கவிஞர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், இந்தி எதிர்ப்பு வீரர், சிறந்த சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர் கவி கா.மு.ஷெரீப். இவர் எழுதி 1985ம் ஆண்டு வெளியான நூல் 'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?'. காலத்தின் தேவை கருதி தற்போது கலாம் பதிப்பகத்தின் வெளியீடாக நமது கைக்குக் கிடைக்கிறது.

sheriff bookஇந்திய தேசம் பல கலாச்சாரம், பல மொழி என பன்முகம் கொண்ட தேசம். வேற்றுமைகள் பல இருந்தாலும் மக்கள் என்றென்றும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். சகிப்புத்தன்மைக்கு உலகில் பேர்போன மண்ணாக இது இருக்கிறது. இருந்தும் பல இடங்களில் மதப் பிரச்சனைகளால் உயிர்பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. அதற்குக் காரணம் ஒரு சமூகத்தார் மீது மற்றொரு சமூகத்தார் கொண்டிருக்கின்ற தப்பெண்ணம்தான். அந்த தப்பெண்ணங்களை 'அமைதியை விரும்பாத சிலர்' கூர்தீட்டி எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வேலையை எப்போதும் செய்து வருகிறார்கள். தற்போதும் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக இஸ்லாத்தைப் பற்றியும், இஸ்லாமியர்களைப் பற்றியும் விஷமத்தனமான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இது பெரியார் மண் என்று நாம் சொன்னாலும், சமூகத்தில் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை அந்த விஷமப் பிரச்சாரம் நன்கு வேரூன்றி வெற்றி பெற்றுள்ளது. பலர் அதன்பால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பொய்களையும், புரட்டுகளையும் சுக்குநூறாக்கும் வேலையை ஏனோ பலர் செய்வதில்லை. வரலாற்று உண்மைகள் இன்று வெளிப்படையாக மாற்றி எழுதப்படுகின்றன. தற்போது அது திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதில் வந்து நிற்கிறது.

இஸ்லாம் இங்கு வாள் கொண்டு பரப்பப்பட்டது, இஸ்லாமியர்கள் இந்துக் கோவிலை இடித்து பள்ளிவாசல்களை கட்டினர், இஸ்லாமியர்களுக்கும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, இஸ்லாமியர்கள் இந்த தேசத்தை இரண்டாகப் பிரித்தனர் என்று வரலாற்றுப் பொய்கள் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அதேபோல் மாமன்னர்களான அவ்ரங்கசீப், திப்பு சுல்தான், கஜினி முகமது, அலாவுதீன் கில்ஜி ஆகியோர்கள் குறித்து பல கட்டுக்கதைகள் உலாவுகின்றன. இந்து-முஸ்லிம் ஒற்றுமையை சிதைக்க வெள்ளையர்கள் ஆரம்பித்த வரலாற்றுச் சிதைவை இன்றும் பலர் தங்கள் அரசியல் காரணங்களுக்காக மேற்கொண்டு வருகிறார்கள்.

அவற்றுக்கான பதிலை வரலாற்றின் ஆவணங்களைக் கொண்டு, பல அறிஞர்களின் எழுத்துக்களைக் கொண்டு உண்மை வரலாற்றை மீட்டெடுக்கிறார் நூலாசிரியர் கவி கா.மு.ஷெரீப். இஸ்லாத்தைப் பற்றியும், இஸ்லாமியர்களைப் பற்றியும் ஏன் இவ்வாறு பொய்யுரைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கு விடையை இந்நூலில் தருகிறார் அவர். சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ன என்று கேட்பவர்களுக்கு அவர்களின் குருநாதர் சாவர்க்கர் எழுத்தின் மூலமே பதில் தருகிறார். 'முதலாவது சுதந்திர யுத்தத்தை உருவாக்கிய மகா மேதாவிகளுள் அஸீமுல்லா கானுக்குத்தான் முதல் இடம் கொடுக்க வேண்டும்' (சாவர்க்கரின் எரிமலை பக்-27). இதுபோல் பல உதாரணங்கள் தரப்பட்டிருக்கின்றன.

இஸ்லாம் இங்கு வாள் கொண்டுதான் பரப்பப்பட்டது என்று இன்றுவரை பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அதன் உண்மை என்ன என்று விரிவாகவே பதிவு செய்துள்ளார் ஆசிரியர். மகாத்மா காந்தியின் நண்பரும், வரலாற்றாசிரியருமான சுந்தர்லால் அவர்களின் கூற்றை இங்கு பொருத்துகிறார். 'வாள்கொண்டு இங்கே இஸ்லாம் பரப்பப்படவில்லை. அதனுடைய சமத்துவ சகோதர சமாதானக் கொள்கையின் அடிப்படையைக் கொண்டே பரவிற்று' என்று சுந்தர்லால் சொல்கிறார்.

'புத்தமத வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவில் சமூக அரசியல் நிலைகள் சீர்கெட்டுவிட்டன. இஸ்லாம் ஓர் எளிமையான சாதனமாயிருந்தது. அதனால் பொதுமக்கள் தாங்களாகவே அதன்பால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்து கொண்டனர்' எம்.என்.ராய் எழுதிய இஸ்லாத்தின் சரித்திர சாதனைகள் நூலின் துணைகொண்டு இஸ்லாம் இங்கு வாளால் பரப்பப்பட்டது என்ற கருத்துருவாக்கத்தை உடைத்தெறிகிறார் நூலாசிரியர்.

