முந்தைய பகுதி: பாட்டாளி வர்க்கத்தின் தேசியமும் சர்வதேசியமும்
1. தமிழ்த்தேச மக்கள் முன்னணி 'மோடி 2.00 பாசிச அபாயத்திற்கு எதிராக குறைந்தபட்ச செயல்திட்டம்" என்ற அறிக்கையை முன் வைத்துள்ளது. இதில் 'குறைந்த பட்ச’ செயல்திட்டம் என்ற சொல்லே ஆய்வுக்குரியது. ஏனெனில் நாம் பாசிசத்திற்கு எதிராக குறிப்பான திட்டம் (Specific Programme) பற்றியே ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். பாட்டளி வர்க்கத்தின் அதிகபட்ச (Maximum Programme) பொதுத் திட்டம் என்பது சோசலிசம், கம்யூனிசமாகும். பாரீஸ் கம்யூன் எழுச்சிக்குப் பிறகு முதலாளி வர்க்கம் நில உடமை வர்க்கத்துடன் வர்க்க சமரசம் செய்து கொண்டதால் நில உடமையை வீழ்த்துவது பாட்டாளி வர்க்கத்தின் குறைந்தபட்ச திட்டமாக (Minimum Programme) பாட்டாளி வர்க்கத்தின் தோளில் சுமத்தப்பட்டது.
ஸ்டாலின் கூறினார் 'மார்க்சியக் கோட்பாடு அளிக்கும் உண்மை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு மார்க்சியத் திட்டம் பாட்டாளி வர்க்கத்தின் நோக்கங்களைத் தீர்மானிக்கிறது. அவற்றை அறிவியல் பூர்வமாக உருவாக்கி அளிக்கிறது. திட்டம், முதலாளிய வளர்ச்சிப் போக்கு முழுவதையும் கணக்கில் கொண்டு முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து சோசலிச உற்பத்தியைத் திட்டமிடலாம் அல்லது முதலாளிய வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை (Stage) மட்டும் கணக்கில் கொள்ளலாம். (எ.கா) நிலப்பிரபுத்துவ எசேத்சதிகார அமைப்பின் மிச்சசொச்சங்களைத் துடைத்தொழித்து முதலாளியத்தின் சுதந்திரமான வளர்ச்சிக்கான சூழ்நிலைகளைப் படைப்பதாக இருக்கலாம். இதற்கேற்ப திட்டம் இரு பகுதிகளை அதாவது குறைந்தபட்ச திட்டத்தையும், அதிகபட்ச திட்டத்தையும் உள்ளடக்கி இருக்கலாம். (ஸ்டாலின் தொகுப்பு நூல் 5, பக்கம் 165)
மாவோ கூறினார் 'இந்த பொதுத் திட்டத்தின் அடிப்படையில் நமது கட்சி ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒரு குறிப்பான திட்டத்தையும் கொண்டிருக்கிறது. முதலாளிய ஜனநாயகப் புரட்சி கட்டம் மாறாதிருந்த பல பத்தாண்டுகளுக்கும் நமது புதிய ஜனநாயகத் திட்டம் மாறவில்லை. ஆனால் இக்கட்டத்தில் ஒவ்வொரு இடைக்கட்டத்திலும் (Phase) நிலைமைகள் மாறின. அதற்கேற்ப இயல்பாகவே நமது குறிப்பான திட்டமும் மாறியது. (எ.கா) வடக்குப் படையெடுப்பு, விவசாயப் புரட்சி யுத்தம், ஜப்பானிய எதிர்ப்பு யுத்தம் ஆகிய மூன்று காலக் கட்டங்களிலும் நமது புதிய ஜனநாயகம் புதிய திட்டம் மாறவில்லை. ஆனால் இந்த மூன்று காலகட்டங்களிலும் நமது நண்பர்களும் எதிரிகளும் மாறியதால் நமது குறிப்பான திட்டமும் இக்கால கட்டங்களில் மாற்றத்திற்குள்ளாகியது. (கூட்டரசாங்கம் பற்றி - மாவோ).
