தமிழ் இனத்தின் வரலாறும், அவ்வினத்தின் இலக்கிய வரலாறும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. நீண்ட தொன்மையான பெருமை வாய்ந்தவை. எனினும் இவ்விரண்டும் ஒரு மரத்தின் இரு விழுதுகள் என வரலாற்றறிஞர்கள் அண்மைக்காலம் வரை ஒப்புக்கொள்ளவில்லை.

இலக்கியக்கற்பனைகளும் புனைவுகளும் கலந்த கலவையாதலால் சங்க இலக்கியம் கூறும் வரலாற்றுச் செய்திகளை அப்படியே ஏற்க முடியாதென வரலாற்றியலாளர் மறுப்பு தெரிவித்து வந்தனர். கல்வெட்டு, அகழாய்வுச் சான்றுகளே முக்கியமானவை என்றனர். சான்றோர் இலக்கியம் என நூற்றாண்டுகளாகப் போற்றப்பட்ட செந்நாப்புலவர் வாய்மொழி கூடக் கவிஞர்களின் உயர்வு நவிற்சியாக இருக்கலாம் என்றே வரலாற்றுலகம் புறக்கணித்து வந்தது.

இச்சூழலில் சங்க இலக்கியத்தில் தமிழினத்தின் மூல வேர்களை அடையாளம் காணும் முயற்சியில் முன் தலைமுறைகளில் வி.கனகசபைப் பிள்ளை, பி.டி. சீனிவாச ஐயங்கார், கே.என்.சிவராசப்பிள்ளை, கமீல் சுவலபில் எனப் பலர் ஈடுபட்டனர். இவர்களைச் சங்க கால வரலாற்றை மீட்டுருச் செய்ய முயன்ற முன்னோடிகள் எனப் பெருமிதத்தோடு கருதலாம்.

kaniyan balan book pazhanthamizh samuthayamum varalarumஐராவதன் மகாதேவன், வி.ஐ. சுப்பிரமணியம், கா.சிவத்தம்பி ஆகியோரின் ஆய்வுகள் சங்க கால எல்லையை கி.மு. 3ஆம் அல்லது 2ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்ல உதவும் தரவுகளாக உள்ளன. ஆனால் கணியன் பாலனின் கூர்ந்த பார்வைகளாலும் ஆழ்ந்த புதுநெறி ஆய்வுகளாலும் கண்டறிந்த பின்வரும் காலக்கணக்கு புதிய கணிப்புகளுக்கு இடம் தருவதாக அமைகிறது.

தொடக்க இலக்கிய காலம் : கி.மு. 750 முதல் கி.மு. 550 வரை.

சங்க செவ்வியல் காலம் : கி.மு. 550 முதல் கி.மு. 50 வரை.

மொத்த சங்ககாலம் : கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை.

இக்கால வரையறையைக் கண்டறிய மிகப் பெரும் உழைப்பை மேற்கொண்ட கணியன் பாலனின் பங்களிப்பு வெறும் ஊகங்களின் அடிப்படையில் அமைந்ததல்ல. அறிவியல் அடிப்படைகளில் நிகழ்த்தப்பட்ட சீரிய ஆய்வு. இந்த நூல எழுதப்பட்ட போது பயன்பட்ட சான்றுகளைக் கடந்து கீழடி அகழாய்வு இந்த ஆய்வின் பாதை மிகச் சரியானது என்று மெய்ப்பித்து விட்டது. இது இந்த நூலின் வெற்றி.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை கால்டுவல் வெளியிடப்பட்டபோது எப்படித் தமிழர் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டதோ அது போல, பாரதியாரின் பாஞ்சாலி சபதம் வெளிவந்த போது எப்படிக் கவிதை இலக்கியத்தில் ஒரு புதிய களம் தோன்றியதோ அது போல தமிழர் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கும் நூல் கணியன் பாலனின் இந்நூல். இந்நூலை வரலாறு என்று சொல்வதை விட வரலாறு படைத்த வரலாறு என்று சொல்வதுதான் பொருந்தமாக இருக்கும்.

