வாசகனின் இதயத்தில் இலக்கியம் தோற்றுவிக்கும் ஈரம் தமிழகத்தின் மழைக்காலம் தோற்றுவிக்கும் ஈரம் போல தற்காலிகமானது. இதயத்தின் ஈரத்தை வற்றாமல் நீடிக்கச் செய்வது எது?

2002 புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் இதழில் மதுரையைச் சேர்ந்த தோழர் சாக்ரடீஸ் எழுதிய வாசகர் கடிதம் வெளியாகியிருந்தது. புதிய கலாச்சாரத்தில் நூலறிமுகம் பகுதி தொடர்ந்து இடம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்திய அந்தத் தோழர் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் போது,

“.... அரசியல் புத்தகம் படிப்பதற்குத்தான் தோழர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். எனக்கென்னவோ அரசியலும் இலக்கியமும் இரண்டு தண்டவாளங்கள். ஒன்றுக்கொன்று இணையாகச் சென்றால்தான் நாம் நம்மை வறண்டு போகாமல் இருக்கச் செய்ய முடியும். துன்பப்படுகிற மக்களைப் பார்த்து ஏதாவது செய்தாக வேண்டும் என ஈரத்தோடு உள்ளே வருகிறவர்கள், எல்லாவற்றிற்கும் அறிவு ரீதியான விளக்கங்கள் அறிந்து கொண்ட பிறகு நெஞ்சில் இருந்த ஈரம் வற்றி விடுகின்றது. இந்த ஈரம் வற்றாமல் பாதுகாப்பது என்னைப் பொறுத்தவரையில் இலக்கியங்கள்தான்...” என்று குறிப்பிட்டிருந்தார்.

புரட்சிகர அமைப்பிற்குள் புதிதாக வரும் தோழர்களிடம் இருக்கும் இரக்க உணர்வு, அறிவுரீதியான அரசியல் விளக்கத்தைத் தெரிந்து கொண்ட பிறகு மங்கி விடுகிறது; அப்படி மங்காமல் தங்குவதற்கு அரசியலுக்கு இணையாக இலக்கியமும் அவசியம் என்கிறார் இந்த வாசகர். அரசியலின் அறிவு, இலக்கியத்தின் உணர்வு இரண்டோடும் உறவு கொள்ளும் புதிய தோழர்களைப் பற்றிய இம்மதிப்பீடு தவறாக இருக்கின்றது. மேலும், அரசியல், மார்க்சியம், கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் உருவாக்கியிருக்கும் பொது உளவியலும், அரசியல்வாதிகள் இரக்கமற்றவர்கள், இலக்கியவாதிகள் ஈரமிக்கவர்கள் என்பதையே அடிப்படையாக வைத்து இயங்குகிறது. இத்தகைய இலக்கியவாதிகளைத்தான் போலி கம்யூனிஸ்டுகள் ஆரத் தழுவி அங்கீகரிக்கின்றனர். அந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்கென்றே த.மு.எ.ச. போன்ற அரட்டை மடங்களை நடத்துகின்றனர். இலக்கியத்தின் அற்பவாதிகளும், கம்யூனிசத்தின் போலிகளும் ஒருவரையொருவர் பற்றி நிற்பதில் முரண்பாடு ஏதுமில்லை.

ஆனால் புரட்சியை நேசிக்கும் புதிய தோழர்கள் இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ள ஒரு கம்யூனிஸ்டாக மாறுவது குறித்த ஆழ்ந்த பரிசீலனையைத்தான் முதலில் கற்க வேண்டும். வாழ்வில் முதன்முதலாக மார்க்சியத்தைக் கற்கும் இவர்கள் அறிவுரீதியாகப் பெறும் விளக்கம்தான் என்ன?

