அவ்வளவு எளிதில் ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டு விமர்சனமென்னும் பத்தியை அல்லது பத்திகளைப் பகிர்வதில் எனது நிலைப்பாடு உடன்படுவதில்லை..சொல்லப் போனால் புத்தகங்கள் ஆழ்ந்த அமைதியினை வழங்கக் கூடிய செறிவில் இயங்க வேண்டும் வாசிக்கும் பொழுது....அப்போதே அதன் உட்செலுத்துதல் நிகழ்கிறது..தொடர்ந்து புத்தகங்களை வாசித்துவிடுவதென்றால் அது புதிய பகுதிகளை அவசரமாய்ப் படிக்கும் பரீட்சைக்கு முந்தைய நாள் அழுத்தம் போன்றதாகவே இருக்கும்...இந்த அழுத்தமானது,அப்பகுதிகளில் சில கருத்துக்களை ஆணித்தரமாய் பதியுமே தவிர அவற்றின் செயல்முறைகளை ஒருங்கிணைத்து முழுமையான வெளிப்பாடாக தோற்றமளிப்பதில்லை...இடைவெளிகளும் , கொள்ளை நேரங்களும் வாசிப்பில் நிச்சயிக்கப்படுவதற்குக் காரணம் ,ஒரு புத்தகத்தின் எழுத்து ஊடுருவக் கூடிய தகுதியினைப் பெற்றிருக்க வேண்டிய அவசியத்தின் பொருட்டே...ஒரு புத்தகத்தின் கொள்ளளவினை,விமர்சனம் ,திறனாய்வு ரீதியில் வாசிப்பின் கைகள் ஒப்படைத்தலில் முறையும் வகையுமுண்டு...என்னைப் பொறுத்த வரையில் திறனறிதல்,விமர்சனக் கூறு கட்டல், அணிந்துரை இவை மூன்றின் கருத்தொருமித்தலில் பொருளுரையாக புத்தகத்தின் மீதான மதிப்புரையாக ஏற்பட  வேண்டுமாகிறது வாசிப்பும் வெளிப்பாடும் ...

நூலின் தலைப்பே “எங்கேயும் எப்போதும்” என்று வாசகர்களை காண்கின்ற கேள்விப்படுகின்ற கேள்விப்படாத சூழ்நிலைகளை எளிமையாகக் கடந்து செல்ல அனுமதி வழங்கி நிற்கின்றது முகப்பில்...இதுவொரு சிறுகதைத் தொகுப்பு நூல்..உள்ளே கதைகள் ஒவ்வொன்றும் விரல் பிடித்து அதன் பயணங்கள் வழியே கூட்டிச் செல்வது போன்ற எதார்த்த நடை விளைவைத் தோற்றுவித்திருக்கிறது ஆசிரியரின் கதை சொல்லும் பாங்கு..

நாம் வாழும் சூழலில் அக்கம்பக்கத்து மனிதர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று எவரேனும் கேட்டால் கூட நமக்குத் தெரிவதில்லை தெரிந்தாலும்...இத்தகைய இடர்ப்பாடான வாழ்க்கை முறையில் இத்தொகுப்பில் அடையாளப்பட்டிருக்கும் மனிதர்களின் நிறங்களை நிஜங்களிலிருந்து கொடுத்திருப்பது போன்ற உணர்வுகளை நம்மால் வரைந்து கொள்ளாமல் இருக்க முடிவதில்லை வாசித்து முடித்த ஒவ்வொரு பின்குறிப்பிலும்... 

ஒரு கதை உருவாவது அத்தனை சாத்தியமல்ல..அதற்கு உறுப்புகள் வேண்டும்..சரியாக இயங்க உயிர்மை வேண்டும்..அப்படியான உத்தி நேர்த்தியாகத் தழைந்திருக்கிறது...எந்தக் கதையினுக்கும் முடிவினை தொடர்ந்து வாசிப்பானுவபவம் உள்ளோரும் முன்னேற்பாடாக யூகித்தறிவது நடந்தேற வாய்ப்பில்லாதபடி செறிவூட்டப்பட்ட களங்களைக் காணமுடிகிறது.. சக உயிர்களிடத்தே அவற்றின் அறிவுகள் எத்தனையாயிருப்பினும் ,உரிமைகள் பேசப்படாவிடினும் அவை யாவற்றிற்கும் குரல் கொடுக்கும் வாக்கினை மெய்ப்பிக்கும் பொதுநலக் கூறு உடன்பட்டிருப்பதற்கு ,

“இப்ப வீட்டுக்கு வெளியே இருக்குற கொய்யா மரத்துலேருந்து ,குருவியோட சத்தம் கேட்டது.கீச்..கீச்...மனுஷங்களைப் பாத்தா அதுக்கு அவ்வளோ பயமா...?இல்லே எச்சரிக்கையான்னு தெரியலே...!”- “குருவிக்கார குமாரு “

