பெண்ணியம்
பெண்ணியம் என்பதை ஆங்கிலத்தில் ‘Feminism’ என்று குறிப்பிடுவர். இந்த ஆங்கிலச் சொல் பெண்ணைக் குறிக்கும் ‘Feminism’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து தோன்றியது. தமிழில் பெண்ணியம், பெண்நிலைவாதம், பெண்ணுரிமை, ஏற்பு என்ற சொற்கள் இதற்குரிய சொற்களாக வழங்கிவருகின்றன.
நவீனகாலம் என்று குறிப்பிடும்பொழுது நமக்கு அருகில் இருக்கின்ற நம்முடன் வாழ்கின்ற மக்களின் நிலையினைக் குறிப்பது மட்டுமின்றி அதற்கு முந்தைய காலப்பகுதியில் வாழ்ந்த வேறுபட்ட தன்மைகளைக் கொண்ட மக்களைப்பற்றியும் அறிவதற்கு உதவி செய்கின்றது. இவ்வாறு பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்த மக்களைப் பற்றி நாம் அறிகின்ற பொழுது அதன்மூலம் வாழ்வின் மகத்துவத்தை அறிந்து காலநிலைக்கு ஏற்றாற்போல் வாழ்வதற்கும் அவ்வாறு வாழும்பொழுது ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான அனுபவத்தையும் தந்து நமக்கு உதவி செய்கின்றது.
வண்ணதாசன் நாற்பதாண்டு காலமாகத் தமிழ்ப் படைப்புலகத்தில் தலைசிறந்த படைப்பாளியாகவும் சிறந்த மாமனிதராகவும் திகழ்பவர். கவிதை, சிறுகதை என்ற இரண்டு பரிமாணங்களிலும் படைப்புலகை ஆட்சி செய்து கொண்டிருப்பவர் வண்ணதாசன். “வண்ணதாசன்” என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும் “கல்யாண்ஜி” என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதி வருபவர். அவ்வாறு நவீன யுகத்தின் பிரதிநிதியாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு எழுத்துலகில் இயங்கிக் கொண்டிருப்பவர் வண்ணதாசன்.
வண்ணதாசனும் பெண்ணியமும்
பெண்கள் மீது அதீத அக்கறை கொண்டவர். பெண்களின் பாடுபொருள்களைப் புரிந்தே பாத்திரங்களைப் படைத்திருப்பார். பெண்கள் எந்த அளவு துன்பப்படுகிறார்களோ அந்த அளவு ஆண்களும் துன்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சொல்லப் போனால் பெண்கள் துன்பம் அடைகிறார்களே என்று அக்கறை கொள்ளும் ஆண்கள் அந்தக் கரிசனம் காரணமாக அடைகிற துன்பம் அதைவிடத் துன்பமானது என்று குறிப்பிடுகிறார்.வண்ணதாசன் “தோட்டத்திற்கு வெளியிலும் சிலபூக்கள்” பகுதியில் தன் வீட்டுப் பெண் துன்பப்படும் பொழுது அதைக்கண்டு மனம் கலங்கும் வீட்டு ஆணின் சூழ்நிலையினைப் பதிவு செய்யும்பொழுது,
“இவள் அழுவாள் என்று எதிர்பார்த்தது போல, இவள் அழுதிருக்கிறாளா என்று பார்த்துத் திருப்திப்பட்டுக் கொள்வது போல, சரசுவின் பக்கத்தில் வந்து தலைமாட்டில் உட்கார்ந்து, தலையணையில் நனைகிற முகத்தை ரொம்ப உக்கிரமாகக் கன்னத்தில் கையைக் கொடுத்துத் திருப்புவான். எதுக்கு அழுதுகிட்டு இருக்கே, சொல்லு, சொல்லு என்று திரும்பித் திரும்பிக் கேட்பான். உன்னைப் பிடிக்கவில்லை, என்று சொல்லாமல் குத்தி வாங்குகிறது போல இருக்கும் அது.”2 (தோ.வெ.சி.பூ.ப:22)
என்று கூறுகிறார். மனிதன் எல்லா நேரங்களிலும் அமைதியையும் ஆறுதல்களையும் தேடுவதில்லை. மனம்கலக்கம் கொள்ளும்பொழுது மட்டுமே மனம் சிலரின் ஆறுதல்களை எதிர்பார்க்கிறது. இக்கதையில் வரும் பாத்திரம்கூட ஒருவித புரிதல்களை நம்மிடம் விதைக்க நினைக்கிறது. சாதாரண குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் காணும்பொழுது அழுவதும் சிரிப்பதும் இயல்பான ஒன்றாகவும் அதற்கு ஆறுதல்படுத்தும் உறவுகளும் புதிதான ஒன்றும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி இயற்கையான நிகழ்வுகளைப் பதிய வைக்கிறார்.
‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ சிறுகதையில் ‘மிச்சம்’ தலைப்பில் பெண்ணின் உள்மன நிகழ்வுகளை விமர்சித்துள்ளார். இதனை,
“மறுபடியும் எழுந்திருந்து லைட்டைப் போட்டாள். எல்லாக் கதவும் சாத்தப்பட்டு, தான் மட்டும் தனியாக இருப்பதில் பத்திரமாக இருப்பது போலவும் இருக்கிறது. எல்லாக் கதவையும் சாத்திவிட்டு லைட்டைப் போட்டுக் கொண்டால் அவளுக்கு வருகிற சந்தோஷம் சிலசமயம் கதவைத் திறந்து போடாவிட்டால், தான் தற்கொலை பண்ணிக் கொண்டு விடுவோமோ என்ற பயம் வந்தவுடன் முடிந்து போகும். உடனடியாக ஒரு இம்மி அடைசல் இல்லாமல் எல்லாவற்றையும் விரியத் திறந்து உலகத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டால்தான் ஆயிற்று என்ற தவிப்பு வரும். இப்போது அந்தத் தவிப்பில்லை. தொண்டையில் மாத்திரம் கணகணவென ஏதோ எரிந்தது. ஒரு டீ குடிக்க வேண்டும் போல் இருந்தது.”3 (க.மு.ஓ.ப:16)
என்று விவரிக்கின்றார். இக்கதையின் ஒருபகுதி துன்பம் மிகுந்த வாழ்க்கையைக் காட்டுகிறது. பெயரில்லாத இளம்பெண் தனிமையில் வாழ்கிறாள். நம்பிக்கை என்பதில்லாமல் வெளியுலகச் சூழ்நிலையினால் அச்சுறுத்தப்பட்டவள். அவளின் தனிமையைப் பிற்காலத்தில் உணர்கிறாள்.
வண்ணதாசன் “நேர்காணல் அழியாச் சுடர்கள்” பகுதிக்காக அவர் கூறிய பதிவுகளில் பெண்களின் முன்னேற்றமானது எந்த அளவிற்கு வளர்ந்துவிட்டது என்பதையும் அவர் கதைகளில் பெண்களின் மீதான அக்கறை மிகவும் முக்கியமானது என்பதையும் அப்படியானச் சூழலில் பெண்களின் துன்பங்கள் பாதிக்கின்றது என்பதை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தி இருப்பதைக் காண முடிகின்றது.
“அடிப்படையான உளவியல் காரணம் என்னவெனில், பெண்களே அதிகமிருந்த ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தின் மத்தியில், அம்மாவாலும், அம்மாச்சியாலும் நான் மிகுந்த பாதுகாப்புடன் வளர்க்கப்பட்டதே என்று சொல்ல வேண்டும். இப்போது அல்லவா பெண்கள் இவ்வளவு உரக்கவும் இவ்வளவு வெளிப்படையாகவும் சிரிக்கிறார்கள். நாற்பது, ஐம்பது வருசங்களுக்கு முன்பு எல்லாம் பெண்கள் உரக்க அழுவதையும், உரக்கச் சண்டைபோடுவதையும் தானே அதிகம் பார்க்கமுடியும். அன்பைத் தவிர வேறு எந்த தோளுமற்று, சதா ஒரு பூப்பந்தைப் போல அன்பை மட்டுமே தங்களின் ஒவ்வொரு கைக்குள்ளும் இருந்து மற்றவர் கைகளுக்குக் கடத்திக் கொண்டிருக்கிறவர்கள் தானே அவர்கள்.”4 (நே.கா.மார்ச்.10)
என்று கூறியுள்ளார். ஆணை மையமிட்ட குடும்பத்தில் அனைத்து முடிவுகளையும் எடுப்பவனாகவும் தன் கருத்துக்களை மற்றவர் மீது கட்டாயப்படுத்துபவனாகவும், திணிப்பவனாகவும் உள்ளான்.
நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் சரி என்று குடும்பத்தில் வாழும் தலைவன் எண்ணுதல் முற்றிலும் தவறானது. குடும்பத்தில் கணவன் - மனைவி இருவரும் ஒளிவு மறைவு இன்றி ஒரு பிரச்சனைக்குத் தெளிவான முடிவினை எடுக்க வேண்டும் என்று கூறநினைக்கும் வண்ணதாசன் “பெயர் தெரியாமல் ஒரு பறவை” சிறுகதைப் பகுதியில்,
“வீட்டு பொம்பளைகிட்ட என்றைக்குயோசனை கேட்டாரு. இன்றைக்கு கேட்க, அப்படிக் கேட்டாத்தான் எம்புட்டோ இதுக்குள்ளே குடும்பம் முன்னிலைக்கு வந்திருக்குமே. முன்னே பின்னே யோசிக்காம இப்படிச் சொல்லிக்கிட்டிருக்கிற மனுஷனை என்ன பண்ண.”5 (பெ.தெ.ஒ.ப.ப:16)
என்று கூறுவதின் மூலம் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. அன்றைய காலத்தில் இருந்த பெண்ணடிமைத்தனம் இன்றைய சூழலில் இல்லை என்றாலும். பெண்கள் மீதான அடக்குமுறைகள் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சில இடங்களில் பெண்களை இழிவுபடுத்துவதும், பொருட்படுத்தாதச் சூழலும் நிலவுவதைக் காணலாம்.
