எல்லாருக்கும் மணி அமரன். எனக்கு அமர். ஆருயிர் நண்பர். ஆக சிறந்த அன்பர். ரிமோட் அவர் கையில். பறந்த கதையை வந்து சொல்லும் தூதுவன் நான். அவர் காணும் ஜன்னலில் நான் அவருக்கும் சேர்த்து... தூர பறவை.

அமரின் "மாயா வனம்" கவிதை தொகுப்பு குறித்து இங்கே எழுதுவதில் இன்ப ஏக்கம் தான் எனக்கு. மானுடம் புகும் வல்லமை அமரின் எழுத்துக்கு உண்டு. மனது புகும் வல்லமை அமரின் அன்புக்கு உண்டு. கவிதை தான் எங்களை இணைத்தது என்றாலும்... அன்பின் மடியில் தான் அது நிலைத்தது.

அமரின் "மாயா வனம்" மணி அமரனுக்கு இரண்டாவது கவிதை நூல். முதல் தொகுப்பு "மணி அமரன் கவிதைகள்" என்றே இதயம் இழுத்து வந்தது. இதோ இம்முறை "அமரின் மாய வனம்" இமை முழுக்க இசை கூட்டி வந்திருக்கிறது. அணிந்துரையில் பேரன்புக்குரிய கவிஞர் பழனி பாரதி சொன்னது போல... இருளும் ஒளியுமான பிம்பங்கள்... இசையும் இதயமுமாக மாறி மாறி ஒலிக்கிறது. மாயாவின் மணக்கும் வனத்துள் அமரின் பயணம் ஒருபோதும் நிற்காது. அது பறக்க தொடங்கிய சிறு வானம். சிறகடிக்கும் கவிதைகளின் வழியே அமர் சென்று சேரும் இடமெல்லாம் மாயாக்களின் பரிசுத்தம் தான்.

ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு கதை சொல்கிறது. வாழ்வியலின் வழியே வயலின் வாசித்து கிடக்க தெரிந்த ஒரு வசீகரனின் வரப்பில் கவிதைகள் தான் மேய்ந்து கொண்டிருக்கின்றன. தீர்வதேயில்லை கீழ்வானமும்.. அமரின் மாயா வனமும்.maniamaran book on mayavanamகாதலுக்கு எழுதும் அமரின் எழுதுகோல் சமூகத்துக்கும் எழுதுகிறது. சாதிக்கு எதிராக எழும் குரல்... சாந்தத்தை நோக்கியே நகர்கிறது. அன்பின் வழியே கவிதை நெய்ய தெரிந்த அமருக்கு சமரின் மத்தியில் எழுதுகோலில் ரத்தம் பாய்ச்சவும் தெரிகிறது. ஒரு கவிஞன் இப்படித்தான்... அவன் தேடலைக் கண்டடைகிறான். ஒவ்வொரு கவிதையிலும் இருக்கும் அக்கறை தான் அவன் மீதான கவனத்தை நூல் வழியே கடத்துகிறது. கவிஞன் எழுதியது கொஞ்சம் தான். எழுத நினைத்தது... எழுத வேண்டியது தான் அதிகம். அதுவே அவனின் மிஞ்சிய வாழ்க்கையாகவும் இருக்கிறது. மின்னும் வரிகளின் வழியே எண்ணத்தின் திறவுகோல் தீர்க்கம் நிறைந்து நிற்பது... படிக்க படிக்க ஆதுரம். முதல் நூலில் இருந்து ஆறாவது நூலுக்கு தாவி இருக்கிறது... இந்த இரண்டாவது நூல். அத்தனை பக்குவம் அத்தனையும் பொக்கிஷம்.

"மாயா!
ஒரு நாளும்
நீ அறிந்திடவே கூடாது
ஒவ்வொரு நாளும்
என்னைத் துடிதுடிக்க செய்யும்
உன் நினைவின் வக்கிரங்களை"

இந்த கவிதை பற்றி பழனி பாரதி எழுதி விட்டார். இந்த தொகுப்பில் ஆக சிறந்த கவிதை இது. அப்படியே அவளை அன்பு செய்யும் நீ நீ நீ என்று சொல்லிக் கொண்டே வந்த காதலின் உச்சம் இந்த கடைசி பத்தியில் பற்றிக்கொண்டு எரிகிறது. எப்படி இப்படி ஒரு பார்வை அமருக்கு வாய்த்தது என்று உடல் சிலிர்க்க பார்க்கிறேன். சில கவிதைகளை ஒரு முறை படித்து விட்டு ஓடி விட வேண்டும். இல்லை எனில் அது உள்ளம் உலுக்கி உயிர் ஏந்தி விடும். அப்படி இந்த கவிதையின் வழியே ஒரு உதிரும் சித்திரம் அவள் மீது கொண்ட காதலை கூட அந்த காதலின் வழியே அவள் நிகழ்த்தும் சம்பவங்களை கூட அவள் அறியாமல் இருக்கட்டும் என்று ஒதுங்கும் காதலனின் எண்ணம் எத்தனை உயரத்தில் இருக்கிறது.

