1782 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மைசூர் போரில் ஹைதர் அலி இறந்து விடவே அவருடைய மகன் திப்பு சுல்தான் போருக்கு பொறுப்பேற்று போரில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டான்.

tippu sultanதிப்பு சுல்தானின் ஆட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் அதுவும் திப்புவின் அரண்மனைக்கு 300 அடி தொலைவில் தான் ஆதி சங்கரனால் தோற்றுவிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடம் என் அழைக்கப்படும் சங்கர மடம் உள்ளது.

திப்பு சுல்தானும் தன் தந்தை அய்தர் அலியைப் போலவே சிருங்கேரி சங்கர மடத்தினிடம் நல்லுறவு கொண்டிருந்தார் என்று அவர் சங்கர மடத்திற்கு எழுதிய கடிதங்களிலிருந்தும், சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது.

திப்பு 1790 முதல் 1799ல் இறக்கும் வரை சிருங்கேரி சங்கர மடத்திற்கு இருபத்தியொரு கடிதங்கள் எழுதியிருந்தார். அவை அனைத்தும் பழைய கன்னட மொழியிலானது. அக்கடிதங்கள் அனைத்தும் இன்றும் சிருங்கேரி சங்கர மடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்தது. திப்புவிற்கு ஓரளவு சமஸ்கிருதம் தெரியும். எனினும் தன்னுடைய பார்ப்பன அமைச்சர்கள் மூலம் திப்பு அவற்றைப் படித்து அறிந்து கொண்டு சங்கர மடத்திற்கு தேவைப்பட்டபோதெல்லாம் உதவிகளைச் செய்துள்ளார். இந்தக் கடிதங்கள் முழுவதும் மைசூர் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

திப்பு சங்கர மடத்திற்குக் கடிதம் எழுதும் போது ஒவ்வொரு முறையும் மிகுந்த மரியாதை கொடுத்து பணிவான வணக்கத்துடன் எழுதுவார். திப்பு 1790இல் சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய முதல் கடிதத்தில் ஸ்ரீமத் பரமாம்ச பரிவர ஆச்சாரிய சிருங்கேரி சச்சிதானந்த சாமிகளுக்குத் திப்புவின் வணக்கங்கள் என்றுதான் தொடங்கியுள்ளார். தன் நாட்டு மக்களைப் பாதுகாக்க ஈசுவரனை வேண்டும்படி அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். 1791இல் மராட்டிய தளபதி பரசுராமபாகு என்பவன் தலைமையில் சிருங்கேரி சங்கரமடம் கொள்ளை அடிக்கப்பட்டது. அப்போதே சுமார் 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் களவாடப்பட்டன. அத்தோடு நில்லாமல் சாரதா தேவியின் சிலையையும் புரட்டிப் போட்டான் அவன். அங்கிருந்த பார்ப்பனக் குருக்களையும் கொன்றான் அந்த மராட்டிய தளபதி. கார்கிலாவுக்கு ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய நிலை சங்கராச்சாரிக்கு அன்று ஏற்பட்டது.

கார்கிலாவிலிருந்து தமக்கு உதவும்படி திப்புவிற்குக் கடிதம் கொடுத்தனுப்பியிருந்தார் சிருங்கேரி சங்கராச்சாரி. (சிருங்கேரி சங்கர மட கடித எண்கள் 54,55, New History of Marathas by sardesi G.S. Volume III P.180) அக்கடிதத்திற்கு திப்பு பதில் கடிதம் எழுதி உள்ளார் அவை வருமாறு.

