சாவுக்கென்று நான் போகவில்லை. வழக்கமான விஜயம் தான். ஊருக்குப் போன பிறகுதான் தெரிந்தது... இந்த மாதிரி சரவணனின் அக்கா மாரியம்மா இறந்துபோன செய்தி.

சரவணன் என் பால்ய நண்பன். அவனையும் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அப்படியே துக்கம் விசாரித்து விட்டு வந்துவிடலாம் என்று சென்றேன்.men in backyardஅது சாவு வீடு போலவே இல்லை. ஏதோ ஓய்வு பெற்ற வீடாக இருந்தது.

மாரியம்மா, என்னை விட ஒரு வருடம் சீனியராக இருந்தாலும் எங்களோடு தான் படித்தாள். நான்காவதில் பெயில் ஆனது பற்றி அவள் வருத்தப்பட்டு நாங்கள் பார்த்ததே இல்லை. பிறகு எங்களோடு நான்காவதில் தேர்ச்சி பெற்று ஐந்தாவதுக்கு வந்தபோதும் அவள் சந்தோஷப்பட்டதைப் பார்த்ததில்லை.

சரவணனும் மாரியம்மாவும் அக்கா-தம்பி என்று புதிதாகப் பார்க்கும் யாருக்கும் தெரியவே தெரியாது. அப்படி ஓர் எதிரும் புதிரும். இன்னும் சொல்லப்போனால், எது ஒன்றிலும் ஒட்டுதல் இல்லாத பெண் அவள். சின்ன வயதில் இருந்தே அப்படி ஒரு சுபாவம். "ஜனம் சேராத புள்ள" என்று அவளுக்குப் பட்டப்பெயரே இருந்தது. இதில் அவளுக்கு இதயத்தில் ஏதோ கோளாறும் இருந்திருக்கிறது.

ஐந்தாவதில் நடந்த விஷயம் இது. ஒரு சனிக்கிழமை, ஐந்து வாத்தியார்களும் மீட்டிங்கிற்குப் பக்கத்து டவுனுக்குச் சென்றுவிட... நான்தான் அந்த அரை நாள் பள்ளிக்கூடத்துக்கு ராஜா. அப்படிதான் நடந்து கொள்வேன். எனக்கு உதவியாளர்கள் நான்கு பேர் இருப்பார்கள். அவர்கள் ஒன்றிலிருந்து நான்காவது வரை என் தலைமையின் கீழ் பார்த்துக்கொள்ள, நான் ஐந்தாவதைப் பார்த்துக் கொள்ளும் அடுத்த வாத்தியார் போல நிற்பேன். ஒருவரும் பேசிக் கொள்ளக் கூடாது. கண்காணிப்பு அப்படி இருக்கும். பிடிக்காதவர்கள் அப்படி இப்படித் திரும்பினாலும் கரும்பலகையில் பெயர் எழுதி வைத்துவிடுவேன்.

இந்த மாரியம்மா கொய்யாக்காய் எடுத்து கடித்துக் கொண்டிருக்க... பங்கராஜ் அவனுக்குக் கேட்டு கை நீட்ட... அது தொட்டு பிரச்சனை. முதல் வார்னிங்கே தண்டனைதான் நம் ஆட்சியில். கரும்பலகையில் "மாரியம்மா" என்று முதலாவதாகப் பெயர் எழுதியாயிற்று. அடுத்தடுத்து அவர்களின் வம்பு தொடர, மாரியம்மா பெயருக்குப் பக்கத்தில் "அடம், அடம், அடம், அடம்" என்று நான்கு முறை எழுதி, ஐந்தாவது முறை "அடம்" என்றெழுதி வட்டமும் இட்டுவிட்டேன். அப்படி என்றால் "பிரம்பு பிஞ்சுது" என்று பொருள்.

அஞ்சாப்பு சார் வந்தார். விஷயம் போனது. அடி வெளுத்து விட்டுவிட்டார். பங்கராஜுக்குச் சரிக்குச் சமமாக மாரியம்மாவுக்கும் விழுந்தது. வகுப்பே ஸ்தம்பித்து, தடுமாறி அப்படியே என்னைப் பார்த்தது.