"நினைவின் முட்கள்" குத்தும் கவிதையில்... கருவேல முள்... கள்ளி முள்... காக்கா முள்... இலந்தை முள் என்று அத்தனையும் கவிதை முள். அதன் வழியே நிகழும் துளிகளின் ரீங்காரம் எப்போதும் முன்னொரு காலத்து வாழ்வை ஒரு வின்டேஜ் புகைப்படமாக மனதுக்குள் சொட்டி விடுகிறது.

"கொலைகார பாவிகள்" என்றொரு கவிதை. அமேஸிங். அடித்து தூள் கிளப்புவது என்று ஒரு phrase இருக்கிறது இல்லையா. அதன் மொத்தம் அது. இளையராஜாவை கொலைகார பாவியாக்கிய அமர் இந்த கவிதையை எழுதி மூன்றாவது கொலைகார பாவியாகிறார். மெச்சுதலின் உச்சம் திட்டி தீர்ப்பது. பாராட்டலின் உயரம் கொன்னே போடுவது. புதிராக இருக்கும் புத்தி தான் கவிஞனுக்கு. அதன் வழியே அவன் விஷத்தையெல்லாம் அமுதமாக்கி விடுவான். சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்று போட்டு தாக்கிய பாவி இளையராஜாவை அமரோடு சேர்ந்து திட்டுகிறேன். இசை அமைப்பு செய்யும் கைகளில் இருப்பது கொலை வாள் எனும் அமர்க்கு அதில் குத்து பட்டு செத்த அனுபவம் அதிகம். பலமுறை பகிர்ந்திருக்கிறோம்.

"ஓட்டோவிய"த்தில் இழையோடும் நகைச்சுவை... அதன் பின்னிருக்கும் வாழ்நாள் வடிவம்.. ஆனாலும்.. முட்டை வாங்காமல் வாங்கிய மார்க்... முடிக்க முடியாமல் முழிக்கும் கவிதை என்று ஒரு குறும்படத்தை எழுத்தில் கூடு கட்டி விட்ட அமர்.. ஒரு வாழ்க்கையை இங்கே உருள விட்டிருக்கிறார். முட்டை என்போருக்கு முட்டை. கூமுட்டை என்போருக்கு கூமுட்டை. வாழ்வின் வட்டம் என்போருக்கு வாழ்வின் வட்டம். பெரியாத்தா சாட்சி. பெரியாத்தா கவிதைக்கு பொங்கி வரும் அழுகை தான் சாட்சி.

கவிஜி காதலாரா கோபி அமர் நால்வரும் பெண்ணாகும் கவிதை சாட்டையடி. முகநூல் லட்சணத்தை லைக்ஸில் கழுவேற்றி தொங்க விட்ட வரிகளின் கடைசி வரி காரி உமிழ்கிறது. உள்ளபடி நிலவரமும் அது தான்.

"ஒரு சுபயோக சுபதினத்தில்
கவிஜி கனிஷ்காவாக மாறியிருந்தாள்
மணி மணிஷாவாக கோபி கோ கோபிகாவாக
ராஜ் ராதாவானது கால சாபம்தான்
மஸ்காரா போட்ட விழிகளோடு
மயக்கும் சுயபடமொன்றை பதிவேற்றி
வழி மேல் விழி வைத்து காத்திருந்தார்கள்
வந்து விழுந்திருந்தன இப்போது
நானூறு லைக்ஸ்ம்
கூடவே நாலு முழத்தில் தொங்கிய
நானூறு நாக்குகளும்"

"உன் மனசுல பாட்டுதான் இருக்குது
என் மனசத கேட்டுதான் தவிக்குது
சித்ராவின் குரலென்று தெரியாமல்
நிரோஷாவை காதலித்ததெல்லாம்
என் சிறுவயது கோளாறு"

சற்று நேரம் சிரித்தது மனம். இந்த நிரோஷா அமரையும் போட்டு தாக்கி இருக்கு. நாம தான் நிரோஷா கிறுக்குனா... அமர் கவிதையும் அதை ஆமோதித்து விட்டது. பிழைத்து போகட்டும் என்று விட்ட காதலில் முளைத்த கவிதையை என்ன செய்வது. படித்து போகட்டும் இந்த பார். இல்லையா அமர்.

"தனி மரம்" கவிதை அவுட் ஸ்டாண்டிங் அமர். ஒரு புத்தனாக என்னால் அதை உணர முடிகிறது. ஒரு போதியாக அமரின் தவம் அளப்பரியது. இறுதி வரி இதயம் பிளக்கிறது. உள்ளிருந்து பறக்கும் பறவைகளின் ஆயிரம் சிறகுகளிலும் ஞானம்.

