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் சர்வதேச சந்தையில் இவையெல்லாம் விலை குறைப்பு போட்டிக்கு ஆளாகும் தன்மையன என்பதால் எந்த அளவுக்கு நமக்கு உதவும் என்பது தெரியவில்லை.

இறக்குமதியைத் குறைத்து அந்தத் தேவைகளை இந்தியாவிலேயே தயாரிக்கும் ‘இந்தியாவுக்காக தயாரிப்போம்’ அணுகுமுறைதான் இன்றைய தேவை என்பது ரகுராம் ராஜனின் கருத்து.

Pin It