jeyaprakash 350நம் தேசத்திற்கு ஆபத்து, மக்களாட்சிக்கு ஆபத்து என வரும்போதெல்லாம் ஒருமித்த கருத்தை அரசியல் கட்சிகளிடம் உருவாக்கி, மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்று தேசத்தை அழிவிலிருந்து காப்பாற்றிய தலைவர்கள் சிலர் நம்மிடையே வாழ்ந்து வரலாறு படைத்துள்ளனர்.

அவர்கள் அரசியல் கட்சிகளில் இருந்தாலும், கட்சிகளைக் கடக்கவல்ல தலைமைத்துவமும் ஆளுமையும் பெற்றவர்கள். அவர்கள் மக்களுக்கான அரசியல்வாதிகள், கட்சிக்கான அரசியல்வாதிகள் மட்டுமல்ல. அந்தத் தலைவர்களை மக்கள் அப்படித்தான் பார்த்தார்கள்.

அந்த வரிசையில் ஜெயப்பிரகாஷ் நாராயணனும், முன்னாள் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கர்கிஷண் சிங் சுர்ஜித் அவர்களும் பார்க்கப்பட்டனர். அனைத்துக் கட்சிக்காரர்களாலும் மதிக்கப்பட்டு போற்றப்பட்ட அப்பழுக்கற்ற மக்கள் தலைவர்கள் அவர்கள்.

அவர்களுடைய தியாகம், நேர்மை, நாட்டுப்பற்று, மக்களாட்சிமேல் கொண்ட ஈடுபாடு, மக்கள் மேல், குறிப்பாக ஏழைகள்மீது கொண்ட கரிசனம் என்பது அவர்களை எப்போதும் எல்லோராலும் மதிக்க வைத்தன. இவர்கள் இருவருமே தலைவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கியவர்கள். அவர்கள் இருவருமே தியாகப்பின்னணி நிறைந்தவர்கள். தேசத்திற்கு நெருக்கடி வருகின்றபோது அரசியல் கட்சிகளை மிக எளிதில் இணைத்துச் செயல்பட வைத்துவிடுவார்கள். அந்த ஆற்றலும் சக்தியும் அவர்களிடம் இருந்தன. மற்ற கட்சித் தலைவர்கள் இவர்களின் அரசியல் பின்புலத்தைப் பார்ப்பது கிடையாது.

அந்த அளவுக்கு இவர்கள் அரசியலில் தூய்மையையும் நாணயத்தையும் வைத்துச் செயல்பட்டவர்கள். இன்று நாம் அப்படிப்பட்ட தலைவர்களுக்காக ஏங்கி நிற்கிறோம். அவர்கள் செய்த பணி இன்று நம் அரசியலுக்கு இன்று தேவைப்படுகிறது.

இன்று அப்படிப்பட்ட தலைவர்களைத் தேடிப் பார்க்கின்றோம் கிடைக்கவில்லை. அதன் விளைவுதான் இன்று இவ்வளவு விவாதங்களை நரேந்திரமோடிக்கு எதிராக வைக்கின்ற அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க முடியவில்லை.

நாட்டிற்கு வரும் ஆபத்தைவிட பாரதப்பிரதமரை எதிர்க்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஊதிப் பெரிதாக்கப்பட்ட அகங்காரத்தில் செயல்பட்டு தங்கள் தலைமையை பெரிதாக எண்ணி செயல்பட்டு வருகின்றனர். என் கட்சி பெரிது, என் தலைமை பெரிது, என் வாக்கு வங்கி பரந்து விரிந்தது, அனைவரும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவது பொதுவெளியில் விவாதத்திற்கு வந்து கொண்டுள்ளது.

இந்தச் சூழலை எதிர்கொள்ள மறைந்த மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் இன்று இல்லையே என்ற உணர்வு நமக்கு வருகின்றது. ஏனென்றால் சுர்ஜித் அவர்களிடம் எவரையும் வெற்றி கொள்ள வேண்டிய பக்குவமும், தலைமைத்துவமும், பார்வையும் இருந்தது.

