மார்க்சியச் சிந்தனை மையக் கூட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள்

மார்க்சியச் சிந்தனை மையத்தின் மூன்றாவது காலாண்டுக் கூட்டம் கடந்த 2012 ஆகஸ்ட் 8, 9 தேதிகளில், சென்னை பெரம்பூர் டிஆர்இயு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்களிலும் மொத்தம் 10 அமர்வுகள் நடைபெற்றன. அவற்றின் விவரம் வருமாறு:

08-08-2012 சனிக்கிழமை:

(1) 1100 மணி: தோழர் .கு.ராஜன் அவர்கள், தோல்விகளின் படிப்பினைகள் என்ற தலைப்பில், புரொஜெக்டர், பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன் உதவியுடன் விளக்கவுரை வழங்கினார். ஜெர்மனியில் நடந்து தோல்வியடைந்த 1848 புரட்சி, 1918-19 புரட்சி, சமூக ஜனநாயகக் கட்சி, அதில் ஏற்பட்ட பிளவு, ரோசா லக்சம்பர்க், லீப்னெக்ட் ஆகிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் நிலைபாடுகள், அவர்களின் கொலை ஆகிய நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறினார். இந்தோனேசியாவில் 1925-இல் நடந்து தோற்ற புரட்சி, சுகர்ணோவின் ஆட்சி (தேசியவாதம் + காலனி எதிர்ப்பு + சோசலிசம் + இஸ்லாம்), கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு, வளர்ச்சி, (1965-இல் 30 லட்சம் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்),  6 இராணுவ ஜெனரல்கள் கொலை, 1965-இல் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை, 5 லட்சம் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் படுகொலை, 1968-இல் சுகர்டோ ஆட்சி என வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். 1818 முதல் 1970 வரையிலான சிலி வரலாறு, ஸ்பெயின் ஆதிக்கம், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி, தேசிய ஜனநாயக்க் கட்சிகளின் ஆட்சிகள், 1971-இல் சோசலிஸ்ட் தலைவர் அலெண்டே தேர்தலில் வென்று ஆட்சி, சுரங்கங்கள் தேசியவுடைமை, இராணுவப் புரட்சி, அலெண்டே கொலை, அதன்பின் நடந்த ஆட்சிகள், இன்றைய நிலை ஆகிவற்றை எடுத்துரைத்தார். இந்த நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நிலைபாடுகள் பற்றித் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறி முடித்தார்.

(2) 1425: தோழர் குமரன் அவர்கள், மூலதனம் வகுப்பு எடுத்தார். இது முந்தைய வகுப்புகளின் தொடர்ச்சி. முந்தைய வகுப்புகளின் சுருக்கத்தைக் கூறிவிட்டு, மதிப்பின் சமதை வடிவம், ஒப்பீட்டு வடிவம், அவற்றின் ஒன்றுக்கொன்று சார்புள்ள வளர்ச்சி, மதிப்பின் பொது வடிவம், பொது வடிவத்திலிருந்து பண வடிவத்துக்கு மாறிச் செல்லுதல் ஆகிய கருத்துகளை விளக்கினார். பயன்மதிப்பு அடிப்படையில் ஒரு பொருளை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பரிவர்த்தனை மதிப்பு கொண்ட சரக்கு என்ற வடிவெடுத்த்துமே புரியாத ஒன்றாக, புலன்கடந்த ஒன்றாக ஆகிவிடுகிறது. உழைப்பாளர்களுக்கு உழைப்போடு நிலவும் உறவானது, அவர்களிடையே நிலவும் சமூக உறவாக இல்லாமல் அவர்களுடைய உழைப்பின் உற்பத்திப் பொருள்களிடையே நிலவுகிற உறவாக அவர்களை எதிர்கொள்கிறது – சரக்கின் மாயத் தன்மைக்கு இதுவே காரணம். மதத்துக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள உறவாகவே சரக்குக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள உறவு இருக்கிறது. மத உலகம் எதார்த்த உலகின் பிரதி பிம்பமே. அன்றாட வாழ்க்கை நடைமுறையானது, மனிதர்கள், இயற்கை ஆகியவை தொடர்பாக அறிவுக்குகந்த உறவுகளை மனிதனுக்கு வழங்கும்போது மட்டுமே எதார்த்த உலகின் மதப் பிரதிபிம்பம் இறுதியாக மறைந்து போகும். அதுபோல, உற்பத்தி அடிப்படையிலான சமுதாய வாழ்க்கை நிகழ்முறையானது, சுதந்திரமாக ஒன்றுசேர்ந்த மனிதர்களின் உற்பத்தியாகக் கருதப்பட்டு, திட்டமிட்டு உணர்வுபூர்வமாக இயக்கப்படும்போதுதான் தன் மாயத் திரையை நீக்கும் – என்பன போன்ற கருத்துகளை எடுத்து விளக்கினார்.

