நவீன கவிதைகள் என்பவை மரபின் தன்மையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மக்களின் வழக்கு சொற்களுக்குள் எளிய உரையாய் தன்னை பரிணமித்துக் காட்டுபவை. அனுபவங்களை சிறு வரி வடிவங்களில் படிமங்களாக மாற்றும் வல்லமை நவீன கவிதைகளுக்கு உண்டு. வாசிப்பவனுக்கு உடனடி உரையை தருதலும் அதை கொண்டு அவனாலும் அதன் தொடர்ச்சியாய் கவிதை நெய்யும் ஆற்றலை பெற்றுவிட முடியும் என்னும் நம்பிக்கையைக் கொடுப்பதும் புதுக்கவிதைகள்தான்.

அக்காலகட்டத்தில் கட்டற்ற வரிகளுடன் ப்ரி வெர்ஸ் (Free verse) என்று வால்ட் விட்மனில் தொடங்கிய நவீனத்துவம், பிரெஞ்சு நாட்டின் சர்ரியலிசம், இத்தாலியின் ப்யுச்சரிசம், ஜெர்மனியின் எஸ்ப்பிரஷனிசம் போன்றவை வசன கவிதைகளாய் மரபிலிருந்து விடுபட்ட மகிழ்வைத் தெரிவித்துக்கொண்டன. தமிழில் பாரதியார், அதன்பின் ந பிச்சமூர்த்தி, கு ப ராஜகோபாலன் ஆகியோர் கவிதைகளில் நவீனத்துவம் படைக்கத் தொடங்கினர்.

புதிய உள்ளடக்கம், புதிய எடுத்தாளும் முறை, சொற்களைச் சுருக்கி எழுதும் விதம், வாசக வெளி போன்றவை நவீன கவிதைகளின் இலக்கணமாய் கையாளப்படுகின்றன. நவீன கவிதைகளின் தொடக்கம் தொழில் வளர்ச்சி, வர்க்க வெளிப்பாடுகள், காதல், பொருளாதாரம், இயற்கை என்னும் தலைப்புகளுக்குள் இயங்கிக்கொண்டிருந்தன. மேத்தாவின், அப்துல் ரஹ்மானின் கவிதைகள் அதற்கு உதாரணம்.

“கரைக்கு வந்தோம்

அலை மட்டும் திரும்பிப் போயிற்று

சூரியன் கடலுள் வீழ்ந்த போது

மண்டியிட்டழுதோம்

ஒரு கரிய ஊழை எழுந்து

இரவென ஆயிற்று

தொலைவில்

மயான வெளியில் ஒற்றைப்பிணமென

எரிந்து கொண்டிருந்தது எங்க ஊர் “

என்கிறார் கவிஞர் பா அகிலன் அவர்கள். சமூக வலிகளை தன் வலியென உணர்ந்து வெளிவந்த கவிதைகள் நவீன கவிதைகளின் முன்முதல் காலங்களை ஆக்கிரமித்திருந்தன.

அகவழி உணர்வுகளை சொல்லும் கவிதைகள் அதன்பின் வெளிவரத் தொடங்கின. பிரமிள், தேவதச்சன் போன்றோர் அதற்கு உதாரணம். சொற்களின் அடுக்குகளில் முடிவில் மர்மம் அவிழ்க்கப்படும் உத்தியும் நவீன கவிதைகளில் சாத்தியமாயிற்று. வாசகனை எளிதாய் கவிதைக்குள் நுழையவும் அவனின் மொழி மீதான விருப்பத்தை அதிகப்படுத்தவும் இவை உதவின. வாசிப்பவர்களையும் எழுதத் தூண்டியது. சுலபப்படுத்தியது கவிதையை.

“சிறகிலிருந்து பிரிந்த 
இறகு ஒன்று
காற்றின் 
தீராத பக்கங்களில் 
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது “

என்னும் பிரமீள் அவர்களின் பிரபலமான கவிதை சென்றடையாத இடமில்லை.

நவீனம் என்பது பின்நவீனமாக மாறும் தருணங்களும் உண்டு. அதீத சொற்களுடன் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகள் வாசிப்பிற்கான சிக்கலை சில நேரங்களில் தோற்றுவித்துவிடுவதை மறுப்பதற்கில்லை.

நகுலன், பிரமிள், க நா சு, ஆத்மாநாம், ஞானக்கூத்தன், கலாப்ரியா, கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன், வாலி, மீரா, நா காமராசன், மேத்தா, சி சு செல்லப்பா, வைரமுத்து, சிற்பி, அறிவுமதி என்று ஆண் கவிஞர்களாக மிளிர்ந்த நவீன இலக்கியத்தில் பெண்களின் காலம் என்பது மிக தாமதமாகவே தொடங்கியது.

எண்பதுகளில் எழுதிய மூத்த பெண் கவிஞர்கள் சுகந்தி சுப்ரமணியம், இரா மீனாட்சி, திரிசடை, பொன்மணி போன்றோர் பெண்ணியம், பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்பவற்றுக்கப்பால் சமூக விடுதலையை அடிப்படையாகக் கொண்டு கவிதைகளை புனைய முற்பட்டனர். அவை எல்லாம் ஒடுக்கப்பட்ட இனமொன்றின் தார்மீகக் குரலாய் ஒலிக்கத் தொடங்கின.

பெண்ணியம் பேச பெண் குரல் தேவையா என்னும் கேள்வி வைக்கப்படுகிறது.

படைப்புலகத்தைப் பொறுத்தவரை,இரண்டு பார்வைகளை வைக்கலாம். ஓன்று புறம் சார்ந்தது, மற்றொன்று அகம் சார்ந்தது. புறம் சார்ந்த பார்வை பெரும்பாலும் ஆண் பெண் படைப்பாளிகளுக்கு பொதுப்படுத்தப்படுகிறது. அதிகமாய் பெண் படைப்பாளிகளுக்கு கை கொடுப்பதில்லை என்றாலும் சிவசங்கரியின் பாலங்கள் என்னும் நாவலைப் போல ஒன்றிரண்டு மிளிரும் சாத்தியங்கள் உள்ளன.

அகம், மனம், அதன் உணர்வுகள் சார்ந்த பார்வை, அதாவது மனிதனின் மன அரற்றல்கள், மெல்லிய உணர்வுகள் போன்றவற்றை பொதுமைபடுத்த இயலாது. ஆண் பெண் வேறுபாடுகள் காணப்படும் இடம் இதுதான்.

உடல் கூறுகளை கொண்டே அவை வேறுபடுகின்றன. பெண்ணின் மனநிலை மாறும் நேரங்கள் அவளின் உடலைக் கொண்டு கணிக்கப்படுகிறது. பூப்பெய்தல், மாதவிடாய், கர்ப்பம் தரித்தல், கலைந்த கர்ப்பங்கள், கர்ப்பத்தடை சாதனங்கள், மாதவிலக்கு நிற்கும் நிலை இவ்வாறாக வாழ்வின் பல நிலைகளிலும் பெண் தனது மனதை ஒருமுகப்படுத்த போராட வேண்டியுள்ளது. ஆணிற்கான நிர்பந்த ஆசைகளுக்கு இணக்கம் என்பது இதற்கிடையில் பெண்ணின் மிகப்பெரிய சவாலாய் அமைகிறது. அதனால் பெண்ணின் படைப்புகள் பெண்ணால் படைக்கப்படும் போது, அவை முழுமை அடையும் சாத்தியங்களைப் பெறுகின்றன.