அவர் ஒரு முறை கேரளாவிற்கு வந்திருந்தார். அப்பொழுது நானும் அங்கு சென்றிருந்தேன். என் பணிகளை முடித்து இரவு விடுதிக்கு வந்து தொலைக்காட்சி பார்ப்பதற்காக தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தவுடன் ஒரு தொலைக்காட்சி சேனலில் அவரைப் பேட்டி கண்டார்கள். அதைக் கேட்க ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை அதே இடத்தில் அமர்ந்து விட்டேன். அந்த அளவுக்கு அந்த விவாதம் என்னை கட்டிப்போட்டு விட்டது. அந்தப் பேட்டிதான் அவர் எவ்வளவு பெரும் தலைவர் என்பதை எனக்குப் புரிய வைத்தது.

அந்தப் பேட்டியில் தொலைக்காட்சியின் நெறியாளர் கேட்கிறார் “நீங்கள் உலகமயமான பொருளாதாரக் கொள்கையை வலுவாக எதிர்க்கின்றீர்கள். இன்று உங்களைப் பிரதமர் ஆக்கிவிட்டால் உலகமய பொருளாதாரத்தை நிறுத்திவிடுவீர்களா?” என்று.

உடனே எந்தத் தாமதமுமின்றி கூறினார். “அது முடியாது, உலகமயமான பொருளாதாரம் அதுவாக வீழ்ச்சியை நோக்கிச் சென்றுவிடும். இன்று அது ஒரு காட்டாற்று வெள்ளம்போல் வருகின்றது. அதை அணைகட்டி தடுத்து விடுவேன் என்று முயன்றால் நாமும் காணாமல் போய்விடுவோம். இந்தச் சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், வெள்ளம் வரும்போது எப்படி மக்களை பாதுகாப்பான இடத்திற்கு இட்டுச்சென்று பாதுகாத்து வைத்துக்கொள்வோமோ அதேபோல் நாம் இந்த பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தும்போது, ஏழைகளைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அவைகள் அனைத்தையும் சட்டங்களாகவும், திட்டங்களாகவும் தீட்டி ஏழைகளைக் காக்க முயற்சி செய்வேன்” எனக் கூறினார்.

அடுத்து ஒரு கேள்வியை வைத்தார் நெறியாளர். “ஒரு நிலையில் உங்களை காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் போல் தெரிகிறது என்று பலர் கூறுகின்றனர். அதையும் தாண்டி காங்கிரஸ் கட்சி வளர்வதற்கும் ஆதரவாக இருக்கிறீர்கள் என்று கூறுகின்றார்களே” என்று கேட்டார்.

அதற்கும் தயங்காமல் உடனே பதில் சொன்னார். “காங்கிரஸ் கட்சியை நெறிப்படுத்தி இயங்கு தளத்தில் இயங்க வைக்க வேண்டிய கட்டாயம் இந்திய சூழலில் இருக்கிறது. அதில் இடதுசாரிகளுக்கு ஒரு பங்கும் இருக்கிறது என்று உணர்கிறேன். அப்படி காங்கிரஸ் வியாபிக்கவில்லை என்றால் அந்த இடத்திற்கு ஒரு கொடிய பாம்பு வந்துவிடும். அதை அகற்றுவது மிகவும் கடினமானது. எனவேதான் காங்கிரஸ் கட்சி தவறு செய்கின்றபோது தட்டிக்கேட்க நான் தவறுவதே இல்லை. காங்கிரஸ் கட்சியை கடந்த காலங்களில் எதிர்த்துப் போராடியும் இருக்கின்றோம். போராடி சிறைச்சாலைக்கெல்லாம் சென்றிருக்கிறோம். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி ஏழைகளின் நலம் பேண கொண்டுவரும் திட்டங்களைத் தொடர்ந்து ஆதரித்தும் வருகின்றோம்” என்று கூறினார்.

அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும்போது இன்னொரு விளக்கத்தையும் வைத்தார். “இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து மிகப்பெரிய அளவில் வியாபிக்க வேண்டும். எனவே நாம் வளர்வதற்கும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இருக்கும்போது இடதுசாரிகள் வலுவாக பாராளுமன்றத்தில் இருந்தால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை நோக்கங்களிலிருந்து விலக விடாமல் அந்தக் கட்சியை செயல்பட வைத்து மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டுவர உதவியாக இருக்கலாம். அது நாட்டுக்கு நல்லது, குறிப்பாக ஏழைகளுக்கு நல்லது” என்று குறிப்பிட்டார்.