தமிழ்ப்பேராசிரியர்கள் எப்படி ஒரு ஆய்வைச் செய்யவேண்டும் எப்படி ஒரு உழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு முன் மாதிரியாக அமைந்திருக்கக் கூடிய நூல் இந்நூல். நமது பண்டைய வரலாறு குறித்த கணியன் பாலனின் இந்நூலை உரிய காலத்தில் வந்த ஒரு கருவூலம் என்று நான் கருதுகிறேன்.

தமிழர்களுடைய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கு ஏற்றவாறு கீழடி அகழாய்வும், கா. இராசன் அவர்கள் நிகழ்த்திய பொருந்தல் ஆகழாய்வும், பேராசிரியர் புலவர் இராசு அவர்கள் முன்னின்று தொடங்கிய கொடுமணல் அகழாய்வும் அமைந்துள்ளன. தமிழர் வரலாற்றுக்கு ஒரு புதிய வடிவம் கொடுக்கும் வகையில் இந்த அகழாய்வுகள் தரும் தரவுகள் இருக்கின்றன.

நாணயம் அச்சிடும் கலை தமிழர்களுக்குத் தெரியாது என்று கருதிய வரலாற்று ஆசிரியர்கள் பலர் இருந்தார்கள். பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும் நாணயம் வெளியிட்டது உண்டு . ஆனால் சங்க காலத்தில் நாணயங்கள் வெளியிடப்படவில்லை, கிரேக்கர்களும் உரோமானியர்களும் வெளியிட்ட நாணயக் குவியல்கள்தான் இங்கு இருக்கிறது என்ற கருத்து இருந்து வந்தது. ஆனால் அண்மைக் காலத்தில் பெருவழுதி நாணயங்கள் என்றும், மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள் என்றும் கொற்கைப் பாண்டியர் நாணயங்கள் என்றும் பல்வேறு நாணயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

நம்முடைய கரூரில் ஓடுகிற ஆன்பொருநை ஆறு தோண்டத் தோண்டப் புதிய புதிய நாணயங்களைத் தந்து கொண்டே இருக்கிறது. நாம் எல்லாத் துறைகளிலும் வல்லவராக இருந்தோம் எனச் சொல்லக்கூடிய வகையில் தினமலர் ஆசிரியர் இரா. கிருசுணமூர்த்தி அவர்கள் அருமையான பல நாணயத் தொகுதிகளை கண்டெடுத்து நமக்கு வழங்கியுள்ளார். எனவே நாணயவியல் ஒரு புதிய களமாக இருக்க, அகழாய்வு இன்னொரு களமாக இருக்க நம்முடைய வரலாற்றிலே புதிய புதிய திறப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு காலத்தில் நம்முடைய கணியன்பாலன் அவர்களின் இந்த நூல் தமிழக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.

சங்க இலக்கியம் குறித்து ஆய்வு செய்தவர்கள் கூறியதை வேடிக்கையாகக் கருதியவர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவர் இடதுசாரிகளால் கொண்டாடப்படும் புகழ்பெற்ற வரலாற்று ஆராய்ச்சியாளர் கோசாம்பி அவர்கள். சங்க இலக்கியத்தில் இருப்பவை கற்பனை எனக் கூறும் அவரை மறுத்து, சங்க இலக்கியத்தில் எப்படி வரலாற்று ஆதாரங்கள் புதைந்து கிடக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.

2016இல் தமிழ்நாடு வேதங்களின் நாடு என்ற ஒரு நூலை டாக்டர் நாகசாமி எழுதியுள்ளார். அதில் தமிழ் நாட்டின் வரலாறு தொடங்கிய காலம் முதல் அது ஒரு வேத மரபைப் பின்பற்றிய நாடாக இருந்து வந்துள்ளது என அவர் கூறுகிறார். அவரின் இது போன்ற பொருந்தாக் கருத்துக்களைச் சான்றுகளோடு மறுக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.

தமிழுக்கும் தமிழருக்கும் இன்று பல்வேறு வகையான ஆபத்துகள் சூழ்ந்துள்ளன. இன்று இவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான வாளாகாவும் கேடயமாகவும் கணியன் பாலனின் நூல் அமைந்துள்ளது. இந்த நூலை நாள் ஒரு பக்கம் என தமிழர்கள் அனைவரும் படிக்கவேண்டும். இந்நூல் நமது வரலாற்றை நமது பண்பாட்டை எடுத்துக் காட்டக்கூடிய ஒரு அரிய நூல்.