ஒரு ஆண் எழுதும் படைப்புகளில், பெண் குறித்த பகுதி, ஆணால் விவரிக்கப்படுகிறது. ஆணின் பார்வையில் விவரிக்கப்படுகிறது. ஆண் தன் எழுத்தின் மூலம், பெண்ணை பலவீனப்படுத்தும், வலிமைப்படுத்தும் வித்தையைச் செய்கிறான்.

ஆண் ஏற்படுத்தும் படைப்புகள் உயருகையில், படைப்புலகமே ஆணின் பார்வையில் மெருகேறுகிறது. அவன் படைத்த உலகத்துள் இயங்கும் வரலாறு, சமூகம் ஆகியவை அதன் பின் வரும் பெண் படைப்பாளிகளால் ஒப்புவிக்கப்படுகின்றன. பெண் படைப்புகள் பெரும்பாலும் ஜனரஞ்சக பத்திரிகை எழுத்துலகத்துடன் நின்று போய்விடுகின்றன என்பது பரிதாபம். காதல், கல்யாணம், குடும்ப பிரச்சனை என்று அவற்றை சுற்றி வட்டங்கள் வரையப்படுகின்றன.

இவற்றை தகர்த்தெறிந்து வெளிவந்தவர்கள் கதைகளைவிட கவிதைகளை அதிகமாக பேசினார். பெண் கவிதைகள் பலவித பரிமாணங்களுடன் குடும்ப வன்முறை தொடங்கி பாலியல், உடல் மொழி போன்ற அதுவரை பெண்கள் தொடாமல் இருந்த கவனங்களைத் தொட்டுச் சென்றன. 

பெண்ணியம் :

இலக்கியம் தொடங்கிய காலத்தில் இருந்தே பெண்ணுரிமை, பெண் விடுதலை பேசப்பட்டாலும் நவீன இலக்கியத்திலேயே அது முதன்மைபடுத்தப் பெற்றது எனலாம். பெண்ணியச் சிந்தனையும் பெண் சமத்துவமும் முக்கியமாய் கவிதைகளில் கையாளப்பட்டன.

சங்க காலத்தில் வாழ்ந்த மன்னனும் புலவனுமான பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரே ஒரு பாடல் புறநானூறு 246 எண்ணுள்ள பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அவன் மாண்டபோது, பெருங்கோப்பெண்டு அவனது உடல் எரியும் தீயில் தானும் விழுந்து உயிர் துறந்தாள். இப்படித் தீயில் விழப்போகும்போது பாடிய பாட்டுதான் இது.

இதில் இவர் சொல்லும் செய்திகள் அக்காலத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனத்தை அறியத் தருகிறது. "வெள்ளை-எள் சாந்தம் சேர்த்து, புளி ஊற்றி வெந்தச் சோற்றை மட்டும் உண்டு கொண்டும், பரப்பிய பரல் கற்களைப் பாயாக்கி படுத்துக்கொண்டும் வாழும் உயவல் பெண்டிர் (உய்ய-வல்ல பெண்டிர் ) நான் இல்லை.” என்கிறார். இவ்வாறு கைம்மை நோன்பு என்பது எத்தகைய கொடுமையானது என்பதை அப்பாடலில் விளக்கியிருக்கிறார்.

இவரைப்போலவே தாயங்கண்ணியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புலவர் தாயங்கண்ணனாரின் மனைவி இவர். புறநானூறு 250 எண்ணுள்ள பாடல் இவருடையது. கணவன் இறந்த பின் அவனது மனைவி இருக்கும் கைம்மை நிலை குறித்து பேசுகிறது இப்பாடல். அவன் மனைவி கூந்தல் கொய்யப்பட்ட நிலையில் இருப்பதையும் அவளது கைகளில் வளையல்கள் கழற்றி எறியப்பட்டுவிட்டதையும் குறிப்பிடுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆணாதிக்கம் சமூகத்தின் ஆணிவேராய் படிந்த காலங்களில், பெண்களின் இலக்கிய நிலைபாடு வெளிச்சமிட்டு காட்டும்படியாய் இல்லை. நவீன இலக்கியம் தோன்றிய பிறகே பெண்களின் விழிப்புணர்வும் பெண் விடுதலை வேட்கை குறித்த எழுத்துகளும் அதிகமாய் தோன்றின.

எண்பதுகள் – தொண்ணூறுகளில் கவிதைகளின் போக்கில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாய் பெண்களின் பங்களிப்பைக் காணலாம். முன்பெப்போதையும் விட இந்த காலகட்டத்திலேயே பெண்கள் அதிக எண்ணிக்கையில் கவிதை எழுதத் தொடங்கினர்.

இரா மீனாட்சி, பூரணி, திரிசடை போன்ற பெண் படைப்பாளிகள் தொண்ணூறுகளுக்கு முன்பே நவீன கவிதைப் படைப்புகளில் பங்களிப்பு செய்திருந்தாலும், தொண்ணூறுகளுக்கு பின் வந்த பெண் படைப்பாளிகளால் தான் பெண்ணிய சிந்தனைகள் மேலோங்கி வளரத் தொடங்கின.

மூத்த பெண் கவிஞர்களில் ஒருவராகிய, இரா மீனாட்சிக்கு நவீனப்பெண்ணிய இலக்கியத்தில் இருக்கும் பங்கு முதன்மையானது. எழுபதுகளில் பெண்ணியத்தை அழுத்தமாய் கவிதை வழியாய் பதித்த அவர் வழியாகத்தான் பெண் கவித்துவம் எழுச்சி கண்டது எனலாம்.

‘சுடு பூக்கள்’ கவிதையில்,

“அவள் தானே வெளியேற
அவளே தடையாகி,
அவலத்துடிப்பு.
மென்குரலில் வெளியழைப்பு.
அவளுக்கோ அவலத்துடிப்பு
கழுத்து முடிச்சு பற்றுக்கோடா?
தடையுத்தரவு.
முள்வேலி.
கம்பிக்கயிறு கட்டுமானம்.

பூச்சிலை நெளிகிறது.
திரையாகி அலைகிறது.
துருப்பிடித்த
சன்னலுக்குத் தெரியுமா
சீலையின் தவிப்பு?”

என்னும் கவிதையில் பெண்ணின் அக விடுதலை வேட்கையானது, வேலிகளைக் கண்டு துவண்டு விழுவதும் அதன் உணர்வுகளை பெண் தானே எழுப்ப முயல்வதுமாய் அற்புதமாய் கவிதை கோர்த்திருக்கும் வலிமை மீனாட்சி அவர்களுடையது.

மதுரை நாயகியே என்னும் மற்றுமொன்றில்,

“மதுரை நாயகியே!
மீனாட்சித்தாயே!
படியேறி
நடை தாண்டி
குளம் சுற்றி
கிளி பார்த்து
உன்னருகே ஓடிவரும்
உன்மகளை
உன்மகனே ஏ
வழிவம்பு செய்கின்றான்
கோயிலிலும் காப்பில்லை
உன் காலத்தில்-
அழகி நீ!
எப்படி உலாப்போனாய்?”