எனவே அறிக்கையின் தலைப்பு 'மோடி 2.00 பாசிச அபாயத்திற்கு எதிரான குறிப்பான செயல் திட்டம்" என மாற்றுவதே சரியானது.
2. பக்கம் 11 இல் :' செயலுத்திய வகுக்க வேண்டும்" என்பது 'குறிப்பான திட்டம் வகுக்க வேண்டும்" என மாற்றப்பட வேண்டும். செயலுத்தி (Tactics) என்பது கட்சியின் மூலயுத்தி (Strategy) முழக்கங்களை மக்கள் தங்களது சொந்த பட்டறிவின் மூலம் புரிந்து கொள்வதற்காக அமைப்பு வடிவங்கள், போராட்ட முறைகள், முழக்கங்கள் வகுப்பது பற்றியது ஆகும். எனவேதான் 'கட்சியின் செயலுத்திகள் என்பது கட்சியின் அரசியல் நடத்தை அல்லது கட்சியின் நடவடிக்கைகளின் தன்மை, திசை மற்றும் வழிமுறைகள் என்று நாம் அர்த்தப்படுத்துகிறோம்" என்றார் லெனின் (சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர் தந்திரங்கள் தேர்வு நூல்கள் தொகுதி -3 பக்கம் 24 மாஸ்கோ வெளியீடு). 'செயலுத்தி என்பது புரட்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தைக் கடக்கிற நிகழ்வின் இடையில் இயக்கத்தின் வெள்ளம் பெருகுவதும், வடிவதும் புரட்சி அலை ஓங்குவதும், ஓய்வதுமான ஒப்பு நோக்கில் குறுகிய காலத்தில் தொழிலாளி வர்க்கம் நடந்து கொள்ள வேண்டியதன் முறையை நிர்ணயிப்பது. பழைய போராட்ட வடிவங்களுக்கும், பழைய அமைப்பு வடிவங்களுக்கும் பதிலாக புதிய போராட்ட வடிவங்களையும் புதிய அமைப்பு வடிவங்களையும் கையாளுவதன் மூலமோ, பழைய முழக்கங்களுக்கு பதிலாக புதிய முழக்கங்களை வெளியிடுவதன் மூலமோ அல்லது புதியதும் பழையதுமான இந்த வடிவங்களை இணைப்பது முதலானவற்றின் மூலமோ இந்த முறையை நடைமுறையில் பின்பற்றப் போராடுகிறது. இதுதான் செயலுத்தி" என்று ஸ்டாலின் கூறினார். (லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள்) ஆக செயலுத்தி வகுப்பது என்பது வேறு, குறிப்பான திட்டம் வகுப்பது என்பது வேறு.
3. பக்கம் 23 இல்: 'பல்தேசிய இனங்களின், ஒடுக்கப்பட்ட சாதி, மத, பாலின, விளிம்புநிலை மக்களின் விரிவான வளர்ச்சிக்காவும், சனநாயகத்திற்காகவும் அதன் அடிப்படையிலான சனநாயக தேசியத்திற்காகவும் போராடும் சக்திகள் ஒருபுறம். அகண்ட பாரத இந்துத்துவ தேசிய நிதிமூலதன பாசிச சர்வாதிகாரத்திகாக நிற்கும் சக்திகள் மறுபுறம் என இந்த முரண்பாடு தீவிரமடையப் போகிறது!” என்பது மிகச் சரியானதே. இதனைத்தான் தமிழ் தேசமும் மார்க்சியமும் நூலில் (பக்கம்64) எமது நிலைபாடாக 'இந்தியாவின் அரசியல் அரங்கில் இரண்டு விதமான நேர் எதிரான அரசியல் போக்குகள் மோதிக் கொள்கின்றன. ஒன்று. இந்திய தேசிய ஆளும் வர்க்கப்போக்கு. மற்றொன்று மொழி வழி தேசிய சனநாயகப் போக்கு. முதல் போக்கில் பெரும் முதலாளிகள், பார்ப்பனிய ஆற்றல்கள், நிலக்கிழார்கள், பன்னட்டு முதலாளிகளின் நலன்கள் இணைந்துள்ளன. இதன் பகராளிகளாக காங்கிரசு, பி.ஜே.பி கும்பல் உள்ளது. மொழி தேசிய சனநாயகப் போக்கில் மொழி தேசிய முதலாளியக் கூறுகள், குட்டி முதலாளிய ஆற்றல்கள், விவசாயிகள், தொழிலாளிகள், சிறுதொழில் முதலாளிகள், வணிகர்கள், நேர்மையான அறிவாளிகளின் நலன்கள் இணைந்துள்ளன. இதன் பகராளிகளாக தமிழ்த் தேசிய விடுதலைக் குழுக்கள் உள்ளன. மற்றவர்கள் சந்தர்ப்பவாதிகளாக உள்ளனர். தமிழ்த் தேசியப் பாட்டாளி வர்க்கம் மொழித் தேசியப் போக்குடன் இணைந்தே தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற முடியும்" என்கிறோம்.
