‘நாயக்கர் லீலைகள்’ என்று 1949ல் ஒரு புத்தகம் வந்தது, 52 பக்கத்தில். இன்று அது ‘நாகர்கோயி’லுக்கு கிடைத்தால் செம்பதிப்பாக வெளியிடும். மலிவுப் பதிப்பாக வெளியிடும் ‘பாண்டிச்சேரி’.

Periyar“ஸ்ரீ ஈ.வெ. ரா. ஒரு நாள் நிச்சயம் இறைவன் முன் நிறுத்தப்படுவார். அப்போது அவரது கணக்கைச் சித்திரகுப்தன் தேடி எடுக்க வேண்டியதில்லை. இந்நூலை இறைவனிடம் கொடுத்துவிட்டால் அவர் படித்துப் பார்த்து தீர்ப்புச் சொல்லிவிடுவார்’’ என்று பெருமைப்பட்டது அந்தப் பிரசுரம். இதே சரக்கு கொஞ்சமும் மாறாமல் மறுவாசிப்பு கேள்விக்குள்ளாக்குகிறோம், அம்பலப்படுத்துகிறோம் ஆகிய நுண்ணிய சொல்லாடல்களால் பூசி மெழுகப்பட்டு புறப்படுகிறது. பெரியார் ஈ.வெ.ரா, தலித் விரோதி, சுயசாதிப் பற்றாளர், மைனர், சும்மா அதிர்ச்சிக்காக பேசியவர்... போன்ற கண்டுபிடிப்புகள் கட்டுரைகளாக்கப்படுகின்றன.

யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரில்லை. பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட அனைவருக்கும் இது பொருந்தும். இந்த விமர்சனங்கள் என்ன நோக்கத்துக்காக, எப்படிப்பட்ட மனிதர்களால் செய்யப்படுகின்றன என்பதே முக்கியமானது இன்று. சில ஆண்டுகளுக்கு முன், மார்க்சிய அமைப்பினரால், தீவிர லெனினிஸ்ட்டுகளால் பெரியார் விமர்சிக்கப்பட்டார். அதாவது எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி போன்றவர்கள் பெரியாரை காப்பாற்ற வருவதற்கு முன். மார்க்சிஸ்ட்டுகளின் விமர்சனம் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டவை அல்ல என்பதை பெரியாரிஸ்ட்டுகள் நம்பியதால் ஆரோக்கியமான விவாதமாக அது அமைந்திருந்தது. அதனால் சில விளக்கங்கள் வெளிச்சத்துக்கு வராத சில தகவல்கள் வாசிக்கக் கிடைத்தன.

ஆனால், இன்று தலித்திஸ்ட்டுகள் (என்று சொல்லிக் கொள்பவர்கள், அந்த முகமூடி இருந்தால் வசதியென்று நினைப்பவர்கள், மார்க்சிய தீவிர அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாமல் விலகி வேறு பக்கம் திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள்) பெரியார் பற்றி சொல்லும் அவதூறுகளுக்கு எதிர்வினையாக ஈரோடு குறிஞ்சியின் முயற்சியால் கொண்டு வரப்பட்ட தொகுப்பு ‘இந்துத்துவ சூழலில் பெரியாரின் தேவை, மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் ஆகிய மூவரையும் தங்கள் கருத்தோட்டங்களாக, அரசியலாக வரித்துக் கொண்டவர்களின் கட்டுரைத் தொகுதி இது!

“இந்த இழிவு சூத்திரர்கள் என்பவரை எப்படிக் கட்டிக் கொண்டது என்பதை பார்ப்போமாகில் தங்களுக்குக் கீழ் ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் தாழ்மைப்படுத்திய பாவமானது இவர்களைத் தேவடியாள் மகன் என்று இன்னொருவர் கூப்பிடும்படியாக கடவுள் வைத்துவிட்டார்’’ என்று நாயக்கர், தேவர், பிள்ளை சாதிமார்களைப் பார்த்து சபித்த பெரியாரை பிற்படுத்தப்பட்ட சாதியின் பிரதிநிதியாக உருவகப்படுத்த முயல்கிறார்கள். “மதுரையில் சிலபாகம், திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய ஜில்லாக்களிலும் ஜாதிக் கர்வமும் கொடுமையும் தலைசிறந்து விளங்குவது யாவரும் அறிந்ததொன்றாகும். உதாரணமாகப் பார்ப்பனர்களின் கொடுமையோ சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. அதற்கடுத்ததான தெற்கத்திய சைவ வேலாள சமூகத்தாரின் கொடுமையோ பார்ப்பனரல்லாதார் சமூகமே வெட்கப்படத்தக்கதாகும்’’ என்று வெட்கப்பட்ட பெரியாரை தலித் விரோதியாக அர்த்தப்படுத்துவது, சிலரின் விருப்பத்துக்காக வேறு சிலர் செய்யும் சுயஅறிவு விற்பனை.