என்று கேட்கிறார். இன்றும் இந்த கவிதை பொருந்துவது நமது சமூகத்தின் அழுக்கான முகமதை கண்ணாடியிட்டு காட்டுகிறது.

மூத்த கவிஞரான பூரணியின் மரபில் தொடங்கிய கவிப்பயணம் நவீனத்திலும் தொடர்கிறது. இவரின் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனை, பெண் விடுதலை குறித்த கவனமும் தூக்கலாகவே உள்ளது. ஆணாதிக்கம் என்பது ஆண்டவனிடமும் உள்ளதை சுட்டுகிறார்.

தன்னுடைய ‘ஆண் குணம்’ என்னும் கவிதையில் இராமன் என்னும் ஓர் அவதாரத்தையே தோலுரிக்கிறார்.

“கணவனால் காடடைந்து
கயவனால் சிறை புகுந்து
தலையினை குனித்து வந்த
மனைவியாம் சீதை தன்னை
மறுபடி வனம் துரத்தும்
மணமுடை இராமன் தன்னை
கடவுளாய்ப் பார்க்க எந்தன்
உளமது இசைவதில்லை”

என்கிறார் அவர்.

ண்பதுகளில் அறிமுகமாகி தொண்ணூறுகளில் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களாக வளர்ந்த வாசுகி, உமா மகேஸ்வரி, ப.கல்பனா, கனிமொழி ஆகியோரும் தொன்னூறுகளில் அறிமுகமாகி முக்கியமானவர்களாக விளங்கிய சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி, மாலதி மைத்ரி ஆகியோரும் பெண்ணியம், தலித் பெண்ணியம், உடல் அரசியல் போன்ற பல்வேறு தளங்களில் இயங்கினர். இவர்கள் தங்களின் உடல் சார்ந்த அனுபவங்களை நவீன கவிதைகளில் புதிய கோணத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். அழகியலையும் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

அழகியல் 

சுகிர்தராணியின் கவிதைகள் உடல் மொழியிலும் அழகியலை பேசுகின்றன.

புனைவுகள்’ என்னும் தலைப்பின் கீழ் அவரின் கவிதை,

“ஒரு மாயக்காரனின் கையுயர்த்தலில்

சடக்கென முகிழ்க்கும் மஞ்சரியாய்

நரம்புகள் புடைத்தயென் கைகளில் குவிகின்றன

என்னைப் பற்றிய புனைக்கதைகள்

தீ அசையும் ஓசையில்

அசாதாரணமாய் புரட்டிப் பார்க்கிறேன்

நீர்த்தாவரங்கள் மல்கிய குளத்தின்

குறுக்கலையென

புனைவுகளில் பரவுகிறதென் பிம்பம்

பருவ திரவத்தில் தோயாத என்னுடல்

அரும்பி அரும்பிப் பின் பூத்திருந்தது

உடல்கள் கிடத்தப்பட்டிருந்த அறையில்

உறக்கத்தைக் கலைத்த கூடலோசையில்

வேர்விட்டுக் கிளைத்தயென் ரகசிய இரவுகள்

சொல்லப்பட்டிருந்தன

இருளின் அரங்கத்தில்

தானே புணரும் சாகச நிகழ்வு

ஒற்றைக்காலில் நிறுத்தப்பட்டிருந்தது

காமவாசனை வீசும் தோழியின் தேகத்தில்

இலவம் பஞ்சடைத்த படுக்கையின் வளைவுகளென

புதைந்திருந்தது கட்டப்பட்டது

புனைவுகள் எப்போதும்

உப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன

அவைதான் வாழ்க்கையை மலர்த்துகின்றன

இந்த கவிதையையும் “

குடும்ப வன்முறை, பெண்ணடிமை :

பொருளாதாரத்தில் பலமிழந்து நிற்கும் பெண்கள் ஆண்களையே எல்லாவற்றிற்கும் நம்பி இருக்கின்றனர். உழைக்கும் பெண்களும் தன உழைப்பின் பெரும்பகுதியை குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவழிக்கின்றனர். குடும்ப வன்முறை, ஆணாதிக்கம் போன்றவை பெண்களின் நித்தமுமான பிரச்சனைகள். இதை பெண் கவிஞர்கள் பலரும் பலமாய் எடுத்துரைக்கின்றனர்.

மாலதி மைத்ரிவீடுகளால் ஆன இனம்’ என்ற கவிதையில் பெண்கள் எதிர்கொள்ளும் இந்த குடும்ப வன்முறை குறித்து சொல்லியிருப்பார்..

“ஊரின் அனைத்து வீடுகளும்
நடப்பட்ட பெண்களென நிற்கின்றன
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்
யாரோ ஒரு ஆணிற்காக
ஆயுள் முழுவதும் காத்துக்கிடக்கின்றன
வயதுக்கேற்றபடித் தம் உறவுகளுக்காக

கொலைகாரன் திருடன்
குடிகாரன் துரோகி மோசடிக்காரன்
ஊழல் செய்பவன் ஏமாற்றுபவன் விபச்சாரன்
கொடுங்கோலன் காமவெறியன்
சாதிவெறியன் மதவெறியன் இனவெறியன்
இவர்கள் யாரையும் வீடு கைவிட்டுவிடுவதில்லை
அவரவருக்கான வீடு எப்போதும் இருக்கிறது “

கவிஞர் மு சத்யா தன் கவிதையில் குடும்பத்துள் இயங்கும் ஆணின் வலிமையை வடிக்கிறார்.

“என்றைக்கேணும் ஒரு நாள்
நான் காணாமல் போய்விட்டால்
அடுப்படியின் பரணிலோ
சிலிண்டரின் மறைவிலோதான்
முதலில் தேடுவார்கள் போலும் “

என்னும் சொல்லாடல்கள் பெண்ணின் வலியை எடுத்துரைக்கின்றன. எத்தனைதான் பெண் பொருளாதார சமத்துவம் பெற்றாலும், சமையலறை என்பதை பெண்ணுக்கானது என்னும் போக்கில் மாற்றம் பெரிதுமில்லை.

“ஒரு நாளேனும்
வாழ வேண்டும்
நான் நானாக “

என்கிறார் இன்னொரு கவிதையில். இவ்வரிகள் பெண்ணை சுயமாய் வாழ வேண்டுகிறது. பெண் விடுதலையை வலியுறுத்துகிறது.

கவிஞர் தேன்மொழி தன் கவிதை ‘மழைக்கால மௌனத்தில் ‘ சிறு பெண்ணாய் மாற ஏங்கும் நிலையை இயம்புகிறார்.

“மழைக்கான அறிகுறியோடும்
மழையோடும் அந்த சிறுமி
பிரசவிக்கிறாள் என்னிலிருந்து
தனித்துவமான ஒரு சோகத்தை சுமந்து
எல்லா பரவசங்களையும் மறைத்து
தனியாய் என்னை அடைகாக்கிறாள்
மழையின் இழைகளில் முகாரி
பாடுகிறாள் ஆத்மாவின் ராகமாய் 
எனக்கான அந்த நேர சங்கீதம்
அவளிடமிருந்து கடன்வாங்கப்பட்டவை
மழை பட்டவுடன் மறைந்து விடும்
வானவில்லைப் போல
மழை விட்டவுடன் என்னைவிட்டு
அவள் கடந்துபோக நேர்கிறது “

மூத்த கவிஞர் கிருஷாங்கினி தன் கவிதை ஒன்றில், பெண்ணையும் புன்னை மரத்தையும் ஒப்பீடு செய்கிறார்.