"தனிமரம் தோப்பாகாது என்கிறீர்கள்
நானோ தனிமரம் தவம் என்கிறேன்'

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரு நூல் கவிதைக்கு இரு வரி சதம்.

இசையின் வழியே கவிதை கோர்க்க கற்ற அமருக்கு இறுதி வரியில் காதல் செய்யவும் வாய்த்திருக்கிறது. மாயாவின் பின் தொடரல் அவள் பேர் இல்லாத கவிதையில் கூட பேய் மாதிரி வந்து வந்து போகிறது. "காதலின் தகுடு தத்தம்" சிரித்துக் கொண்டே காதலிக்க தூண்டும் கவிதை சத்தம்.

"நிலவை நிலவென்று மட்டும் எழுதி
அதன் பரிபூரண அழகை
பார்த்துக் கொண்டிருக்கும்
ஆதி மனிதன்தான் இந்த அமர்"
நிலவில் இருந்து எட்டி பார்த்தவன் கூறுகிறேன்.

"சண்டே டு சாட்டர்டே" - அமர்க்குள் இருக்கும் விமர்சகர் வெகு ஜோராக தெறிக்கிறார். சுய பகடியில் சூரியனில் நிலவு உழும் உள்ளம் தெரிகிறது.

"துயர்" கவிதையில் துயரம் தான் வரி வரியாய் கரைந்திருக்கிறது. இறுதி வரியில் இதயம் நொறுங்க நிற்கிறேன். வரியை இங்கே சொல்ல மாட்டேன். என் விசும்பலை படித்து போங்கள்.

"ப்ரிய மனைவி" கவிதை பிண்ணும் ஒரு பிரமாதமான கிளாஸிக்.

"ஏதேனும் பின்னொரு
மழை நாட்களில் மட்டுமாவது
பேச சம்மதித்திருக்கலாம் மாயா
இங்கு மழை அங்கு மழையா
என்று யாரிடம் கேட்பேன் மாயா" என்ற அமர் மழை இருந்தும் நனையாத குடை. விரித்து பிடிக்க ஒரே வழி இந்த நூலை படித்து முடிப்பது தான்.

"எல்லாருமாறிய
ஒரு கவிதை நெட்டி முறிக்கிறது
யாருமறியாமல்
என் காடு பற்றி எரிகிறது"
தழல் கொண்ட தருணத்தை உணர்ந்த எனக்கு தருவிக்க வாக்கியமற்று ஒளிந்து நின்று மீண்டும் அதே காட்சியை காண்கிறேன்.

"கேள்வியின் நியாயங்கள்" நம்மை நிற்க வைத்து கேட்கிறது. கேள்வியின் நியாயங்களில் வரும் கடவுள் தப்பித்துக் கொள்கிறார். நானும் நீங்களும்... கூடவே சாத்தானும் மாட்டிக் கொள்கிறோம். அதன் பின் கேள்வியின் நியாயங்கள் இன்னும் விஸ்வரூபம் எடுக்கிறது.

"நீ படித்திருந்தால் கூட வெறும் கவிதை தான்
நீ கிழித்து வீசியதால்
இப்போது அதற்கு சிறகு"

என்று சட்டென எழுத தூண்டி விட்டது

"கவிதையாம் மண்ணாங்கட்டி
கசக்கி எறி
மோட்சமடையட்டும் என் எழுத்து" என்ற அமரின் வரி.

திரும்ப திரும்ப எழுதிப் பார்க்கிறேன்
அடி போடி...
உன் பெயரில் எல்லாமே
'உயிர் எழுத்துக்கள்'

திரும்ப திரும்ப படிக்கிறேன். எத்தனை உயிர்ப்பு. அத்தனையும் வியப்பு.

மொத்த கவிதையையும் நானே சொல்லி விட்டால்... கத்தும் குயிலுக்கு காற்றில் என்ன வேலை. மிச்சத்தை நீங்கள் படியுங்கள். அமரின் கவிதைக்குள் இருக்கும் பேருண்மையை கண்டடைடைவீர்கள். பெருங்காதலை சென்றடைவீர்கள். தன்னை தாழ்த்திக் கொண்டு கவிதையை உயர்த்தும் கஸல் மனம் கொண்ட அமருக்கு இந்த நூல் மிக சிறந்த அடையாளம். இரண்டாம் நூலிலேயே இதயம் நுழைந்து விடும் தகுதி வரிக்கு வரிக்கு இருக்கிறது. இள மென்மையும்.. இசை வன்மையும் கலந்த "மாயா வனம்" ஒரு தாளத்தின் வழியே நிகழ்த்தி போயிருப்பது நிம்மதிக்கு அருகே நிற்கும் தனிமையின் சாமரம்.

கவிதைகள் ஒருபோதும் இளைப்பாறுவதில்லை.

- கவிஜி

Pin It