1
பாரிஸின் அந்திப்பொழுது வழக்கத்தை விடக் கூடுதல் குளிராக இருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில் படிந்த பனிப்படலம் வெளியுலகத்தை மங்கலாக்கியிருக்க, இந்திரன் தன் அடுக்குமாடிக் குடியிருப்பின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தான். கையில் இருந்த காபி ஆவி அடங்கிக் குளிர்ந்து போயிருந்தது.
அவனது கண்கள் லேப்டாப் திரையில் நிலைகுத்தியிருந்தன. அதில், வேலணையின் நாச்சிமார் அம்மன் கோவிலும், அதன் அருகிலிருந்த அவனது பூர்வீக வீடும் பழமையான நிழற்படங்களாக உறைந்து கிடந்தன. அந்தப் புகைப்படத்தில் இருந்த அவனது வீட்டின் சுவர்களில் எறிகணைச் சிதறல்கள் துளைத்த வடுக்கள், தீராத அம்மைத் தழும்புகளைப் போலக் கொடூரமாகக் காட்சியளித்தன. சிமெண்ட் பூச்சு உதிர்ந்த அந்தச் சுவர்களும், வெயிலில் காய்ந்துபோன மண் பாதையும் அவன் நினைவுகளை முப்பது வருடங்களுக்குப் பின்னோக்கி இழுத்துச் சென்றன.
அப்போது அவன் பத்து வயதுச் சிறுவன். பலாலி வான்படைத் தளத்திலிருந்து எறிகணைகள் சீறிக்கொண்டு வரும்போதெல்லாம், பயத்தில் அம்மாவின் சேலையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அலறியது அவன் கண்களுக்குள் நிழலாடியது. பிரான்சில் இத்தனை வருடங்கள் வாழ்ந்தும், அந்தச் செம்மண் வாசமும் அதன் பின்னால் இருந்த மரண பயமும் அவனை விட்டு அகலவில்லை.
2
பலாலி தளத்திலிருந்து புறப்படும் எறிகணைகளுக்கு என்று ஒரு வஞ்சகமான அழகியல் இருந்தது. தூரத்துத் தொடுவானத்தில், விண்ணைக் கீறிக்கொண்டு எழும்பும்போது வான்வெளியில் ஒரு தங்க நிற அல்லது அடர் சிவப்பு நிறத் தீக்கோட்டை வரைந்து செல்லும். பார்ப்பதற்கு வானவேடிக்கையைப் போல, இரவின் கருமையைக் கிழித்துக்கொண்டு செல்லும் ஒளி தூரிகையைப் போல அந்தப் பாதை அத்தனை நேர்த்தியாக நீளும். ஆனால், அந்தப் பளபளக்கும் ஒளிக் கோட்டின் பின்னால் ஒளிந்திருந்தது அசுரத்தனமான பேரழிவு. அது வாழ்வின் அழகைக் காட்டி, அடுத்த விநாடியே உயிரைப் பறிக்கும் சாபமாக இருந்தது.
3
அப்போது, மென்மையான காலடி ஓசையுடன் உள்ளே வந்தாள் எலினா. பிரெஞ்சுக்காரரான வெள்ளையினத் தந்தைக்கும், ருவாண்டாவின் கறுத்த இனத்துத் தாய்க்கும் பிறந்தவள் அவள். இரண்டு வெவ்வேறு உலகங்களின் பேரழகும் அவளிடம் ஒன்றாகக் கலந்திருந்தது. அவளது கறுப்பு நிறத் தோலில், பாரிஸின் நவீன விளக்கு வெளிச்சம் பட்டு உருகிய சாக்லேட் போல மின்னியது. அவளது கண்கள் கறுப்பின மக்களின் ஆழமான வலிகளையும், முக அமைப்பு ஐரோப்பிய தேவதைகளின் நேர்த்தியையும் கொண்டிருந்தன.
அவள் அணிந்திருந்த எளிய நவீன ஆடையும், தோள்களில் சரிந்து கிடந்த கறுப்புச் சுருட்டை முடிகளும் அவளுக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தந்திருந்தன. அவளது உடலமைப்பிலும் நடையிலும் ஒரு தேர்ந்த பரதநாட்டியக் கலைஞரின் நளினமும் துல்லியமான அழகியல் வளைவுகளும் இயல்பாகவே குடிபுகுந்திருந்தன. அவள் வெறும் காதலி மட்டுமல்ல, இந்திரனின் காயம்பட்ட மனதிற்குத் தன் மௌனத்தாலேயே ஒத்தடமிடும் ஒரு நிழலாக இருந்தாள்.
