“இது நாம் வெல்லும் மலை அல்ல; ஆனால் நாமே..” ~ சர் எட்மண்ட் ஹிலாரி, மலையேறுநர் 

வனம், வனம் சார்ந்த வாழ்க்கைக்குப் பழகியிருந்தவன் ஆதிமனிதன். அவனைதான் இன்று நாம் மலைவாழ் பழங்குடியினர் என்று சிறிதொரு வட்டத்திற்குள் சுருக்கியிருக்கிறோம். நாகரிகத்தின் வாசலில் நின்ற அன்றைய மனிதன் தன்னைச் சமவெளி நோக்கி நகர்த்திக்கொண்டான். அல்லது வனம் அழித்து அவனுக்கென வசதிகள், பாதுகாப்பிற்கான வாழ்வியல், உணவிற்கான விளைச்சல் என்று ஏற்படுத்திக்கொண்டது யதார்த்தம்தான். சமவெளி வாழ்க்கை அவனுக்குள் நாகரிகத்தைப் பெருக்கியது எனலாம். அதையும் கடந்து, அவனின் வரம்பு மீறல், பூமி குடைந்து சுரங்கமாகவும், மரம் வெட்டுதலாகவும் சிறுகசிறுக வனங்களுக்குள்ளும், மலைகளின் பக்கமாகவும் திரும்பிய போதுதான், மலையும் மலை சார்ந்த காடுகளையும் காக்கும் நிர்ப்பந்தம் நேரிட்டது. சூழலியல் பாதுகாப்பின் அவசியம் உணர்ந்த இன்றைய மனிதன் நூற்றாண்டுகளாக நிகழ்ந்த சரிவுகளைச் சரிசெய்ய விழைகிறான்.

merku thodarchi malaigalநம் நாட்டின் இமயமலைத் தொடர்கள், மேற்குத் தொடர்ச்சி மலைகள் போன்றவை எல்லைகளில் அரணாகவும் நம் நாட்டின் பல்லுயிர் காப்பகமாகவும் விளங்கி வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுமையும் நடந்து, கடந்த, சூழலியலாளர் டாக்டர் ஏ ஜே டி ஜான்சிங் அவர்கள், தனது ‘Walking the Western Ghats’ என்னும் நூலில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மீதான தனது கவனிப்பையும் அன்பையும் இவ்வாறு எழுதுகிறார்:

‘நான் பலமுறை அங்கிருக்கும் ஓடைகளில் என் தாகத்தைத் தணித்துக்கொண்டிருக்கிறேன். சோர்வுற்றிருந்த என் உடலை என்னைக் கடந்துச்சென்ற பனி சூழ்ந்த மேகங்கள் ஆதுரத்துடன் பற்றியிருந்தன. ஒவ்வொரு முறையும் நான் மலைகளில் இருந்து மிதவெப்ப சமவெளிக்கு இறங்கும்போது, இந்த மேற்குத்தொடர்ச்சி மலையானது அதன் சிகரங்களுடனும் பிரமிக்க வைக்கும் இயற்கை காட்சிகளுடனும், எண்ணிலடங்கா நீரோடைகளுடனும், மனிதனுக்கு ஆகச்சிறந்ததொரு பொக்கிஷமென்றும், அதன் அழிவை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது என்றும் மனதுக்குள் உறுதிபட நினைத்துக்கொள்வேன், நமது தீபகற்ப நாட்டின் பரம்பரை சொத்து அது. அதை நம்முடைய கூர்மையான அறிவினாலும் பலத்தினாலும் கூடியமட்டும் பாதுகாக்க வேண்டும்.’

அத்தகைய பெருமைமிகு மேற்குத்தொடர்ச்சி மலைகளைக் குறித்து முக்கியமானதொரு ஆவணமாக, ‘மேற்குத் தொடர்ச்சி மலைகள்’ என்னும் நூலைக் கொண்டு வந்திருக்கிறார் நமது சூழலியல் குறித்து அதிக கவனம் கொள்ளும் எழுத்தாளரான ஆட்டனத்தி என்றழைக்கப்படும் தண்டபாணி அவர்கள்.