 “இந்தக் காட்டுலே இருக்குற விலங்குகளோட விலங்கா சுத்துற எங்களாலே, உடனே அதிகாரிகளை சந்திச்சு உங்களை மாதிரி ..’பிராது’ கொடுக்க முடியுமா ,இல்லே கூட்டம் போட்டு கோஷம் போட முடியுமா சார் ..?எங்களுக்கு அதுக்கெல்லாம் வைக்கும் இல்லே ... அறிவுமிள்ளே ..!”- “நீயே சொல்லு சார்”

“ஆனாலும் , இதற்கு முன்பெல்லாம் .. அன்றைய நாளோடு தீர்ந்துவிட்ட என் சங்கடம் , அந்த இனம் புரியாத துக்கம் இதுவரையும் எனக்குத் தீரவில்லை. இன்னும் ஏதோவொன்று நடக்கப் போவதுபோலத் தோன்றிக் கொண்டேயிருந்தது.”

-“இதுதான் விதியா “

போன்ற கதை வரிகள் இயல்பாய் பொருந்தியுள்ளன..மனித உணர்வுகளுக்கென்று எல்லா விதங்களிலும் தடைகளும் தாத்பரியங்களும் உண்டு.நினைத்த மாத்திரத்தில் எதனையும் சுயமாக வெளிப்படுத்த இயலுவதில்லை.சில சமயங்களில் பிறருக்காக பேச வேண்டும், சில சமயங்களில் சூழ்நிலைகளுக்காகப் பேச வேண்டும்..ஆனால் கதைகளில் நாம் சுயத்தின் உணர்வுகளைக் கடத்திவிடுவது என்பதுதான் வெற்றியாக இருக்கிறது..ஏற்ற தாழ்வுகளைப் பின்பற்றும் முதலாளித்துவ மற்றும் அடிமை வர்க்கங்களின் செயல்பாட்டினை ,

“வெள்ளையும் ,சொள்ளையுமா எங்களை மாதிரி துணிபோட்டுகிட்டா,நீ எங்காளு ஆயிடுவியாக்கும்..மருவாதை தெரியாத நாயி..”அவரது வார்த்தைகளில் பல நூற்றாண்டு கால எஜமானத்தனம் தெரிந்தது.

மாரிமுத்துவிற்கு அவமானம் பிடுங்கித்தின்றாலும் ,அங்கிருந்து நகர்ந்தால் அது எஜமானரை அசட்டை செய்வதுபோல ..அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதால் வேறுவழியின்றித் தாங்கிக்கொண்டான்.”

இருப்புகள் அதிகமிருந்தாலும் அவரவர்கென்று தனி இடமுண்டு என்பதாகச் சுட்டிக்காட்டுவதைப் பொறுத்து ,காலியாக வரும் அரசுப் பேருந்தொன்றின் பயணத்தைக் கொண்டு “விபத்து”எனும் சிறுகதை , தொடர்ந்து நம் சமூகத்தில்  பயணித்துக் கொண்டிருக்கும் ஏற்ற தாழ்வு நிகழ்வுகளை மோதிப் பார்க்கிறது...

நம் வாழ்வில் எதார்த்தமாய் நிகழக்கூடிய காட்சிப் பதிவுகளை நாமாக நினைத்தால் கூட உள்ளதை உள்ளபடியே காட்டுவதற்குப் படப்பிடித்துக் காட்டுவதற்கும் ஒரு அணுகுமுறை உள்ளது..இந்நூலில் எழுத்தால் அப்படியே நம்மால் வாழ்வதான வரிகளை , நிறைய கதைகளில் உணர முடிகிறது.சாதி , மதம் இவையெல்லாமும் காதலுக்கு ஒரு வகையில் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாலும் , மாநில வாரியாக அரசியல் ரீதியாக ஒரு காரணத்தினால் இங்குகொரு காதல் அடித்து விரட்டப்படுகிறது...தேசியமயமாக்கப்படல் என்றொரு விவாதத்தில் இனி வரும் காலங்களில் காதலுக்கும் ஒரு கோரிக்கை வைக்கப்படுமோவென்ற அச்சத்தினால் இடறுகிறது மனம்....

“ஒரு பொம்பளையா இருந்துகிட்டு , எத்தனை உசுரைக் கொன்னுருப்பா ..இவளுக்கெல்லாம் இந்தக் கெதி வராம ..?