4
அவன் லேப்டாப் திரையை எலினாவின் பக்கம் திருப்பினான். திரையில் தெரிந்த சிதைந்த சுவர்களைக் காட்டி, "எலினா, இதோ பார்... இதுதான் என் வீடு. இந்த நாச்சிமார் அம்மன் கோவிலுக்குப் பக்கத்தில்தான் என் உலகமே இருந்தது. இந்தச் சுவர்களில் தெரிகிறதே இந்த ஓட்டைகள்... இவை வெறும் சிமெண்ட் உதிர்வுகள் அல்ல. பலாலி தளம் விதைத்த மரண பயத்தின் தழும்புகள் இவை. ஒவ்வொரு துளையும் எங்கள் வாழ்வை வேட்டையாடிய எறிகணைகளின் எச்சங்கள்" என்றான்.
அவனது குரலின் நடுக்கத்தைப் புரிந்துகொண்ட எலினா அவனது காலடியில் அமர்ந்தாள். "சொல்... உன் நினைவுகளில் இருக்கும் அந்தப் பயங்கரம் உன்னை ஏன் இன்னும் உறங்க விடவில்லை?" அவளது குரல் அவசரப்படவில்லை; தாயின் வழியே ருவாண்டாவின் இனப்படுகொலை வடுக்களுடன் வளர்ந்தவள் என்பதால் அவளுக்கு வலிகளின் மொழி இயல்பாகப் புரிந்தது.
"நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எப்போது குண்டு விழும் என்றே தெரியாது எலினா. ஒருமுறை பலாலியிலிருந்து இடைவிடாது எறிகணைகள் ஏவப்பட்டன. இருட்டுப் பதுங்கு குழிக்குள், மூச்சு விடுவதற்குக் கூடக் காற்றே இல்லாமல், கைகால்களை முடக்கிக்கொண்டு கிடந்தோம். மேலே குண்டுகள் வந்து விழும்போதெல்லாம் பூமி அப்படியே ஒரு நிலநடுக்கத்தைப் போல நடுங்கும். காதுப்பறை கிழியுமளவுக்கு எழும் அந்த வெடிச்சத்தம், எங்கள் இதயத்துடிப்பை ஒரு கணம் நிறுத்திவிடும். அதிர்வில் பதுங்கு குழியின் மண் உதிர்ந்து எங்கள் மீது விழும்போதெல்லாம், 'இன்னும் சில நிமிடங்களில் செத்துவிடுவோம், இந்த மண்ணே நமக்குக் கல்லறையாகிவிடும்' என்று உடல் நடுங்கிய காலம் அது."
"சில மணிநேரக் கொடூரத்திற்குப் பிறகு, திடீரென அந்தச் சீறல் சத்தங்கள் அடங்கும். சுற்றிலும் ஒரு நிசப்தம் பரவும். 'அப்பாடா, ஓய்ந்துவிட்டது' என்று நினைத்து, கொஞ்சம் மூச்சுக்காற்றைச் சுவாசிக்கவும், குடிக்க ஒரு சொட்டுத் தண்ணீர் தேடியும் பதுங்கு குழியின் வாசலை நோக்கி நகர எத்தனிப்போம். ஆனால், அந்த அமைதிதான் எல்லாவற்றையும் விட வஞ்சகமானது. வாசலை நெருங்கும் அடுத்த நிமிடம், நாம் ஏமாந்துவிட்டதை உணர்த்தும்படி, முன்னை விட இன்னும் ஆக்ரோஷமாக அடுத்த சுற்று எறிகணைகள் பூமியைப் பிளக்கத் தொடங்கும். பயத்திலேயே பசியும் தாகமும் செத்துப் போக, ஒரு துளி உணவுமில்லை, தொண்டையை நனைக்க ஒரு சொட்டுத் தண்ணீருமில்லை... அப்படியே அந்த இருட்டுப் பதுங்கு குழிக்குள் ஒரு நாள் முழுமையாகக் கிடந்தோம். அம்மாவின் சேலையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு அழுத அந்த நாட்கள், இப்போதும் என் உடம்பை நடுங்க வைக்கின்றன."
எலினா அவனது கையை இறுகப் பற்றினாள். "யுத்தம் நம் நிம்மதியைப் பறித்துவிடுகிறது, இல்லையா?"