(3) 1540: தோழர் கந்தசாமி அவர்கள், மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் பற்றி உரை நிகழ்த்தினார். பொதுவாக மரபணு மாற்றம் பற்றிய அறிவியல் விளக்கம், அவ்வாறு மாற்றம் செய்யப்படும் காய்கறிகள், நாடுகள், வெற்றி தோல்விகள், இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் அறிமுகம், கத்திரிக்காயை அறிமுகப்படுத்த எடுத்த நடவடிக்கைகள், அரசின் நிலைபாடு, ஆதரவு, எதிர்ப்புகள், மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தில் அடங்கியுள்ள வேளாண்மை, சமூக, பொருளாதார விளைவுகள் பற்றி எடுத்துரைத்தார். நவீன தொழில்நுட்பம் என்ற வகையில் ஆய்வுகள் தொடர வேண்டும், அறிமுகத்துக்கு முன் இன்னும் வெளிப்படையான ஆய்வுகள், விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று கூறி முடித்தார்.

(4) 1645: தோழர் விஜயன் அவர்கள், ரியோ + 20 = 0? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 1992-ஆம் ஆண்டு பிரேசிலில் ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற, ஐநா முன்னின்று நடத்திய எர்த் சமிட், 20 ஆண்டுகள் கழித்து அங்கு மீண்டும் கூட்டப்பட்ட சுற்றுச் சூழல்-மேம்பாடு தொடர்பான மாநாடுகள் பற்றி எடுத்துக் கூறினார். முதல் மாநாட்டில் ஓசோன் படலம், கழிவிடம், கார்பன் உமிழ்வு, பிளாஸ்டிக் உற்பத்தி தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கினார். முதலாளித்துவ நாடுகள் ஒப்புக் கொள்ளாததால், அந்த மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்ற முடியாமல் பிரகடனமாக அறிவிக்கப்பட்ட அறிக்கை பற்றிக் குறிப்பிட்டார். முதல் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, 20 ஆண்டுகள் கழித்து 2012-இல் கூட்டப்பட்ட மாநாட்டில் 118 நாடுகள், 100 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டின் நோக்கம் – நிலைத்து நீடிக்கும் வளர்ச்சிக்கான பசுமைப் பொருளாதாரம், வறுமை ஒழிப்பு என்பவை ஆகும். முதல் மாநாட்டைப் போன்றே நாம் விரும்பும் எதிர்காலம் என்ற பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில் நமக்குச் சாதகமான பல குறிக்கோள்கள் உள்ளன. அவற்றை அடிப்படையாக வைத்து மக்களைத் திரட்ட முடியும். எனவே மாநாட்டின் பலன் 0 எனக் கூற முடியாது என முடித்தார்.

(5) 1800: தோழர் சிவலிங்கம் அவர்கள், ஏங்கெல்ஸ் எழுதிய டூரிங்குக்கு மறுப்பு நூலின் உள்ளடக்கம் பற்றி வகுப்பெடுத்தார். ஏங்கெல்ஸ், டூரிங்கின் கருத்துகளைத் தகர்த்ததோடு, மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கிக் கூறியுள்ளதையும். மார்க்சியம் பற்றிய ஒட்டுமொத்தக் கருத்துருவை இதில் பெறலாம் என்பதையும் எடுத்துக் கூறினார். தத்துவம், அரசியல் பொருளாதாரம், சோசலிசம் ஆகிய மூன்று அத்தியாயங்களின் சாரக்கூறுகளை சுருக்கமாக எடுத்துக் கூறினார். மனிதனே இயற்கையின் விளைவு என்பதால், மனித மூளையின் விளைவுகளான சிந்தனையும், உணர்வும் இயற்கையின் விளைவுகளே என்பதை விளக்கினார். எதிர்நிலைகளின் ஒருமையும் போராட்டமும், அளவு மாற்றமும் பண்பு மாற்றமும், நிலைமறுப்பின் நிலைமறுப்பு ஆகிய இயக்கவியல் விதிகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். பண்டத்தின் மதிப்பு, உழைப்பு நேரம், கூலி, மூலதனம், உபரி மதிப்பு, லாபம் ஆகிய கருத்துகளை விளக்கினார். பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றமே அரசியல் நிலையில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. ஒரு நாட்டின் அரசியல் அதிகாரம் பொருளாதார வளர்ச்சிக்குப் பகையாக இருக்குமானால், இந்த மோதல் எப்போதும் அரசியல் அதிகாரத்தின் வீழ்ச்சியிலேயே போய் முடியும் என்று ஏங்கெல்ஸ் வலியுறுத்திக் கூறும் கருத்தை விளக்கி, பல நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றங்களை இக்கருத்தின் அடிப்படையில் மீளாய்வு செய்ய வேண்டும் என்று கூறி முடித்தார்.