“மரம் நடு விழா வைபவத்தில்
நட்டு நிறுத்தப்படுகிறது;
விழா எடுக்காமலும் தெருவோரம்
ஏதோ ஒரு பெயர் தாங்கிய
இரும்பு வேலியின் நடுவில்.

நீர் கோராது அதிகம்
விலங்குகள் அண்டாது, நின்று
வேகமாய் வளரும்;
கிளை நுனியில் பெரிதாய் விரிந்து
கண் பறிக்கும் கவர்ச்சி காட்டாமல்
வண்ணத்தால், வாசனையால் 
திசை திருப்பாது மெல்லிய சிறு பூக்கள்
உச்சியில் பூக்கும். பூப்பது தெரியாமல் 
தரை உதிரும் சிறு பூக்கள் கொண்டு
கண்டடையலாம் இதன் வசந்தத்தை.

மேன்மேலும் வளர்ந்து வானெட்ட
முயலாது ஒருபோதும்.
பாங்காக ஐந்தடிக்குள்
உடலை நிறுத்தி வைக்கும்
கிளை விரித்து நிழல் கொடுக்கும்
பெரும் கொடையாய்.

ரயிலடியில் ஒன்றுக்கும் மேலாய்
ஒரே சிமென்ட் வட்டத்துக்குள்
முரணின்றி இணைந்து வாழும்.
எல்லோருக்கும் உகந்ததாய்,
யாருக்கும் உறுத்தாததாய்
ஆங்காங்கே வளர்ந்து நிற்கும்
இப்புன்னை தன் கண்கள்
இமை மூடி சிதறவைக்கும், 
காலடித் தளம் பரப்பினாலும் கூட

இட நெருக்கடியில் சற்றே இடம் மாறி
குறுக்காக வளர முற்பட்டால்
சட்டென்று முறிக்கப்பட்டு
மொண்ணையாகவே நிற்கும்
இப்புன்னை-
பெண்ணைப்போல “

கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினியின் உக்கிரம் மிகப்பெரிது. எதையும் சொல் வன்மையுடன் திடமாய் சொல்பவர். அவரின் கவிதையொன்றில்,

“பாரதி

மீண்டும் பிறக்க நீ தயார் என்றால்

உன்னை சுமக்க

என் கருப்பை தயார் “

என்கிறார்.

மற்றொன்றில்,

“பெண் ஓர் இல்லறத் துறவி

பனிக்குட நீரே அவளின் அபிஷேக நீர்

கருவறையே சாமி குடியிருக்கும் கருவறை

தாய்ப்பாலே பாலாபிஷேகம்

தொப்புள் கொடியே அவளுக்கான ருத்ராட்ச மாலை

இல்லறமே அவளின் துறவறம் “

ஆண் துறவறம் வேண்டினால், எப்போது வேண்டுமானாலும் குடும்பத்தை நிர்கதியாய் பெண்ணின் தலை மேல் போட்டுவிட்டு உடுத்திய உடையுடன் சிறு பையுடன் இமயமலை நோக்கி சென்றுவிட முடிகிறது. ஆனால் பெண்ணுக்கோ இல்லறமே துறவறம்; அதுவே அவளின் நல்லறம் என போதிக்கப்படுகிறது. இந்த அடக்குமுறையைதான் இதில் வெளிப்படுத்துகிறார்.

காதலின் இழப்பு : 

காதல் என்னும் யுக்தியில் பெண்களின் மீதான ஆண்களின் ஆளுமை அடக்குமுறையாகவும் ஆதிக்கமாகவும் மாறும் அவலத்தை கவிஞர் திலகபாமா சுட்டுகிறார். பெண்களை எப்போதும் பரிதாப நிலையிலேயே வைத்திருப்பது, ‘அழாதே, அருகில் வா’ என்னும் பரிதாபங்களும் அதன்பின் அடிமைபடுத்தும் போக்கினை கொண்டு வருவதையும் சுட்டும், இவரின் பெண்ணியக் கவிதைகள்.

சிலுவையில் காதல் என்னும் கவிதையில்

 “தனிமையில் சொற்களை விட்டு விடு.

அவை அவைகளாகவே இருந்து விட்டு

போகட்டும்

உன் கண்ணீர் உவர்ப்பில் ஊற வைத்து

தனிமை கசிவில் நெகிழ வைத்து

கோப தாப தகிப்பில் உலர விட்டு

இன்னொன்றாய் மாறிப்போகும் சொற்களை.

என்னது என எப்படி கட்டியங் கூறுவேன் “

என்று கேள்வியை முன் வைக்கிறார்.

காதலின் நிராகரிப்பை ‘கட்டையடுக்கல்கள்’ என்னும் கவிதையில்,

“நிராகரிப்பு நெருப்பை
வீசியெறிய
முன்னாலிட்டு 
குளிர் காயத் துவங்குகின்றாய்

போகட்டும்
நிரத்தரமில்லை குளிர் காயல்கள்
காற்றுக் காலம் வர
சுற்றிச் சுழலும் காற்றோடு
கனன்று உனைச் 
சிறை வைக்கக் கூடுமொரு நாள் 

எரிக்கும் கோடைக் காலம்
எதிர் நிற்க
வெந்து உரியும் முகத் தோல்கள்

நான் எரிந்ததை நெருப்பாய் 
நீ உணரும் வரை
என் தீக்குளிப்புகள்
எனக்கான நிரூபணங்களாக இல்லாது
உனக்கெதிரான
கட்டையடுக்கலாய் “


மாலதி மைத்ரி ‘உண்மைக் கதை’ என்னும் கவிதையில்,

“நம் உறவின் பாலங்கள்

என்னிடம் ஒற்றைபடையாகவும்

உன்னிடம் இரட்டைபடையாகவும்

பிரிந்துவிட

என் கதை முளுமைஎன நானும்

உன் கதை முளுமைஎன நீயும்

சொல்லித் திரிய

கேட்பவரின் வாயிலிருந்து

கோழையாய் வழியும் வரிகள்

உண்மைக் கதைகளாய் அச்சேறி

ஊரெங்கும் விற்பனையாகிறது “

கணவன் மனைவி பிரிவு என்றால் ஊரே புறம் பேசும் என்பதை சுட்டுகிறார்.

உடல் மொழி :

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கவிதைகள் பலவற்றிலும் பெண் கவிஞர்கள் குடும்ப வன்முறைகளுக்கு எதிர்ப்பு காட்டுவதைக் கடந்து வெளிவரவில்லை. அதை எதிர்த்தே கவிதை எழுதினார்கள். பெண் பாதுகாக்கப்படுபவள், சொன்னதைக் கேட்பவள், படுக்கை சுகம் தருபவள், பிள்ளைகளுடன் வாழ்பவள், வீட்டைப் பேணுபவள், தாய் என்னும் தெய்வ உருவம் உடையவள் என்னும் பொது தன்மையை அழிக்கவே பெண் படைப்பாளிகள் சிரமப்பட்டார்கள். அதன்பின் வந்த குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, லீலா மணிமேகலை, சுகிர்தராணி போன்றோர் உடல் மொழி கொண்டு கவிதை புனைந்து அதிரடியாக எதிர்த்தார்கள். பெண்ணின் தேகம், உறுப்புகள், அவளின் இச்சை போன்றவற்றை கவிதைக்குள் கொண்டு வந்தார்கள்.