"ஆம் எலினா. ஒருகாலத்தில் எங்களை ஓடவைத்த அதே பலாலி தளம், இன்று 'யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக' மாறியிருக்கிறது. பலாலி இப்போது அமைதியின் முகமூடியைப் போட்டிருக்கிறது, ஆனால் அங்கே கால் வைக்கும்போது என் நெஞ்சு துடிக்குமே தவிர, நிம்மதி வராது."
"நாம் அந்த ஊருக்குப் போகலாம் இந்திரன்."
5
வேலணை மண்ணில் கால் பதித்தபோது இந்திரனின் நெஞ்சு வேகமாகத் துடித்தது. முப்பது ஆண்டுகளுக்குப் பின் பார்க்கும் ஊர். சிமெண்ட் பூசப்பட்ட பாதைகளில் நடக்கும்போதெல்லாம், மண்ணுக்கு அடியிலிருந்து பழைய யுத்தத்தின் வெடிமருந்து வாடை இன்னும் ஆவியாக எழும்புவது போல் அவனுக்குத் தோன்றியது. அந்தச் செம்மண் பாதையின் ஓரங்களில் கருகிப்போன பனைமரங்களின் துண்டுகளும், கைவிடப்பட்ட பாழ்ங்கிணறுகளும் போரின் கோரத்தை மௌனமாகப் பறைசாற்றின.
எலினா சுற்றிலும் பார்த்தபடி கேட்டாள், "இந்திரன், இங்கே இத்தனை வீடுகள் இருக்கின்றன; ஏன் மனித நடமாட்டமே இல்லாமல் இவ்வளவு பாழடைந்து கிடக்கிறது?"
இந்திரன் லேப்டாப்பில் காட்டிய அதே பாழடைந்த சுவர்களின் நிஜ வடிவத்தை நேரில் காட்டினான். "இது பலாலியிலிருந்து வந்த பேரழிவின் சாட்சி எலினா. இதோ, இந்தப் பாழடைந்த வீடுதான் என் சிறுவயதுத் தோழன் குகனுடையது. பலாலியின் குண்டுகளுக்கு அஞ்சி அவன் அப்பா தன் கைப்படச் செதுக்கிக் கட்டிய வீட்டைப் பூட்டிவிட்டு, பெற்ற பிள்ளைகளை அள்ளிக்கொண்டு அவர் ஓடியபோது, அவரது உயிரும் ஆன்மாவும் இந்தச் சுவர்களுக்குள்ளேயே உடைந்துபோயின. இங்கிருந்த மனிதர்கள் பலர் இன்று உலகெங்கும் அகதிகளாய் நாதியற்று அலைகிறார்கள். மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள் அழிந்து, நிலமும் வீடுகளும் மட்டும் இங்கே அநாதையாகக் கிடக்கின்றன."
அவர்கள் தொடர்ந்து நடந்தபோது, வீதியின் மறுபுறம் சபாரத்தினம் பிள்ளையின் வீடு தெரிந்தது. முப்பது வருடப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட அந்த நிமிடத்தில், மக்கள் இன்னும் சொந்த ஊருக்குத் திரும்பப் பயந்து நடுங்கியபோது, இந்த வேலணை மண்ணிற்குள் முதல் ஆளாக தைரியமாகக் கால் பதித்தவர் அவர்தான். இடிந்த சுவர்களைத் தூசி தட்டி, காடு மண்டிக் கிடந்த முற்றத்தைச் சீரமைத்து, மற்றவர்களுக்கும் நம்பிக்கையூட்டி வரவழைத்தவர். ஆனால், இன்று அவரது பூர்வீக நிலங்கள் அனைத்தும் விமான நிலைய விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தப்பட்டு, வேலி அடைக்கப்பட்டுக் கிடந்தன.
6
அவர் திண்ணையில் அமர்ந்து, கவலை தோய்ந்த முகத்துடன் பலாலி விமான நிலையப் பக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பார்வையில் தன் சொந்த மண்ணை இழந்த ஒரு விவசாயியின் அடக்க முடியாத ஆத்திரமும் இயலாமையும் கலந்திருந்தன. இந்திரனைப் பார்த்ததும், "யாரு அது? பரமசாமி பிள்ளை பாரிஸ் இந்திரனா?" என்று கேட்டார்.
"சபாரத்தினம் மாமா, நல்லா இருக்கீங்களா?" இந்திரன் கேட்டான்.
அவர் மெதுவாகத் தலையசைத்தார், ஆனால் அவரது கண்களில் பழைய கம்பீரம் இல்லை; ஒருவித விரக்தி குடியேறியிருந்தது.