நூலாசிரியர் ஆட்டனத்தி:

ஆட்டனத்தி அவர்களின் சூழல் சார்ந்த சிறுகதைகளை, கட்டுரைகளை என் வாசிப்பு வட்டத்திற்குள் எப்போதுமே வைத்திருக்கிறேன். வனத்துறையில் வனசரகராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் அவர். தன்னுடைய வனம் சார்ந்த அனுபவங்கள், காடுகளின் வகைகள், வனவிலங்குகள், சுற்றுச்சுழல் பாதுகாப்பு போன்ற பலதரப்பட்ட விவரங்களைக் குறித்து, ‘இங்கேயும் ஒரு ஆரண்ய காண்டம்’ என்னும் முந்தைய கட்டுரை நூலில் நிறைய பேசியுள்ளார். இந்த முறை மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்ததொரு நல்லதொரு நூலைக் கொடுத்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்து முழுமையானதொரு விவரிப்பு அடங்கிய நூலை எழுதிட வேண்டுமெனச் சொல்லி, அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு, பணி ஓய்வுக்கு பின்னும் சிரமமெடுத்து, வயது மூப்பின் உபாதைகளையும் பொறுத்துக்கொண்டு இந்த நூலைக் கொண்டு வந்துள்ளார் என்பது பெருமிதம் கொள்ளவைக்கும் ஒன்று. இந்நூலை காலஞ்சென்ற அவரது துணைவியார் திருமதி. நாகமணி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.

இந்நூலுக்கு பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொடுத்துள்ள அணிந்துரையில், ‘இந்த நூலில் மேற்கு தொடர்ச்சி மலையில் எடையும் கனமும் பொதிந்திருக்கிறது என்று சொல்ல வேண்டும் எண்ணற்ற தகவல்களால் மலைவளம் விதந்தோப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். 

‘மேற்குத் தொடர்ச்சி மலைகள்’ நூலின் மூலம் மலைகள் மற்றும் வனங்களின் இயற்கை சுற்றுச்சூழல் குறித்து விரிவாக ஆசிரியர் ஆட்டனத்தி அவர்கள் எடுத்துரைக்கிறார். பூக்கும் பூக்காத தாவரங்களின் கணக்கெடுப்பு, பாலூட்டி இனங்கள், பறவைகள், ஊர்வன, நன்னீர் மீன் வகைகள், பூச்சி இனங்கள், அச்சுறுத்தப்பட்ட உயிரினங்கள் போன்ற பலவற்றைப் பற்றி இந்நூல் பேசுகிறது. கோண்ட்வானா சூப்பர் கண்டத்தில் இருந்து பிரிந்து வந்த நிலப்பகுதி ஆசியக்கண்டத்தில் இணையும்போது இமயமலைகள் உருவானது, மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் உருவாக்கம் என்று நூல் நம் முன் நம்மின் நிலத்தின் பரப்பை விரித்துக்காட்டுகிறது.

இம்மலைத்தொடரில் இருக்கும் கோவா இடைவெளி, பாலகாட் இடைவெளி, ஆரியங்காவு கணவாய், 2695மீ உயர்ந்து நிற்கும் ஆனைமுடி சிகரம், கோயினா, லிங்கன்மகி, மேட்டூர், பைகாரா, பரம்பிக்குளம், மலப்புழா போன்ற நீர்மின் திட்டங்கள், இலையுதிர்க்காடுகள், மாண்டேன் காடுகள், மழைக்காடுகள் என்று இந்த நூல் பேசும் சுற்றுச்சூழல் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

களக்காடு வனஉயிரின சரணாலயத்தையும் முண்டந்துறை புலிகள் காப்பகத்தையும் ஒன்றிணைத்து தமிழ்நாட்டின் முதல் புலிகள் காப்பகம் உருவாகியதையும் அந்த பகுதியிலிருக்கும் முட்புதற்காடுகள், தெற்கு வெப்ப இலையுதிர் காடுகள், தெற்கு ஈரப்பத இலையுதிர்காடுகள், மித பசுமை மாறாக்காடுகள், சோலைக்காடுகள், புல்வெளிகள் என்று காடுகளின் வகைகளையும், செங்குறிஞ்சி, கோங்கு, நாங்கு,குந்திரிகம் நாவல், வேங்கை, ஆயிமா, அயினி பலா, ஈச்சமரம் போன்ற பலவகை மரங்களின் பெயர்களையும், புலி, சிறுத்தைபுலி, யானை, காட்டெருமை, சிங்கவால் குரங்கு, சருகு மான், மலபார் அணில், பறக்கும் அணில், அலுங்கு, புனுகு பூனை என்று அங்கு வாழும் பலவித வனவிலக்குகளின் பெயர்களையும், கொக்கு, நாரை, காட்டுக்கோழி, கதுவாலி, மீன்கொத்தி, பூங்கொத்திக்குருவி என்று அநேக பறவை வகைகளையும் நாமறிய தருகிறார்.