ஏங்கி ஏங்கி அழுது... அழ அழ மூச்சு பிடித்து... அதன் பிறகு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று... விஷயம் பள்ளி முழுக்கப் பரவி... எங்கள் வகுப்புப் பிள்ளைகள், இன்னும் ஜூனியர், சூப்பர் ஜூனியர் புள்ளைங்க எல்லாம் எனக்குச் சாபம் விட... "பார்க்குமிடத்தில் எல்லாம் நாசமாப் போவ... நல்லாயிருக்க மாட்ட" என்று பொரிந்து தள்ள... அதில் இருந்து தப்பிக்கப் பெரும்பாடாகி விட்டது. அதன் பிறகு மாரியம்மா பெயரை கோகோ விளையாட்டு அட்டெண்டன்ஸில் கூட நான் எழுதியதில்லை.

இதயக் கோளாறைச் சரி செய்து விட்டார்கள். ஆனால் யாரிடமும் பேச்சு அவ்வளவாக இல்லை. எதிலும் பிடிப்பு இல்லை. சரவணன் பார்த்து பார்த்துவிட்டு, அவன் கல்யாணம் செய்து கொண்டான். மாரியம்மாவுக்கு எதுவும் அமையவே இல்லை. ஊருக்கே தெரியும்... "புள்ள ஒரு மாதிரி... கிறுக்கு மாதிரி" என்று. கிறுக்காக இருந்தால் கூடச் சமாளித்து விடலாம். கிறுக்கு மாதிரி இருந்தால் ஊரைச் சமாளிப்பது கஷ்டம்.

அவள் கோயிலைச் சுற்றி கூட்டிப் பெருக்கி தண்ணீர் தெளிப்பாள். கோயிலுக்குத் தேவையான தண்ணீர் பிடிப்பாள். பூசாரிக்கு உதவுவாள். சிரிப்பும் இல்லை, அழுகையும் இல்லை. அந்த முகத்தில் எந்தச் சலனமும் எப்போதும் இருந்ததில்லை. மரித்த அன்றும் இல்லை என்று அவள் அம்மா சொன்னபோது, என்ன சொல்வதென்று தெரியவில்லை.

பசித்த நேரத்தில்தான் அடுப்பு பற்ற வைப்பாள். சில நாட்களில் ஏதாவது ஒரு வீட்டு வாசலில் சென்று சும்மா அமர்ந்திருப்பாள். அந்த வீட்டுக்காரர்கள் உள்ளே அழைத்துச் சோறு போடுவார்கள். சாப்பிட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் தன் போக்கில் சென்று விடுவாள். அது பழக்கம் தான் என்றாலும்... அதில் ஒரு பதற்றம் எப்போதும் இருக்கும்.

"அவ போனதே நல்லதுப்பா. எதுக்கும் இல்லாம எதுக்கு இருந்துகிட்டு..." - சலித்துக் கொண்டே காப்பியை நீட்டியது சரவணன் அம்மா. வீட்டுக்குள் சாவு வாசம் மிச்சம் இருந்தது. சரவணன் என் அருகே அமைதியாக அமர்ந்திருந்தான். காப்பியைக் குடித்தேன். டம்ளருக்குள் தத்தளிக்கும் மூச்சுக்காற்றை உணர்ந்தேன். உள்ளே இருந்து மறுபடியும் வந்த அம்மா, "இந்தா மயிலு... இந்த கடுதாசிங்கலாம் உன்னுதுதான... இந்தா... மாரியம்மா அப்பப்ப இந்தக் கடுதாசிகளை எடுத்தெடுத்துப் படிச்சிட்டே இருப்பா. சாகறதுக்கு ரெண்டு மூணு நாள் முன்னாடிதான்.. இத நீ வந்தா கொடுத்துருனு சொன்னா..." என்றது.

எனக்குத் திக்கென்று தலைக்குள் வெற்றுக் காகிதங்கள் படபடத்தன. என் கையில் நடுக்கத்தோடு கூடிய தவிப்பு. அதிர்ச்சியும் திகைப்புமாக வாங்கிய கடிதங்களை, கண்கள் விரியப் பார்க்கப் பார்க்க... எனக்குப் புரிந்துவிட்டது. இது மல்லிகா எனக்கெழுதிய காதல் கடிதங்கள். இதைப் அப்படியிருந்த பிரச்சனையால் சரவணனிடம் கொடுத்து எரிக்கச் சொல்லியிருந்தேன். நான் அவனை அர்த்தத்தோடு பார்த்தேன்.