புனித இடங்களை அழிப்பவர்கள் தங்களது தீய செயல்களுக்கான பலனை அனுபவிப்பார்கள். குருவுக்குத் தீமை செய்பவர்களுக்கு அழிவே உண்டாகும். சாரதா பீடம் மீண்டும் அமைய 200 ரஹாடி ரொக்கமாகவும், 200 ரஹாடி பொருட்களாகவும் 200 ரஹாடி தானியமாகவும் வழங்கியுள்ளேன். மேலும் நிதி தேவையெனில் கொடுக்கும் படி கிராம நிர்வாக அலுவலர்க்கு உத்திரவிட்டுள்ளேன் என திப்பு சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதி உள்ளார். (திப்புவின் கடித எண் 47)

சிருங்கேரி சங்கராச்சாரி மீண்டும் உதவி கேட்டு திப்புவிற்குக் கடிதம் கொடுத்து அனுப்பியிருந்தார். அதைப் பெற்றுக் கொண்ட திப்பு, சுவாமிகள் உங்கள் கடிதம் வேலூர் வெங்கட்ராம ஜோய்ஸ் மற்றும் அகோபில சாஸ்திரிகள் மூலம் கிடைத்தது. செய்தியை தெரிந்து கொண்டேன். உங்களுக்காகப் பல்லக்கு ஒன்று அனுப்பி உள்ளேன். உங்களுக்கு மேலும் நிதி உதவி அளிக்கும் படி நகர நிர்வாகத்திற்கு உத்திரவிட்டுள்ளேன் என எழுதியுள்ளார். (திப்புவின் கடித எண்48)

நரசிம்ம சாஸ்திரி மூலம் சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு மீண்டும் கடிதம் கொடுத்தனுப்பப்பட்டது. அக்கடிதத்தை பெற்றுக் கொண்ட திப்பு, 200 ரஹாடி நெல் மற்றும் சாரதா தேவிக்கு அணிவிக்க விலையுயர்ந்த பட்டு புடவையையும் மேலாடையையும், சங்கராச்சாரியின் சொந்த பயன்பாட்டிற்கு விலையுயர்ந்த இரண்டு சால்வைகளையும் அசாப் என்பவர் மூலம் அனுப்பி வைத்துள்ளார். (திப்புவின் கடித எண் 49) சிருங்கேரி சங்கராச்சாரி மீண்டும் உதவி கேட்டுத் திப்புவிற்குக் கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தை பெற்றுக் கொண்ட திப்பு, நாராயணன் என்பவர் மூலம் யானை ஒன்றையும் புதிதாக வெளியிட்ட நாணயங்கள் பலவற்றையும் கொடுத்தனுப்பி உள்ளார். அவை வருமாறு:

நாணயத்தின் பெயர் எண்ணிக்கை மதிப்பு ரூபாயில்
1. ஹைதர் மகாரி 50 100
2. அபிடி 100 50
3. பாகபி 200 500
4.பாகேநலுக்கு .... 700
5. பொடைக்கி நாசி அகமதி 5 80
6. சிக்கர் 10 80
7. பீமாரி 10 40
8. குடபாகே 3 300

இதனுடன் கூடுதலாக ரூ.500 சேர்த்து அனுப்பி வைத்தார். அன்னை சாரதா தேவியின் கோவிலை விரைவில் கட்டி முடித்துக் குடமுழுக்கு நடத்த வேண்டிக் கொண்டார். (திப்புவின் கடித எண் 50) அதே கடிதத்தில் திப்பு மேலும் எழுதி உள்ளதாவது: 1000 பார்ப்பனர்களை அழைத்து 40 நாட்களுக்கு சாஸ்திரா சண்டி ஜபம் செய்ய வேண்டிக் கொண்டார். இதற்கான முழு செலவையும் தாமே ஏற்றுக் கொள்வதாக எழுதியுள்ளார். நாட்டின் எதிரிகளை அழிக்க இந்த ஜபம் பயன்படுமென திப்பு சங்கராச்சாரிக்கு எழுதி உள்ளார். கடித எண்கள் 51, 52, 53 ஆகியவற்றிலும் சாஸ்திரா சண்டி ஜபம் நல்ல முறையில் நடத்துவது குறித்த ஏற்பாடுகளைப் பற்றியே எழுதி உள்ளார்.

கடித எண் 54 இல் சாரதா தேவிக்கு மூன்று கால பூசையும் தவறாமல் நடத்தும்படி வேண்டிக் கொண்டுள்ளார். இந்தக் கடிதம் எழுதிய போதும் கங்கராச்சாரி பயணம் செய்ய வேலைபாடுகள் மிகுந்த பல்லக்கு ஒன்றை அனுப்பி உள்ளார்.