ஆண்டவன் ஏதோ பரிதாபப்பட்டு இதோட வுட்டானேன்னு பொழச்சா சந்தோஷப் பட்டுக்கட்டும்”- “அவள் அப்படித்தான் “

தலைப்பே சொல்கிறது கதையின் உட்கருவில் ஒரு பெண் தான் வாழும் சூழலில் எத்தகைய அசாதாரணங்களைச் சந்தித்துச் சமாளித்தபடி எதிர்நீச்சல் போட்டிருக்க வேண்டும் என்பதை..வாழ்ந்தாலும் சரி தாழ்ந்தாலும் சரி அங்கு புறணி பேசுவதற்கென்று ஒரு கூட்டம் இருக்கத் தான் செய்கிறது..ஆனாலும் பேசுகிற வாய் பேசிக்கொண்டேயிருக்க ,”அவள் “ தனக்கான பாதையை தெளிவாகவே வகுத்துக்கொண்டிருக்கிறாள்..

“ரெக்கார்டு ரூம் , ஸ்டாப் ரூம் , கழிப்பறைகள் என எல்லாவற்றிலும் அழுக்கு...அழுக்கு ..லஞ்சம் , ஊழலைப் போல இண்டு இடுக்கு எல்லா இடத்திலேயும் அழுக்கு ..கால் படும் இடத்தில் அழுக்கு , கண்படும் இடத்திலும் அழுக்கு ..எல்லா இடத்திலேயும் அழுக்கு..அலுவலகம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை துடைக்கபடாத அழுக்கு ..வாரிசு அரசியல் போல வந்து கொண்டேயிருந்த அழுக்கு ...”

மேற்கண்ட வரிகளே போதும் கதாசிரியரின் அரசியல் மற்றும் அதற்குள் விரவிக் கிடக்கும் அழுக்குகளின் மீதான , செம்மையான அக்கறையும் புரிதலுமான லாவகத்தின் மூலம்  ஒரு சமூக நலப் பிரதிநிதியாய் தன்னை அடையாளப்படுத்தியிருக்கும் சுத்தம்.இப்புத்தகத்திற்கு அணிந்துரை செய்திருக்கும் பேராசிரியர் , முனைவர் நா.இளங்கோ அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல ,

“எழுத்தாளர் பொள்ளாச்சி அபியின் சிறுகதைகளுக்கான படைப்புலகம் மிக விரிந்தது..”

சமுதாயப் பொறுப்புணர்வோடு கூடிய நலனின் பிரதிபலிப்பில் , எந்தவொரு கதைக்கான கருவும் இங்கு சோடை போகவில்லை...நம்மை நிறைய கேள்விகள் கேட்கின்றன.கேள்விகளுக்கான பதில்கள் நம்மிடம் உள்ளதை , விடாது உறுத்துகின்றன.கதைகள் எங்கு சென்றாலும் உடன் வருவது போன்றே இருக்கின்றன.பேராசிரியர் இளங்கோ அவர்களும் இதனையே ஒரே சொல்லில் “நடைநலம்” என்று இதமாகப் பக்குவம் செய்திருக்கிறார்.கதை மாந்தர்கள் அருகில் பயணிப்பவர்களாகவோ , எட்டி நிற்பவர்களாகவோ, தொலைவில் சுட்டிக்காட்டப்படுபவர்களாகவோ , புன்னகைத்தோ , புறம் பேசியோ , ஓடியாடி தம் தேவைகளில் உழன்று கொண்டுதானிருக்கிறார்கள்..

என்னுடைய வாசிப்பில் நான் தனித்துக் கண்ட ஒரு சொற்றொடர் “இரவு மெல்லக் கவியத் தொடங்கியது”..இன்னமும் இருளில் தான் இருக்கிறோம் அல்லது இருள் நம்மைத் தொடந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதான பேருண்மையை இதன் மூலம் கடினமாய் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.... மட்டுமின்றி எவ்வித இடையூறுமற்ற முற்போக்குச் சிந்தனைகளைக் கருத்தில் கொண்டு மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட படைப்புகளின் வாயிலாக சிக்கலற்ற தெளிவினைப் பெறுவதற்கான கருதுகோளைக் கையாளும் கவனம், வாசகர்களின் பொறுபாக்கப்பட்டுள்ளது என்பதும் கிரகித்துக் கொள்ள வேண்டுமானது..

மேலும் ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்களைக் கொண்டிருப்பினும் ஒரு நாவலினைப் போல் தொடர்ச்சியான பந்தத்தை உட்கொண்டிருக்கும் நடையமைவும் , அதன் பின்புலத்தில் இயங்கும் ஒரே சமூகம் தான் யாவருக்கும் என்பதான தோற்றத்தையும் நிரூபிக்கிறது “எங்கேயும் எப்போதும்” 

- புலமி

Pin It