செகாவ் விருது 2025
பெரம்பலூர் இலக்கிய வட்டம்
26.07.2025

உலகம் செல்லும் சராசரி நோக்கத்தில் இருந்து எப்போதும் ஒருவன் மாற்று திசைக்கு வழி செய்து கொண்டிருப்பான். மற்றவர் பேசும் பொழுது போக்குகளுக்கு கவனம் தராமல் பொழுது ஆக்கும் போக்கில் நகர்ந்து கொண்டிருக்கும் தனி ஒருவன் எப்போதும் காலத்துக்குரியவன். அப்படி ஒரு மனிதனாகவே பெரம்பலூர் இலக்கிய வட்டம் தோழர் ச மோகன் அவர்களைக் காண்கிறேன். பேச்சிலும் மூச்சிலும் நிகழ்வு மட்டுமே நிறைந்திருந்தது. மனதார ரசித்தேன்.award to kavijiஒற்றை மனிதன் இழுத்தாலும் தேர் நகரும் என்று நம்பிய கணங்களை பூங் கொத்து மொழியோடு இங்கே பகிர்கிறேன்.

பெரம்பலூர் எங்கு இருக்கிறது என்றே எனக்கு தெரியாது. ஆனால் பெரம்பலூர் என்னை தெரிந்து கொண்டது. மினுக் மிட்டாய்களுக்கு நன்றிகள். அதிகாலையில் பெரம்பலூர் மண்ணில் இறங்கிய போது இதயத்தில் என்னவோ சிறு பிளிறல். சிறு கோடுகள் சித்திரத்திற்கு தயாராகிவிட்ட தகவலை மனம் விரும்பி ஏற்றது.

தம்பிகள் கூட்டணியில் தாமரை இலை துளியென அசைந்தபடியே இந்தநாள் அந்தரத்தில் மிதக்கும் அற்புதத்தை செய்ய காத்திருந்தது. தோழருக்கு அழைத்தேன். சில நொடிகளை அப்படியே நிறுத்தி விட்டு வெற்றிடத்தில் இருந்து வெளிவந்த சிற்றொளியாக முன்னே நின்றார். வேகம்தான் அவர் பேச்சும் சரி செயலும் சரி. படபடவென அறை ஏற்பாடு செய்து தந்து விட்டார். எல்லாம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்றேன். இப்போ ஒன்னும் சொல்ல மாட்டேன். நிகழ்ச்சி முடிஞ்சு நீங்களே தெரிஞ்சுக்குவீங்க என்றார். தன்னம்பிக்கை இருக்கும் மனதிடம் நல்லொளி பீறிக்கொண்டு வெளிவரும். அவர் ரூபத்தில் கண்டேன்.

நம்பியவர்களை ஒருபோதும் கைவிடாத இலக்கியத்தை இத்தனை ஆழமாய் நம்பிய தோழரைக் காண்பதில் உள்ளே சிறு நகை பூத்தேன். ஒற்றை மரங்கள் ஊருக்கு ஒன்று இருக்கும் என்று நினைத்தபோது உள்ளே பெருவனம் சடசடவென முளைத்தது.

சென்னை ரயிலில் இயந்திரம் அசைய... செம்மொழி ரயிலில் இதயம் அசையும். எப்போதும் அப்படி ஒரு தனித்த ஆட்டம் செம்மொழி ரயிலுக்கு. அசதி இருந்தாலும் விருது நாளின் விசை எம்மை இயக்கியது. குளித்து தயாராகி 'விருக்ஷம் மஹால்' சென்றபோது அழகு சூடி அரங்கம் காத்திருந்தது. குளிர் ஊட்டப்பட்ட அறையில் நீந்தும் வெளிச்சம் நெற்றியில் நிம்மதி தந்தது. ஒவ்வொரு இருக்கையிலும் ஒவ்வொரு நூல் அமர்ந்திருப்பது போல ஒரு காட்சி வந்து விட்டு போனதை கவிதையாக்க முடியவில்லை. கண்களில் தேக்கினான்.

வெளியே விற்பனைக்கு வைத்திருந்த நூல்கள்... பார்க்கவே பலகாரம் போல. எடுத்தெடுத்து முழங்கி விடத் தோன்றிய இச்சையை என்ன செய்வது. இதோ நினைவாலே சுவைக்கிறேன்.

