இந்த நூலின் ஆசிரியர்... பிரபு சங்கர் எனக்கு பேரன்பர்.

அவர் குரலில் இருக்கும் ஆதுரம்... அணைப்பில் இருக்கும் அன்பு என்று இந்த மனிதனின் சகவாசம் சுவாசத்தில் புது வாசம் தரும் என்றால்... உணர்ந்தோருக்கு உணரும். அவரின் என்னுரையிலேயே கவிஜி இருக்கிறான். அப்படி ஒரு தூரத்து நெருக்கம் இது. அவர் எனக்கு எழுதினார். நான் அவருக்கு எழுதுகிறேன் என்றெல்லாம் கிடையாது. எழுத தூண்டிய வாழ்வு இந்த நூல். இசை கூடிய இன்ப ரகசியம் என்று கூட புன்னகைக்கலாம். வீடு அடையும் பேறு குழந்தைகளால் அன்றி வேறு என்ன.

வேறெங்கிருந்தும் இல்லை. வேரில் இருந்து தான் தொடங்குகிறது இந்த நூல்.

குழந்தைகளின் வழியே தான் நாம் வாழ தொடங்குகிறோம். அவர்களின் வாழ்வியலை... நம்மோடு இணைந்த மூச்சென்று ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு சிரிப்பு. சுதந்தர பூரிப்பில் படிக்க படிக்க படிப்போரும் கவிதைகளாகி விடும் மந்திரம் இது. தினம் தினம் தீர்க்கம் ஆகும் நாளின் சூட்சுமம்... கொஞ்சம் புன்னகையும்... கொஞ்சும் குழந்தைகளும் தானே. அவர்களுக்கென்றே ஒரு நூலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே ஒளி தான். ஓயாமல் பாயும் அன்பின் வெளி அது.

அவ்வப்போது எழுதிய கவிதைகளைத் தேர்ந்தெடுத்து.. அதில் நூலுக்கான பூத்தொடுத்து... பொக்கிஷம் ஆக்கி விட்ட பேரன்பனுக்கு இதுவும் பெஸ்ட் தான்.

prabu sankar book 1பொதுவாகவே கவிதைகளில் நமக்கு விருப்பம் தான். அதுவும் குழந்தைகள் கவிதைகள் என்றால் கொள்ளை அழகு தானே. எனக்கெல்லாம் குழந்தைகள் கவிதைகளுக்கு பொறுமை இல்லை. நண்பர் அதையே நூலாக்கி இருக்கிறார் என்றால் அதன் தீவிர பிணைப்பை உணர முடிகிறது. உள்ளார்ந்த கசிதலோடு அன்பென்று கொட்டும் முரசு இந்த நூல். அட்டைப்படத்தில் நிழல் சித்திரங்கள். குட்டி மனிதர்களின் கை கோர்த்த நடை... அது தான் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் இருக்கும் பேரன்பன் உணர்ந்த நடையும்.

முதல் கவிதையே முத்தாய்ப்பு கவிதை தான்.

"பிரியா மிஸ்" என்று தலைப்பில் பிரியத்தோடு நம்மை வரவேற்கும் இந்த நூலின் ஆகச் சிறந்தவைகளில் ஒன்று இந்தக் கவிதை. இந்தக் கடைசி வரிக்கு நின்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். நிதானித்து சிலாகித்திருக்கிறேன்.

"பிரியா மிஸாகவே மாறி விட்ட
பட்டுக்குட்டி
கையில் பிரம்புடன்
முன்னும் பின்னுமாய் நடந்தபடி
தோட்டத்து செடிகளுக்கு
பாடமெடுத்துக் கொண்டிருக்கிறாள்"

அதுவரை சரி. இயல்பான காட்சி கோர்வை தான். ஆனால் அதன் பின் நடக்கும் ஜாலத்தின் மாயம் கண்களை சிமிட்ட விடாமல் வெறிக்க செய்து விடுகிறது.

"அவள் நடக்கும்
திசைக்கேற்ப
செடிகளைச் சாய்த்து
தலையாட்டும் மாணவர்களாக்கித்
தருகிறது தென்றல்"

இது தான் ஓர் அப்பா கவிஞனாகும் தருணம். இது தான் ஒரு கவிஞன் தென்றலாகும் தருணமும். எந்த கவிதையிலும் ஒரு வரி... ஒரு வார்த்தை... கவிதைக்கு கிரீடம் சூட்டும். அப்படி கிரீடம் சூட்டி... தோற்ற மாற்றம் தரும் கடைசி வரியில் கவிதை குட்டிக்கரணம் போட்டு விளையாடுவதைக் காண்கிறேன். தென்றலின் சூட்சுமம் அறிந்தவன் சொல்கிறேன். தலையாட்டுவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலா நிலை தான் வாசகனுக்கு.