வண்ணதாசன் “மனுஷா மனுஷா”வில் மனிதனின் அனுபவ நிலையை,
“இந்த விஷயத்தை எவ்வளவு இயல்பாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு இயல்பாக ஆச்சி சொன்னதுகூட ஆச்சரியமில்லை அந்தக் காலத்து அனுபவம், அந்தக் காலத்துப் பெருந்தன்மை, அதற்குச் சரியாக இருந்திருக்கும். இந்த விஷயத்தை என்னுடைய வீட்டுக்காரியும் அதே அளவு இயல்புடனும் மரியாதைக்குப் பழுதில்லாமலும் ஏற்றுக்கொண்டது எப்படி என்று விளங்கவில்லை.”6 (ம.ம.ப:62)
என்று கூறுவதன் மூலம் அந்தக்காலத்தில் இருந்த பொறுமை, பெரியோர்களை மதிக்கும் தன்மை, அவர்கள் கூறும் வார்த்தைக்கு மறுபேச்சு பேசாமல் ஏற்றுக் கொள்ளும் தன்மை, அத்தகைய மனித மனநிலை இன்று இல்லை என்பதை நாம் அறிய முடிகிறது. அக்காலத்தில் இருந்த பெருந்தன்மையை இன்று காண முடிவதில்லை. எதையும் இயல்பாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்த அந்தக் கால மனிதர்களை இன்று காண்பது அரிதான ஒன்றாக இருக்கின்றது.
வண்ணதாசன் “கமழ்ச்சி”யில் கணவனை இழந்த பெண்ணுக்கு ஏற்படும் அவலநிலைகளையும் சமூகத்தால் அவளுக்கு ஏற்படும் அவச்சொற்களையும் எடுத்துரைக்குமாறு உள்ளது.
“இன்னும் எதுக்கு சுப்பையா அதை மூலையில் வச்சுக்கும் பிட்டுக்கிட்டு இருக்கே ஊருஉலகத்தில உனக்குத் தெரிஞ்ச பேரு எத்தினி இருப்பாங்க கஷ்டப்பட்டவன், நஷ்டப்பட்டவன் இருந்தால் வச்சுப் பொழச்சுக்கச் சொல்லித் தூக்கிக் கொடுத்திர வேண்டிய தானே. கடலு வத்திப்போன இடத்தில் எம்புட்டுக் காலம் உப்பைக் கொட்டி வச்சுப் பார்த்துக் கிட்டு கிடப்ப. பரமனின் அம்மா அவ்வளவு வருத்தத்திலும் அப்படித்தான் இப்படி எதாவது ஜாடையாகச் சொல்வாளே தவிர, பாண்டியம்மாளைப் பற்றி இதுவரை இந்த இரண்டு சொச்ச வருடத்திலும் இவன் காதுபட அசிங்கமாக எதுவும் சொன்னதில்லை.” 7 (க.ப:57)
என்கிறார். குடும்பம் என்னும் உறவுக்குள் நுழையும் நிமிடம் அது. இறுதிவரை குடும்ப உறவாக, எந்த இழப்பும் இல்லாமல் இருந்தால் மட்டுமே சமூகம் நம்மை ஏற்றுக்கொள்ளும். இதில் கணவன் இல்லாமல் மனைவியோ, மனைவி இல்லாமல் கணவனோ வாழ்ந்தோமேயானால் இதைவிடத் துன்பம் வேறு எதுவுமில்லை. சமூகத்தின் பார்வையும் தவறாகவே இருக்கும். இதன் நிமித்தம் விழுமியத்தில் பாதிப்புகள்தான் ஏற்படும். குடும்பம் என்ற அமைப்பு சிதைவுறாமல் ஆணும் பெண்ணும் நடத்தும் இனிய இல்லறத்தையே ஆசிரியர் முன்வைக்கின்றார். சமூகத்தின் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இவற்றில் வண்ணதாசன் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை.எதார்த்தத்தை கேள்விகளின்றி ஏற்றுக் கொள்ள வலியுறுத்துகிறாரோ என எண்ணத் தோன்றுகின்றது.
எனவே வாழ்க்கை என்பது ஒவ்வொரு நிமிடமும் புரிந்து கொண்டு வாழவேண்டும் என்பதையும், அத்தகைய வாழ்க்கையில் குறிக்கோளோடு வாழ்ந்து முன்னேற வேண்டும் என்பதையும் அம்முன்னேற்றமானது ஆண் - பெண் பாகுபாடு ஏதுமின்றி சமஅளவில் இருத்தல் வேண்டும் என்பதையும் அவ்வாறு இருக்கும் பொழுதான் நாடும் வீடும் வளர்ச்சியடையும் என்றும் சமவாய்ப்பானது பாரபட்சம் பாராமல் அனைவருக்கும் வழங்கும் பொழுது இவ்வுலகம் மாற்றங்களைக் கண்டு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்பதையும் வண்ணதாசனின் படைப்புகளின் வழி இக்கட்டுரையின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது..
- அ. சாந்திராணி, முனைவர் பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
&
முனைவர் சா.சுஜாதா, இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர், ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல் - 624 005.