அவுட் பீல்டில் நின்று கொண்டிருந்தேன். வெயில் தேக்கி வைத்திருக்கும் சக்தியை ஒரு நூலில் வழியாக செலுத்தி நெற்றியை நேரடியாய் தாக்கியது போல இருந்தது. முடியை கோதிவிட்டு என்னை நிலைப்படுத்தி கொண்டேன். அலாவுதீன் ஸ்லீப் திசையில் இருந்து கத்தினான், "உனக்குத்தான் பால் வரும். உஷாரா இரு. கவட்டையில் உட்டா அங்கேயே மிதிபேன்!" என்றதை சிரித்துக் கொண்டே வானத்தை பார்த்தேன். அலாவுதீன் எங்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன். பெட் மேட்ச், கிரிக்கெட் பால், பேட் என அனைத்துக்கும் உபயதாரி. ஊரில் பெரிய பர்னிச்சர் கடை. பெரிய குடும்பம். அவன் வீட்டில் இருக்கும் எல்லா உறுப்பினர்களும் உம்ரா செய்தவர்கள் என்பதால் ஊருக்குள் மரியாதை இன்னும் தூக்கலாக இருந்தது. பெருநாள் தொழுகைக்கு மைதானத்தில் போடும் கொட்டகை செலவு இவர்களுடயது. தொழுகை மைதானத்தில் "அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்" என்ற பெரிய பதாகைக்கு கீழே என்றும் மக்கள் பணியில் "தோப்பு ராவுத்தர் பர்னிச்சர்" என எழுதியிருக்கும். தொழுகைக்கு நாங்கள் அலாவுதீனோடு சேர்ந்து நடக்கும் பொழுது சற்று கவுரவமாக இருக்கும்.
அலாவுதீன் சொன்னது போல லெக்கில் தூக்கியடிக்கபட்ட பந்து என்னை நோக்கிதான் வந்து கொண்டிருந்தது. மிக உயரத்தை நோக்கி சென்று அதற்கு மேல் செல்ல விசையில்லாமல் கீழே வரும் பொழுது தேவையான அளவு இடது, வலது, முன்பின் நகர்ந்து எனக்கான இடத்தை தேர்வு செய்ய கால்கள் அலைபாய்ந்தது. சரியாக நின்று அந்த கேட்சை பிடித்தேன். அந்த உற்சாகத்தை எப்படி காட்டுவது என யோசித்த பொழுது வெற்றியை கொண்டாட யாரும் என்னை நோக்கி செல்லாமல் அலாவுதீன் நோக்கி குழுமியிருந்த காரணம் குழப்பமாக இருந்தது. கையில் இருந்த பந்தை மைதானம் நோக்கி எறிந்து விட்டு நானும் அலாவுதீனை நோக்கி நடந்தேன். பிரச்சினை அலாவுதீனுக்கு உட்பட்டது என தெரிய அதிக நேரம் தேவைப்படவில்லை. அவனுக்கு எதிரான நின்று ஆக்ரோசமாக கத்திக் கொண்டிருந்தது புரோட்டா கடை அனிபா. இவனை எதிர்த்து பேச ஊருக்குள் யாருமில்லை என நம்பிக் கொண்டிருந்த அலாவுதீன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
அனிபா எங்களோடு நான்கு வயது மூத்தவன். சிறுவயதில் அவன் அத்தாவுக்கு ஒத்தாசையாக புரோட்டா கடைக்கு சென்றவன். இன்று கடையை ஏற்று நடத்துகிறான். அலாவுதீன் அண்ணன் அல்தாப், அனிபா இருவரும் நண்பர்களாக இருந்தார்கள். இப்பொழுது நேருக்கு நேர் பார்த்துவிட்டு ஏதும் பேச முடியாத சங்கடத்தில் நகர்ந்து செல்லும் நிலையில் இருக்கிறார்கள். காரணம் ஜைனப்...!
ஜைனப் அனிபாவின் ஒரே அக்கா. அவனை விட இரண்டு வயது மூத்தவள். கட்டிய கணவனை மூன்று மாதத்தில் பிரித்து வந்து குலா கேட்டவள். மிகுந்த அமைதியும் அழகும் சேர்ந்த அவள் குலா கேட்பாள் என யாரும் யோசிக்கவேயில்லை. கணவன் மெட்ராஸில் இன்ஜினியர். நல்ல அழகு, உயரம், சிரித்தால் அப்படி ஒரு கனிவு. ஒரு நல்ல இஸ்லாமிய தொழுகை குடும்பம். என்றாலும் நன்கு படித்த அவன் இங்கிலீஷில் பேசியது ஊருக்குள் நல்ல பிரபலியம். நல்ல வளர்ந்த சரண்ராஜ் ஹீரோ வடிவத்தில் இருந்தான். இப்படிபட்ட இங்கிலீஷ் பேச தெரிந்தவனை புரோட்டாக்கார மகள் விரட்டி விட்டது பெரிய ஆச்சரியம்தான். ஊர் பெண்கள் ஜைனப்பை "கொழுப்பெடுத்த முண்டை" என்றார்கள். சிலர் ஏதேனும் இபுலீசு பிடித்திருக்கலாம் என்றார்கள்.
