தமிழ்நாட்டில் அலுமினியம் தொடர்பான உருளைகள், ‘பால்சு’கள், உற்பத்தி செய்வோர் எல்லோருமே இப்போது விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் தயாரிக்க உதவுவோராகக் கருதப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் அலுமினிய உருளைகள் - உளவுத் துறையினரால் ‘அணுகுண்டுகளாக’ கருதப்படுகின்றன. அடுத்து, தமிழ்நாட்டில் பாலித்தின் துணி தயாரிப்பாளர்கள்கூட கைது செய்யப்படலாம். விடுதலைப்புலிகள் ஆயுதங்களைப் பொட்டலம் கட்ட பாலித்தின் துணி தயாரித்தவர்கள் என்று, உளவுத்துறை கூறினாலும் வியப்பதற்கு இல்லை.

ஏதோ தமிழ்நாடே விடுதலைப்புலிகளின் தளமாக மாறிவிட்டதைப் போல் ஒரு பொய்யான தோற்றத்தை, உளவுத்துறை உருவாக்குகிறது. ‘தினத்தந்தி’, ‘தினகரன்’, ‘தினமலர்’, ‘இந்து’ என்று - நாளேடுகள் இந்தப் பிரச்சாரத்தை ஊதி விடுகின்றன.

இவை ஒருபுறமிருக்க, தமிழக மீனவர்கள் - சிங்களக் கப்பற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு பிணமாக்கப்படுகிறார்கள். 1973 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை - இப்படி சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 263. இது மீனவர்கள் தரும் கணக்கு. சர்வதேச கடற்பரப்பில் சென்று கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளின் கப்பல்களையும், படகுகளையும், பிடித்துக் கைது செய்து, வழக்கு தொடரும் இந்தியக் கப்பற்படை - தமிழக மீனவர்களை படுகொலை செய்யும், சிங்களக் கப்பற்படையைத் தடுக்கும் எந்த நடடிக்கையையும் இதுவரை மேற்கொண்டதில்லை. இதுவரை ஒரு முறைகூட சிங்களக் கப்பற்படை மீது திருப்பி சுட்டதாக வரலாறு இல்லை.

நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்த ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, சிங்கள-இந்திய கப்பற்படை கூட்டு ‘ரோந்து’ செய்யும் திட்டத்தை அரசு பரிசீலிக்கிறது என்று கூறியுள்ளதோடு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சுமூக உறவு நீடிப்பதால் - தமிழக மீனவர்களை இலங்கை கப்பற்படை சுட்டுக்கொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி ‘முழு பூசணிக்காயை சோற்றுக்குள்’ மறைக்க முயற்சித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையில் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, தமிழக அரசுக்கு தெரிவிக்காமலே கப்பற்படையினரை அணையை சோதிக்க உத்தரவிட்ட அந்தோணி, தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும், தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசின் பக்கம் நின்றே பேசுகிறார்.

கடந்த முறை இந்தியாவுக்கு ராஜபக்சே, இதே கோரிக்கையுடன் வந்தார். தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் எதிராகவே செய்யப்பட்டுவரும் இந்தியாவின் வெளிநாட்டுத் துறை அதிகாரிகளும், உளவு நிறுவனங்களும் இதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தன.

அன்று சிங்கள ராணுவத்துக்கு ஆதரவாக களமிறங்கிய இந்திய ராணுவம் - மூக்கறுப்பட்டு வெளியேறியது. இப்போது சிங்கள கப்பற்படைக்கு ஆதரவாக - கடல் இறங்கப் போகிறது, இந்திய கப்பற்படை.

சிங்கள ராணுவத்தின் விமானக் குண்டுவீச்சு, ராணுவத் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் - தமிழகம் நோக்கி, படகுகளில் அகதிகளாக வருகிறார்கள். உயிர் பிழைக்க அகதிகளாக வருவோரையும், நடுக்கடலில் தடுத்து மிரட்டுகிறது. இலங்கை கப்பல் படை, இந்திய கப்பல் படையும், தமிழர்களுக்கு பாதுகாப்பைத் தருவதில்லை. இந்த நிலையில் இந்தக் கூட்டு ரோந்து உயிர் தப்பி வரும் அகதிகளை பாதுகாப்பாற்ற நிலைக்கு தள்ளி விடும் பேராபத்து அடங்கியுள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்களை சுடுவதே சிங்களக் கப்பற்படை தான்! அவர்களிடமே தமிழ் மீனவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைக்கலாமா?

தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்வது விடுதலைப்புலிகள் தான் என்று திடீரென்று, ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய’ பொய்யை அவிழ்த்து விடுகிறது இலங்கை அரசு. அறிவு நாணயமின்றி ‘சிங்களரத்னா’ விருது பெற்ற ‘இந்து’ பார்ப்பன ஏடும் இந்த செய்தியை ஊதிப் பெரிதாக்குகிறது.

பாதிக்கப்பட்ட மீனவர்களே, தங்களை சுட்டுக் கொல்வது சிங்கள கப்பல் படை தான் என்று கூறுகிறார்கள். 263 பேரை சுட்டுக் கொன்று, 98 படகுகளையும் கைப்பற்றிய இலங்கை அரசு இதற்கு முன், எப்போதுமே தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்ததே இல்லை இப்போது திடீர் என்று விடுதலைப்புலிகள் மீது பழி போடுவது ஏன், என்ற கேள்விக்கு எளிதாக விடையை ஊகித்து விடலாம்.