ஆரம்பமே அவர்களது பழைய அறிவு அழிவதுதான். உலகம், சமூகம், அரசு, பண்பாடு, குடும்பம் அனைத்தும் புதிய பொருளுடன் தென்பட ஆரம்பிக்கின்றன. இவைகள் பற்றிய புதிர்களுக்கு விடை தராத பழைய உலகக் கண்ணோட்டம் உதிர்ந்து போகிறது. விடை தரும் புதிய கண்ணோட்டம் பழைய உலகின் உணர்ச்சிகளை அழிப்பதிலும் தவறுவதில்லை. ஆம். கட்சிக்குள் வரும் புதியவர்கள் தங்களிடமிருக்கும் ‘ஈரத்தையும், உணர்வையும்’ வெட்டி எறிகிறார்கள். காரணம் அவை புதிய உலகிற்குத் தேவைப்படாத, சுயநலத்திலிருந்து எழும் அற்பவாத மிகையுணர்ச்சிகள்.

இதை எப்படிப் புரிந்து கொள்வது? உயிரின் இயக்கத்தையும் அது நின்று போவதையும் மருத்துவ அறிவியலாகக் கற்றுத் தேறும் ஒரு மருத்துவர் அவரது மனைவி இறந்து போனால் வருந்துவாரா? வருந்துவார். உயிரின் அறிவுரீதியான விளக்கத்தைக் கற்றதனாலேயே அவர் வருந்தாமல் இருக்க மாட்டார். காரணம் அவரது மனைவியுடன் நெருக்கமான ஒரு வாழ்க்கை உறவு உள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத தருமபுரியின் கூலி விவசாயி, எலிக்கறி சாப்பிடும் தஞ்சையின் கூலி விவசாயிகளைக் கேள்விப்பட்டாலே வருத்தப்படுவார். இவருக்கு அறிவு ரீதியான விளக்கமோ, இதயத்தைத் தொடும் இலக்கியமோ தேவைப்படுவதில்லை. காரணம் கூலி விவசாயியாகச் சமூகத்தில் கொண்டிருக்கும் உறவு அந்தத் துயரத்தை எந்தப் பீடிகையுமில்லாமலேயே உணர்த்தி விடுகிறது.

இப்படிச் சமூகத்திலிருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு அரசியல் கல்வியின்றியே, அறிவு விளக்கமின்றியே சக மனிதனை நேசிக்கும் உணர்வு ஏதோ ஒரு வகையில் இருக்கத்தான் செய்கிறது. இதில் சுயநலம் சார்ந்த உறவு (குடும்பம், உறவினர்) பொருளாதார அடிப்படையிலிருப்பதால் நீடிக்கின்றது. அத்தகைய அடிப்படை ஏதுமற்ற பொதுநலம் சார்ந்த உணர்வு (இலக்கியம் மட்டும் படிப்பவர்களையும் உள்ளிட்டு) வெறும் அனுதாபம் என்ற அளவிலே விரைவில் நீர்த்தும் போகிறது. அரசியல் கல்வி நடைமுறையற்ற சகல பிரிவினருக்கும் இதைத் தவிர்த்த உணர்வு ஏதும் கிடையாது.

ஆனால் ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்க்கையைத் துவக்கும் ஒருவர் இந்த இரண்டு அளவுகோல்களிலிருந்தும் வேறுபடுகிறார். இங்கே சுயநலம் சார்ந்த உணர்வு அழிவதையும், பொதுநலம் சார்ந்த உணர்வு திட்டமிட்டு முகிழ்வதையும் பார்க்க முடியும்.

வெளிநாடு சென்று பொருளீட்டுவான் என்பதற்காக, சில வருடங்கள் தன் மகனைப் பிரிந்து வாழச் சம்மதிக்கும் ஒரு தாய், அதே மகன் புரட்சிகர அமைப்பில் பணியாற்றுவதை விரும்புவதில்லை. அழுது அரற்றி அனுமதி மறுக்கும் அந்தத் தாயுடனான பழைய பாசம் இனியும் நீடிக்க முடியாது. உடன் பிறந்தோரை வரதட்சணை, சடங்கு, சாதி எனப் பிற்போக்குச் சங்கிலியுடன் மணம் செய்து கொடுக்கும் தந்தையுடன், கண்டிப்புடன் கூடிய அந்தப் பழைய மரியாதையை இனிமேலும் கொடுக்க முடியாது. பழைய அந்தஸ்தின் மூலம் கிடைத்த நண்பர்கள், கம்யூனிஸ்டு என்ற இந்தப் புதிய தகுதியை விரும்பாத போது அந்த நட்பு எப்படி நீடிக்க முடியும்? கந்து வட்டிக்கு விடும் தாய் மாமனேயானாலும் இனியும் ஒட்டி உறவாட முடியாது. பழைய வாழ்க்கை வழங்கியிருக்கும் இத்தகைய அன்பு, பாசம், நட்பு போன்ற உணர்ச்சிகளெல்லாம் புதிய வாழ்வின் செயலூக்கத்தில் நிச்சயம் வறண்டு போகும்.

