இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்யக் கூடாது’ என்ற கருத்து தமிழ்நாட்டில் கட்சிகளைக் கடந்த உணர்வாக மேலோங்கி நிற்கிறது. ஒவ்வொரு நாளும் பொது மக்களை சந்தித்து இந்தக் கோரிக்கைக்காக பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கையெழுத்துக்களைப் பெறும்போது இந்த உணர்வையே பொது மக்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்பதை அறியும்போது பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்படுகிறது.

இச்சூழலில் கையெழுத்து இயக்கத்தை தீவிரமாக மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பும், கடமையும், தோழர்களுக்கு மேலும் அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டுகிறோம். ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் நவீன ஆயுதங்களை இந்தியா வழங்கி வருவதுதான் - இன்று, சிங்கள அரசுக்கு மிகப் பெரும் பலமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களின் ஆதரவுத் தளத்தை அரசு எந்திரங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தி, ஒடுக்கிவிட்டால் - இலங்கைக்கு தாராளமாக தமிழர்களைக் கொன்றொழிக்கும் அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருக்கலாம் என்பதே இந்தியா வின் பார்ப்பன அதிகார சக்திகளின் திட்டமாகும். இந்த நிலையில் தான் டெல்லிக்கே சென்று - இந்த பார்ப்பன சூழ்ச்சிகர சக்திகளை எதிர்த்து குரல் கொடுக்க - பெரியார் திராவிடர் கழகம் தயாராகி வருகிறது.

டெல்லிப் பயணத்தில் பங்கேற்க 400 கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் முன் வந்துள்ளனர். பிப்.3 ஆம் தேதி சென்னையிலிருந்து, கழகத் தோழர்கள் புறப்படுவதற்கான பயணச் சீட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன.

பிப்.6 ஆம் தேதி டெல்லியில் இந்திய அரசைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டம்;

பிப்.7 ஆம் தேதி இரவு டெல்லியிலிருந்து புறப்பட்டு, 9 ஆம் தேதி காலை, சென்னை வந்து சேருகிறார்கள்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரை சந்தித்து, தமிழர்களிடம் பெற்ற லட்சோபலட்சம் கையெழுத்துக்களை ஒப்படைக்க உள்ளோம். டெல்லியில் சமூக நீதிக்கு குரல் கொடுத்து வரும் தலைவர்களை சந்திக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘இந்தியா இலங்கைக்கு ராணுவம் வழங்குவதை எதிர்த்து டெல்லியில் பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி கழகச் செயல்வீரர்கள் சுவரெழுத்து, துண்டறிக்கைகள் வழியாக பிரச்சார இயக்கத்தை நாடு முழுதும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

“தமிழர்களைக் காக்க, நீங்கள் போடும் இந்த கையெழுத்துக்களில் அடங்கியுள்ள உணர்வுகளையும், கையெழுத்துக்களையும், பெரியார் திராவிடர் கழகம், 500 தோழர்களுடன் டெல்லிக்குக் கொண்டுச் சென்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி, பாதுகாப்பு அமைச்சரிடம் வழங்க இருக்கிறது” என்ற தகவலையும், துண்டறிக்கை வழியாக பரப்புங்கள்!

பெரியாருக்கு “நாமவாளி-அர்ச்சனை”களை நடத்திக் கொண்டிருக்காமல் - பெரியார் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் லட்சியப் பணியாற்றும் பெருமைக்குரிய பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் வீரர்களே! கையெழுத்தியக்கத்தை தீவிரமாக்கிடுவீர்!

Pin It