மேலும் அறிக்கை 'எனவே, இந்த வரலாற்றுச் சண்டைக்கானப் போராட்டத்தின் உடனடி இலக்கு தில்லி மைய அரசில் குவிகிற நிதி, பொருளாதார, அரசமைப்பு அதிகாரத்தை தடுத்து நிறுத்துவதற்கான சனநாயகப் போராட்டமாகத் தோற்றம் கொள்ளவிருக்கிறது!" என்கிறது. இது மாற்றப்பட வேண்டும். 'மைய அதிகார குவிப்பாக’ மட்டும் அறிக்கை சுருக்கிப் பார்க்கிறது. ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. கும்பலின் நோக்கம் மொழி வழி தேசியங்களை அழிப்பதாகும். அதன் துவக்கம்தான் மையத்தில் அதிகார குவிப்பு. தற்போதுள்ள மாநிலங்களை அழித்துவிட்டு நிர்வாக வசதிக்காக மத்திய அரசின் கீழ் 100 ஜனபாத அமைப்புகளை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகும். 1951,1954 ஆம் ஆண்டு ஜனசங்கம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இது வெளியிடப்பட்டது. அதன் தொடக்கம்தான் காக்ஷ்மீரில் தற்போது நடந்துள்ளது. ஜனபாதம் என்பது பண்டைய வட இந்தியப் பகுதியில் பிராமண மேலாதிக்கத்தைக் கொண்ட முடியாட்சி பகுதியாகும். சங்பரிவாரக் கும்பலால் பிராமண மேலாதிக்கத்திற்காக தற்போது செய்யப்படுகிறது.
4. பக்கம் 28 இல்:'அன்றைக்கு வடவர் எதிர்பாக இருந்தது. இன்றைக்கு நிதி ஆதிக்க கும்பல் எதிர்ப்பாகவும், கார்பரேட் எதிர்ப்பாகவும் இருக்கவேண்டிய தேவையுள்ளது." மேலும் 'அதிகார குவிப்பை முறியடிப்பதன் மூலம் பாசிச அபாயத்தை தடுத்து நிறுத்தவும் நீண்ட கால கண்ணோட்டத்தில் தமிழகத்தின் ஜனநாயகத்திற்கும் இந்தியாவில் உள்ள பிற தேசிய இனங்களின் ஜனநாயகத்திற்கும் உதவ முடியும்" என அறிக்கை கூறுவது மாற்றப்பட வேண்டும். நிதி ஆதிக்க கும்பல் எதிர்ப்பாகவும், கார்ப்பரேட் எதிர்ப்பாகவும்” என்பது இந்திய வல்லாதிக்க (Imperialism) எதிர்ப்பாகவும் “தமிழகத்தின் ஜனநாயகத்திற்கும்” என்பது தமிழகத்தின் இறையாண்மைக்கும் என்றும் “பிற தேசிய இனங்களின் ஜனநாயகத்திற்கும்” என்பது பிற தேசிய இனங்களின் இறையாண்மைக்கும் என மாற்றம் செய்ய வேண்டும். இந்த முழக்கம்தான் அகண்ட பாரத கனவுகளுடன் செயல்படும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. கும்பலையும், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களிலுள்ள முதலாளிய தேசியவாதிகளையும், இனவாதிகளையும் பின்வாங்கச் செய்யும். மாறாக இம்முழக்கம் மத்தியில் அதிகார குவிப்பிற்கு எதிரான போராட்டம் எனச் சுருக்கினால் தமிழ்த் தேசிய மற்றும் பிற தேசிய இனங்களிலுள்ள முதலாளியவாதிகளும், இனவாதிகளும் பிற பிற்போக்குவாதிகளும், சீர்த்திருத்தவாதிகளும் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதற்கே வழிவகுக்கும். தற்போது தி.மு.க., சி.பி.ஐ. (எம்) போன்ற கட்சிகள் மாநில சுய ஆட்சி வேண்டும் என கூறத் தொடங்கியுள்ளனர்.