களக்காடு முண்டந்துறை மட்டுமன்றி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருக்கும் கன்னியாகுமரி வன உயிரின சரணாலயம், நெல்லை வன உயிரின சரணாலயம், திருவல்லிப்புத்தூர் சாம்பல் நிற அணில் வன உயிரின சரணாலயம், மேகமலை வன உயிரின சரணாலயம் போன்ற மற்ற சரணாலயங்கள் குறித்தும் அனைத்து விவரங்களையும் வைத்திருக்கிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள அகத்தியர், பொதிகை, மகேந்திரகிரி, குற்றால மலைத்தொடர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் வருஷநாடு, மேக மலைத்தொடர்கள், ஏல மலைத்தொடர்கள், பழனி மலைத்தொடர்கள், ஆனை மலைத்தொடர்கள், வெள்ளியங்கிரி மலைத்தொடர்கள், நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் மலைத்தொடர்களில் காணப்படும் சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் பெயர்கள் கொண்ட அட்டவனையைத் தயார் செய்து இந்நூலில் இணைத்துள்ளார். இது மாபெரும் பணியாகும். அவரின் வனச்சரகர் பணியின் நிறைவாக இந்த அட்டவணை இணைப்பை நான் காண்கிறேன். அவருக்கு என் பாராட்டுகள்.

உள்ளூர் பழங்குடி மக்கள், ‘கன்னி மரம்’ என்று அழைக்கும் 450 வருட வயதுடைய கன்னிமரா தேக்கு மரம், நெசவாளர் கற்றை மரம், வெண் மருது என்னும் அர்ஜூன் மரம், துருப்பிடித்த புள்ளிகள் கொண்ட பூனை (Rusty Spotted Cat), கரும் வெருகு (Nilgiri Marten), மென்மையான பூசிய நீர்நாய் (Smooth Coated Otter), நரை அணில் (Grizzled Squirrel), தரைக்கரடி (Grizzled Bear) போன்ற தாவர இனங்கள், பறவைகள், விலங்குகள் என்று பல தரவுகள் நூல் முழுவதும் நமக்கு கிடைக்கின்றன.

மேலும், மரத்தின் அடிப்பகுதியில் ஒரு அடி அளவு விட்டு மரங்களை வெட்டும் முறையான காப்பிஸ் சிஸ்டம் (Coppice System) அறிமுகப்படுத்திய ஆன்ரோ பிரான்சிஸ் ஹியூகோ வுட், யானை டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி, பறவை மனிதர் சலீம் அலி மற்றும் வனத்தின் பாதுகாவலர்களான பலரின் செயல்பாடுகளைத் தனி அத்தியாயங்களாக குறிப்பிட்டு பேசுகிறது, இந்த புத்தகம்.

புனிதத்தலங்கள்:

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள புனிதத்தலங்கள் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. பீமா நதியின் மூலப்பகுதியில் பீமா சங்கரின் புகழ்பெற்ற ஜோதிர்லிங்கங்கள் மற்றும் மகாராஷ்டிராவில் புகழ்பெற்ற அஷ்ட விநாயகர் கோயில்கள் போன்றவற்றில் பெரும்பாலானவை, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமையப் பெற்றுள்ள சஹ்யாத்ரி மலைகளில் அமைந்துள்ளன என்பதை குறிப்பிடுகிறார். கோவாவின் தெற்கே துங்கபத்ரா நதியின் இடதுகரையில் உள்ள சிருங்கேரியில் ஸ்ரீ சங்கராச்சாரியார் தனது தலைமை மடத்தை நிறுவியதாக எடுத்துரைக்கிறார். முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் இருவரும் புனிதமாக கருதும் லேட்டர்ரேட் குகை இந்த மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் பாபா புடான் தொடரில்தான் உள்ளது என்றும் முஸ்லிம் துறவி பாபா புடான் பெர்சியாவில் இருந்து காப்பி விதைகளை இங்கே கொண்டு வந்ததாகவும் அதுதான் இந்தியாவில் காப்பி பயிர்களின் ஆரம்பம் என்றும் வரலாறு இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