பல புதிய செய்திகள் இந்த நூலில் இருக்கின்றன. அலெக்சாண்டர் வரலாற்றிலிருந்து இந்நூல் தொடங்குகிறது. சங்ககாலத்தில் வைதீகம் இருந்தாலும் அதைவிட வலிமையாக ஆசிவகம், சாங்கியம், உலகாயதம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் கொள்கைகள் இருந்தன எனவும் கடவுள் மறுப்புக் கொள்கை சங்ககாலத்தில் மேலோங்கி இருந்தது எனவும் கணியன் பாலன் நிலை நாட்டுகிறார்.

தமிழக வரலாற்றின் காலவரிசையை கணியன்பாலன் அற்புதமாக நிர்ணயம் செய்துள்ளார். Chronology of Early Tamils என்ற நூலை சிவராசப்பிள்ளை எழுதியுள்ளார். அவர் ஒரு உறுதியான அசைக்க முடியாத ஒரு திறனாய்வாளராக இருந்தவர். அவரது வாரிசாக அவரது பாரம்பரியத்தில் கணியன்பாலன் வந்திருப்பதைப் பார்க்கிறோம்.

மறுக்க வேண்டிய இடத்தில் கண்ணியமாக கணியன்பாலன் மறுக்கிறார். கைலாசபதி மிகச்சிறந்த திறனாய்வாளர். அவர் சங்ககாலத்தை வீர யுகம் எனக் கூறியுள்ளார். சங்க இலக்கிய காலம் வீரயுகம் அல்ல எனச் சான்றாதாரங்களோடு மறுக்கிறார் கணியன் பாலன். பலர் தமிழகத்தில் இனக்குழுக்களின் ஆட்சி இருந்ததாகச் சொல்லியதை வன்மையாக மறுத்து அது இனக்குழு ஆட்சி அல்ல என்கிறார். இனக் குழுக்களின் எச்சங்கள் இருந்தனவே ஒழிய இனக்குழு ஆட்சி இருக்கவில்லை என அவர் தக்க சான்றுகளோடு கூறுகிறார். இப்படி எத்தனை எத்தனையோ செய்திகளை அவர் சொல்லியுள்ளார்.

தமிழர்களிடையே ஒற்றுமை இருந்ததில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. மூவேந்தர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது உண்மை. ஆனால் அந்நியர்கள் வரும்பொழுது அனைவரும் ஒன்று திரண்டு ஐக்கியமாக இருந்து தமிழகத்தைப் பாதுகாத்தார்கள் என கணியன் பாலன் தக்க சான்றுகளோடு நிறுவுகிறார்,

வரலாற்று நூல்களை வடக்கில் இருப்பவர்களோ அல்லது ஆங்கிலேயர்களோ தான் எழுதுவார்கள் என்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் நம்மிடையே உன்னதமான, நம்முடைய வரலாற்றைப் புரட்டிப் போடுகிற அளவு சாதனை படைத்த வரலாற்று நூல்கள் உருவாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அதற்குக் கணியன் பாலனின் இந்த ஒற்றைப் பெரு நூல் ஒரு உறுதியான சான்றாக விளங்குகிறது.

வரலாற்றுக் களஞ்சியம் என்று சொல்லும் அளவு இந்நூலில் நிறையத் தரவுகள் உள்ளன. இந்நூல் தமிழக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு முன் மாதிரியான படைப்பு. இந்நூல் தமிழர்களுடைய பழமையைச் சான்றுகளோடு நிறுவுகிற ஒரு அரிய ஆவணம்.

ஒரு வரலாற்று ஆய்வு நூல் என்ற வகையில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்’ இப்போது இரண்டாம் பதிப்பாக வெளி வருவதும், ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு சுருக்கப் பதிப்பு உருவாகி வருவதும் தமிழின் தொன்மையை நிறுவவும், பண்டைய வரலாற்றை நிலை நாட்டவும் மிகப் பெரும் உந்து சக்திகளாக விளங்கும் என்பது என் நம்பிக்கை.