09-08-2012 ஞாயிற்றுக் கிழமை:

(6) 1100: தோழர் குமரன் அவர்கள், மூலதனத்துக்கு ஒரு வழிகாட்டி என்னும் டேவிட் ஹார்வியின் நூல் பற்றியும், மூலதனம் பற்றிய அவரின் 13 வீடியோ வகுப்புகள் பற்றியும் தன்னுடைய மதிப்பீடுகளை எடுத்துக் கூறினார். பண்டம், விலை, மதிப்பு பற்றியும் (விலை = மதிப்பு + மதிப்பு அல்லாதவை, பணம் -> சரக்கு -> கூடுதல் பணம்), மூலதனத் திரட்டல் பற்றியும்  டேவிட் ஹார்வியின் விளக்கவுரைகளை எடுத்துக் கூறினார். டேவிட் ஹார்வியின் நூலைவிட வீடியோ வகுப்புகள் தெளிவாகவும் சிறப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டார். ஹார்வி மூலதனத்தைப் புதியதோர் ஆய்வுமுறையில் அணுகியுள்ளதாகவும், தான் மூலதனத்தைப் படித்தபோது தனக்கு தோன்றாத புதிய கண்ணோட்டத்தில் பல இடங்களில் ஹார்வி விளக்கம் அளித்துள்ளதாகவும், பொதுவாக, மூலதனம் நூலைப் படித்துப் புரிந்து கொள்ள ஹார்வியின் நூலும், வீடியோ வகுப்புகளும் மிகவும் உதவிகரமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

(7) 1200: தோழர் அறிவுக்கடல் அவர்கள், திருச்சி மணச்சநல்லூர் பகுதியில், கட்சிக் கிளைகளைக் கட்டியமைப்பதில் தனக்கிடப்பட்ட பணிகளையும் அதில் தனக்கு ஏற்பட்ட கள அனுபவங்களையும் எடுத்துக் கூறினார். முறைசாராத் தொழிலாளர்கள், குறிப்பாக அரிசிமில்லில் வேலை செய்வோர், அரிசியைச் சைக்கிளில் சுமந்து சென்று வினியோகிக்கும் சுமைகூலிகள் மத்தியில் சங்கத்தைக் கட்டியமைத்துத் தான் ஆற்றிய பணிகளையும் அதில் ஏற்பட்ட அனுபவங்களையும் விளக்கிக் கூறினார். கோட்பாடுகளுக்கும் நடைமுறைக்கும் இடையே நிலவும் மிகப்பெரும் இடைவெளியைச் சுட்டிக் காட்டினார். கோட்பாடுகள் பற்றிய சரியான புரிதல் இல்லாத கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள்ள் இடையே பணி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளையும், பின்னடைவுகளையும் அதனால் ஏற்படும் மனச்சோர்வினையும் எடுத்துரைத்தார். ஆனால், பிற முதலாளித்துவக் கட்சிகள் எந்த மக்கள் பிரச்சினையையும் எடுக்காமல், கட்சிச் செயல்பாடுகளே இல்லாமல் வெறும் தேர்தல் அரசியல் நடத்தும் அவலத்தையும் சுட்டிக் காட்டினார். தீண்டாமைக் கணக்கெடுப்பின் போது கண்டறிந்த உண்மைகள், தான் இவ்வளவு காலம் அறிந்திராதவை, எனவும், அவை தனக்கு வியப்பளித்ததைகயும் குறிப்பிட்டார். ஒரு பெரிய நகரின் புறநகர்ப் பகுதியிலேயே இன்னும் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலிட்டு வருத்தப்பட்டார். கட்சிப் பணிகளில் தனக்கேற்பட்ட கசப்பான அனுபவங்களினால், இப்போது எல்ஐசி சங்கப்பணி, முறைசாராத் தொழிலாளர் சங்கப்பணி எனத் தன் களப்பணிகளைச் சுருக்கிக் கொண்டுவிட்டதை வருத்தத்தோடு குறிப்பிட்டார்.