அவுரங்காபாத் அருகே உள்ள அஜந்தா மற்றும் எல்லோராவிலுள்ள புத்த குகைகள், மகாராஷ்டிராவில் ஷிவ்னேரி மலைக்கோட்டையில் உள்ள பௌத்த மையம் போன்றவை எல்லாம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு பழைமையானதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஷிரவணபெலகோலா இருக்கும் ஹாசனுக்குத் தென்கிழக்கே அமைந்துள்ள சந்திரகிரி மலையில் 14 சிவாலயங்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறார். இந்த மலைத்தொடரின் மூடபித்ரி என்னும் இடத்தில் 18 ஜெயின் கோயில்களில் மிகவும் பிரபலமான கவிரகம்பாபசதி உள்ளதாகவும் சொல்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப்பகுதியில் தான் சதுரகிரிமலை, பழனிமலையில் பழனி ஆண்டவர் கோயில், மாசாணியம்மன் கோயில், உடுமலை கட்டளை மாரியம்மன் கோயில், வெள்ளியங்கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில், மருதமலை முருகன் கோவில், அநுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் என்று பல புனிதத்தலங்களை ஆசிரியர் இதில் சுட்டிக்காட்டுகிறார்.

சூழலியல் அச்சுறுத்தல்கள்:

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காணப்படும் ஆயிரக்கணக்கான வன விலங்குகளுக்கான பாதுகாப்பு மற்றும் அவற்றிற்கு நேரும் அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக இந்த நூல் பேசுகிறது. மனிதனுக்கும் வன உயிரினத்திற்கும் நேரும் மோதல்கள் குறித்த குறிப்பில், ஆசிரியரின் வன உயிரினங்கள் குறித்த அக்கறை நமக்குப் புலப்படுகிறது.

“பல நூறு ஆண்டுகளாக வன உயிரினங்கள் இயற்கையாகப் பயன்படுத்திவந்த வழித்தடங்களும் அவற்றின் உறைவிட எல்லைகளும் அவை இனப்பெருக்கம் செய்யத் தேர்ந்தெடுக்கும் மலைக்காடுகளும் இன்று நெடுஞ்சாலைகளாகவும்,போக்குவரத்துப் பாதைகளாகவும், தனியார் தோட்டங்களாகவும், அரசுத்துறை நிலங்களாகவும், பிற வலைர்ச்சிப் பணிகளுக்காகவும் உபயோகப்படுவதால், இன்று பல்லாயிரம் வன உயிரினங்கள் வாயில்லா அகதிகளாகப் புகலிடம் தேடித்தவிக்கின்றன,” என்கிறார்.

1979 முதல் 2011 வரை 148 இறந்த ஆசிய யானைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகத் தகவல் தருகிறார். 2006 முதல் 2007 க்குள், 78 இந்திரானா தவளைகள், இந்தியக் கேப்டன் தவளைகள் மற்ற ஊர்வன என்று தேசிய நெடுஞ்சாலைகளில் அடிபட்டு இறந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் 38v பிரிவின் கீழ் புலிகளைக் காக்கும் நடவடிக்கைகளின் போது, மலைகளில் வாழும் பழங்குடியினருக்கு நேரும் பாதிப்புகள் குறித்தும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மலையை மட்டுமே நம்பிவாழும் அவர்களின் வாழ்வியல் குறித்தும் பேசியிருக்கிறார் ஆட்டனத்தி அவர்கள். மேற்கு தொடர்ச்சி மலைகளில் குறிப்பாக முதுமலையில் வசிக்கும் பழங்குடியினர் தங்கள் சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுவதையும், இதனால் அவர்கள் கலாச்சார மாற்றங்களை எதிர்கொள்வதையும் கால்நடைகளை வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தவர்களின் வாழ்வியலில் அரசு கொண்டு வந்த சட்டங்களால் கால்நடைகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதையும் வறுமை கோட்டிற்கு உள்ளவர்கள் தள்ளப்படுவதையும் விவரிக்கிறார்.