கிருஷாங்கினியின் முத்தமும் மூத்திரமும் என்னும் கவிதை, முத்தத்தை முன்னிலைபடுத்தி, ஓர் அச்சாணியாய்..

“உந்துதல் ஏற்படவேண்டும்
சிறிது சிறிதாக அதிகரித்து
வேறுவழியின்றி வெளிப்படலாம்;
ஆரம்பத்திலேயே கூட செயலாக்கம்
எந்த ஜாதிக்கும் மதத்திற்கும் உண்டு
பொருளாதார ஏற்றதாழ்வு இதற்கு இல்லை
உந்துதல் முக்கியம்
காலமும் நேரமும் காலையோ,
மாலையோ இரண்டுமிணையும்
சங்கமமோ-
வேண்டும் உந்துதல்!
உள் அறையோ அல்லது
சிறு வெளியிலோ பரந்து
விரிந்த பெரும் மைதானமோ
ஆட்கள் அற்றோ
நிறைந்து நின்றோ
இளமை, நடுவயது
ஏதென்றாலும் முதுமையிலும் 
தேவை உந்துதல்;

முத்தத்திற்கு எதிராளியும் அவசியம்
எங்கும் எப்போதும் முத்தமிடலாம்,
முன் சொன்னபடி உந்துதலில்.

மற்ற பல நாடுகளில்
முத்தத்திற்குண்டு
மூத்திரத்துக்கில்லை அனுமதி
பொதுஇடத்தில்;
இங்கோ
முத்தத்திற்கில்லை
மூத்திரத்திற்குண்டு அனுமதி 
எங்கும் என்றும், எப்போதும். “

லீலா மணிமேகலையின்மீண்டும் ஒரு இரவு வந்தது’ கவிதையில், 

“நாம் காதலிக்கிறோம் என்று 
சொல்லிக் கொள்வதை நிறுத்தி
வெகு நாட்களானது
வழக்கம் போல் நினைவுக்கு வந்தது

சோரம் போய்விட்டிருந்த
கனாக் காலங்கள்
இருளை நீலமாக்கியது

படிப்படியாய்
பழக்கம் மறந்த
உடல்கள் சாதிக்கும்
கோர மவுனத்தை
நம் அகந்தைகள் 
தின்று கொறித்திருந்தன

தூங்கி எழும்
ஒவ்வொரு காலையிலும்
நம்மிடையே ஒரு பிரேதம் கிடக்கிறது
வெளியில் யாருக்கும் தெரியாமல்
அதை அப்புறப்படுத்துவதில்
அக்கறை செலுத்துகிறோம்

பகல்கள் பெரும்பாலும்
சிரமம் கொடுப்பதில்லை “

உடலால், உடலுக்கு உண்டாகும் துன்பங்களை ‘நம்மிடையே ஒரு பிரேதம் கிடக்கிறது’ என்னும் வரியில் சுட்டியிருக்கிறார்.

அவரே இன்னொரு கவிதையில்,

“கசந்தும் கிளர்த்தும்
மதுவைப் போல
ரகசிய உறவுகள்
பிடிக்கவே செய்கின்றன

கிசுகிசுப்பதற்கு
மூச்சினும் 
வேறொரு வெப்பம்
தேவையாய் இருக்கிறது

கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட
சூசகங்களை நிகழ்த்துவதில்
ஒரு நொடியேனும்
கர்வம் ஏற்படவே செய்கிறது

அசூயையில்'
இனி ஒரு போதும் இல்லை
என்று எடுக்கப்படும் முடிவுகளை
மாற்றுவதற்குரிய தடங்களை
ஒவ்வொரு தடவையும்
சந்திப்புகள்
கவனமாய் சேகரித்து 
கொள்கின்றன “

ரகசிய உறவுகளின் மீதா வேயப்படையான பார்வையை ஒரு பெண்ணால் இக்காலகட்டத்தில்தான் வைக்கமுடிந்திருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிட தகுந்தது.

தனிமையும் அதனால் எழும் காமத்தையும் குட்டி ரேவதியின் கவிதை ‘ஆண்மை இல்லை - தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’ பகிர்கிறது.. 

“அன்று மழையோ மழை
நதியின் மீதெல்லாம் மழைக்குஞ்சுகள்
அடிவயிற்றின் பயிர்மேடு
பரவசத்தில் சிலிர்த்து எழ
ரம்மியமான மந்தகாசப் புன்னகையை
உடலெங்கும் நழுவவிட்டபடி
மழை தரையிறங்கியது
நனைந்து உடலொட்டிய பாவாடையை
உயர்த்தி நின்றது காடு
ஓய்ந்த மழையை
அம்மாவின் சொல் மீறித்
திமிறிப் பறந்த பறவை சொன்னது
நினைவுகளின் தடயங்களை
மழையால் அழிக்கமுடிவதில்லை
பகல் முழுதும், பின்னும்
அதன் பாடல் ஓயவேயில்லை
மகரந்தச்சேர்க்கைக்குப் பின் தளும்பும் மலர்
சோர்வுடன்
பூமியில் எங்குமே ஆண்மையில்லை “

தனிமையின் தேடலை சொல்கிறார் அரங்க மல்லிகா.. ‘வேடிக்கை பார்க்கிறது காலம்’ என்னும் கவிதையில்,

“ஒரு கோடை வெய்யிலின்
உக்கிரத்தில்
உருகிடும் தாராய்
வழிந்தோடும் என் காமம்.

வெறிச்சிடும் சாலையில்
பயணிக்கும்
புடைக்கும் என் நரம்புகள்

காலநதியின் ஓட்டத்தில்
விளைந்திடும் காதல் பயிர்
அறுவடைக்குக் காத்திருக்கும்
இருள்கிழித்து ஊரும் பாம்பு

வரப்பிலமர்ந்து
வேடிக்கைப் பார்க்கிறது காலம்.”

அதிகமாய் உடல் மொழி கொண்டு பெண்ணியம் பேசிய கவிதைகள் கவிஞர் சுகிர்தராணி உடையவை.

‘யோனிகளின் வீரியம்’ என்னும் கவிதையில்,

“பலகோடி ஆண்டுகள்

கழிந்தொரு பரிணாமத்தில்

உபயோகமற்ற

உன் குறி மறைந்துபோகும்

அக்கணத்தில் புரியும்

உன் சந்ததிகளுக்கு

எம் யோனிகளின் வீரியம் “

என்பதில் தொனிக்கிறது பெண்ணின்றி உலகில்லை என்னும் உளவியல்.