(8) 1430: தோழர் ஜெயசீலன் அவர்கள், பல்லவி அய்யர் எழுதிய சீனா-விலகும் திரை என்ற நூல்பற்றிய தன்னுடைய மதிப்புரையை வழங்கினார். தான் முன்பு மதிப்புரை வழங்கிய பிரேம்சந்த் ஜா எழுதிய சீனாகம்யூனிஸ்ட் முதலாளி என்னும் நூலோடு ஒப்பிட்டுத் தன் கருத்துகளைக் கூறினார். பிரேம்சந்த் நூல் வெறும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்தியாவிலிருந்து கொண்டு சீனாவைப் பற்றி எழுதிய நூல் என்றும், பல்லவி அய்யரின் நூல், 2002 முதல் 2007 வரை சீனாவில் சீன மொழி பேசி, சீன மக்களோடு வாழ்ந்து எழுதப்பட்ட நேரடி அனுபவ நூல் என்பதைக் குறிப்பிட்டார். பல்லவி தன்னுடைய அனுபவங்களை ஒரு நாவல் போல சுவைபட எழுதியுள்ளதாகவும், முன்தீர்மானித்த கருத்துச்சார்பு எதுவுமின்றி, தன்னுடைய இயல்பான அனுபவங்களை வெளிப்படையாக எழுதியுள்ளதாககவும் குறிப்பிட்டார். சீனாவின் தொழில் வளர்ச்சியை வியந்து பாராட்டும் பல்லவி, தீவிர நகரமயமாக்கலில் மக்களுக்கு இருக்கும் வருத்தங்களையும் விவரித்துள்ளார், சார்ஸ் நோய் பரவியதை அரசு கையாண்ட விதம், மக்களுக்கு ஏற்பட்ட பீதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு, மக்களுக்குள் இருக்கும் இனம்புரியாத பயம், நம்பிக்கையின்மை, இறுக்கம் ஆகியவை என்றேனும் ஏதோ ஒரு வடிவில் வெளிப்படலாம் என்று கணிக்கிறார். நான் ஏழையாக இருந்தால் சீனாவில் வாழ விரும்புவேன், ஏனெனில் அங்கு ஏழைகளுக்கு கவுரமாக வாழ அனைத்தும் கிடைக்கிறது, வசதி படைத்த மேல்தட்டு வர்க்கமாக இருந்தால் இந்தியாவில் வாழ ஆசைப்படுவேன். ஏனெனில், இந்தியாவில் வசதியானவர்களுக்கு, தேவையான அனைத்தும் கிடைக்கிறது, கூடவே கருத்து சுதந்திரமும் ஜனநாயகமும் இருக்கிறது என்று இறுதியில் பல்லவி அய்யர் கூறியுள்ளதாக ஜெயசீலன் குறிப்பிட்டார்.

(9) 1530: தோழர் இரகுமான் அவர்கள், எடுத்துக் கொண்ட தலைப்பு மார்க்ஸ் கண்ட இந்தியா என்னும் நூல் பற்றிய கருத்துரை. ஆனால், அந்த நூலுக்குள் நுழையும் முன்பே தனக்கு ஒரு முக்கிய சந்தேகம் வந்து விட்டதாகவும், அதுபற்றி மற்றவர்கள் கருத்துக் கூற வேண்டும் என்றும் கூறி ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்தார். இந்தியாவிலுள்ள சாதி அமைப்பு முறை, உழைப்புப் பிரிவினையின் முதிராத வடிவம் என மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். அப்படியெனில் சாதி அமைப்புமுறை சமூக அமைப்பின் அடித்தளமா, மேற்கட்டுமானமா என்பதே விவாதப் பொருள். சாதி அமைப்புமுறை பற்றியும், திருமணக் கட்டமைப்பில் சாதிப்பிடிப்பு மேலும் இறுகி வருவது குறித்தும், தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்குப்பின் பெருகிவரும் கலப்புத் திருமணங்கள் பற்றியும், தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ள இடங்களில், வேலைக்கு ஆட்களைத் திரட்ட வேண்டி, முதலாளிகள் தொழிலாளர்களிடையே, சாதிப் பாகுபாடுகளை ஊக்குவிப்பதில்லை என்பதையும் சில தோழர்கள் எடுத்துக் கூறினர்.

