cauvery thatheviiyakkam

சென்ற 16.02.2018இல் இந்திய உச்ச நீதிமன்றம் காவிரி ஆற்று நீர்ப் பூசல் தொடர்பாக வழங்கியுள்ள தீர்ப்பு தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிரானது என்று தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நம்புகிறது:

1) காவிரி என்பது அது பாயும் கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் உரிமையுடைய ஆறு. இதனை ‘தேசியச் சொத்து’ என்று சொல்லி இந்தியாவுக்குச் சொந்தமாக்குவது தமிழர்களின் ஆற்றுநீர் இறைமைக்கும் இந்திய அரசமைப்புக்கும் புறம்பானது.

2) காவிரியாற்று நீரில் வரலாற்று வழிவந்த உரிமைப்படி தமிழகத்துக்குச் சேர வேண்டிய பங்கை காவிரித் தீர்ப்பாயம் அதன் இடைக்காலத் தீர்ப்பிலும் இறுதித் தீர்ப்பிலும் குறைத்து விட்டது. இப்போது அதையும் குறைப்பதற்கு உச்ச நீதிமன்றம் கூறியுள்ள சொத்தைக் காரணங்களை ஏற்க முடியாது. தமிழகம் 10 ஆ.மி.க. நிலத்தடி நீரைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும், பெங்களுருவின் குடிநீர்த் தேவைக்க்கு 4.75 ஆ.மி.க. என்றும் கணக்கிட்டு தமிழகத்தின் பங்கில் 14.75 ஆ.மி.க. குறைத்து கர்நாடகத்தின் பங்கை அதே அளவு உயர்த்தியிருப்பது தமிழக வேளாண்மையை அடியோடு அழித்து விடும் என்று உழவர்கள் கொண்டிருக்கும் கவலை நியாயமானது.

3) காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைப்பதற்குத் தெளிவான ஆணை வழங்காமல் ஆறு வாரத்துக்குள் ஒரு திட்டம் வகுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது உச்ச நீதிமன்றத்தின் மதிப்பைக் காப்பாற்றப் பயன்படாது. 

ஆகவே இந்த அநீதியான தீர்ப்பை எதிர்த்துத் தமிழக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். நீதிமன்றத்தில் எஞ்சியிருக்கும் ஒரே வழி அரசமைப்பு ஆயத்தின் தீர்ப்பைக் கோருவதுதான். அந்தக் கோரிக்கையைத் தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தவே கூட தமிழக மக்களின் போராட்ட அழுத்தம் தேவை.

காவிரி தொடர்பான நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவுகள் இவ்வகையில் பெருத்த ஏமாற்றமளிப்பவையாக உள்ளன.

இந்நிலையில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.

 

நாள்: வருகிற 26.02.2018 திங்கள்

நேரம்: காலை 9 – 11 

இடம்: சென்னை உயர் நீதிமன்ற வாயில்.

- வே.பாரதி, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
 

Pin It