அவர்கள் கடந்த பின் எலினா கேட்டாள், "இந்திரன், அந்தப் பெரியவர் ஏன் அவ்வளவு சோகமாக இருக்கிறார்?"
"அவர்தான் யுத்தம் முடிந்ததும் இந்த ஊருக்குள் முதல் ஆளாக வந்து நம்பிக்கையை விதைத்தவர் எலினா. ஆனால், அவரது பூர்வீக நிலங்கள் இன்னும் பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்காகச் சிறைப்பட்டுக்கிடக்கின்றன. பலாலி இப்போது சர்வதேச விமான நிலையமாக மாறி, வானத்தில் நவீன விமானங்கள் பளபளப்பாகப் பறக்கலாம். ஆனால், அந்த ஓடுதளத்தின் கம்பிகளுக்கு வெளியே, மக்களின் சொந்த நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் கண்ணீரில் நனைகின்றன. 'பலாலி இன்னும் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறது' என்ற மௌனப் பயம் இன்றும் இடி மின்னலாய் எங்களை அச்சுறுத்துகிறது. விமானங்களின் சத்தம் கேட்கும்போதெல்லாம் இங்கிருக்கும் வயதானவர்களின் நெஞ்சு, அன்று விழுந்த குண்டுகளின் நினைவில் இன்னும் ஒரு கணம் திடுக்கிடத்தான் செய்கிறது."
"இங்கே பார் எலினா, இந்த வீடு ஒரு காலத்தில் உயிர்ப்புடன் இருந்தது. இங்கே சின்னம்மாக்கா என்று ஒரு பெண்மணி இருந்தார். குண்டுகள் பாயும்போதெல்லாம், தன் வீட்டுப் பதுங்கு குழிக்குள் தெருவில் ஓடும் அத்தனை பிள்ளைகளையும் இனம் பார்க்காமல் இழுத்துப் போட்டு அணைத்துக் காப்பாற்றிய தாய் அவள். இன்று அவளும் இல்லை, அவளது சிரிப்பொலியும் இல்லை. மனிதர்கள் மடிந்துபோனாலும், இந்தச் சுவர்கள் அந்த வடுக்களையும் குருதி வாடையையும் அப்படியே சுமந்து நிற்கின்றன."
7
கோவிலை நெருங்க நெருங்க எலினாவிற்கு ஒருவிதமான விசித்திரமான அழுத்தம் ஏற்பட்டது. "இந்திரன், இடிந்த வீடுகளைச் சரிசெய்துகொண்டு மீண்டும் ஊருக்கு வராதவர்கள், இந்தக் கோவிலுக்கு மட்டும் எப்படி இவ்வளவு பணத்தை செலவு செய்கிறார்கள்?" எலினா கோவிலின் பிரம்மாண்டமான நுழைவாயிலைச் சுட்டிக்காட்டினாள்.
"இங்கே விழுந்த எறிகணைகளால் சிதைந்துபோன மனங்களுக்கு, இந்தக் கோபுரத்தின் நிழல்தான் எலினா ஏதோ ஒரு ஆறுதலைத் தருகிறது. புலம்பெயர்ந்த எங்கள் சொந்தங்கள், தங்களின் கடந்த கால இழப்புகளின் குற்றவுணர்ச்சியால் இங்கிருக்கும் கோவில்களுக்குப் பணம் அனுப்புகிறார்கள். தங்களால் சொந்த மண்ணில் வாழ முடியவில்லையே, தாயக மண்ணை அநாதையாக விட்டுவிட்டு ஓடிவிட்டோமே என்ற ஏக்கத்தையும் தவிப்பையும் இந்தத் திருப்பணிகள் மூலமே அவர்கள் தீர்த்துக்கொள்கிறார்கள். இது வெறும் கோவில் அல்ல, எங்களின் கூட்டுப் பிராயச்சித்தம்."
கோவில் வளாகத்திற்குள் அவர்கள் நுழைந்தபோது, அங்கே மக்கள் திருவிழா ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தனர். நாதஸ்வர ஓசையும், கற்பூர வாசனையும் காற்றில் கலந்திருந்தன. சபாரத்தினம் பிள்ளை திருவிழாவிற்கான ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். அவர் முன்னால் இருந்த அந்தப் பிரம்மாண்டமான நாச்சிமார் அம்மன் சிலை கம்பீரமாக மின்னிக்கொண்டிருந்தது.
