இலங்கை ராணுவ தளபதி சரத். பொன் சேகரா. புதுடில்லியில் முகாமிட்டு, இந்தியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பார்வையிட்டுள்ளார். மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, பாதுகாப்புத் துறை செயலாளர், இராணுவ தலைமைத் தளபதி ஆகியோரிடம் முக்கிய ஆலோசனை நடத்திவிட்டு, இந்தியா - இலங்கை ராணுவ ஒத்துழைப்பு தொடரும் என்று டெல்லியில் பேட்டியும் அளித்துள்ளார்.

2008 மார்ச் மாதத்துக்குள் ஈழப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று சபதம் போட்டு, ஈழத்தில் வடக்குக் களப்போர் முனையில் - ஒரு அங்குலம் கூட நகர முடியாத நிலையில் மீண்டும், இந்தியாவுக்கு ஓடிவந்து, கதவுகளைத் தட்டுகிறார் பொன். சேகரா.

இந்தியப் பார்ப்பன அரசோ, தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதிப்பதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் - இலங்கைக் கடற்படையால் கொல்லப்படுவது பற்றிக்கூட - இந்தியப் பார்ப்பன ஆட்சிக்கு கவலை இல்லை போலும்! நிதிநிலை அறிக்கையில், ப. சிதம்பரம், நடப்பு ஆண்டுக்கு, ராணுவத்துக்காக ஒதுக்கிய நிதி ஒரு லட்சத்து அய்யாயிரத்து அறுநூறு கோடி ரூபாய்! கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்புப் போன்ற மக்களின் அடிப்படைத் திட்டங்களைவிட, ராணுவத்துக்குத் தான், இந்தியப் பார்ப்பன ஆட்சி கூடுதல் நிதியை ஒதுக்குகிறது. மக்களின் வரிப்பணத்திலிருந்து பெரும் தொகையை ராணுவத்துக்கு ஒதுக்கி, அந்த ராணுவத்தை, மக்களுக்கு எதிராகவே பயன்படுத்துகிறார்கள்.

ஜம்மு, காஷ்மீர் மாநில மக்களின் உரிமைகளைப் பறித்து - அங்கே ராணுவ ஆட்சியை நடத்துவதோடு, வட-கிழக்கு மாநில மக்களையும், இந்திய பார்ப்பன வல்லாண்மையின் கீழ் அடக்கி வைக்க, அங்கே ராணுவத்தைக் குவித்து, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இந்தியாவில் தேசிய இனங்களின் உரிமைகளை ராணுவத்தால் ஒடுக்குவது போதாதென்று, ஈழத் தமிழர்களின் தேசியப் போராட்டத்தை ஒடுக்கவும், இந்திய ராணுவம் துணைப் போகிறது என்றால், இதை எப்படி சகிக்க முடியும் என்று கேட்கிறோம்.

2006 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் ராணுவ செலவு 1204 பில்லியன் டாலர் என்பதை எடுத்துக் காட்டிய அய்.நா. நிறுவனம், அமைதியை சமாதானத்தை நிலை நாட்டுவதற்கு, இதில் ஒரு சதவீதம்கூட செலவிடப்படவில்லை என்பதை வேதனையுடன் சுட்டிக் காட்டியுள்ளது. ‘சர்வதேச மனித மேம்பாடு அறிக்கை’யின்படி - இந்தியா, மக்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிடுவதைவிட 8 மடங்கு கூடுதலாக ராணுவத்துக்கு செலவிடுகிறது.

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ராணுவத் தீர்வு கூடாது என ஒரு பக்கம் கூறிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் இலங்கை ராணுவத்தை பலப்படுத்திக் கொண்டிருப்பது இரட்டை வேடம் அல்லவா? என்று கேட்கிறோம்.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் ஊடுருவி விட்டதாகக் கூப்பாடு போடுவோரைக் கேட்கிறோம். இலங்கை ராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கைகளை இந்தியா, ராணுவ உதவிகளை வழங்கி முடுக்கி விடும் போது, அதை எதிர்கொள்ள வேண்டிய விடுதலைப்புலிகள் செயல்பாடுகளும் அதிகரிக்கத்தானே செய்யும்? பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நாடகத்தை இந்தியப் பார்ப்பனிய ஆட்சி அரங்கேற்றுகிறதா?

நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் சந்திக்கப் போகும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களிடம் வாக்குகள் கேட்க வேண்டிய காலம் வரும் என்பதை மறந்துவிட வேண்டாம்!

தமிழர்களின் உணர்வுகளை ‘கிள்ளுக் கீரையாக’ கருதிடவும் வேண்டாம்!

Pin It