அதேபோன்று முதல் வாழ்க்கையில் தோன்றியும் புரிந்துமிராத உணர்ச்சிகளெல்லாம் இந்த இரண்டாம் வாழ்க்கையில் புதிது புதிதாய்ப் பிறந்து வளரும். இன்று தாழ்த்தப்பட்டோருக்காகப் போராடும் ஒரு தோழர், அவர் தேவராக வாழ்ந்த நாட்களில் இதைக் கனவிலும் கருதியிருக்க மாட்டார். அதிகார வர்க்கத்தையும், காக்கிச் சட்டையையும் தைரியமாக எதிர்த்துப் போராடும் ஒரு தோழர், அவர் கூலி விவசாயியாக மட்டும் வாழ்ந்த காலத்தில் இவையெல்லாம் இயற்கைக்கு மாறானது என்றே நம்பியிருப்பார். மனைவியுடன் ஜனநாயக முறைப்படி வாழும் ஒரு தோழர் அவர் ஆணாதிக்கவாதியாக ஆட்சி நடத்திய நாட்களை நினைத்து இப்போது வெட்கப்படுவார். சிறைவாசம் அனுபவித்திருக்கும் பெண் தோழருக்கு அவரது பழைய அடிமைத்தன வாழ்க்கையிலிருந்து வெளியேறிய போராட்டம் இப்போதும் நம்பிக்கையளிக்கும்.

இப்படிச் சமூக வாழ்க்கையில் பழைய உணர்வுகள் நீர்த்துப் போய் புதிய உணர்வுகள் மலருகின்றன. கூடவே அரசியல் அரங்கிலும் புதிய கடமைகளுக்கேற்ற உணர்வுகள் பிறக்கின்றன. கம்யூனிசத்தை அறிவியல் ரீதியாகக் கற்பதன் மூலம் புரட்சி சமூக மாற்றம் பற்றிய எளிமைப்படுத்தப்பட்ட சித்திரங்கள் மறைகின்றன. ராபின்ஹ_ட் பாணியிலான சாகசம், புரட்சி என்பது ஒரு ரம்மியமான மாலை நேர விருந்து போன்ற ‘ரொமாண்டிக்’ கற்பனைகள் விரைவிலேயே வெட்கத்துடன் விடை பெறுகின்றன. அதனால்தான் துன்பப்படுகின்ற மக்களைப் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற இரக்க உணர்ச்சி மறைந்து இன்னதுதான் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்ச்சி பிறக்கின்றது. ஏழைகளைப் பார்த்து வெறுமனே இரக்கப்படும் பழைய உலகின் இலக்கியங்களும், திரைப்படங்களும் இனிமேலும் புதிய தோழர்களை உணர்ச்சிவசப்படுத்துவதில்லை. தன்னுடைய இயலாமை அற்பவாதத்தையே தியாகமாக நினைக்கும் ‘அழகி’யின் சண்முகமோ, இந்து மதவெறியை மறைப்பதற்காகச் சோகங்கொள்ளும் ‘பம்பாயின்’ காதலர்களோ, ஒரு மாபெரும் வரலாற்றுக் காலத்தைத் தன்னுடைய நடுத்தர வர்க்கத்தின் குடும்பக் கண்ணோட்டத்தில் பார்க்கும் சாகேத ராமனின் (ஹேராம் திரைப்படம்) வேதனையோ நமது இதயத்திற்குள் இறங்குவதில்லை.

நம்மைத் தவிர முழு உலகமும் இத்தகைய காவியத் திரைப்படங்களின் கண்ணீரில் முழுகியபோது இந்த மிகையுணர்ச்சிக் கண்ணீரின் கிளிசரின் மோசடியை அகற்றிவிட்டு உண்மையான கண்களையும் கண்ணீரையும் நமக்கு உணர்த்தியது நாம் கற்றுக் கொண்ட கம்யூனிச அரசியல்தான்.