"சரி மயிலா... எரிக்க மனசு வரல... மைக்கால சுத்தி கட்டி மரப்பெட்டி உள்ள வச்சிட்டேன். அத எடுத்திருப்பா போல. நான் இத மறந்தே போயிட்டேன்டா..."

அவனும் அதிர்வில் இருந்து வெளியே வரவில்லை. என் கையில் இருந்த பழுப்பேறிய கடிதங்களையே பார்த்தான். என் கை செயலிழப்புக்குள் அப்படியே நின்றிருந்தது. கடிதங்களில் இருந்து உருண்ட மௌனங்களை மனதுக்குள் அடைக்க முடியவில்லை.

என்ன இது... ரொம்ப நாட்களாக வைத்திருந்திருப்பாள் போல. நிறைய முறை படித்திருக்க வேண்டும். ஏன், எதற்கு? யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். மாரியம்மாவின் மனதுக்குள் ஒரு நிலைக்கு மேல் என்னால் பயணிக்க முடியவில்லை. ஏன் இந்த லெட்டரைப் படிச்சிட்டே இருந்தாள்? மல்லிகா காதலும் கண்ணீருமாக எழுதிய அத்தனை எழுத்துக்களையும் இவள் ஏன் படித்துக் கொண்டே இருந்தாள்?

எப்போதெல்லாம் துயர் மிகு கணங்கள் சூழ்ந்தனவோ, அப்போதெல்லாம் படித்தாளா? எப்போதெல்லாம் தனிமை அவளைக் கொண்டனவோ, அப்போதெல்லாம் படித்திருப்பாளோ? ஒவ்வொரு கடிதமாகப் படித்தேன். ஒவ்வொரு கடிதத்திலும் மாரியம்மாவின் சுவடுகளை உணர முடிந்தது. திரும்பத் திரும்பப் படித்துப் புழங்கிய நைந்து போகும் தருணத்தை அந்தக் கடிதங்கள் கொண்டிருந்தன. மாரியம்மாவின் இதயத்தில் ஓட்டை என்று சிறு வயதில் தெரிய வந்த செய்தி, இப்போது ஒவ்வொரு கடிதத்திலும் பொத்தலாய் சுட்டது. இதை ஏன் இத்தனை வருடங்களாக வைத்துக் கொண்டிருந்தாள்? இந்தக் கடிதங்களில் அவள் என்ன கண்டடைந்திருப்பாள்?

அவள் குழி மேட்டில் நின்றபோது கையில் இருந்த கடிதங்களை காற்றும் படித்தது.

பல கேள்விகளுக்கு வாழ்வில் விடை இல்லை. சாவும் அதற்குப் பொறுப்பில்லை. யோசித்து யோசித்து பார்க்கிறேன். சின்ன வயதில் அவளுடனான பேச்சில் நட்போ அன்போ எனக்கு இருந்ததே இல்லை. அவளுக்கு இருந்திருக்குமா.. தெரியவில்லை. பக்கத்தில் சரவணன் அமைதியாக நின்றிருந்தான். அவனிடம் எந்தத் தகவலும் இல்லை. என்ன செய்வது? ஏன்? எப்படி? என்ற கேள்விகளின் அடுக்கு என்னைச் சூழ்ந்து கொண்டு மௌனித்தது.

நீண்ட யோசனைக்குப் பிறகு கையில் இருந்த கடிதங்களை அங்கேயே எரித்தேன். நிறுத்தி நிதானமாக எரிந்து முடிந்த அந்தச் சாம்பலை எடுத்து, அந்த குழிமேட்டில் தூவினேன். மௌனமும் பேசியது போல இருந்தது.

விழுந்த சாம்பல் ஈர மண்ணில் படர்வதைப் பார்த்தபடியே நின்றேன். விழுந்த கண்ணீரில் எல்லாத் துளியும் கடிதங்களுக்காக இல்லை என்று உணர்ந்தபோது, இன்னும் கொஞ்ச நேரம் அங்கேயே நிற்கத் தோன்றியது.

கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.