"ஃபேனை ஆஃப் பன்னு.. பேப்பருக்கு குளிரும்" என்பதெல்லாம் மழலையின் மகத்துவம் தான். அbப்பா...மழை நனையுது என்று "சே குட்டி" சொன்னது நினைவுக்கு வருகிறது. குழந்தைகளின் ஆச்சரியம் ஒரு பக்கம் இருக்கட்டும். குழந்தைகளே ஆச்சரியம் தானே.

"கருதுகோள்" தலைப்பிட்ட கவிதையில் பட்டுக்குட்டிகளின் பிரவாகம் பெருக்கெடுத்து ஆடுகிறது.

மேகக் கூந்தல்... பெட்டி பற்கள்... சங்கீதக் குரல்... குட்டி விரல்கள்.... அருவி நடை... பேரொளிக் கண்கள்... கடவுள் மனசு என்று நேனோ துகள்களின் வழியே உருவாக்கி இருக்கும் இந்த பிரபஞ்சம் அன்ன நடைக்கும் சின்ன விழிக்குமானது. அழகுக்கும் ஆலாபனைக்குமானது. அற்புதத்துக்கும் ஆனந்தத்துக்குமானது.

"பட்டுக்குட்டியின்
கன்னம் வானமாகவும்
ஸ்டிக்கர் போட்டு நிலவாகவும்
மாறும் நேரத்தில்
உறக்கத்தினூடே
மெல்ல உதிர்கிறது
குட்டி வானத்தின் மின்னல் சிரிப்பு"

"மின்னல் சிரிப்பு" அற்புதம் பூக்க செய்கிறது. அற்புத வனத்தில் சின்ன வானமும் குட்டி நிலவும் மீண்டும் மீண்டும் உணர்கிறேன். என்னில் கூட ஒரு பப்பு எட்டிப் பார்க்கிறான்.

"பட்டுக்குட்டிகளின் உலகம்" என்ற தலைப்பில் வரும் குட்டி குட்டி உலகங்கள் நூலுக்கு அழகு. நூலின் நூதனத்துக்கு பேரழகு. நூல் பெற்ற அடுத்த நாளே குரல் வழியே குதூகலித்தது நண்பருக்கு தெரியும்.

"உன் பேரென்ன பாப்பா
பட்டுக்குட்டி
யார் வெச்சது
நானே வெச்சுக்கிட்டேன்..."

ஹா... என்று இருக்கு தானே. தன்னையும் யாரோவாக பார்க்கும் ஜென் தத்துவம் குழந்தைகள்.

"ரெம்ப பிடிச்சது டோரா புஜ்ஜியை" எனும் போது அவர்களின் உலகத்தில் நாம் பொம்மைகளாக இருப்பது நன்று என்று இன்னொரு ஹா சேர்ந்து கொண்டது.

வீட்ல இருக்கும் அப்பா அம்மா தாத்தா பாட்டி கூட எறும்புக்கும் இடம் தரும்.... மீனுக்கும் நீர் தரும் பட்டுக்குட்டிகள் பவள புட்டிகள். மனம் முழுக்க மனிதம் நிறைந்த மந்திரங்கள் அல்லவா அவர்கள். மானுட முழுமை குழந்தைகள். வாழ்வெனும் வீச்சுக்கு ஆளாகாமல் இருக்க.... "பப்புவும் பட்டுக்குட்டியும்" வழி காட்டுகின்றன. கோபம் வரும் போதெல்லாம் வாசிக்க கூட வேண்டாம். இந்த நூலை கை நிறைய வெச்சிருந்தாலே போதும். வாழ்வின் பெரியவைகள் எல்லாம் சிறியவைகள் தான் என்று புரிந்து விடும்.

பொம்மைகளோடு இருக்கையில் தன்னையும் மறக்கும் பப்புகள்... வாழ்வின் கரிசனங்களால் ஆனவர்கள். அவர்களுக்கு இருக்கும் மறதி வரம். நேற்றை சுமக்க தெரியாத பொம்மைகளோடு அவர்களின் இன்றுகள் நாளையை அழகாக்கி விடுகின்றன. அவர்களோடு இருக்கையில் அவர்களாக இருக்க செய்யும் வாழ்வின் பிரமாண்டம்.

இன்னொரு ஆகச் சிறந்த கவிதை "கிறிஸ்துமஸ்" தலைப்பிட்ட கவிதை.

"குழந்தை ஏசுவை வரவேற்பதற்காக
இந்த வருடமும்
முழுதாய் சுத்தம் செய்யப்பட்டு
வண்ணங்கள் அடிக்கப்பட்டு"

இப்படி ஆரம்பிக்கும் கவிதை... இயல்பான ஓட்டத்தில் ஓடி.. சென்று முடிந்த இடம் இப்படியாக இருக்கிறது.