கணியன் பாலன் சங்க இலக்கியத்தை மையமாக வைத்து ஆய்வு செய்தாலும் அகழ்வாய்வு, கல்வெட்டுகள், நாணயங்கள் எனப் பன்முகங்களிலும் கிளை விரிக்கிறார். மிக முக்கியமான பல முடிவுகளை இந்நூல் முன் வைக்கிறது.

தொல்கபிலர் காலம் கி.மு. 750 என முடிவு செய்து அதனையே சங்க இலக்கியத்தின் தொடக்க காலம் என நிறுவுகிறார். முத்தொள்ளாயிரம் சேரன் குட்டுவன் கோதை, சோழன் நலங்கிள்ளி, பாண்டியன் மாறன் வழுதி என மன்னர் மூவரைப் பாடியிருப்பதால் அவர்கள் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு ஆகலாம் எனும் கருதுகோளை முன் வைக்கிறார். சுங்க வம்சத்தாரின் உச்சயினி மீது படையெடுத்தது சாதவாகனர் அல்ல என்றும் சோழன் நலங்கிள்ளியே என்றும் கருதுகிறார்.

சங்க காலம் அரசு உருவாகி விட்ட காலம் என்றும் அவை நகர அரசுகளாக (City States) வடிவெடுத்துப் பலகாலம் இருந்த பின்னரே, பேரரசுகளின் ஆட்சி பிறந்தது என்றும் கருதுகிறார். மிக முக்கியமாக தமிழகத்தின் மீது மவுரியர் படையெடுத்ததையும் அப்படையெடுப்பை தமிழரசர் கூட்டணி முறியடித்ததையும் கணியன் பாலன் சுட்டிக் கூறுவது மிகவும் கவனம் கொள்ளத்தக்கது..

இரண்டாம் பதிப்பில் சங்க காலத்துச் சமகால நாகரிகங்களான சுமேரிய, எகிப்திய, பொனிசிய, கிரீட், கிரேக்க, உரோம, சீன, சப்பானிய, கொரிய நாகரிகங்களின் வரலாற்றை விளக்கித் தமிழ் நாகரிகத்தின் பழமையை அவற்றோடு இணைக்கும் குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

தமிழ் எழுத்தின் பழமையை, பொருந்தல் ஆய்வில் கண்ட தமிழி எழுத்துகளால் எடுத்துக் காட்டி கி.மு. 5ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் எழுத்து வளர்ந்து விட்ட நிலையைச் சுட்டிக்காட்டுகிறார். வடமொழி கி.பி. 2ஆம் நூற்றாண்டில்தான் எழுத்து வடிவம் பெற்றது என்பதையும் முதல்நிலைத் தமிழி எழுத்துகளின் தொடக்க காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பதையும் தெளிவுபடுத்துகிறார் கணியன் பாலன்.

திரை கடலோடித் திரவியம் தேடிய தமிழரின் பெரும் கப்பல் கட்டும் திறனுக்கு அகம் 255ஆம் பாடலையும் பெரிப்ளசின் கூற்றையும் சான்று காட்டுகிறார்.

கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் தமிழர் நாணயங்கள் கிடைத்ததையும், பின்னர் உரோமானிய நாணயங்கள் குவியல் குவியலாகக் கிடைத்ததையும், வணிக வளம், கடல் வணிகம் முதலியவற்றுக்குச் சிறப்பான சான்றுகளாக முன் வைக்கிறார்.

இரும்பு, எஃகு உற்பத்தி, கல்மணிகள் தயாரிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பழந்தமிழர் வரலாற்றோடு இணைத்துக் காட்டுகிறார்.

கணம் என்ற குல உறவு மாறி நில அடிப்படையில் திணைப் பாகுபாடு சங்க காலத்தில் வளர்ந்து விட்டதை நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். தொடர்ந்து அரசு உருவாக்கம் எவ்வாறு வளர்ந்தது என்பதை மிகக் கூர்மையாக ஆய்வு செய்திருக்கிறார். பேரரசுகளைவிட நகர அரசுகளில் திகழ்ந்த சுய சிந்தனை, பொருள்முதல்வாத மெய்யியல் என்பவனவற்றைக் கணியன் பாலன் தெளிந்த நீரோடை போல் சொல்லிச் செல்லும் போது நம் வரலாற்றின் வைகறை குறித்துப் பெருமிதம் உண்டாகிறது.