குழந்தைகளின் ஆட்டம்... தமிழ் பற்றிய குறும்படம் என அடுத்தடுத்து ஆரம்பமே அசர அடித்துக் கொண்டிருந்தது. குழந்தைகள் ஆடிய அந்தப் பாடல் அட்டகாசம். இசையும் சரி. எழுத்தும் சரி. சொக்க வைக்கும் ரீங்காரம். கூட சேர்ந்து ஆட வைக்கும் சக ராகம். தமிழ் மொழியே ஓர் இசை என்று சொன்னதும்... அதற்கான காட்சி கோர்வையும்.. பளிச்சென்று பவளம் பூக்க செய்தது. கருந்திரையில் ஒளிமயம் தமிழ் என்றால் மிகையில்லை. தமிழ் கொண்ட ஒலி நயத்தில் இசை என்றால் தகும் தானே.

தெரிந்த சில முகங்கள்...தெரியாத பல முகங்கள் என அரங்கம் மானுட கூடலில் தமிழ் சங்கமம் நிகழ்த்திக் கொண்டிருந்தது. மனம் படைத்த பெரிய மனிதர்கள் வரவில்... அரங்கம் இன்னும் அழகாய் ஜொலித்தது. சக படைப்பாளிகள்... சித்திரம் போல கூடி இருந்தோம். சிறகு முளைக்க மனக்காற்றில் ஓடியிருந்தோம்.

"செகாவ் விருது" கிடைத்திருப்பது குறித்து மகிழ்வும் மன நிறைவும் இருந்தாலும்... இம்மாதிரி விருது நாளில் பல யோசனைகள் ஓடும். வெற்றிக்கு முந்தைய கால கட்டம் மிக கவனமாய் கடக்க வேண்டிய காலம். விருதுகள்... செய்த வேலைக்கு மட்டும் அல்ல. செய்யப்போகிற வேலைக்கும்.... என்பன போன்ற பல யோசனைகள் ஓடின. தீவிர எழுத்தாளனின் வாழ்வின் மறுபக்கம் எத்தனை படடபப்புக்குரியது என்று உணர்ந்தவன். ஒளிக்கும் இருளுக்கும் இடையே ஓடி ஓடி கண்டடைந்து கொண்டே இருப்பது கரணம் தப்பினால் மரணத்துக்கு சமம். ஆயினும் கடவுளாகும் கருணைக்கு எழுதுகோலே துணை.

சிறுகதை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது... அப்படியே வெற்றி பெற்ற சிறுகதைத் தொகுப்புகளுக்கு விருது என்று செகாவ் விருது விழா இனிதே தொடங்கி விட்டிருந்தது. காட்டுப்பூவென ஒரு பூட்டு இதயத்தில் திறந்து கொண்டிருப்பதை உணர உணர உன்னத அன்புகள் முகம் கூடின. நீந்தும் சிறு மீன்களென கண்களில் ஆழ்கடல்.

சுய பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார் தோழர். மேடைக்கும் அரங்கத்துக்கும்.... அரங்கத்துக்கும் ஆர்வலர்க்கும்.. வந்தவருக்கும் வராதவருக்கும் என எங்கும் எங்கெங்கும் அவரே நின்றிருந்தார். அவர் தமிழ் தம்பிகள் கூட இருந்தாலும்... தனித்த கர்ஜனை தான் இறுதி வரை. அது அழகாகவும் இருந்தது. மனதுக்கும் மைக்குக்கும் இடையே மடை திறந்த வெள்ளமாக தேவையில்லை. மனம் திறந்த வெள்ளந்தியாய் வெளி வந்தது மொழி.

மினுக் மிட்டாய்கள் - சிறுகதை நூலுக்கு கிடைத்த செகாவ் விருதை அஸ்வின்ஸ் நிறுவனர் Dr. KRV கணேசன் அவர்கள் கையால் பெற்றுக் கொண்டேன். மனதுக்குள் என்னென்னவோ தோன்றியது. எல்லாமே மானுட படபடப்பில் உருவாகும் பட்டாம்பூச்சி தியரி தான். நீ இங்கே எழுதிக் கொண்டே இரு. எங்கோ அசைவது அசைந்து கொண்டே இருக்கும்... என்பதை மனம் மீண்டும் நம்பியது. இம்மாதிரி விருதுகள் ஓர் எழுத்தாளனாக என்னைப் பலப்படுத்தும் அங்கீகாரமாகவே பார்க்கிறேன். நான் சரியான பாதையில்தான் போய்க் கொண்டிருக்கிறேன் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறது. மனதார ஏற்றுக் கொள்கிறேன். விருதுகள் நம்மை அந்த நேரத்துக்கு மகிழ்விக்கும். ஆனால் தொடர்ந்து நடைபோட வெறிகொண்ட பசி வேண்டும். அறிவுப் பசி தீராத வரை தேடல் என்றும் குறையாத வரை நம் இருப்பே விருதுகளாகும்.