நீலகிரி, ஆனைமலை, கூடலூர், பழனிமலை, சத்தியமங்கலம், கோவை மலைப்பகுதி போன்றவற்றில் வாழ்ந்துவரும் பளியர், தோடர், அரநாடன், சோள நாயகர், புலையர் என்று அநேக பழங்குடியினர் பெயர்களையும் குறிப்பிடுகிறார். முதுகுள்ளி, நாகம்பள்ளி, மண்டக்கரை, புலியாளம், கரப்பூர், பனங்கொள்ளி ஃபோன் பகுதிகளில் இருந்து பழங்குடியினர் வெளியேற்றப்பட்டு அவர்கள் அய்யன் கொள்ளி பகுதியில் குடியேற்றப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

சூழலியல் அறிக்கைகள், குழுமங்கள்:

‘மேற்குத் தொடர்ச்சி மலைகள்’ என்னும் இந்நூலின் முக்கிய பகுதியாக, சூழலியல் சார்ந்த பாதுகாப்பு குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் குறித்தும், அதன் நேர் மற்றும் எதிர்வினைகள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர். மாதவ் காட்கில், கஸ்தூரிரங்கன் அறிக்கைகளைத் தொடர்ந்து கேரளா மாநில அரசால் கொடுக்கப்பட்ட உம்மன்சாண்டி அறிக்கை வரை விரிவாகவும், அவற்றுக்கு இடையேயான ஒப்பீடுகளையும் இங்கே பேசுகிறார் ஆசிரியர். மேற்குத்தொடர்ச்சி மலை மொத்தமாக சூழலியல் உணர்திறன் பகுதியாக (ESA) அறிவிக்கப்படவேண்டும் என்று சொன்ன மாதவ் காட்கில் அறிக்கையை அங்கிருக்கும் விளைநிலங்கள் மற்றும் விவசாயத்தும் எதிரானது என்பதையும் அதன்பிறகு வந்த கஸ்தூரிரங்கன் குழுவின் பரிந்துரை காட்டிய, தொலை-உணர்வுத் தொழிநுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டுகொண்ட, மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மொத்த பரப்பில் 41% இயற்கை நிலப்பரப்பு என்றும், மீதமுள்ள 59% மனிதர்கள் அடங்கிய கலாச்சார நிலப்பரப்பு என்றும், மேற்குத்தொடர்ச்சி மலையின் மொத்த பரப்பளவில் 37% பகுதியை மட்டும் சூழலியல் உணர்திறன் பகுதியாக அறிவித்தால் போதுமென்ற கண்ணோட்டத்தையும் முன்வைத்து நடந்த போராட்டங்களையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

மேற்குத் தொடர்ச்சி மலைகள் பரவியிருக்கும் ஆறு மாநிலங்களில், கேரளா அரசின் உம்மன்சாண்டி குழுவின் பரிந்துரைகள், மற்ற மாநிலங்களின் பரிந்துரைகள் குறித்தும் எழுதியிருக்கிறார். என் வாசிப்பில், சூழலியல் சார்ந்த இந்த பரிந்துரைகள் குறித்த ஆசிரியரின் பார்வையானது, நல்லதொரு புரிதலை வாசிக்கும் எல்லோருக்கும் கொடுக்கும் என்பது நிச்சயம். மேற்குத்தொடர்ச்சி மலைகளைச் சுற்றி நடக்கும் இத்தனை விவரங்களை எளிமைபடுத்தி சிறந்த ஆவணம் ஒன்றை எழுதியிருக்கும் ஆசிரியர் ஆட்டனத்தி அவர்களுக்கு என் பாராட்டுகள்.

சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் சார்ந்து, தொடர்ந்து நேசத்துடன் ஆட்டனத்தி அவர்கள் இயங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நூல்: மேற்குத் தொடர்ச்சி மலைகள்

ஆசிரியர்: ஆட்டனத்தி

பக்கங்கள்: 240

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விலை: ரூ 300

- அகிலா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.