"பாட்டியிடம் பதில் வந்ததோ இல்லையோ
இத்தனை ஆண்டுகள்
இல்லாத புன்னகையுடன் பூமியில்
பிறக்கத் தயாராகிறார் இயேசு"

சிரித்துக் கொண்டே பிறக்கும் இயேசுவிடம் இந்தக் கவிதையைச் சொல்ல ஒரு பப்புவாக ஆகி விட... ஒரு பப்புக்குட்டியாக மாறி விட முதலில் வரம் கேட்க வேண்டும். பிறகு அந்த வரத்தில் விளையாட இயேசுவையே உடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். எத்தனை மென்மையான பயணமாக இவ்வாழ்வை மாற்றி விட்டார் ஆசிரிய நண்பர். எத்தனை ஆதுரமாக புன்னகைக்க வைத்து விட்டார் ஆசிரிய பேரன்பர். பாட்டியிடம் கேட்கும் பட்டுக்குட்டியின் கேள்வி எத்தனை அன்பானது. வேல் -ஐ இறக்கி வைத்து விட்டு வெள்ளந்தி மனதில் தான் குடியேறுகிறார் முருகர். இயேசு கவிதையில் முருகர் எப்படி என்றால்.. அது இந்த பப்பு சொன்னது. கேட்டுக் கொள்ளுங்கள்.

அனைவரையும் பப்புவாக மாற்றி விட்ட... எல்லாரையும் பப்புக்குட்டியாக ஆக்கி விட்ட தோழரின் தோளுக்கு எங்கள் கைகளே மாலைகளாகின்றன. இந்த மாதிரி மனிதன் ஒவ்வொரு வாழ்விலும் ஒருவன் இருந்தால் கூட போதும். பலம் பெற்ற பண்புற்ற தென்றலாய் வாழ்ந்து விடலாம்.

"உற்றுப்பார்க்கும் கடவுள்" கவிதையில் மந்திரங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார் கடவுள் என்று முடிக்கிறார். அன்பெனும் அரவணைப்பு கடவுளையும் துணைக்கழைத்துக் கொள்வதை நினைத்தாலே இனிக்கிறது. துயரமற்ற சிரிப்புக்கு வரி வரியாய் வாகை சூடுகிறது நூல்.

"லிவிங் ஆன் க்ளவுட் 9" போன்ற பிரமிப்புகளும் உண்டு. கவிதையில்... இறுதியில் வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும் லாவகம் கை வந்த கவிதை ஞாபகம்.

"முன்னொரு காலத்து பட்டுக்குட்டிகள்" - பெட்டி பெட்டியாய் மயிலிறகு போட்ட குட்டிகள் போல. இதழோரம் புன்னகை சூடாமல்... இமையோரம் சிணுங்கல் கூடாமல் இவைகளைத் தாண்டவே முடியாது. தாகம் கொண்ட ஓட்டத்துக்கு தணிந்த திண்ணைகள்... இந்த சுட்டி கவிதைகள்.

"ஏழை பட்டுக்குட்டிக்கு எதற்கு திருஷ்டி பொட்டு" என்று முடியும் நூலை சமாதானம் செய்ய நேரம் பிடித்தது. எல்லா பட்டுக்குட்டிக்காவும் தான் இந்த நூல். அழகை கொண்டாடும் அதே நேரம் அழுகையைத் துடைக்கவும் கை நீட்டும் கவிதைகளின் வழியே பேருண்மை புரிகிறது. வாழ்க்கை எளிது. வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அன்பும் அன்பு சார்ந்த உறவுகளும் வீட்டில் பட்டுக்குட்டிகளாகவும் பப்புகளாகவும் இருக்க.... வாசலில் வந்தமர வாழ்வு தயங்குவதே இல்லை.

"பப்புவும் பட்டுக்குட்டியும்" கவிதை உலகில் தங்களுக்கான கீற்றைப் பதித்து விட்டார்கள். வாசம் செய்வோருக்கெல்லாம் சுவாசம் உறுதி. பேரன்பனுக்கு வாழ்த்துகள். பேரின்பத்துக்கு கொண்டாட்டம்.

ஆரத் தழுவலை ஒரு முதல் கவிதையை சொல்லி செய்கிறேன்.

"நிலவைக் காட்டி பட்டுக்குட்டிக்கும்
பட்டுக்குட்டியைக் காட்டி நிலவுக்கும்
சோறூட்டிக் கொண்டிருந்தார்கள்
பட்டுக்குட்டியின் அம்மாக்கள்"

ஒரு சோறு பதம். இது போதும்... விதை.

நூல் : பப்புவும் பட்டுக்குட்டியும்
ஆசிரியர் : பிரபு சங்கர் க
விலை : Rs.120/-
தொடர்புக்கு : 98941 23778

- கவிஜி

Pin It