‘பனிக்குடமும் சில பாம்புகளும்’ என்னும் கவிதையில்,

“புராதனமான என் பனிக்குடத்தில்

பாம்புகள் சில நீந்தி மகிழ்கின்றன

பெருத்த கர்ப்பக்காலம் தீர்வதற்குள்

நாற்புறமும் என்னுடல் வெடிக்கப்

பிறக்கின்றன பிளந்த வாய்களுடன்

அவற்றை பழக்குவது

அவ்வளவு எளிதாக இல்லை

சலனங்கள் பூக்காத துவாரங்கள் மறந்து

படர்ந்த என் மடியில் ஒடுங்குகின்றன

உறங்குவதற்கும் விளிப்பதற்கும்

அதனதன் வால்களையே

விழுங்கிக்கொள்ளும் உணவுப்பழக்கம்

விசித்திரமாய் இருக்கிறது

காற்றசையும் ஒலித்தருணத்தில்

பற்றுக்கொடியின் உயிர் வேட்கையால்

நட்ட என் மீதேறி

விஷத்தைக் கக்குகின்றன

என்னிழல் என்மீது விழும் மதிய பொழுதுகளில்

நீண்டு கிடக்கிறேன்

வறட்சியை ருசித்த துக்க ஆறு போல

பாம்புகளுடன் வாழ்வது

சிரமாயிருக்கிறது

இல்லாமல் வாழ்வதும் “

என்று பெண் உடலின் இம்சையான அனுபவங்களையும், இருந்தும் தேவையிருப்பதையும் சொல்கிறார்.

இதே பாணியில், உடலின் மீதான ஆக்கிரமத்தில் பெண்ணின் இணக்கத்தை ஆண் கேட்பதில்லை என்பதையும் இருந்தும் இருவரும் இருந்தால்தான் வாழ்க்கை என்பதையும் கவிஞர் அகிலா ‘ரகசியமாய்’ என்னும் கவிதையில்..

“வரும் நேரங்களிலெல்லாம்
ஆடை அவிழ்க்க பணிக்கிறாய்
ஆடையற்ற தேகம், 
தனங்களைக் கொண்டு 
சுவாசிப்பதை ரசிக்கிறாய்
பற்களின் பசிக்கு அவற்றை
பரிதாபமின்றி நசுக்குகிறாய்
விடைத்து எழுவதை கொண்டு
விதைப்பைகள் கனமிறங்குவரை
விடாமல் வதைக்கிறாய்
வலியின் வாதனை
சுகம் தருவதாய் சிரிக்கின்றேன் 
நீ இல்லாத நாட்களில்
உனக்காய் இயங்குகிறேன்

அறியா பருவத்தில் 
கல்லடித்து கடித்த 
மாங்காயின் நியாபகமாய் 
ஊரறியா ரகசியமாய் 
நம்புகிறேன்,
எப்போதும் என்னுடன் 
நீ.. “

மாலதி மைத்ரியின் ‘அசல் அசைவம்’ என்னும் கவிதையில் ஆண் பெண் முத்தங்களுக்கு இடையே ஆன வேறுபாடுகளை பகிரங்கப்படுத்துகிறார்.

“பெண் முத்தம்
துடிக்கும் இறாலை
உயிராய் உரித்துண்பது
பதனீயுடன்

ஆண் முத்தம்
பச்சைக் கணவாய் மீனை
பற்கடிப்படாமல் பனங்கள்ளுடன்
சுவைப்பது.”

இரண்டாம் ஜாமத்தின் கதை’யில் ஒரு இடைக்கவிதையில்,     

“சுவரோவியத்தில் அமைதியாக

அமர்ந்திருந்த புலி

இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்

என் தலைமாட்டில மர்ந்து

உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது “

‘புலி’ என்பது காமத்தின் குறியீடாகச் சொல்லப்பட்டிருக்கிற எனலாம். இவ்வாறு உடலின் மொழியை வெளிப்படையாக பெண் கவிஞர்கள் வைத்திருப்பது பாராட்டத்தக்க ஒன்றாய் பார்க்கலாம். 

மனவோட்டங்கள் :

ஆண்களைவிட பெண்கள் அதிகமாய் உணர்வுடையவர்கள். சிறு சம்பவங்களைக்கூட முக்கியமாக நினைப்பவர்கள். கவிஞர் சுகந்தி சுப்பிரமணியன் தன் கவிதைகளில் வீட்டில் இருக்கும் பெண்ணின் உணர்வுகளை சுதந்திர உடையதாய் காட்ட விளைகிறார். சுகந்தி அவர்களின் கவிதைகள் பெண்ணின் சுயவிருப்பங்களை தெளிவாய் எடுத்தியம்புவன. பெண்ணியம் பேசிய முன்னோடி கவிஞர் இவர்.

மாதவிலக்கு சமயத்தில் பெண் படும் துயரம் இக்கவிதையில், 

“மூன்றோ ஐந்தோ என இம்சைப்படும் 
தினங்களில்
நடந்து விடாதே
உன் தனியிடம் தவிர
இன்னொரு மூலைக்குச் கூட.
இந்த நாட்களில்
நீ கிடைத்த நேரமெல்லாம்
தூங்குகிறாய்
அல்லது துன்பப்படுகிறாய்.
குறைந்தபட்சம் ஒரு குட்டிப்பிச்சைக்காரி
ஆகி விடுகிறாய்
நிவாரணமில்லாத வயிற்றுவலி எப்போதும்.
கால் குடைச்சல் என்றாலும்
மரியாதைக்கு பயந்து
மாமியாருக்கு எழுந்து நிற்க வேண்டும்.
நடக்கப்பழகும் குழந்தைக்கு
கை கொடுத்து கால் ஆகணும்.
ஆனால்
உதவி செய்ய ஆளில்லாமல்
மாதாந்திர தொல்லைகளில்
சமைக்கும் சமையல்
தேவையானது எல்லோருக்கும்.
இன்னொரு முறை தள்ளிப்போவது தெரிந்தால்
சந்தோக்ஷம் கொள்ள முகமிருக்குமா?
முகம் கறுத்து
‘போதும் கலைத்து விடு’
என்று சொல்லப் பக்கத்து வீட்டில் கூட
ஆட்கள் இருக்கக் கூடும்
நானோ சமைத்த பின்
தனியிடம் செல்வேன்.
அவர்களெதிரே டி.வி.யில்
விளம்பரத்திற்காய் stay free யுடன்
நடக்கும் சிரிக்கும்
இளம்பெண் “

என்கிறார். 

மற்றுமொன்றில், பெண்களை மூர்க்கமாய் கையாளும் ஆண் இனத்தின் எதிரே தான் எலும்பு கூடாகி நிற்பதை. கவிதையில் இயம்புகிறார்..

“ஐயோ..

என்னை எலும்புக்கூடாக்கி கூடத்தில்

தொங்கவிட்டுவிட்டார்கள்

பரவாயில்லை

காட்சிப் பொருளாகவாவது

எனக்கும் உபயோகமானது “ 

அடிமைகளாகவே வாழும் பெண்கள் குறித்த கவலையில் ஒரு கவிதை.

“வாழ்க்கை பூராவும் தியாகம் செய்வதா?

நான் கேட்டேன் அந்தப் பெண்களை

இதுதான் வாழ்க்கை என்றாள் ஒருத்தி

எனக்கு பிடிக்கவில்லை என்றாலும்

வாழ்கிறேன் என்றால் மற்றவள்

ஜடமாய் உணர்கிறேன் என்றாள் இன்னொருத்தி

வெள்ளிக்கிழமையும் வியாழனும்

விரதமிருக்கிறேன் அம்மனுக்கு

தீரும் என் கவலைகள் என்றாள்

மற்றுமொருத்தி

இவர்களின் அனுபவங்கள் என்னுள்

அடங்க மறுத்து அதிர

மௌனமானேன் “

என்று சொல்கிறார். 

