மறுபாதி என்ற கவிதைக்கான இதழ் குழுவினரும் புத்தகக்கூடமும் (Book Lab) இணைந்து நடாத்திய மறுபாதி கவிதைக்கான காலாண்டு இதழின் ஓராண்டு நிறைவு விழாவும் புத்தகக் கண்காட்சியும் 08.12.2010 யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. மறுபாதி கவிதைக்கான காலாண்டு இதழ் கடந்த ஒரு வருடமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. 
 
marupaathi_380தமிழில் முக்கியமான கவிஞர்களை உலகெங்கிலும் இருந்து அறிமுகப்படுத்தி வரும் சிறுபத்திரிகையான இந்த இதழ் தமிழ் கவிதைக்கு புதியவர்களையும் அறிமுகப்படுத்துகிறது. சீராக அமைக்கப்பட்டு வெளிவரும் மறுபாதி இதழ் ‘தீவிரமான கவிதைக்குரிய இதழ்’ என்று முக்கியம் பெறுகிறது. எளிமையும் ஒழுங்கும் கொண்ட இதழின் வடிவமைப்பு, அழகான தோற்றத்தை தருவதுடன் வாசிக்கும் கவனத்தையும் ஈர்க்கிறது.
 
அன்றைய நிகழ்வு மறுபாதி இதழின் துணை ஆசிரியர்களில் ஒருவரான கவிஞர் அ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. வெளியீட்டு உரையை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகிற குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மற்றொரு சஞ்சிகையான கலைமுகம் இதழின் ஆசிரியர் செல்மர் எமில் நிகழ்த்தினார்.
 
விமர்சன உரையை எழுத்தாளர் ஐ.சாந்தன் அவர்கள் நிகழ்த்தினார். இந்த இதழின் சிறப்புக்களைச் சுட்டிக் காட்டிப் பேசிய ஐ.சாந்தன் இந்த இதழில் ஏற்பட்ட எதிர்பாராத தவறுகளையும் சுட்டிக் காட்டினார். கவிதை இதழாய்வுப் போக்கில் அமைந்த ஐ.சாந்தனின் விமர்சன உரை இறுக்கமாகவும் ஆழமாகவும் அமைந்திருந்தது.
 
இந்த இதழின் ஏற்புரையை வழங்கிய மறுபாதி இதழின் ஆசிரியர் கவிஞர் சித்தாந்தன் தமிழ் கவிதைத்துறையில் சிறிய முயற்சியாகவே மறுபாதி கொண்டு வரப்படுகிறது என்று குறிப்பிட்டார். தமிழ் கவிதையின் அடையாளங்களைத் தொடர்ந்து பதிவு செய்ய மறுபாதி இயங்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். ஓராண்டு மொழிபெயர்ப்புச் சிறப்பிதழான இந்த இதழ் குறித்து பேசும்பொழுதே பிற மொழிக் கவிதைகள் தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படுவதுபோல தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்படுவது மிகக் குறைவாக உள்ளது என்று தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் பேசுகையில் தமிழில் கவிதை மொழியாக்கம் வளர்ச்சியடைந்து வருகின்றது. அநேகமானோர் இத்துறையில் ஈடுபட்டு வருகின்றனர். பிறமொழிக் கவிதைகளை வாசி;பதற்கான சந்தர்பங்கள் இதனூடாக தமிழ் வாசகர்களுக்கு ஏற்படுகிறது. இதன் ஒரு அம்சமாகவே இந்த மொழிபெயர்ப்பு இதழ் கொண்டு வரப்படுகிறது என்றார் சித்தாந்தன்.
 
அத்தோடு ஆங்கில மொழிப் புலமை உள்ளவர்களும் புலம் பெயர்ந்து பிறநாடுகளில் வாழும் அந்நாட்டு மொழிப் பரிச்சயம் மிக்கவர்களும் தமிழ் கவிதைகளைப் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்வார்களானால் தமிழ் கவிதைகள் பரவலான வாசகப் பரப்பை அடையும்  சாத்தியங்கள் ஏற்படும். தமிழ் கவிதைகள் உலகளாவிய பரிமாணத்தை அடைய இது ஏதுவாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். நன்றியுரையை மறுபாதி இதழின் மற்றொரு துணை ஆசிரியரான சி.ரமேஷ் நிகழ்த்தினார்.
 