5. பக்கம் 30 இல் “மோடி-அமித்க்ஷா பாசிசக் கும்பலை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்” என்கிறது அறிக்கை. இக்கும்பலை அகற்றிவிட்டு பதிலாக யாரை அமர்த்துவது? ஒருவேளை ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் அரசுரிமையை ஏற்றுக் கொண்டவர்களை மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்து பரிசீலிக்கலாம் அல்லது மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்ச்சி என்பவர்களைக் கொண்டு மத்தியில் ஆட்சி அமைக்கலாம். இந்திய அரசியல் அரங்கில் அப்படியான வாய்ப்பு தற்போது கண்ணுக்குத் தெரியவில்லை. அப்படியான வாய்ப்பு இருந்தால் பரிசீலிக்கலாம். அறிக்கை தெளிவில்லாமல் தடுமாற காரணம் என்ன? பாட்டாளி வர்க்கத்தின் தேசிய, சர்வதேச கொள்கை இல்லை என்பதே. இம்முரண்பாடு களைப்பட வேண்டும்.
6. அறிக்கை பாசிசத்தை வீழ்த்தி அரசியல் அதிகாரத்தை முதலாளிய சனநாயக வர்க்கமோ அல்லது பாட்டாளி வர்க்கமோ கைப்பற்றுவது குறித்து ஏதும் கூறிவில்லை. வெறும் பாசிச எதிர்ப்பு முழக்கங்களை முன்வைத்துள்ளது. இம்முழக்கங்கள் மட்டும் பாசிசத்தை வீழ்த்தாது. இம்முழக்கங்கள் பாசிச எதிர்ப்பு ஒற்றுமை முன்னணி அரசமைப்புடன் இணைக்கப்படவேண்டும். இதனைத்தான் எமது அறிக்கையில் “தமிழ்நாட்டின் மீதான பார்ப்பன-பனியா பாசிச ஆட்சியை முறியடிப்போம்! பாசிச எதிர்ப்பு தமிழ்த்தேச ஜனநாயக இடைக்கால அரசமைப்போம்!” என்று முழக்கமாக வைத்துள்ளோம். இவ்வாறான ஒற்றுமை முன்னணி அரசமைப்பது குறித்து டிமிட்ரோவ் கூறினார் " நமது கட்சிகள் போல்விக் முன்மாதிரியில், ஐக்கிய முன்னணி அமைக்கும் வாய்ப்பினை பயன்படுத்த முடிந்தால், அத்தகைய சர்க்கார் அதிகாரத்தில் அமைவதற்கும் நிலைநிறுத்தப்படுவதற்குமான போராட்டத்தை நடத்துவதற்கு முடிந்தால், திரளான மக்களுக்கு பயிற்சியைக் கொடுப்பதற்கு முடிந்தால் அதுதான் நமது கொள்கைக்கு ஐக்கிய முன்னணி சர்க்கார்கள் அமைப்பதற்குச் சாதகமான நமது கொள்கையாகவும், சரியான மிகச் சிறந்த நிலைபாடகவும் இருக்கும்". (ஒற்றுமை முன்னணி பற்றி-பக்கம் 96, பாசிசம் ஒரு மார்க்சிய ஆய்வு - புதுமை பதிப்பகம்)