(10) 1630: தோழர் குமரன் அவர்கள், ஏங்கெல்ஸின் ஃபாயர்பாக் நூல் பற்றி வகுப்பெடுத்தார். இது முந்தைய வகுப்புகளின் தொடர்ச்சி. நூலின் நான்காவது அத்தியாயத்தைத் தொடங்கினார். ஃபாயர்பாக் தத்துவவாதி என்ற வகையில் பாதி வழியிலேயே நின்று விட்டார். கீழே பொருள்முதல்வாதியாகவும் மேலே கருத்துமுதல்வாதியாகவும் இருந்தார். விமர்சனம் மூலமாக ஹெகலை வெற்றி கொள்ளும் தகுதியற்றவராக இருந்தார். அதேவேளையில் ஹெகலோ இயற்கையிலும் வரலாற்றிலும் காணப்படுகின்ற இயக்கவியல் வளர்ச்சி, அதாவது, கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு நடைபெறுகின்ற முற்போக்கு இயக்கத்தின் காரண வகைப்பட்ட இடைத்தொடர்பு, கோணல் மாணலான இயக்கங்கள் அனைத்திலும், தற்காலிகமான பின்னடைவுகளிலும், தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்கிறது. அவ்வளர்ச்சி, ஊழிக் காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்ற கருத்துருவினுடைய சுய-இயக்கத்தின் ஒரு நகல் மட்டுமே என்று ஹெகல் கூறினார். ஆனால், மார்க்சின் கண்ணோட்டத்தில் இயக்கவியல் என்பது, வெளிப்புற உலகம், மனித சிந்தனை ஆகிய இரண்டின் இயக்கம் பற்றிய பொதுவான விதிகளின் விஞ்ஞானமாகும். தலையை ஊன்றி நின்று கொண்டிருந்த, ஹெகலின் இயக்கவியலைத் திருப்பிப் போட்டுக் காலால் நிற்கும்படி செய்தார் மார்க்ஸ் என்று கூறும் ஏங்கெல்ஸ், இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவத்துக்குத் தான் எவ்வளவுதான் பங்களித்திருந்தாலும் அது மார்க்சின் பெயராலேயே அழைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதைக் குமரன் வாசித்துக் காண்பித்தார். முன்னரே உருவாக்கி வைக்கப்பட்ட பொருள்களின் சிக்கலான ஒரு தொகுதியாக உலகத்தைப் பார்க்காமல்,. நிகழ்வுப்போக்குகளின் சிக்கலான ஒரு தொகுதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நிலையானவையாகத் தோற்றமளிக்கும் பொருள்களும், நம் மூளையிலுள்ள அவற்றின் மனப் பிரதிபலிப்புகளும், நம்முடைய கருத்துருக்களும் ஓர் இடையறாத மாற்றத்துக்கு உள்ளாகின்றன. இந்த மாற்றத்தில், தற்செயலானதாகத் தோற்றமளிப்பவை, தற்காலிகமான பின்னடைவுகள் இவை அனைத்தையும் மீறி, முடிவில் ஒரு முற்போக்கான வளர்ச்சி தன்னை நிலைப்படுத்திக் கொள்கிறது என்கிற இயக்கவியல் கோட்பாடுகளை எடுத்துக் கூறினார்.

இரண்டாம் நாள் கூட்டம் மாலை ஐந்தரை மணிக்கு நிறைவு பெற்றது.

மார்க்சியச் சிந்தனை மையத்தின் அடுத்த காலாண்டுக் கூட்டம், வருகின்ற டிசம்பர் மாதம் 9, 10 தேதிகளில் சென்னை பெரம்பூரில், அதே இடத்தில் நடைபெறும்.

தோழமையுடன்,
மு.சிவலிங்கம்.
(மார்க்சியச் சிந்தனை மையத்துக்காக)

மார்க்சிய சிந்தனை மையம் இணையதளம் : www.marxism.com

Pin It