கடற்பரப்பில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய கப்பற்படையுடன் சேர்ந்து, அவர்கள் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம் என்ற சூழ்ச்சித் திட்டமே, இப்படி ஒரு பொய்யை அவர்களைப் பேச வைத்திருக்கிறது. இந்தியாவின் பார்ப்பன வெளிநாட்டுத் துறையும் உளவு நிறுவனங்களும், இந்த சதித் திட்டத்தின் ‘மூளை’யாக செயல்படுவதாகவே தெரிகிறது.

ஈழத்தில் - போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து கடுமையான போர் மூளக் கூடிய சூழலில் இந்த கூட்டு ரோந்து ஆபத்தான விளைவுகளை உருவாக்கி விடும் கடல் யுத்தத்தில் விடுதலைப் புலிகள், சிங்களக் கப்பற்படை மீது தாக்குதல் நடத்தும் நிலை வரும்போது, அதிலே இந்திய கப்பற்படையினரும் இருந்தால், போராளிகளின் போராட்டம் இந்திய கப்பற் படைக்கு எதிரானது என்று திசை திருப்பப்பட்டு, மீண்டும் பேராளிகளுக்கு எதிராக இந்திய இராணுவத்தை மோதவிடும் சூழ்ச்சித் திட்டங்கள் அரங்கேறலாம். இது தான் சிங்கள இந்திய பார்ப்பன ஆளும் சக்திகளின் திட்டம். இதற்கு வழி வகுத்து விடக்கூடாது. கூடவே கூடாது!

தமிழ் மீனவர்கள் செல்லும் படகைக்கூட போராளிகள் படகு என்று ‘கூட்டு ரோந்துப்’ படை சுட நேர்ந்தால் தமிழ் மீனவர்களின் கோபம் ‘கூட்டு ரோந்தில்’ உள்ள இந்திய கப்பற்படை மீது திரும்பும் ஆபத்தும் உள்ளது.

எனவே, தமிழ் மீனவர்களைக் காக்க அவர்களைச் சுடும் சிங்களக் கப்பல்படை மீது கடும் எதிர் நடவடிக்கைகளை எடுத்து நிறுத்துவதுதான் சரியான அணுகுமுறை!

இந்திய-சிங்கள கப்பற் படைகளின் கூட்டு ரோந்து இதற்கு சரியான தீர்வு ஆகாது. மீனவர் பாதுகாப்பு என்ற போர்வையில் களத்தில் போராடும் விடுதலைப்புலிகளை ஒடுக்கவும், உயிர் தப்பி அகதிகளாக வரும் தமிழர் குடும்பங்களைத் தடுக்கவும் திட்டமிட்டு அரங்கேற்றத் துடிக்கும் சிங்கள - பார்ப்பன கூட்டு சதி இது!

கூட்டு ரோந்து என்ற பெயரில் ‘கூட்டு சதி’ ஒன்று அரங்கேறுகிறது. இந்த ஆபத்துக்கு எதிராக, தமிழர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.

தமிழக முதல்வா கலைஞர் இந்தக் கூட்டு ரோந்து - ‘தவளை எலி’ கூட்டாகிவிடக் கூடாது என்றும், இதில் சாதகத்தைவிட பாதகமே அதிகம் என்றும் கூறியிருப்பது பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.

கூட்டு ரோந்து திட்டத்தை தடுத்து நிறுத்திய எம்.ஜி.ஆர்

1985 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் நடந்த சம்பவம் இது. இலங்கை ராணுவம், இரண்டு தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றது. உடனே, இந்தியாவின் வெளிநாட்டுத் துறை அலுவலகத்துக்கு, இலங்கை தூதரக அதிகாரிகள் அழைக்கப்பட்டு, அவர்களிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தங்கள் மீது தவறு இல்லை என்றும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்ததாகவும் இலங்கை அரசு அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து, இந்தியா, தமிழக மீனவர்களைக் காப்பாற்ற கடலோரக் காவல் படையை நிறுத்தியது. அந்தப் படை - இலங்கையின் ரோந்துப் படகு இந்தியக் கடற்பரப்பில் நுழைந்தபோது தடுத்து நிறுத்தி, ரோந்துப் படகை பறிமுதல் செய்து, படகிலிருந்த சிங்கள கப்பற்படை அதிகாரிகளை கைது செய்தது. அவர்களை உடனே விடுதலை செய்யுமாறு இலங்கை அரசு கோரியது.

அப்படியானால் - கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 தமிழ் படகோட்டிகளையும், அவர்களின் படகுகளையும், விடுவிக்குமாறு, இந்தியா கோரியது. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா பணிந்தார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஜெயவர்த்தனா, இந்திய- இலங்கை கப்பல் படையின் கூட்டு ரோந்து திட்டத்தை, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் முன் வைத்தார்.

ராஜீவ் காந்தியும் அதை ஏற்றுக் கொண்டார். செய்தி அறிந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., டெல்லியில் ராஜீவை சந்தித்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதன் பிறகு ராஜீவ், கூட்டு ரோந்து திட்டத்தை கைவிட்டார்.

ஆதாரம்:

‘J.R. Jayawardene of Srilanka - A Political Biography by K.M. de Silva and Honward Wriggus’ நூல்

Pin It