மேலும் “பல நாடுகளில் ஐக்கிய முன்னணி சர்க்கார் மிகவும் முக்கியமான இடைமாறுதலுக்கான வடிவங்களில் ஒன்றாக இருக்க முடியும் என்று நிருபிக்கப்படலாம்.” ‘இடதுசாரி’ சூத்திரவாதிகள் லெனினுடைய இந்த வாசகத்தை எப்போதுமே தவிர்த்து விடுகிறார்கள். அவர்கள் மிகவும் குறுகிய புத்தியுள்ள பிரச்சாரர்கள். அவர்கள் வெறும் ‘குறிக்கோளை’ பற்றி மட்டுமே பேசுகிறார்கள், ‘மாறுதல் செய்வதற்கான வடிவங்களைப் பற்றி’ அவர்கள் கவலைப்படவில்லை. மறுபக்கத்தில் வலதுசாரி சந்தர்ப்பவாதிகள் ஒரு தனி ஜனநாயக இடைக்கால கட்டத்தை பூர்சுவா வர்க்க சர்வாதிகாரத்திற்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்குமிடையில் ஸ்தாபிப்பற்கு முயற்சிக்கிறார்கள், அவர்களுடைய நோக்கம் தொழிலாளர்களிடத்தில் ஒரு சர்வாதிகாரத்திலிருந்து மற்றொன்றிற்கு சமாதான முறையில் பாராளுமன்ற முறையின் மூலம் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற பிரமையை உண்டாக்குவதாகும். இந்த போலியான ‘இடைக்கால கட்டம்’ என்பதை அவர்கள் லெனினுடைய வாசகத்தையும் மேற்கோள்காட்டி அதன் ‘இடை மாறுதல் வடிவம்’ என்று வாதிட்டார்கள். இந்த மோசடியை அம்பலப்படுத்துவது கக்ஷ்டமல்ல. லெனின் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான மாறுதல் வடிவம் பற்றிய அணுகுமுறையைப் பற்றிக் குறிப்பிட்டார். பூர்க்ஷ்வா சர்வாதிகாரத்தை தூக்கி எறிவதற்கான வழிமுறைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். பூர்க்ஷ்வா மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு இடைமாறுதல் வடிவங்களைப் பற்றி அல்ல." (ஒற்றுமை முன்னணி பற்றி - பாசிசம் - ஒரு மார்க்சிய ஆய்வு,
பக்கம் 93-94, புதுமை பதிப்பு)
எனவே பாசிசத்தை வீழ்த்திவிட்டு அவ்விடத்தில் ஓர் இடைக்கால அரசமைப்பது குறித்து அறிக்கை பேசவில்லை என்பது எங்கள் விமர்சனம். 'பாசிச எதிர்ப்பு தமிழ்த்தேச சனநாயக இடைக்கால அரசமைப்போம்!" என்ற எமது முழக்கமானது தமிழ்த் தேச விடுதலைப் போராட்டத்தில் இடைமாறுதலுக்கான ஒரு அரசு வடிவமாகும். அதுதான் தமிழ்த்தேச விடுதலைப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் தனது நலனைப் பாதுகாத்துக் கொண்டு முன்னேறுவதற்கான வழியாகும்.
அறிக்கையில் மற்றபடி உலக, இந்திய நிலைமைகளில் பாசிச அபாயம் குறித்த அரசியல், பொருளாதார விவரங்கள் கூறப்பட்டிருப்பது பொதுவாக ஏற்புடையதே.
(தொடரும்)
- ச.பாரி, தமிழ்த் தேச இறையாண்மை