எனவே அரசியல் அறிவு உங்களின் பழைய உணர்ச்சிகளைக் காவு கொள்வதில் கண்டிப்புடன் நடந்து கொள்கிறது; கூடவே புதிய உணர்ச்சிகளை உருவாக்க இடையறாது போராடுகிறது. புதிய தோழர்கள் பெறும் அறிவு விளக்கத்திற்கும், அது அழித்து உருவாக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையிலான இயங்கியல் உறவு இப்படித்தான் இருக்கிறது. ஆதலால் அரசியல் அறிவு உணர்ச்சியை வற்ற வைப்பதில்லை; உண்மையான ஊற்றைத் தோண்டிச் சுரக்க வைக்கின்றது; கண்ணீர்க் குளமாக்குகிறது; இதுவரையிலும் அழாதவற்றுக்கும் அழவைக்கிறது.

ஆயினும் இந்த உண்மையான உணர்ச்சி அவ்வளவு சீக்கிரம் ஏற்பட்டுவிடுவதில்லை. இதையே “எல்லாவற்றிற்கும் விளக்கங்கள் அறிவுரீதியாக அறிந்து கொண்ட பிறகு நெஞ்சிலிருந்த ஈரம் வற்றி விடுகின்றது” என்று வாசகர் சாக்ரடீஸ் தவறாகக் குறிப்பிடுகிறார். நீக்கமற நிரவியிருக்கும் பிற்போக்கான வாழ்க்கை மதிப்பீடுகளிலிருந்து வரும் ஒரு நபர், ஒரு தோழராக மாறுவதில் பல்வேறு சிக்கல்களைக் கடக்க வேண்டியிருக்கிறது.

முதலில் புதிய தோழர்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அறிவுரீதியான விளக்கங்களை அறிந்து கொள்வதில்லை; அது சாத்தியமுமில்லை. “முன்னரே தயாரிக்கப்பட்ட முடிவுகள் முழக்கங்கள் உதவியுடன் மார்க்சியத்தை அளவுக்கு மீறி எளிமைப்படுத்திக் கற்பதற்கு” எதிராக லெனின் எப்போதும் எச்சரிக்கை செய்தார். நாம் கற்கும் முதல் விசயமே நமது பழைய உலகக் கண்ணோட்டம் தவறு என்பதைத்தான். அதனாலேயே நாம் உருவாக்க விரும்பும் புதிய உலகைப் பற்றிய கண்ணோட்டத்தைக் கற்று விட்டோம் என்பதல்ல. அதற்கு அரசியல் அறிவு மட்டும் போதுமானதல்ல் செயலூக்கம் நிறைந்த நடைமுறைப் போராட்டம் தேவை. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், சமூகத்தை ஆய்வு செய்து வினையாற்றுவதற்கு நம்மிடம் அளிக்கப்பட்ட மிகச் சிறந்த வாளே மார்க்சிய லெனினிய ஆய்வு முறையாகும்; ஆயினும் அந்த வாளைத் திறமையாகச் சுழற்றக் கற்றுக் கொள்வதில்தான் அதன் பலம் உறைந்திருக்கிறதே ஒழிய உறையில் போட்டு வைத்திருப்பதனால் அல்ல.

வெளிஉலகில் நாம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் அக உலகில் நாம் வரைந்து வைத்திருக்கும் புரட்சியுடன் இணைப்பது பற்றிய பிரச்சினை, கேள்வி, ஆய்வு, போராட்டங்கள் ஒரு கம்யூனிஸ்ட கட்சி உயிர் வாழ்வதன் அடிப்படையாகும். இதிலிருந்து மாறுபடுகிறவர்களையே போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கிறோம். மேலும் கட்சியில் புதிதாக வரும் தோழர்களும் தங்களை இறுதி வரை கம்யூனிஸ்டாக வைத்திருப்பதன் பொருளும் மேற்கண்ட பிரச்சினையையும் போராட்டத்தையும் இறுதிவரை செய்வது என்பதே.