ஆணின் மனவோட்டமாய் ‘தேடல்’ என்னும் கவிதையில் அகிலா, முதலிரவுக்கு பின் ஆணின் தேடல் எதை நோக்கியது என்பதை..

“முடிந்த முதலிரவுக்குப்பின்

புள்ளி போட்ட படுக்கை விரிப்பில்

தேடிக்கொண்டிருக்கிறான்

இரத்தத்தின் சுவடுகளை,

புதிது புதிதாய்

நிறமற்ற விந்தினை

உருவாக்குபவன்.. “

பெண் தனது மனதில் இருப்பதை புலம்பலாய் வெளிபடுத்துவதை, கவிஞர் தி பரமேஸ்வரி அவர்கள் ஒரு கவிதையில், 

“காலையில் எழுகையிலே
ஆயிரம் கைகள் முளைக்கும்
தோசை சுடுவாள்
துணிமணி துவைப்பாள்
கத்தும் குழந்தையைத்
தட்டிச் சமாளிப்பாள்
அலுவலகம் கிளம்பும்
மறதிக் கணவருக்கும்
மூளையாய் இருப்பாள்
எல்லாம் முடித்து
அலுப்புடன் அமர்ந்து

டிவி காம்பியருக்கு

பாவமாய் பதில் சொல்வாள் 
'ஹவுஸ் வொய்ப்தான்' நான்! “

மகனாக இருந்தாலும் அவனும் ஆணே என்னும் நிதர்சனத்தை சாட்டையாய் சொடுக்குகிறார் இன்னொரு கவிதையில்,

“வேலை முடிந்து 
வந்த களைப்பில் 
கவனமின்றியே
உடை களைகிறேன்;
அனிச்சையாகக் 
கூர்மையாயின புலன்கள்!
எதிரில் என் தாயும்
நான் வளர்த்(ந்)த குழந்தையும்...
வெகு கவனமாய்
உடை திருத்துகிறேன்
அவன் இளமை 
மனதில் அறைய! “

அகிலா தன் கவிதையில், தன் குடும்ப கடமைகள் எல்லாம் முடிந்து, பெண்ணின் அபிலாஷைகள் தொடங்கும் வயதில், என்னவாகிறது என்பதை சொல்கிறார்.

“குயிலை கருமையெனவும்

குயிலின் குரலை இனிதெனவும்

அடையாளப்படுத்த உங்களால் முடியும்

பெண் குயிலை யாருக்காவது தெரியுமா?

உங்களைப் போலவே அவளும்

அவளின் நாற்பதுகளில்தான்

அதை பார்க்க நேர்ந்தது

அவ்வமயம்தான் கருமுட்டைகள்

தீர்ந்து போகத்தொடங்கியது

அவளுக்கும்.. “

பெண்ணாய் பிறந்தால் சிறுமிக்கும் துயருண்டு என்பதை கவிஞர் கீதாஞ்சலி பிரியதர்ஷனிஞாபகங்கள் மேலும் சில சொல்வது’ என்னும் கவிதையில்,

“சற்று முன் விரைந்து வழியே

சென்ற பேருந்தை தவறவிட்டு

கிழிந்துவிட்ட பொழுதோடு இக்கணம்

தனியே நிற்கிறேன், தனது

இடது கால் செருப்பு அறுந்துவிட்ட

துயரோடு இளம் சிறுமியொருத்தி

கேளிக்கை மறந்து கூம்பின சிறு

மலரென முகத்துடன் வருகிறாள்

துணைக்கு என்று இந்த

ஒற்றை செருப்பு சிநேகிதி

இரக்கமற்ற தேவன், இன்று

அவளிடமாவது கருணையோடு

இருந்துவிடக்கூடாதா, மெல்ல

ஆசிர்வதிக்கிறது பள்ளிக்கூடச் சுவர்கள் “

கவிஞர் சல்மா தன் கவிதையில், மாதவிடாய் குறித்து,


“வேறெந்த பொழுதுகளையும் விடச்
சுமக்கவே இயலாத படிக்கு
எப்படி இவ்வளவு கனத்து விடுகிறது
இந்த மாலை 
மாதவிடாய் ஈரம் நிரப்பிக்
கனக்கிற பஞ்சைப் போல”

மாதவிடாய் குறித்து கவிஞர். . வெண்ணிலா எழுதிய ‘பச்சை தேவதை’ கவிதையும் குறிப்பிடத்தக்கது.


“தேதி மாறாமல்
திட்டமிட்டதைப் போல்
மாதா மாதம்
நிகழ்கிறது
எனக்கான சுழற்சி என்றாலும்
நிகழும் முதல் கணம்
விபத்தொன்றை 
சந்தித்தாற் போல
அதிர்கிறது மனசு “

என பெண் உணரும் அசௌகரியத்தைத் தெரிவித்துள்ளார். பெண் வலியைக் கூறுவதும் பெண்ணியமே. இவ்வாறான இயற்கை உபாதைகளிலிருந்து பெண்ணுக்கு விடுதலை இல்லை எனினும் இதை பிறரும் உணர வேண்டுமென்பதே இக்கவிதைகளின் நோக்கமாக உள்ளது.

தீண்டாமை’.என்னும் கவிதைக்குள் கவிஞர் கனிமொழி அவர்கள்

“சட்டம் எழுதியாயிற்று.

எல்லாச் சாதியும் கோயிலுக்குள் வர.
எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை “

என சமத்துவம் பேசியுள்ளார்.

“ஊன் மெச்ச உன்னுடம்பில்
அய்ம்பது சதம்(சக்திக்கு)
ஒதுக்கீடு செய்தாலும்
உனக்குள்ளும்
இருக்கத்தான் செய்கிறது
ஆதிக்க உணர்வு என கண்டித்து
இல்லையெனில்
காலுயர்த்தி செவி தொடுவாயா
சிவனே? “

என வினவியுள்ளார் கவிஞர் சக்தி அருளானந்தம் தனது ‘இருளான்மை’ என்னும் கவிதையில். சக்திக்கு தன உடலின் சரி பாதியைக் கொடுத்த சிவனே ஆனாலும் அவனிடமும் ஆணாதிக்கம் இருப்பதை கண்டு கொதிக்கிறார் கவிஞர். இது பெண்ணின் அடங்கமான வாழ்வுக்கு காட்டும் நெறிமுறைகள் என்ன்றும் கொள்ளலாம். அவ்வகையில் இது முக்கியமான கவிதையாய் மனதில் படுகிறது.

கவிஞர் உமா மகேஸ்வரி ‘கற்பாவை’ தொகுப்பில் 

“சமையலறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்
சுவரோடு பந்து விளையாடுகிறவனை
பந்தை எறிய எறிய
திருப்பியடித்தது சுவர் உற்சாகமாக
ஒரேயொரு முறையாவது பந்து வீச
சுவருக்கும் வாய்ப்புத் தந்திருந்தால்
இப்படி மூர்க்கமாய் உடைத்திருக்காது “

பெண்ணை சுவராய் கற்பனை செய்து, அவளின் எதிர்க்க முடியாத இயலாமையை எடுத்துரைக்கிறார். இம்மாதிரியான எழுத்துகளே சமூகம் மாறவும் பெண்ணை நிமிர்ந்து பார்க்கவைக்கவும் செய்தன எனலாம்.