இந்திரன் தன் சிறுவயது நினைவுகளை அசைபோட்டான். "எலினா, ஒரு காலத்தில் குண்டுகளுக்கு அஞ்சி இந்த அம்மன் சிலைக்குப் பின்னால்தான் நாங்கள் தஞ்சமடைந்தோம்."
சபாரத்தினம் பிள்ளை இந்திரனைப் பார்த்து, "தம்பி, பாரிஸ்ல இருந்து வந்த உனக்கு இந்த ஊரோட தற்போதைய நிலவரம் தெரியாது. பலாலி தளம் இப்போ சர்வதேச விமான நிலையமா மாறி, ஊரே புதுசா மாறுறதா உலகம் நெனைக்குது. ஆனா, எங்க வயல்வெளிகளும், பாட்டன் பூட்டன் வாழ்ந்த நிலங்களும் இன்னும் எங்களுக்குக் கிடைக்கல தெரியுமா தம்பி?" என்றார். அவரது பார்வை பலாலி வானத்தை நோக்கி நிலைகுத்தியது.
"தம்பி இந்திரன், நீங்க எல்லாரும் இந்த பலாலியை முப்பது வருஷ யுத்தத்தோட மட்டும்தான் ஒப்பிட்டுப் பார்க்கிறீங்க. ஆனா, இந்தத் தளத்தோட சாபம் எங்க மண்ணை நூறு வருஷமா ஆட்டிப்படைக்குது," என்று எலினாவையும் இந்திரனையும் ஏறிட்டார்.
"இதோட விதை விழுந்தது 1940-ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர் உச்சகட்டத்திலிருந்த சமயம். அப்ப இந்த நாட்டை ஆண்ட வெள்ளைக்காரனுக்கு, திருகோணமலைத் துறைமுகத்தையும் தெற்காசிய வான்பரப்பையும் கண்காணிக்க ஒரு வலுவான ராணுவ வான்படைத் தளம் தேவைப்பட்டுச்சு. அப்படி அவன் அநியாயமாத் தேர்ந்தெடுத்ததுதான் எங்க பலாலி மண்! 'ராயல் ஏர் ஃபோர்ஸ்' வான்படைத் தளத்தை அமைக்க எங்க பாட்டன் பூட்டன்மார்களின் செழுமையான விவசாய நிலங்களை அப்படியே பிடுங்கிக்கிச்சு. பனைமரங்களையும் மாமரங்களையும் வெட்டிச் சாய்த்துக் கான்கிரீட் ஓடுதளத்தை அமைச்சாங்க. அப்போ ஆரம்பிச்ச அந்த ராணுவ ஆதிக்கம், வெள்ளைக்காரன் போனதுக்கு அப்புறமும் இலங்கை அரசாங்கத்தின் வசமாகி, பின்னாடி 1980-களுக்குப் பிறகு எங்க சொந்த ஜனங்களுக்கு எதிராவே திரும்பிய எறிகணைத் தளமா மாறுச்சு. தலைமுறை தலைமுறையாக நாங்க சொந்த மண்ணிலேயே அகதிகளா இடப்பெயர்வை மட்டும்தான் சந்திச்சுகிட்டு இருக்கோம் தம்பி. இந்தச் செம்மண்ணில் எங்களின் வியர்வையை விட, கண்ணீரும் குருதியும்தான் அதிகமா கலந்திருக்கு."
8
"அன்று பலாலி தளத்திலிருந்து ராணுவம் முன்னேறி வந்த அந்தப் பயங்கரமான நாளை வேலணை மக்கள் மறக்க முடியாது. குண்டுகளின் சத்தத்திற்கு நடுவே தங்களின் பிஞ்சுக் குழந்தைகளோட இந்த நாச்சிமார் அம்மன் சிலைக்குப் பின்னால் வந்து பதுங்கினாங்க சனங்கள். வெறும் நாலு குடும்பங்கள்... பயத்தில் மூச்சுக்காற்று கூட வெளியே தெரியாமல் நடுங்கிக்கொண்டிருந்தாங்க."
"அப்போது முன்னேறி வந்த ராணுவம், இந்தக் கோவிலோட அரைகுறைச் சுவரில் வந்து அமர்ந்து, தங்களின் துப்பாக்கிகளைப் பக்கத்தில் வெச்சுட்டு இளைப்பாறிக்கிட்டு இருந்தாங்க! அவங்களுக்கு நேர் எதிரே, ஒரு சிறிய ஓலைக் கொட்டகைக்குள் இந்த நாச்சிமாரின் சிலையும், அதற்குப் பின்னால் அந்த நாலு குடும்பங்களும் மரணத்தின் விளிம்பில் நின்னுக்கிட்டு இருந்தாங்க. ராணுவம் நினைத்திருந்தால் ஒரே நொடியில் தரைமட்டமாக்கியிருக்கலாம்."