நிறைய அறிவார்ந்த மனிதர்கள் பேசினார்கள். ஒவ்வொரு மேடையும் ஓர் ஆசான்தான். கண்ணும் காதும் திறந்திருந்தால்... உடன் கவனமும் கலந்திருந்தால் காலத்துக்கும் கற்றுக்கொள்ள வாய்க்கும்.

இடையே தோழர் மோகனின் "பூண் அணிந்த மேசை" சிறுகதை நூல் வெளியீடும் நடந்தது. நிகழ்வை அதுவரை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருந்த தோழர் அப்போது ஓர் எழுத்தாளனாக மாறிய தருணத்தை மிக நுட்பமாக உணர்ந்தேன். மனமார வாழ்த்தினேன்.

குல்லாவை கழட்டவே மாட்டிக்கறானே இந்த மனுஷன்... திமிர் புடிச்சவன் போல என்று அவரும்... என்ன இந்தாளு பட்டும் படாம பேசறார்... நூல் விருதுக்கு தேர்வானது புடிக்கலையோ என்று நானும் நினைத்திருக்க... நடந்ததே வேறு. இந்த சந்திப்பில் ஓர் அற்புதமான மனிதரைக் கண்டேன். தோழர் நண்பர் ஆகி விட்டார். அந்த "பொம்மாயி கிழவி" கதை ஒன்னு போதும்.. இந்தாளு வேறன்னு தெரிஞ்சிட்டேன் என்று அவர் சொன்னதும்... இந்த நட்பு விருது தாண்டியது என்று உணர்ந்தேன். தூரத்தில் இருக்கும் போது கல்லாக தெரிந்த பாறையில் அருகில் செல்லச் செல்ல ஒரு சிறு செடி துளிர்த்திருப்பதைக் காணலாம். அப்படித்தான் இந்த சந்திப்பு.

பல தெரியாத முகங்கள் ஆசீர்வதித்தன. கைகள் தோள் தொட்டன. அங்க படிச்சேன்.. இங்க படிச்சேன் இப்ப தான் பாக்கறேன் என்று சொல்லி கண்கள் மலர கண்ட முகங்கள் ஒவ்வொன்றும் ஒரு கவிதை. படிக்க படிக்க தீராத வரிகளில் அழகு.

அரங்கம் தழுவிய ஆளுமைகளின் பேச்சுகள்... தமிழும் அதன் செம்மையுமாக செவ்வனே செழித்திருந்தது. நிகழ்வு பரபரவென போன போதும்... இந்த மேடைக்கு பொருத்தமில்லாத பேச்சுக்கும் கொஞ்சம் இடம் இருந்தது. ஆனால் பின்னால் பேசிய அம்சப்ரியா சார் மிக அழகாக தேவையில்லாத முடிச்சை அவிழ்த்து விட்டு வந்தார். ஆர்வம் முகத்தில் அடிக்கும். அனுபவம் இதயம் சுத்திகரிக்கும். கற்றுக் கொள்ள வேண்டும்.

முதல் நிகழ்வுக்கே உண்டான சிற்சில தடுமாற்றங்கள் இருக்கத்தான் செய்தன. அடுத்தடுத்த வருடங்களில் வருடும் புயலும். (சில) இலக்கியவாதிகள் வியாதிகளாகும் இக்கால கட்டத்தில் இதயத்தில் இருந்து எழும்பி வரும் இசையென இந்த பெரம்பலூர் வட்டம் செய்திருக்கும் செயல்... எங்கோ எழுதிய செகாவ் -க்கும் அர்த்தம் கூட்டுகிறது. இங்கே எழுதும் கவிஜிக்கும் அர்த்தம் கூட்டுகிறது.

நண்பர் ஜான் பால் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது. சிறுகதை எண்ணிக்கையில் செக்காவை தாண்டி விடுவார் கவிஜி என்றார். எண்ணிக்கையில் தாண்டி விட்டேன். எழுத்து வண்ணத்திலும் தாண்ட வேண்டும்.

அடுத்த முறை DJ விடம் சொல்லி இசை ராஜாவின் பாடல்களை இரண்டிரண்டு வரிகள் போடச் சொல்ல வேண்டுகிறோம். அனிருத் இதய நோயாளிகளை உருவாக்கி விடுவான்.

ஏற்புரைக்கு மேடையில் நிற்கும் எல்லா தருணமும் படபட தான் நமக்கு. ஒன்று நிறைய பேசி விடுவேன். அல்லது எதிரே இருப்போருக்கு புரியாத பேச்சாகி விடும். அதற்கு தான் எழுதி வைத்துக் கொள்வது. அதுவும் போடியம் இல்லை என்றால் முடிந்தது கதை. அப்படித்தான் இங்கும் மாட்டினேன். ஆனாலும் கொடுத்த நொடிகளில் என் மனதை அவை அறிய முடித்துக் கொண்டேன்.