அனிபா அக்கா மீது உயிரையே வைத்திருந்தான். அக்கா தன் கணவனை சொற்ப மாதத்தில் உதறி விட்டதற்கு வலுவான காரணம் உள்ளது என நம்பினான். அதுவும் சென்ற வாரத்தில் தன் அக்காவை "தேவுடியா முண்ட" என ஓங்கி அறைந்ததில் முடிவுக்கு வந்தது.
ஊரில் உயர்மிகு சந்தன வாப்பா கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது. சந்தன வாப்பா ஊர் எல்லையில் அடைந்து கிடப்பார். கந்தூரி விழாவில் மட்டும் அவரை கொண்டாடிவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்து விடுவார்கள். நோன்பு நாட்களில் அவரின் முகத்தில் முழிப்பதே பாவம் என்பார்கள். அந்த சந்தன வாப்பா கந்தூரி விழாவில் சம்பவம் அந்த அரங்கேறியது. வழக்கம் போல கந்தூரி விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் இறை நேசத்துடன் அழைப்பது உங்கள் "தோப்பு ராவுத்தர் பர்னிச்சர்" என விளம்பரம் நான்கு இடத்தில் வைக்கப்பட்டது. வைக்கப்பட்ட அந்த போர்டுகளுக்கு நடுவே மிக பெருமையாக நடப்பது அலாவுதீன் அத்தாவிற்கு மிகவும் பிடித்தமான விசயம். அன்று அவருக்கு சக்கரை நான்கு மடங்கு வீரியத்தில் கூடிப்போனதால் கடை வாரிசு அலாவுதீனை கூட்டத்தில் நடந்து குடும்ப கௌரவத்ததை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொண்டார். "நாம செஞ்ச நன்மை அவுலியாவுக்கு தெரியுது, தெரியாம போகுது. ஆனா ஊர் நாய்களுக்கு தெரிய வேணாமா?" என்பார். அப்படிதான் அலாவுதீனோடு சேர்ந்து அன்று சந்தன வாப்பா நிகழ்ச்சியை சிறப்பித்துக் கொண்டிருந்தோம்.
எந்த ஊர் நிகழ்விலும் கலந்து கொள்ளாத ஜைனப் அன்று அங்கு வந்தாள். ஜைனப்புக்கு அழகு வெகுவாக கூடிப்போனது. சதை கூட வேண்டிய இடத்தில் சரியான அளவில் அற்புதம் நிகழ்ந்து வனப்பு சேர்ந்திருந்தது. சந்தைக்கு புதிதாய் வந்திருந்த மாடர்ன் புர்கா ஒரு புதிய நவநாகரீக உடை போல ஜைனப்புக்கு இருந்தது. ஜைனப் எங்களை பொறுத்தவரை மூத்தவள், அக்கா என்பதால் அவள் குறித்த தனிப்பட்ட விமர்சனங்கள் எங்கள் மனதிற்குள் ரகசியமாய் இருந்தது. "அலாவுதீன் மட்டும் ஆளு சூப்பரா இருக்காடா!" என்ற பொழுது எங்களால் ஏதும் பேச முடியவில்லை. தவிர அன்று அந்த உற்சாகத்தில் அது பெரிய விசயமாக தோன்றவில்லை. அது அத்தோடு கடந்து விடும் என நினைத்த பொழுது அலாவுதீன் அவளை விடுவதாக இல்லை. எங்கு சென்றாலும் அவளை பின் தொடர்ந்து சென்றான். அல்வா கடை, இறை வசனங்கள் எழுதிய கலர் படங்கள் பார்த்துக் கொண்டிருந்த எங்களை அவனுடன் இழுத்து சென்றான். சங்கை பொருந்திய சந்தன வாப்பா தர்காவில் ஓதும் பாத்தியா அவன் காதில் விழவேயில்லை. மனம் அழுது கஞ்சி ராவுத்தர் அஜரத் பிரார்த்தனை துவாவை எல்லோரும் நின்ற இடத்தில் ஆமீன் சொல்ல வைக்க, அலாவுதீன் ஜைனப்பின் எல்லா அசைவிற்கும் ஆமீன் சொல்லிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் விசயம் மீறிச்செல்வது போல தோன்ற "அது வயசு என்ன தெரியுமா?" என எங்களின் குரலாக ஒலித்த வெத்தலை கடை உய்யாவை அலாவுதீன் அடித்துக் கொல்வது போல பார்த்தான். "என்ன வயசு? பொல்லாத வயசு?" மனசு ஒத்து போனா வயசாவது மயிராவது!" என்ற பொழுதுதான் அலாவுதீன் எங்களுக்கு வாங்கிக் கொடுத்த குல்பி ஐஸ்கிரிமீன் வீரியம் சற்று விளங்கியது. தவிர ஆளுக்கு அரை கிலோ மஸ்கோத் அல்வா சொல்லியிருந்தான்.