மிக முக்கியமான ஒரு அரச மரபை நுட்பமாக இந்நூல் முன் வைக்கிறது. வேந்தர் மரபில் காணப்பட்ட ஓர் உண்மை தெளிவு படுத்தப்படுகிறது .தந்தைக்குப் பிறகு மூத்த மகன் என்ற தாயமுறையில் தமிழரசுகள் செயல்படவில்லை என்றும் ஒரு வேந்தனின் தம்பிகள் அல்லது மக்கள் தனித்தனி அரசுகளை நடத்தியதாகவும், வேந்தன் காலமாகும்பொழுது அரசர்களில் மூத்தவன் வேந்தனாக விளங்கியதாகவும் நூலாசிரியர் உரைப்பது சிந்தனைக்குரியது.

கணியன் பாலனின் கோட்டியல் வரைபடமுறை அவர் கண்டு பிடித்த புதிய கால ஆய்வு முறை. எந்த மன்னரை யார் பாடினார்? அவருடைய சமகாலப் புலவர் யார்? அவர்கள் பாடிய அரசர் யார்? – என்ற தரவுகள் சேகரிக்கப்பட்டு வரைபடத்தின் நடுவில் காலகட்டங்களும் புலவர் பெயர்களும் அமைக்கப்படுகின்றன. வலது, இடது பக்கங்களில் ஆட்சியாளர் பெயர்கள் அமையும். இவ்வகையில் 10 கோட்டியல் வரைபடங்களும் அவ்வக்காலத்துப் புலவர், ஆட்சியாளர் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையிலான 10 காலகட்டங்கள் வகுத்தும் தொகுத்தும் அமைக்கப்பட்டதன் விளைவாகப் புலவர்கள் காலமும் ஆட்சியாளர்கள் காலமும் தெளிவாக்கப்பட்டுள்ளன. குடவாயிற்கீரத்தனார் முதல் காலகட்ட முதன்மைப் புலவராகவும் கோவூர்கிழார் பத்தாம் காலகட்ட முதன்மைப் புலவராகவும் அடையாளம் காணப்பட்டனர் எனச் சுருக்கமாகக் கூறலாம்.

இதைவிடச் சுலபமான மற்றொரு ஆய்வுநெறி கண்டறியப்படும் வரை கணியன் பாலனின் கோட்டியல் வரைபட ஆய்வு முறையே அரசோச்சும் என்பது திண்ணம்.

மூலத் தமிழ்ச் சிந்தனை மரபு நோக்கிய கணியன் பாலனின் நீரோடை போன்ற ஆய்வு வியப்பூட்டும் உண்மைகளை முன் வைக்கிறது. தமிழ் இனத்தின் தொல் பழங்காலக் கல்வி, இலக்கிய வளர்ச்சி, தொழில்நுட்பத் திறன், வணிக வளம், ஆட்சி நலன், போர் வலிமை, நீர் மேலாண்மை, வேளாண்மைச் சிறப்பு அனத்தையும் சங்க இலக்கியத் தரவுகளோடு இணைத்துச் சொல்லப்படுகிறது. இந்தப் பழமை இந்தியாவின் முதல் நாகரிகம் தமிழருடையது எனும் பெருமையைப் புலப்படுத்தும் சான்றாகிறது.

இதுவரை இவ்வளவு விரிவாகத் தமிழர் வரலாறு ஆராயப் படவும் இல்லை. அசைக்க முடியாத சான்றாதாரங்களோடு பழமை நிலைநாட்டப் படவும் இல்லை.

கீழடி தமிழர் தாய்மடி என்ற குரல் இன்று உரத்து ஒலிக்கிறது. அது போலவே கணியன் பாலன் தமிழர் வரலாற்று அணிகலன் என்றும் விரைவில் போற்றப் படுவார்.

- சிற்பி பாலசுப்ரமணியம்

Pin It