"ஆனா, ராணுவத்தோட கண்ணில் இருந்து தங்களை மறைத்தது இந்த நாச்சிமார்தான்! ராணுவத்தினர் அங்கிருந்த சமயத்தில்... இந்தக் கோவிலின் பின்னால் இருந்த காணிக்குள், குறுக்குக் கட்டோடு ஒரு இளம் பெண் தனியாக நின்று ராணுவத்தினருக்குக் காட்சி அளித்திருக்கா! அத்தனை ராணுவ வீரர்களின் பார்வையும் அந்தப் பெண்ணின் மீதே நிலைகுத்தியிருந்தது. அவதிப்பட்டு ஓடிவந்த குடும்பங்களை விட்டுட்டு, கம்பீரமாக நடந்து சென்ற அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டு, அவளது திசையை நோக்கியே நகர்ந்து போனாங்க. அதுக்கப்புறம்தான் அவங்க அங்கிருந்து கிளம்பினாங்க. அன்று அந்த நாலு குடும்பங்களின் உயிரைக் காப்பாற்ற, ஒரு சாதாரண இளம் பெண்ணாகக் காட்சி தந்து ராணுவத்தின் திசையைத் திருப்பி, தன் பிள்ளைகளை மறைத்து நின்றாளே... அவள்தான் தம்பி இந்த நாச்சிமார்!"
சபாரத்தினம் பிள்ளையின் குரல் தழுதழுத்தது. "இரண்டாம் உலகப் போர்ல உலகத்தை ரட்சிக்கப்போறதாச் சொல்லி, வெள்ளைக்காரன் 1940-ல் அமைச்ச அதே ஓடுதளத்துல இருந்துதான்... முப்பது வருஷத்துக்கு முன்னாடி எங்க தலைக்கு மேல மரண ஏவுகணைகள் பாய்ந்து வந்தன. உலகப் போரின் வரலாறு இந்த மண்ணோட அழிவுலதான் எழுதப்பட்டிருக்கு. அந்தப் பழைய காயங்களை மறக்கவும்தான் நாங்க இப்போ இந்த நாச்சிமாரை நம்பி திருவிழா எடுக்கிறோம். கோபுரங்கள் உயரமாக எழும்பலாம், ஆனால் இந்த மண்ணின் உரிமை இன்னும் அந்தப் பளபளப்பான ஓடுதளத்தின் அடியில்தான் நசுங்கிக் கிடக்குது. எங்களின் வாழ்வாதாரத்தை நசுக்கிவிட்டுப் பறக்கும் அந்த விமானங்களால் எங்களுக்கு என்ன தம்பி பெருமை?"
இதைக் கேட்டுக்கொண்டிருந்த எலினாவின் கூர்மையான கண்கள் அந்த அம்மன் சிலையைப் பார்த்தன. அவளுக்குத் தன் தாயின் தேசமான ருவாண்டாவின் காலனித்துவ வரலாறும், அதன் தொடர்ச்சியாக நடந்த இனப்படுகொலைகளும் நினைவுக்கு வந்தன. உலக வரைபடத்தில் வெவ்வேறு புள்ளிகளில் இருக்கும் மனிதர்களின் வலிகள் எவ்வளவு ஒரே மாதிரியாக இருக்கின்றன என்பதை அவள் உணர்ந்தாள். பலாலி விமான நிலையத்தின் நவீன விளக்குகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான பேரழிவின் முகம் அவளுக்குப் புரிந்தது.
"யுத்தம் நடக்கும் தேசங்களும் பெயர்களும் மாறலாம் இந்திரன்... ஆனால் அது பலியெடுக்கும் மனிதர்களின் நிலமும், வாழ்வும் என்றும் மாறுவதில்லை," என்று எலினா மெல்ல முணுமுணுத்தாள். அவளது கைகள் நாச்சிமார் அம்மனின் பாதங்களை நோக்கித் தானாகவே கூம்பின. அந்தப் பெரிய கோவிலின் பிரகாரத்தில், முப்பது வருடப் போரின் வடுக்களும் நூறு வருட வரலாற்றின் பாரமும் அவளது கண்ணீரில் கரைந்து வழிந்தன.
- கமலக்கண்ணன் முத்து