மினுக் மிட்டாய்கள் நூல் பற்றி :

ஜென் இருக்கிறது. நையாண்டி இருக்கிறது. மூன்றாம் பாலினம் இருக்கிறது. குடும்ப சண்டை இருக்கிறது. குடி இருக்கிறது. தேசாந்திரம் இருக்கிறது. பேய் இருக்கிறது. பெருமரணம் இருக்கிறது. கற்பனை இருக்கிறது. ஒரு கர்ப்பமும் இருக்கிறது. தொலைதல் இருக்கிறது. தேடலும் இருக்கிறது. காலங்கள் பேசும் கதையும் இருக்கிறது. காலத்துக்கும் பேசும் கதையும் இருக்கிறது. நதியின் வழியே யுகத்தின் ஆழம் தேடும் கதையும் இருக்கிறது. வெள்ளை நாரையின் கால துக்க கதையும் இருக்கிறது. நிஜமும் மாயமும் கலந்த என் வெளியின் கீற்றுகள் தான் ஒவ்வொரு கதையும்.

சமகால சமூகத்தை.. அரசியலை... மனவெளியை... தொழில்நுட்பத்தை... தனி மனித வேட்கையை... தேடலை... தவிப்பை... காதலை... பேரன்பை... மரணத்தை... வாழ்வியலை என எல்லாம் பேசும் இந்தத் தொகுப்பு காற்றினில் மிதக்கும் தூர தேச பறவையின் றெக்கையும்.

இப்படி மினுக் மிட்டாய்கள் நூலில் இருக்கும் 20 கதைகளும் வேறு வேறு வெளி. வேறு வேறு துளி. தனித் தனி மாயங்களை நிகழ்த்தும் கவிஜி சித்திரம் இது. இதை உள்வாங்கி புரிந்து விவாதித்து... விருதுக்கு தேர்ந்தெடுத்த தேர்வு குழுவுக்கு எனது நன்றியும் பாராட்டும். நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்திய பெரம்பலூர் இலக்கிய வட்டத்துக்கும் தோழர் ச மோகன் அவர்களுக்கும் மீண்டும் மனம் கனிந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகள். என்னோடு சேர்ந்து விருது பெற்ற அனைத்து சக எழுத்தாளர்களுக்கும் சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்தும் பாராட்டும்.

விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது அன்பும் நன்றியும்.

எப்போதும் என்னோடு இருக்கும் எனது உறவுகள் அனைவரோடும் விருது நேர தருணத்தைத் தழுவிக் கொள்கிறேன்.

மினுக் மிட்டாய்கள் நூலுக்கான நல்லதொரு மதிப்புரையை நிகழ்த்திய தமிழ் செம்மல் செ. வினோதினி அவர்களுக்கு மனம் கனிந்த நன்றிகள். தோழர் அழகாக பேசினார். நீல நதிக்கரையோரம்" முதல் கதையைப் பற்றி மட்டுமே அலசி ஆராய்ந்து பேசினாலும்... அவரின் தீவிரம் புரிய முடிந்தது. பேருக்கு புரட்டவில்லை. நூலுக்கு நியாயம் செய்யவே அவர் வந்திருந்தார். பாதி படிக்க தான் நேரம் இருந்தது என்ற உண்மை மலர்ச்சி. மீதியைப் படித்து விடுங்கள் என்றேன். மினுக் மிட்டாய்கள் தலைப்புக்கு அவர் சொன்ன காட்சி சரியாகவே ஒத்துப் போனது. அதே நீரின் மினுங்கல் தான்... மினுக் மிட்டாய்கள் ஆனது. மீன் குமிழ்கள் கொண்ட ஒளி முளைவுகளே மினுக் மிட்டாய்களின் செதில் சிறகுகள்.

இந்நிகழ்வு மெல்லிய காடோடை போல. இலையாய் மிதந்தேன். வழியெங்கும் பல வேர்களின் ஆசீர்வாதம். குட்டிச் சிலையொன்றும் எனைத் தொட்டது.

நிகழ்வு மேடையிலும் சொன்னேன். இதோ எழுத்து ஓடையிலும் சொல்கிறேன். மினுக் மிட்டாய்களுக்கு கிடைத்த இந்த செகாவ் விருதை எனது இலக்கிய ஆசான் புதுவை அகன் ஐயா அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந் நூலை வெளியிட்ட ஒரு துளிக் கவிதை பதிப்பகத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

எழுதுவதால் வாழ்கிறேன். எழுதுவதற்கே வாழ்கிறேன்.

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.