தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

சசி வாரியார்

தமிழில் : இரா.முருகவேல்

வெளியீடு : உன்னதம்

ஆலந்தூர் அஞ்சல்

கவுந்தப்பாடி – 638455

ஈரோடு மாவட்டம்

பேசி: 9940786278

விலை : ரூ.140

நூலின் முன்னுரையிலிருந்து...

வாழ்வு என்பதே ஒரு வகையில் சாவு நோக்கிய பயணம்தான். ‘நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாள்’ என்பார் திருவள்ளுவர். ஆனால் அதற்காக யாவரும் சாவை விரும்பி வரவேற்பதில்லை. தவிர்க்க முடியாததைத் தள்ளிப் போடும் முயற்சியே மருத்துவம். சாவு இயற்கையாக வராமல் செயற்கையாகக் குறுக்கிடும் நிகழ்வு – விபத்தோ – கொலையோ- சாவின் அதிர்ச்சியை கூட்டிவிடுகிறது. கொலையோ திட்டமிட்ட கொலையானால்? கொலைக்குத் திட்டமிடுவதே அரசானால்? திட்டமிட்ட கொலைக்கு நாள் குறிப்பதற்கு வழிவகை செய்வது சட்டமானால்? இதற்குப் பெயர் ‘மரண தண்டனை’ எனப்படும் கொலைத் தண்டனை.

கொலைக் கருவி எதுவாயினும் கொலை கொடியதே. கொலைக் கருவிகள் விதைக்கருவிகளாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்து மறைந்து வருகிறது. கொலை தண்டனை என்பது அத்தண்டனைக்கு ஆளாகிறவரை வதைப்பதாக இருக்கக் கூடாது என்ற கருத்து வளர்ந்து வருகிறது. உயிர்த்தீயைச் சட்டென்று ஊதி அணைத்து விடலாமே தவிர அரசின் கொலைத் தண்டனை சிறுகச் சிறுக விதைத்துத் துன்புறுத்துவதாக இருக்கலாகாது.

கொலைத் தண்டனையை எப்படி நிறைவேற்றலாம்? தூக்கிலிடலாம்? தலையை வெட்டலாமா? துப்பாக்கியால் சுடலாமா? மின்சார நாற்காலியில் அமர்த்தி அதிர்ச்சியூட்டலாமா? நஞ்சூட்டலாமா? வாயில் ஊட்டலாமா? ஊசி வழியாக குருதி நாளத்தில் ஏற்றலாமா?

பழி தீர்ப்பதே தண்டனையின் நோக்கம் என்றிருந்த காலத்தில் கொலைத் தண்டனையை நிறைவேற்றும் முறை திகிலூட்டுவதாக இருந்தது. அப்படிதான் இருக்க வேண்டும் எனக் கருதப்பட்டது கோவலனுக்கு பாண்டிய மன்னன் விதித்த கொலைத் தண்டனை  தலையை வெட்டி நிறைவேற்றப்பட்டது. ‘வெளிவால் எறிந்தனன் விலங்கூடு அறுத்தது’ என்கிறது சிலப்பதிகாரம். மதுரை வீரனை ‘மாறுகால் மாறுகை வாங்கிக்’ கொன்றனர். மதுரை அருகே சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள். ‘வெங்கழுவேற்றுவானில் வேந்தனனே’ என்கிறது பெரிய புராணம்.

மேலைநாடுகளிலும் கொலைத் தண்டனை நிறைவேற்றத்துக்கு பல வழிகள் கையாளப்பட்டன. சாக்ரட்டீஸ் நஞ்சுட்டிக் கொல்லப்பட்டார். அடிமை முறைக்கு எதிராக கலகம் செய்த ஸ்பார்ட்டகஸ் சிலுவையிலறைந்துக் கொல்லப்பட்டார். இயேசு கிருஸ்துவுக்கு கொலைத் தண்டனை நிறைவேற்றப் பயன்பட்டதால் சிலுவையே புனிதச் சின்னமாகி விட்டது.

மத நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாகிக்கிய பலரும் கொடிய முறையில் கொலைத் தண்டனைக்கு ஆளாயினார். அண்டத்தின் மையம் புவியே என்ற நம்மிக்கையை மறுத்துச் சூரிய மையக் கொள்கையை வகுத்தவர் கோபர் நிக்கஸ். இந்தத் கொள்கையை ஆதரித்தமைக்காக அறிஞர் புருனீவை முலையில் கட்டி உயிரோடு எரித்தனர். இதற்காகவே கலிலியோவும் சிறையிலடிக்கப்பட்டார்.

பாலியல் ஒழுக்க மீறலுக்குக் கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை தரப்பட்டதை விவிலியத்திலிருந்தே அறிய முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புக் கூட ‘ஷரியத்’ சட்டப்படி பாகிஸ்தானின் ஒரு பெண் இவ்வாறு தண்டனைக்கான செய்தி வந்தது. சவுதி அரேபியாவில்  கொலைத் தண்டனை அனைவரும் பார்க்குபடி தலையை வேட்டி நிறைவேற்றப்படுவது இன்று வரை நடப்பில் உள்ளது.

