திருப்பூரில் "மௌனத்தின் சாட்சியங்கள்" நாவல் அறிமுக கூட்டம் நடைபெற இருந்த அரங்கத்தின் நிர்வாகிகளை காவல்துறையின் உளவுப்பிரிவினர் மிரட்டி கூட்டத்தை தடுத்துவிட்டனர். நூலாசிரியரும், பதிப்பகத்தாரும் தீவிரவாதிகள் என்று கூறி அரங்கத்தினரை மிரட்டியுள்ளனர். எச்சரிக்கையை மீறி கூட்டம் நடந்தால் பயங்கரவாதிகளான நூலாசிரியர் மற்றும் பதிப்பகத்தாரோடு சேர்ந்து அரங்கத்தினரும் வழக்கு மற்றும் போலீஸ் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்குமென்று அச்சுறுத்தியுள்ளனர்.

heera 270திருப்பூர் காவல்துறையின் இந்த மிரட்டலானது மௌனத்தின் சாட்சியங்கள் நாவலாசிரியர் சம்சுதீன் ஹீராவையும், அதை பதிப்பித்த பொன்னுலகம் பதிப்பகத்தாரையும் நசுக்குவதற்காக காவல்துறை குறிபார்த்துக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது.

இதுவரை எழுத்தாளர்களை சாதியவாதிகளும், மதவாதிகளும் குறிவைத்து தாக்கினார்கள். இப்போது அந்தப் பணியை காவல்துறையே கையில் எடுத்திருப்பதுபோல் தெரிகிறது. மத்தியில் பாஜக அரசமைந்தபின் மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் காவல்துறை கூட சங்பரிவார் போல் செயல்படத் தொடங்கியுள்ளன. அதிலும் திருப்பூர் காவல்துறையினர் மதவாதிகளின் அடியாட்கள் போலவே செயல்படுகின்றனர். இந்த ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாடு திருப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டதிலிருந்து அதை தடுப்பதற்கு காவிகள் தொந்தரவு கொடுத்ததும், அதற்கு காவல்துறை ஆதரவாக இருந்ததும் எல்லோருக்கும் தெரியும்.

இந்நிலையில் நாவல் அறிமுக கூட்டம் தடுக்கப்பட்ட செய்தி தெரிந்ததும் சனநாயகம் காக்கப் போராடும் அமைப்புகள் அணிதிரண்டன.

1. திராவிடர் விடுதலைக் கழகம்

2. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

3. தமிழக வாழ்வுரிமைக் கட்சி

4. பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா

5. தியாகி இம்மானுவேல் பேரவை

6. தாருல் இஸ்லாம்

7. பகத்சிங் பொதுத்தொழிலாளர் சங்கம்

8. திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றம்

9. கம்யூனிஸ்ட் கல்வி இயக்கம்

ஆகிய அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்தின. குறுகிய காலத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வரமுடியாத நிலையில்

1. SDPI

2. தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்

3. ஆதித்தமிழர் பேரவை

4. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்

5. இன அழிப்புக்கு எதிரான இளைஞர் இயக்கம்

6. சி.பி.ஐ -எம்.எல் - லிபரேசன்

7. மக்கள் சனநாயக குடியரசுக் கட்சி

8. ஆம் ஆத்மி கட்சி

9. சுதந்திரம் இளைஞர் நற்பணி மன்றம்

ஆகிய இயக்கங்கள் கூட்டத்தின் முடிவுக்கு ஒத்துழைப்பதாக ஆதரவு தெரிவித்தன.

கூட்டமைப்பில் இணைந்த இயக்கங்களின் கேள்வி இதுதான். என்ன அடிப்படையில் காவல்துறையானது எழுத்தாளர் மற்றும் பதிப்பாளரை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகிறது? இதன்மூலம் என்ன செய்ய காத்திருக்கிறது?