புத்தகக் கூடம் (Book Lab) என்ற நிறுவனம் இந்த வெளியீட்டை இணைந்து நடத்தியுள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட போர் மற்றும் வன்முறைச் சூழலால் வாசிப்பும் புத்தக வெளியீடுகளும் அவை பற்றிய உரையாடல்களும் பாதிக்கபட்டிருந்தன. பத்திரிகைச் சூழலில் இருந்த வெளி கூட இலக்கிய எழுத்துக்களுக்கு இருக்கவில்லை. புத்தகக்கூடம் (Book Lab) தொடர்ந்தும் வாசிப்பை ஏற்படுத்தும் புத்தகங்களை பருவ இதழ்களை எத்தகைய நெருக்கடிக் காலத்திலும் யாழ்ப்பாணத்தில் கொண்டு வந்து சேர்த்தது.

eelam_writers_600
 
இன்றைய நிகழ்வில் புத்தகக் கூடத்தின் (Book Lab) புத்தகங்கள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியிடப்பட்ட மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களும் இதழ்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. ஈழத்து நூல்கள், தமிழக நூல்கள் உட்பட சமூக அரசியல் ரீதியான முக்கியமான புத்தகங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சி மறுநாள் ஞாயிற்றுக் கிழமை வரை நடைபெற்றது.
 
இதழ் குழுவினரும் புத்தகக்கூடமும் (Book Lab) இணைந்து நடாத்திய இந்த புத்தகக் கண்காட்சியின் அடுத்த நாள் நிகழ்வாக மலையக எழுத்தாளர் பாலமுருகனை சந்திக்கும் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தின் படைப்பிலக்கிய சூழலில் இப்பிடியான சந்திப்புக்கள் இடம்பெறுவது மிகவும் குறைவானது. கடந்த பல வருடங்களாக இப்படியான சந்திப்புக்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. ஆளை ஆள் சந்தித்துப் பேச முடியாத அச்சமான காலத்தின் பின்னர் மிகச் சிறியளவில் அந்த சந்திப்பு நடந்தது. சில மாதங்களின் முன்பு மறுபாதி இதழின் ஏற்பாட்டில் கவிஞர் ஒருவரது வீட்டில் சிறிய சந்திப்பு நடந்தது. அதில் சமகால இலக்கிய நிலவரங்கள், இணையங்கள், பத்திரிகைகள் குறித்து பேசப்பட்டது.
 
துவாரகன் சமகாலக் கவிதைகள் குறித்தும், கருணாகரன்  சமகால ஊடக நிலவரங்கள் குறித்தும் நான் இணையத்தில் இருந்த எழுத்து நிலவரங்கள் தொடர்பிலும் பேசினோம். மாதா மாதம் அந்த சந்திப்பு நடத்தப் படுவதாக இருந்த பொழுதும் பின்னர் அந்த இலக்கிய சந்திப்பு தொடர்ந்து இடம்பெறவில்லை. அதன் பின்னர் பாலமுருகனை சந்தித்துப் பேசினோம். குறித்த சந்திப்பில் சித்தாந்தன், தானா.விஷ்ணு, கேதீஸ்வரன், நா.சத்தியபாலன், கலைமுகம் எமில், சி.ரமேஸ், யாத்திரிகன், ஐ.வரதராஜன் மற்றும் நான் முதலியோர் கலந்து கொண்டோம்.
 
மலையகத்து மக்களின் வாழ்க்கை அவர்களின் அரசியல் சூழல் என்பன குறித்தும் மலையகத்து இலக்கியங்கள் குறித்தும் பாலமுருகன் பேசினார். மலையக அரசியல் நிலமைகள் மக்களை மிகவும் பாதிப்பதாகவும் அரசியல்வாதிகள் மக்களைப் பலியாக்குவதாகவும் குறிப்பிட்டார். மலையக மக்களின் முகாம் வாழ்வு தொடக்கம் படிப்பை கைவிடும் பாடசாலைப் பிள்ளைகள் வரை குறிப்பிட்டார்.
 
தமிழ் பாடத்தை கற்பதற்கு எதிர்கொள்ளும் தமிழ் ஆசிரியர்கள் போன்ற பிரச்சினைகள் முதல் அங்கு புத்தகங்களும் இதழ்களும் கிடைக்காமலிருப்பதுவரை குறிப்பிட்ட பாலமுருகன் மலையக எழுத்து தற்பொழுது வறண்ட நிலையில் இருக்கிறது என்றும் மலையகத்து நிலவரங்கள் சார்ந்த இலக்கியங்கள் இன்னும் எழவில்லை எனவும் தெரிவித்தார். அதேவேளை நம்பிக்கை அளிக்கக் கூடிய எழுத்துக்கள் அங்கு அரும்பி வருகின்றன என்றும் குறிப்பிட்ட அவர் மலையகத்தின் கடந்த கால காத்திரமான எழுத்துக்கள் குறித்தும் படைப்பாளிகள் குறித்தும் பேசினார்.

Pin It