சிருங்கேரி சங்கராச்சாரியின் வேண்டுகோளுக்கிணங்கி அரசுப் பணத்தைக் கையாடல் செய்து சிறையில் அடைத்து வைத்திருந்த இரண்டு பார்ப்பனர்களை விடுதலைச் செய்தார். மேலும், திப்புவின் ஆட்சியில் நாற்பத்து அய்ந்து ஆயிரம் முதல் அய்ம்பதாயிரம் வரை மிகப்பெரிய எண்ணிக்கையிலான பார்ப்பனர்கள் அரசாங்க வேலைகளில் இருந்தனர். இவர்கள் தவறு செய்தால் தண்டிக்கும் பொறுப்பு அரசிடமிருந்ததை மாற்றி சங்கர மடத்தினிடமே அப்பொறுப்பையும் ஒப்படைத்தார். இந்து சாஸ்திரத்தில் என்ன தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோ அதே தண்டனையை நீங்களே ஒரு அலுவலரை அமர்த்தி நிறைவேற்றும்படி சங்கராச்சாரியை திப்பு கேட்டுக் கொண்டார். (திப்புவின் கடித எண் 58) மேலே கண்ட கடிதத்திலேயே சங்காராச்சாரிக்கு வெள்ளை குதிரை ஒன்று அனுப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிருங்கேரி மடத்தின் சாரதா தேவி கோவிலின் திருவிழாவிற்காக திப்பு தங்கத் தகட்டாலும், வெள்ளிக்குழிழ்களாலும் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார் என்பதை அவருடைய கடிதம் வாயிலாக அறிய முடிகிறது. (திப்புவின் கடித எண் 59)

திப்பு சிருங்கேரி சங்கர மடத்திற்கு ஸ்பதிகலிங்கம் ஒன்றை விலையுயர்ந்த கற்களால் செய்து கொடுத்துள்ளார். (Tippu Sultan a Fanatic. 84) மேலே கண்ட ஆவணங்களின் மூலம் திப்புவிற்கும் சிருங்கேரி மடத்திற்கும் இருந்த நல்லுறவை அறிந்து கொள்ள முடிகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாலமாக இருந்து நேர்மையாக ஆட்சி செய்துள்ளார். மதத்திற்கு அரச செலவு செய்த மொத்த தொகையில் 90% இந்து கோவில்களுக்கும் 10% இசுலாமிய மசூதிகளுக்கும் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் செலவு செய்துள்ளார். திப்புவிற்கும் சிருங்கேரி சங்கர மடத்திற்கும் இருந்த தொடர்புகளை மட்டுமே இங்குச் சுருக்கமாக எழுதி உள்ளேன். திப்புவின் மற்ற பண்புகளும் மிகச்சிறந்தவை. குறிப்பாக உழவர்களுக்கே நிலம் சொந்தம் என்பதை நடைமுறைபடுத்தியவர். எல்லா மதத்தினரையும் சமமாக நடத்திய பண்பாளர். மிகச் சிறந்த கல்வி மான். அவர் மறைந்தது 4-5-1799 இல்! அவர் மறைந்த இருநூறாவது ஆண்டில் அவரை நினைவு கூர்வோம்.

வாழ்வ திப்புவின் புகழ்!

இக்கட்டுரை எழுத பயன்பட்ட நூல்கள்:

1. Tippu Sultan a Fanatic? by V. JALAJA SAKTHI - DASAN.
2. Sringeri Sovemir 1968.
3. The Sword of Tippu Sultan by. BHAGWANGI DWANI
4. History of Sringeri by A.K.SASTRY
5. Secret Correspondence of Tippu Sultan by. KABIR KAUSAR
6. திப்பு விடுதலைப் போரின் முன்னோடி தொகுப்பு Dr. வெ.ஜீவானந்தம்

- வாலாசா வல்லவன்

Pin It