பஞ்சாட்சரம் செல்வராஜன் சிறுகதைகள் வாழ்க்கை அனுபவங்களை, பலவிதமான மனிதர்களின் அனுபவம் சார்ந்த மனநிலைகளை, நுட்பமாகச் சித்திரிக்கும் படைப்புகளாக இருக்கின்றன. வாழ்க்கையையும் மனிதர்களும் சகமனிதர்களை பாதிக்கும் தன்மைகளையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. மனிதர்களிடையே, அவர்களது சொல்லுக்கும் செயலுக்குமிடையே, நிலவுகின்ற முரண்பாடுகளை அநேக கதைகள் சுட்டுகின்றன. மனித வாழ்க்கையில் மனம் நிகழ்த்திக் கொண்டிருக்கிற விசித்திரங்களையும் விபரீதங்களையும், சிறுமைகளையும் சீரழிவுகளையும் சில கதைகள் பிரதிபலிக்கின்றன. பெரும்பாலும் மனம் பழங்கால நினைவுகளில் ஆழ்ந்து கிடப்பதையும், பழசை எண்ணி எண்ணி ஒருவித திருப்தியும் நிறைவும் கொள்வதையும் அநேக கதைகள் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளன.
vallikannanவீம்பு, தெருவோரத் தாழ்வாரம், மகாலி என்னும் மகாலிங்கம் ஆகியவை பழமை நினைவுகளைப் போற்றும் மனிதர்களைப் பற்றிய மூன்று வகையான சிறுகதைகளாக அமைந்துள்ளன. பழங்கால நினைவுகளிலேயே வாழ்கிற - மனநிலை பிறழ்ந்த - ஒரு அன்னையின் கதையை நன்கு கூறுகிறது ‘அன்னை இட்ட தீ’.

மனம் ஒருவனை எப்படியெல்லாம் அலைக்கழிக்கும், பாடாய்ப்படுத்தும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் என்பதை ‘தேய்ந்து வரும் வளர்பிறை’ அருமையாக விவரிக்கிறது. மனைவியை இழந்த கணவனின் துயரத்தையும் மனபேதலிப்புகளையும் திறமையாகச் சித்திரிக்கிறது இக்கதை. திருமணமாகாத ஒரு முதிர்கன்னியின் மனநிலையை நுட்பமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது ‘தருமு கோவிலுக்குப் போகிறாள்’. அவள் ஆசை நிறைவேறாமலே போவதைக் காட்டும் முடிவு சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. நுட்பமாகக்கூட. இரவில் தூக்கம் வராது தவிக்கிறவனின் மனநிலையை விவரிக்கும் ‘எத்தனை ஆடுகள்’ - இவ்விதம் மனசுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிற கதைகள் படித்து ரசித்துப் பாராட்டப்பட வேண்டியனவாகும்.

இதர பல கதைகள் வாழ்க்கை நாடகத்தின் பல்வேறு காட்சித் தன்மைகளையும், நடிகர்களாக இயங்கும் ஆண்கள் பெண்களின் குணக்கேடுகளையும், முரண்பாடுகளையும் யதார்த்தமாக அறிமுகப்படுத்துகின்றன. அநாதை விடுதி நடத்தி, அநாதைப் பிள்ளைகளை ஆதாரமாக்கி, சுயநலத்தோடு - பிள்ளைகளை வஞ்சித்து - பெயரும் பணமும் பெறுபவர்களைக் காட்டும் ‘தேவாரம்’, நல்ல நிலைக்கு உயர்ந்துவிட்ட ‘தம்பி’ ஆபீசரைக் காணச் செல்லும் ஏழை அண்ணனின் பரிதாப நிலையைக் கூறும் ‘அவல்’, மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற அரும்பாடுபடுகிற, அம்மாவின் அவசியத் தேவைகளை கவனிக்க மனம் கொள்ளாத மகன் அமீது பற்றிய ‘தள்ளுபடி’ கதை,

சோப்புத்தூள் விற்கக் கிளம்புகிற அப்பாவிப் பெண்ணின் ஆசைகளையும் அனுபவத்தையும் விவரிக்கிற _ அதேசமயம் அவளை எதிர்கொள்ள நேர்கிற ஒரு வீட்டுக்காரனின் கழிவிரக்கத்தையும் தாராளத்தனத்தையும் சொல்கிற ‘திருப்தி’, ஒரு படைப்பாளியின் அனுபவமும், ஆதரிக்க மனமில்லாத பதிப்பக அறிவாளியின் போக்கும் பற்றிய ‘இலக்கிய சேவை’, அப்பா அம்மா ஆதரவு கிடைக்காமல் போன ஒரு சிறுவன் அண்டை வீட்டு அக்காளின் அன்பை மிகுதியாகப் பெற்று, பின்னர் அதை இழக்க நேரிட்ட நிலையில் வெறிபிடித்தவனாய் மாறிப் போனதைக் காட்டும் ‘ஏர்வாடி’, ஆதியில் ஆசைகாட்டி மகிழ்வித்த பெண், அவளுக்குத் திருமணம் என்றானதும் முந்தியவனின் அன்பை அலட்சியப்படுத்துவதை உணர்த்தும் ‘ஓவியம்’, சாதி - இன - மதவெறியால் துப்பாக்கி ஏந்தி வெறித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளுவோரின் செயலுக்கு பலியாக நேர்ந்த சுகுணாவின் சோகக்கதையான ‘நியாயங்கள்’, பெண் ஆசை கொண்டு கண்டபடி அனுபவித்து அலைந்த ஒருவனின் உள்பயமும் அனுபவங்களும் பற்றிய ‘ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி’,

‘ஊருக்குத்தான் உபதேசம், நமக்கல்ல’ என்ற தன்மையில் வாழ்ந்த ஒருவர் சமூகத்தில் மகானாக உயர்ந்து மதிப்புப் பெற்று விட்டதைக் கூறும் ‘மகான்’, நல்லுபதேசம் கேட்கப் போன இடத்தில் - சத் சங்கத்தில் - தனது செருப்பைப் பறிகொடுத்தவனின் விழிப்பை வெளிப்படுத்தும் ‘சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக’, இப்படியான சுவை நிறைந்த வாழ்க்கைச் சித்திரங்களை செல்வராஜன் எழுதியிருக்கிறார்.

‘காத்திருந்து காத்திருந்து’ தனிரகமான கதை. ஒரு ரயில் நிலையத்தைக் களனாகக் கொண்டு, அங்கு நிகழ்கிற விந்தைச் சிறு நிகழ்வுகளை ரசமாகக் காட்சிப்படுத்துகிறது இக்கதை. ‘யாதும் ஊரே’ என்பதும் மாறுபட்ட ஒரு சிறுகதை. அயல்நாட்டில் குடியேறி அவரவர் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் தன்மைகளையும் சுயநல - சுயலாபச் செயல்முறைகளையும் அம்பலப்படுத்துகிறது இது. பஞ்சாட்சரம் செல்வராஜன் கதைகள் மேலோட்டமான பொழுதுபோக்குக் கதைகள் அல்ல. ஆழ்ந்த உண்மைகளை உணர்த்துகின்ற - வாழ்க்கையின் விதம் விதமான கோணங்களை வெளிச்சப்படுத்துகிற யதார்த்த சித்தரிப்புகள் ஆகும்.

மகாலி என்னும் மகாலிங்கம் - பஞ்சாட்சரம் செல்வராஜன், வெளியீடு : அன்னை சாரதா பதிப்பகம், பக்.176, விலை.ரூ. 75

 

Pin It