அவர் கூறிய விளக்கத்தில் இருந்த கருத்துக்களை இன்று ஒரு ஆராய்ச்சியாளனாக அலசிப்பார்க்கிறேன்.

எவ்வளவு தொலை நோக்குப்பார்வையுடன் இந்தியாவின் எதிர்காலத்தை கணித்திருக்கிறார் என்று வியந்து பார்க்கிறேன். அதில்  ஒன்று, உலகமய பொருளாதாரம்.

இந்த புதிய பொருளாதார இயக்கம் வெள்ளம்போல் வருகிறது. அது ஆற்றுநீர் அல்ல உபயோகப்படுத்த. அதன் பாரத்தை தாங்காமல் அதுவாகவே அழியும் சூழல் ஒருகாலத்தில் வரும் என்று கூறியதை இன்றைய உலகச் சூழலில் பொருத்திப் பார்க்கிறேன்.

இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் இணைந்து கொண்டுவந்த இந்த புதிய பொருளாதாரத்தை அவர்களால் கட்டிக்காத்து மேலே கொண்டு செலுத்த முடியவில்லை. அதன் விளைவு இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது.

அமெரிக்கா புதிய பொருளாதார கட்டமைப்புக்களை உடைத்தெரிந்து அமெரிக்காவைப் பாதுகாக்க வேண்டும் என்று செயல்படுகிறது. நம்மைப்போன்ற நாடுகள்தான் புலி வாலைப் பிடித்ததுபோல் பொருளாதார வளர்ச்சி என பிடித்துக்கொண்டு அலைகின்றது.

மத்திய அரசாங்கத்திற்கு பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் வீரமணி அவர்கள் தன் சிறப்புக் கட்டுரை ஒன்றில் அரசும் தோற்றது, சந்தையும் தோற்றது இன்று புது முயற்சி தேவை மக்களைப் பாதுகாக்க என்று எழுதி இருந்தார்.

இரண்டாவது, உலகமயப் பொருளாதாரம் செயல்படும் நேரத்தில் ஏழைகளைப் பாதுகாக்கும் சட்டங்களையும் திட்டங்களையும் உருவாக்கிச் செயல்பட வேண்டும் என்று கூறியதையும் நான் ஓரிடத்தில் பொருத்திப் பார்க்கிறேன்.

இடதுசாரிகளும் இணைந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்த முதல் ஐந்தாண்டுகளில் ஏழைகளுக்கான எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் உரிமைச் சட்டங்களாக வெளிவந்தன இந்தியாவில். அது ஆராய்ச்சியாளர்களால் உரிமைகளின் புரட்சி என்றே வர்ணிக்கப்பட்டது.

அது வருவதற்கு இடதுசாரிகளின் பங்கு என்பது குறைவானது அல்ல. அதற்கு ஒரு உதாரணம் 100 நாள் வேலை உறுதியளிப்புச் சட்டம்.

இந்த ஏழைகளுக்கான சட்டங்களும் திட்டங்களும் வருவதற்கு இடதுசாரிகளின் பங்களிப்பு இருந்துள்ளதை எவரும் மறுக்கவில்லை.

அடுத்து காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தினால் அந்த இடத்தில் பாம்பு குடி கொண்டுவிடும் என்று கூறியதை எந்த இடத்தில் பொருத்திப் பார்க்கின்றேன் என்றால் “இரண்டாம் முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி தொடர்ந்தபோது, வீழ்ச்சிக்கு வித்திட்டது, இடதுசாரிகளின் வெளியேற்றத்தால் நடந்தது அந்த வீழ்ச்சி. அந்த வீழ்ச்சி காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் வரவில்லை. இடதுசாரிகளுக்கும் வந்தது. அதன் விளைவு என்ன ஆனது என்பதை சிந்திக்கும்போது அவரின் அனுமானங்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை இன்று நாம் உணர்கின்றோம்.

இன்று நரேந்திரமோடி அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை ஒன்றிணைக்க அவர்போல் ஒரு தலைவர் இல்லையே என்ற ஏக்கம்தான் என் போன்றோர்க்கு.

இந்த ஏக்கத்திற்கு மக்கள் தீர்ப்புச் சொல்லுவார்கள்.

Pin It