முக்கியமாக, இந்தப் போராட்டத்தில்தான் அவர்களது பழைய வர்க்கக் கழிவுகள் நீக்கப்பட்டு மறுவார்ப்பு செய்யப்படுகிறார்கள். அது ‘நானேதான்’ என்று உறுதியான அகந்தையை அழிக்கிறது; சக தோழர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் வரும் விமர்சனங்களைக் கண்டு அஞ்சும் கோழைத்தனத்தை ஒழிக்கிறது; தனது தவறுகளைத் தானே கண்டுபிடித்து ஏற்கும் வீரத்தைக் கொடுக்கிறது; கற்றுக் கொள்வதில் பணிவையும், கற்றுக் கொடுப்பதில் பொறுமையையும் உருவாக்குகிறது; அடக்குமுறைக்குப் பணியாத கம்பீரத்தைத் தருகிறது; மக்களுடன் இரண்டறக் கலக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.

இவையெல்லாம் ஓரிரு வாரங்களிலோ, மாதங்களிலோ, வருடங்களிலோ கற்றுக் கொள்ளும் பாடமல்ல. சாகும் வரையிலும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டிய புரட்சியின் கடினமான பாடம். ஏனெனில் புரட்சியை நேசித்துக் கட்சியால் ஈர்க்கப்படும் தோழர்கள் உழைக்கும் மக்களையும் அப்படி ஈர்க்கின்ற வேலையே அவர்களது அரசியல் வேலையின் சாரமாக இருக்கின்றது.

கள்ளங்கபடமற்ற கூலி விவசாயிகளோ, அரசியல் அறியாமையிலிருக்கும் தொழிலாளிகளோ, கருத்தாதரவும் செயலின்மையும் ஒருங்கே கொண்ட நடுத்தர மக்களோ, புத்தம் புது மலர்களாக இருக்கும் மாணவர்களோ இத்தகைய மக்கட் பிரிவினரிடம் சென்று, ஒன்றி, வாழ்ந்து, கேட்டு, கற்று, இறுதியில் வென்று காட்டும் அந்த பாடம்தான் புதியவர்களைக் கம்யூனிஸ்ட்டாக மாற்றிக் காட்டும். பழைய உலகின் உணர்ச்சிகள் சூழ வாழும் புதிய தோழர்கள் இந்தப் பாதையின் செங்குத்துச் சரிவில் களைப்படைவதும், சோர்வடைவதும் உண்டு. ஆரம்பத்தில் அவர்களிடமிருக்கும் உற்சாகமும், துடிப்பும், உணர்வும் இடையில் சற்று வறண்டு போவதன் காரணம் இதுதான். ஆயினும் இறுதியில் சிகரத்தின் உச்சியைத் தொடுவோம் என்பதால் இடையில் வரும் இந்தத் தடங்கல்களுக்கு அயர வேண்டியதில்லை. மீண்டும் மீண்டும் நடைமுறையில் ஈடுபட வேண்டும். இதைத் தவிர நமது இதயம் ஈரத்தைத் தக்கவைப்பதற்கு வேறு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை.

ஆகவே, இலக்கியம் ஏதும் தேவையில்லை என்கிறோமா? இல்லை. இன்றிருக்கும் பெரும்பான்மை கலை இலக்கியங்கள் பழைய உலகின் உணர்ச்சிகளோடு கட்டுண்டு கிடப்பவையே. நமது புதிய உலகின் உணர்ச்சிகளுக்கு உற்சாகமளிக்கும் இலக்கியங்கள் குறைவுதான். இருப்பினும் கிடைக்கும் எதனையும் படியுங்கள். அவை பழைய உலகம் பற்றிய உங்களின் விமர்சனப் பார்வையைக் கூர்மைப்படுத்த நிச்சயம் பயன்படும். அதுவும் உங்களின் அரசியல் கல்வி போராட்ட நடைமுறையின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமைய முடியும்.

ஆம். இலக்கியங்களிலிருந்து உணர்வும், உற்சாகமும் தன்னியல்பாய்ப் பிறக்க முடியாது. பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது.

புதிய கலாச்சாரம் ஆசிரியர் குழு
செப்டம்பர், 2000

நன்றி: புதிய கலாச்சாரம்
இப்புத்தகம் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
16, முல்லை நகர் வணிக வளாகம் 2வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 83,
விலை: ரூ.60

Pin It