கொலைத் தண்டனை எவ்வடிவிலும் கூடாது என்னும் குரல் உலகெங்கும் ஒலித்து வருவதோடு வலுத்தும் வருகிறது. உலகின் பெரும்பாலான அரசுகள் கொலைத் தண்டனையை ஒழித்துவிட்டன. சில நாடுகள் சட்டத்திலிருந்து அதனை அகற்றிவிட்டன. வேறுசில நாடுகள் சட்டத்தில் வைத்திருந்தாலும் செயலளவில் நீக்கி விட்டன. சட்டத்திலும் செயலளவிலும் கொலைத் தண்டனையைத் தக்கவைத்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்தியாவிலும் கூட கொலைத் தண்டனையின் ஆட்சிப்பரப்பு வெகுவாகச் சுருங்கிவிட்டது. கொலைத் தண்டனை குற்றத்துக்குக் கொலை தண்டனைதான் என்பது விதியாக இருந்து விதிவிலக்காக மாறிவிட்டது. கொலைக் குற்றத்திற்கு ஆயுள் சிறைத் தண்டனை என்பதே இப்போதைய விதி. ‘அரிதிலும் அரிதான’ வழக்குகளில் மட்டுமே கொலை தண்டனை விதிக்கலாம். சட்டப்படி நிலைமை இப்படியிருந்தாலும் சட்டப்புறம்பான கொலைத் தண்டனைகள் நீடித்து வருகின்றன. மோதல் என்றா பெயரிலான கொலைகள் இவ்வகைப்பட்டவையே . இவற்றை ஆட்சியாளார்கள் நியாயப்படுத்தும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது.

சட்டப்படியானவை என்றாலும் சரி, சட்டப்புறம்பானவை என்றாலும் சரி, கொலைத் தண்டனைகள் கூடவே கூடாது என்பதுதான் மனித உரிமைகளுக்கும் மனித கண்ணியத்துற்கும் மதிப்பளிக்கும்.

தூக்குப் பற்றிப் பேச தூக்கிலிடப்பட்டவர் வரப்போவதில்லை என்பதால் தூக்கிலிடப்பட்டவர் பேசுவதைத்தான் நாம் கேட்க வேண்டும். முன்னாள் தூக்குக் கைதிகளான என்னைப் போன்றவர்களை விடவும் தூக்கை நெருங்கிப் பார்த்திருப்பவர் அவரே.

தூக்கிலிடுபவர் ஒருவர் உண்மையாகத் தன் கதையைச் சொன்னால் எப்படியிருக்கும்? தூக்குத் தண்டனை தொடர்பான பல செய்திகளை அது நமக்கு அறியத் தரும். தூக்குத் தண்டனையின் வலிகளை அது நமக்கு  உணரத் தரும். இந்தக் கதியே நேர்த்தியான நூல் வடிவம் பெற்றால் அது நமக்கு தூக்குத் தண்டனை பற்றிய வரலாற்று ஆவணமாகவே கைவரப் பெறும். அப்படியொரு வரலாற்று ஆவணம்தான் நீங்கள் கையில் வைத்திருக்கும் இந்த நூல்.

சசி வாரியர் எழுதி இரா.முருகவேள் தமிழாக்கம் செய்து உன்னதம் வெளியிட்டுள்ள தூக்கிலிடுபவரின் குறிப்புகள் அதன் வகையில் முதல் வரவு என்பது இந்நூலின் முதற்சிறப்பு. இவ்வகையில் இன்னொரு நூல் கிடைக்க வேண்டுமென்றால், இன்னொரு தூக்கிலிடுபவர் வேண்டும், அவர் தன் கதையை சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதால் இதற்கான வாய்ப்பே இல்லை என்று சொல்லி விடலாம். ஆகவே இது தனித்துவமான ஒரு நூல்.

ஜனார்த்தனன் பிள்ளை 1940ல் தொடர்ந்து முப்பதாண்டு காலம் தூக்கிலிடுபவராக இருந்து 117 மனிதர்களைத் தூக்கிலிட்டவர். முதலில் திருவிதாங்கூர் மன்னராட்சியிலும், பிறகு சுதந்திர இந்தியாவிலும் தூக்கிலிடும் வேலை செய்தவர். ஜனார்த்தனன் பிள்ளை மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவரிடம் பேசிப் பேசி அவரைக் குறிப்புகள் எழுதச் செய்து அவரது கதையை இப்படியொரு நூலாக வடித்தவர் சசி  வாரியர்.

ஜனார்த்தனன் பிள்ளை தமிழில் தந்ததை சசி வாரியார் ஆங்கிலத்திற்குக் கொண்டு சென்று இப்போது முருகவேள் மீண்டும் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இந்தச் சுற்றுப் பயணத்தில், தளர்வு தவிர்க்க முடியாத ஒன்று.

ஆம், இந்த நூல் தூக்குத் தண்டனையைத் தூக்கு மேடையில் நிறுத்தியிருக்கிறது : சரியான முறையில் சுருக்கை மாட்டி நெம்புகோலை இழுப்பது நம் பொறுப்பு.

முன்னுரயிலிருந்து தியாகு
Pin It