அவ்ரங்கசீப் பற்றி பல கட்டுக்கதைகள் உலா வருகின்றன. அவர் ஒரு மதவெறியராகவே உருவகப்படுத்தப்படுகிறார். கோவிலை இடித்த கொடுங்கோலன் என்றே பலரும் சுட்டுகிறார்கள். அந்த கட்டுக்கதைகளை எல்லாம் இல்லாமல் ஆக்குகிறது இந்நூல். அவ்ரங்கசீப் மன்னனின் மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிக்கொணர்ந்துள்ளார் நூலாசிரியர். 'காசியில் உள்ள குமரகுருபர சுவாமி மடத்திற்கு மடம் கட்டிக் கொள்ள இடமும், மடத்தின் நிர்வாகத்திற்கென பல ஏக்கர் நிலங்கள் அவ்ரங்கசீப் பாதுஷாவால் மான்யம் வழங்கப்பட்டுள்ள செய்தி குமரகுருபரர் வரலாற்றில் இருந்து எடுத்து தந்திருக்கிறார்'. அவ்ரங்கசீப் கோவில்களுக்கும், மடங்களுக்கும், சீக்கிய குருத்வாராக்களுக்கும் அள்ளிக் கொடுத்ததை இந்நூல் பட்டியலிட்டுப் பேசுகிறது.

திப்பு சுல்தான் பற்றிய கட்டுக்கதைகளையும் இந்நூல் தவிடுபொடியாக்குகிறது. திப்பு சுல்தானின் கட்டாய மத மாற்றத்தின் விளைவாக 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று இன்றும் ஊடக விவாதங்களில் பேசி வருகின்றனர் வரலாற்றுத் திரிபாலர்கள். அவர்கள் சொல்வது போல் எந்த சம்பவமும் திப்பு காலத்தில் நடைபெறவில்லை என்பதை இந்நூல் உறுதியாகச் சொல்கிறது. '3000 பிராமணர்கள் திப்பு சுல்தானின் கட்டாய மதமாற்றத்திற்கு அஞ்சி தீக்குளித்தனர் என டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரியார் எழுதியிருப்பது கற்பனை, ஆதாரமற்றது, மெய்ப்பிக்க இயலாத ஒன்று. நான் கேட்டபோது இதற்கான சரியான ஆதாரத்தை அவரால் தந்திட இயலவில்லை' என்று பி.என்.பாண்டே தனது பாராளமன்ற உரையில் குறிப்பிட்டிருப்பதை நூல் வெளிக்கொண்டு வருகிறது.

சிருங்கேரி மடத்திலிருந்து சாரதா தேவியின் பெரிய தங்க விக்கிரகத்தைக் கவர்ந்து சென்ற மராட்டியருடன் போராடி விக்கிரகத்தை மீட்டு வந்து மடத்தில் ஸ்தாபிப்பதற்கான செலவுகளையும் ஏற்றுக் கொண்டதையும் நூலாசிரியர் விரிவாக எடுத்துச் சொல்லியுள்ளார். கஜினி முகமது பற்றியும் தெரியாத பல தகவல்களை நூலாசிரியர் தந்துள்ளார். அவர் இந்தியாவின் மீது படையெடுக்க அழைத்து வந்ததே இங்கிருந்த சக்தி வணக்கத்தினர்தான் என்ற தகவல் ஆச்சரியம் அளித்தது.

கஜினி முகமது அழைத்து வந்த தனது நாட்டு எழுத்தாளர் அல்பைரூனி தான் 'கிதாபுல் ஹிந்த்' என்ற பெயரில் இந்திய தத்துவங்களை வெளி உலகிற்குக் கொண்டு சென்ற பெருமைக்குரியவர் என்பதை நூல் விரிவாக எடுத்தியம்புகிறது. இதுபோல் மறைக்கப்பட்டுள்ள பல வரலாற்றுத் தகவல்களை இந்நூல் தொகுத்து வழங்குகிறது. வரலாற்றுப் பொய்களை மட்டுமே பேசி மக்களிடையே வெறுப்புகளைப் பரப்பும் இந்தக் காலத்தில் வரலாற்று உண்மைகளை பேசும் இதுபோன்ற நூல்கள் இன்னும் அதிகமாக வெளிவர வேண்டும்.

கவி கா.மு.ஷெரீப்பின் 'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?' என்ற இந்த சிறிய நூல் எல்லோர் கைகளிலும் இருக்க வேண்டிய வரலாற்று பொக்கிஷம் என்றால் அது மிகையில்லை.

- வி.களத்தூர் பாரூக்

நூல் கிடைக்குமிடம் :
கலாம் பதிப்பகம்
6, இடண்டாவது பிரதான சாலை,
சி.ஐ.டி.காலனி, மைலாப்பூர்,
சென்னை - 600 004.
தொலைபேசி : 044 2499 7373.
பக்கம் : 72
விலை : 35

Pin It