சமூகம் :

வர்க்க ரீதியான சமூக ஏற்ற தாழ்வுகளை வெளிப்படுத்தும் தலித் பெண்ணியம் குறித்தும் பெண் கவிஞர்கள் அதிகமாய் கவிதைகளில் பேசியிருக்கிறார்கள்.

மாலதி மைத்ரி தன ‘படுகளம்’ கவிதையில்,

“தெரு வாசலில் வெளிச்ச
சட்டத்துக்கு அப்பால் நின்று
குரலெடுப்போம்
‘அம்மா அன்னம் போடுங்க’
கூடப்படிக்கும் பொடிசுகள்
எட்டிப்பார்த்துவிட்டுச் செல்லும் “

இன்னொரு கவிதையில்,

“ஏகாலி வந்திருக்காம்மா
அம்பட்டவன் வந்திருக்காம்மா
தோட்டி வந்திருக்காம்மா
சக்கிலி வந்திருக்காம்மா
குடிப்புள்ள வந்திருக்காம்மா 

என்று சாதி விளிப்புகள் தான் சிறுமியாய் இருந்த காலத்தில் தன கிராமத்தில் இருந்ததாய் சொல்கிறார். வர்க்க வேறுபாடுகள் சிறு வயதில் இருந்தே நம் வாழ்நிலங்களில் பதிக்கப்படுகின்றன என்பதே பரிதாபம். 

“உடலே பெரும் பிச்சைப் பாத்திரமாக
வாய்ப்பிளந்து நிற்கிறோம்
எல்லாக் காலங்களுக்குள்ளும்

எல்லாத் தர்மங்களும்
நமது பாத்திரத்தில்
இடப்படுகின்றன
அவை ஒரு பழகிய
விலங்கெனப் படுத்திருக்கிறது “

என்றும் வருந்துகிறார். கூனி குறுகிய உடலே பிச்சை பாத்திரமாகி போகிறது என்பதை சொல்கிறார். 

கவிதைகள் வழி பெண்ணியம் பேசிய, கவிஞர் பாலபாரதி,


“எவரிருத்தலையும் உணராது
எல்லார் முன்னிலையிலும்
மேல் சட்டை கழற்றி
பனியனை உதறி
கைகளுக்குள் புகுந்து
தொப்பை தடவி
கால் மீது கால் போட்டமர்ந்து
உரக்க பேசி சிரிக்கும்
ஆண்களின் பயணம்
தொடர்கிறது.
அப்போதெல்லாம்
தலை குனிந்து
நகம் கடித்து
புத்தகம் தேடுவது போல்
பாவனை செய்து
பார்வையை வெளியேற்றி
சமூக அடிமையாய்
ஒடுங்கச் செய்கிறது
பெண் பயணிகளை “

தான் ஆண் என்னும் கர்வத்தில் வெட்கமற்று செய்யும் செயல்கள் பெண்ணை எவ்வாறு ஒடுங்கச் செய்கின்றன என்பதை சொல்கிறது இக்கவிதை. ஒரு முறை ரயில் பயணத்தின்போது, ஈரோடு நிலையத்தில் ஒரு காட்சி. ஒரு தொடர் வண்டியில் கோவிலுக்கு போவதற்காய் மாலை அணிந்திருந்த ஆண் பக்தர்கள், தாங்கள் வந்த வண்டி நிற்கும், தண்டவாளத்தின் மீது இருக்கும் தொடர் வண்டி கழுவ உபயோகப்படுத்தும் தண்ணீர் குழாய் கொண்டு அரைகுறை ஆடையுடன் நின்று குளிக்கும் காட்சிதான் அது. பொது வெளியில் எத்தனை பெண்களுக்கு இக்காட்சி சங்கடத்தை உண்டு செய்திருக்கும் என்பதை இக்கவிதை சொல்லும் கருத்தில் புரிகிறது.  

ஒடுக்கப்பட்ட இனம், அதன் மக்கள் குறித்த ‘பறக்கடவுள்’ என்ற கவிதையொன்றில், கவிஞர் சுகிர்த ராணி

“சொல்லுகிறீர்கள்

முதுகு விரியக் காய்ந்தால்

அதன் பெயர் பறவெயில்

உலரும் புழுத்த தானியத்தை

அழகு கொத்தி விரையும்

அது பறக்காகம்

கையிலிருப்பதை

மணிக்கட்டோடு

பறித்துச் சென்றால்

அது பறநாய்

நிலத்தை உழுது

வியர்வை விதைத்தால்

அது பறப்பாடு

சகலத்திற்கும் இப்படியே

பெயர் என்றால்

இரத்தவெறியில் திளைக்கும்

எது அந்தப் பறக்கடவுள் “

சாதீய பிரிவினைகளால் நேரும் உயிர் இழப்புகளுக்கு எந்த கடவுளைக் கைகாட்டிவிட முடியும் என்னும் வலி தெறிக்கிறது இக்கவிதையில்.

பெண்ணியம் வேண்டுவோம் :

வளையல்களிலும்

வண்ண சேலைகளிலும்

தேடுகிறாள்

பெண்,

மறக்க நினைக்கும், தன்

வலிக்கான காரணிகளை.. என்பதாய் ஒரு காலத்தில் இயங்கிய பெண் இன்று கவிதை என்னும் ஆயுதம் தரித்து, பெண் சமத்துவம் கோருகிறாள்.

பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணின் உடல் மீதான ஆக்கிரமிப்பு, கர்ப்பங்கள், மாதவிடாய், பெண்ணின் அறிவு, பெண் சுதந்திரம் பேசும் பெண் கவிஞர்களின் பல கவிதைகளில் அடிமை விலங்கின் அவலங்களும் அதை உடைத்தெறிய வேண்டிய வேட்கையும் வெளிப்படுகிறது.

பல கவிதைகளில் அதற்கான தீர்வுகள் தரப்படவில்லை. மீண்டு வருவதும் சொல்லப்படுவதில்லை. போராடும் வலிகள் மட்டுமே காட்டப்பட்டிருக்கின்றன.. இருந்தும் அவை பெண்ணியம் பேசுகின்றன. பெண் குறித்து ஆராய்கின்றன. தீர்வுகள் தேவையில்லை என்பது என் கருத்து. ஆணாதிக்க சமூகத்தை இப்படிதான் நீ நடந்துக்கொள்ள வேண்டும் என்று ஆணையிட அவசியமில்லை. பெண்ணின் வலிகளை யதார்த்த நிலையை எடுத்தியம்பும் போதே ஆணாதிக்க சமூகம் யோசிக்க தொடங்குகிறது. மாற்றம் செய்துக்கொள்ள நினைக்கிறது. மாறும் என்பதாய் ஆன பாவனைகளுடன் பரல்கள் இட்ட சாலையை சீரமைக்கத் தொடங்குகிறது.

நிச்சயம் தன் வலிகள் தீரும்வரை வார்த்தை கொண்டு வலிமை சேர்க்கும் இந்த பெண்ணினம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

பெண்ணியம் வேண்டுவோம் ! பெண்ணியம் போற்றுவோம் !

- அகிலா

Pin It