“தாழ்த்தப்பட்டு கிடந்த மக்களிடையே இப்போது தன்மதிப்பு வளர்ந்திருக்கிறது. சுயமரியாதை என்ற பெயருடனேயே ஓர் இயக்கம் தென்னாட்டில் வேலை செய்து வெற்றி பெற்றுள்ளது. இன்று தீண்டாதார் அடங்கிக் கிடக்கும் மக்களாக இல்லை. உயர் ஜாதிக்காரர் என்பவர்களின் தர்மகர்த்தாதனத்தை அவர்கள் பொறுத்துக்கொள்ள மறுக்கிறார்கள்’’ என்று அருணன் எழுதியிருந்தால் அதை ஏற்க சிலர் மறுக்கலாம். 1945ல் ‘கார்ட்டியன்’ பத்திரிகையில் இப்படி எழுதியவர் ரெலண்ட் சகாயம் என்ற பாதிரியார். அதற்கும் இருபது ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பெரியாரின் ‘குடியரசு’ பத்திரிகை, தமிழ்நாட்டின் எந்த மூலையில் தாழ்த்தப்பட்டோர், பள்ளர், பறையர், அருந்ததியர் மாநாடு நடந்தாலும் அதை இருட்டடிப்பு செய்யாமல் வெளியிட்ட ஒரே பத்திரிகை என்பதை அதன் நைந்து போகாத பக்கங்கள் பெரியார் திடல், அண்ணா அறிவாலய நூலகங்களில் புதைந்து கிடக்கின்றன.

அயோத்திதாசரை பெரியார் மறைத்தாரா, சம காலகட்டத்தில் இருந்த தலித் தலைவர்களை வெறுத்தாரா என்பதை மறுக்க வரலாறு கை கொடுக்கும். அயோத்திதாசரும், பெரியாரும் எதிரெதிர் கொள்கை கொண்டவர்கள், சில ஒற்றுமைகள் இருந்தாலும் கம்பன் - காளமேக ஒப்பீடுகள் இலக்கியத்துக்கு சரியாக இருக்கலாம். சமூக, அரசியலுக்கு சரிப்பட்டு வராது. பெரியாரின் காலகட்டத்தில் இருந்த தலித் தலைவர்கள், அம்பேத்கருக்கு எதிராக கொடி பிடித்தவர்கள். இவர்களை பெரியார் மட்டும் கண்டிக்கவில்லை. அன்று இருந்த தாழ்த்தப்பட்ட அமைப்புகள் பலவும் கண்டித்தன.

அதிர்ச்சிக்காகப் பேசுவது, ஆதாயத்துக்காக தாவுவது பெரியாருக்குத் தேவைப்படவில்லை. “எல்லாத்தையும் பொதுவுடைமை என்கிறீரே... பக்கத்திலிருக்கிற உன் மனைவியை பொதுவுடைமை ஆக்குவீரா?’’ என்று ஒருவர் கேள்வி கேட்டபோது “வந்தால் கூட்டிப்போ’’ என்று சொன்னவர் அவர். அதிர்ச்சிக்காகக் கூட எவனும் இப்படியரு பதிலை சொல்லமாட்டான்.

உள்நோக்கத்துடன் கூடிய, கொச்சைப்படுத்த வேண்டுமென்பதற்காகவே சொல்லப்டும் விமர்சனங்களை மறுப்பதற்காக வந்திருக்கும் புத்தகம் இது. சில கட்டுரைகள் மேலோட்டமானவையாக இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்திருக்கலாம். தீண்டாமை, தாழ்த்தப்பட்டோர் பிரச்சினை தொடர்பாக பெரியாரின் மொத்த நிலைப்பாடுகளும் அச்சில் வருவதுதான், இது போன்றவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு முழுமையான பதிலாக இருக்கும். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் அதற்கான முயற்சியில் பாதியைக் கடந்து விட்டது. தீண்டாமை, சாதி தொடர்பாக பெரியாரின் கருத்துகள் அடங்கிய நான்கு தொகுதிகள் (சுமார் 1000 பக்கங்கள்) சமீபத்தில் வெளிவந்துள்ளன. இதே தலைப்பில் இன்னும் நான்கு தொகுதிகள் வெளிவர இருக்கிறது. ‘தலித் விரோத களங்கம்’ இதன் மூலம் முழுமையாக துடைக்கப்படும்.

பெரியாருக்கு இது போன்ற விமர்சனங்களை வைப்பது ஒரு சிலரே தவிர, அது தலித் மக்களின், தலித் இயக்கங்களின் ஒட்டு மொத்த பணியாக இல்லை என்பதை பெரியாரிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் இன்று அநாகரிகமாக விமர்சிக்கப்படுவதன் உள்நோக்கமே அம்பேத்கரை, தலித்துகளை, பெரியாரிஸ்ட்டுகள் விமர்சிக்க வேண்டும் என்ற சதிதான். அந்த நோக்கத்துக்கு யாரும் பலியாகிவிடக்கூடாது.

இந்துத்துவ சூழல் என்பது தடைகளற்ற நிலையில் மசூதிகளை இடிப்பதன் மூலமாக மட்டுமல்ல இது போன்ற சதிகளாலும் தான் உருவாக்கப்படுகிறது. இதனாலேயே பெரியாரின் தேவை மிகுதியாகிறது.

இந்துத்துவ சூழலில் பெரியாரின் தேவை, தொகுப்பாசிரியர் : கண. குறிஞ்சி, வெளியீடு : புதுமலர் பதிப்பகம், விலை : ரூ 50.

நன்றி: புத்தகம் பேசுகிறது

Pin It