மௌனத்தின் சாட்சியங்கள் நாவல் கடந்த ஜூன் மாதம் 26-ஆம் நாள் மதுரையில் வெளியிடப்பட்டது. நாவலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் வெளியிட்டதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத்தலைவர் தோழர் இரா.காமராசு இம்மாதம் 8-ஆம் தேதி தஞ்சையில் இந்நாவலை அறிமுகம் செய்து வைத்தார். இதற்கிடையில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாநாட்டிலும், கோவை த.மு.எ.க.ச தனது மாதாந்திர கூட்டத்திலும், பொள்ளாச்சி தீ இனிது இலக்கிய அமைப்பு கூட்டத்திலும் நாவல் பாராட்டப்பட்டு அறிமுக கூட்டங்கள் நடந்துள்ளன. முகநூலிலும் மதிப்பிற்குரிய தோழர்கள் பலரும் பாராட்டி எழுதியுள்ளனர். வருகிற 6/9/15 அன்று கோவையில் சமூக விஞ்ஞான பயிலரங்கம், குத்தூசி குருசாமி பதிப்பகம், தமிழ்நாடு காலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து அறிமுக நிகழ்ச்சி நடத்த இருக்கின்றன.

நாவலுக்கு எழுத்தாளரும், வழக்குரைஞருமான தோழர் இரா.முருகவேள் முன்னுரை எழுதியுள்ளார். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தமிழக பொதுச்செயலரும், வழக்கறிஞருமான தோழர் ச.பாலமுருகன் நாவலின் முக்கியத்துவம் குறித்து தினமலர் நாளிதழில் எழுதியுள்ளார். இவ்வாறு சமூகத்தின்மீது அக்கறையுள்ளவர்கள் பங்காற்றியுள்ள நாவலைத்தான் 23/8/15 அன்று திருப்பூரில் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்தார் தோழர் சுப்ரபாரதி மணியன். நிகழ்ச்சி பெருமாநல்லூர் சாலையிலுள்ள "முயற்சி" எனும் அமைப்பினரின் அலுவலகத்தில் நடைபெற இருந்தது. தோழர் சுப்ரபாரதி மணியனும் சமூக அக்கறையுள்ள பிரபல எழுத்தாளர்.

சமூக ஆர்வலர்களால் ஆதரிக்கப்படுகிற இந்த நாவல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பையும், அதற்கு முன்னும், பின்னுமான அரசியல் பிரச்சினைகளையும் அலசுகிறது. மதத்தின் பேரால் இனியும் மக்கள் இழப்புகளை சந்திக்க வேண்டாமென எச்சரிக்கிறது.

இப்படி சமூகப் பொறுப்போடு நல்ல படைப்பை கொண்டு வந்துள்ள நூலாசிரியரையும், பதிப்பகத்தாரையும் திருப்பூர் காவல்துறை குறிவைத்திருப்பதை அனுமதிக்கக்கூடாது என்று கூட்டம் முடிவெடுத்தது. பெருமாள் முருகனும், புலியூர் முருகேசனும், துரை குணாவும் திட்டமிட்டு தாக்கப்பட்டதுபோல் தோழர்களுக்கும் நேர்ந்துவிடக்கூடாதென தீர்மானித்தது. அநீதியை அதன் முளையிலேயே கிள்ள "கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டியக்கம்" உருவெடுத்தது.

கூட்டியக்கம் சார்பாக வருகிற 6/9/15 ஞாயிறு காலை 10 மணிக்கு திருப்பூரில் மாபெரும் கண்டனம் மற்றும் மௌனத்தின் சாட்சியங்கள் நாவல் அறிமுக கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் கூட்டியக்கத்திலுள்ள அமைப்புகளின் தலைமைப் பொறுப்பாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

சனநாயகம் காக்க! கருத்துரிமை காக்க!! வாருங்கள் தோழர்களே!!!

தொடர்புக்கு - 73738 30306 - 98422 48174 கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டியக்கம்.

Pin It