"மாப்ள, அது கலியாணம் ஆன பொண்ணுடா!"
"அதான் குலா வாங்கிருச்சே!"
"இல்லடா சரியா வருமா?"
"எல்லா சரியா வரும். சரியா வரலேன்னா, சரியா வர வைப்பான் இந்த அலாவுதீன்!"
அவன் நிறைய தமிழ்படம் பார்க்க ஆரம்பித்திருந்தான். எங்களையும் இழுத்து சென்றான். காதலை ஆராதித்து மகிழ்ந்தது ஏதோ வாலிபக் கோளாறு என நினைக்கவில்லை. காரணம் நாங்களும் எங்கள் சக்திக்குட்பட்டு ஏதோ காதலில் லயித்துக் கிடந்தோம். ஆனால் அலாவுதீன் சொல்லவும் கேட்கவும் சங்கடமாய் இருக்கும் இந்த காதல் போல இல்லை. அலாவுதீனுக்கு இது குறித்து எடுத்துச் சொல்ல சொல்ல அவன் காதலின் சக்தி கூடியது போல இருந்தது. எதிர்த்து கேள்வி கேட்க கேட்க இன்னும் மூர்க்கமாய் மாறினான். எங்கள் குழுவில் இருந்த மாலிக்கை அலாவுதீன் அடித்தே விட்டான்.
"எந்த மயிராண்டியும் எனக்கு புத்திமதி சொல்ல தேவையில்லை. அந்த அல்லாவே இறங்கி வந்து சொன்னாலும் என்னோட ஜைனப்பை விடவே மாட்டேன். என்னடா புரியுதா? என்னோட விருப்பத்துக்கு துணையா நிக்கிறவன் மட்டும் நில்லு. இல்லாதவன் ஓடிப்போயிரு!" என்றான்.
திருடனுக்கு திருட வந்த இடத்தில் வலிப்பு வந்தது போல அலாவுதீன் காதல் குறித்து ஒரு ஒவ்வாமையில் இருந்தோம். வெளியே பேச முடியாது. எங்களின் பொருளாதாரத்தை அலாவுதீன் பார்த்துக் கொண்டிருந்தான். எங்கள் செட்டு பையன்கள் இருவரை அலாவுதீன் சிபாரிசின் பேரில் சவுதிக்கு அனுப்பி வைத்தான். மீதமிருக்கும் எங்களுக்கும் அலாவுதீன் ஒரு நல்ல வழி காட்டுவான் என நம்பிக்கொண்டிருந்த பொழுது அவனே ஒரு விசித்திரமான வழியை நாடிச் செல்வான் என யாருமே நினைக்கவில்லை. அவன் காதலுக்கு யார் மணி கட்டுவது என பெரிய குழப்பமான சூழலில் பயமும் இருந்தது. ஒரு பொருத்தமான காதலை கூட மானக்கேடான விசயம் என்ற பொழுது அலாவுதீன் காதல் விவகாரம் என்பது ஒரு முழு பெண் விவகாரம். விவகாரம் நாசம் செய்து நாறடித்து விடும். தவிர விசயம் ஜைனப் மனநிலை குறித்து வேறு பயம். எல்லாவற்றையும் விட அலாவுதீன் நட்பு எல்லார் குடும்பத்தில் வேறுவித கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும்.
மைதானத்தில் கூட்டம் கூடியது. அனிபா தொண்டைக்குள் பூச்சி புகுந்தது போல கூச்சல் போட்டான். அவன் கை கால்கள் நடுநடுங்கி பேசிய வார்த்தைகள் ஏதும் முழுமையாக இல்லை. இன்னும் சற்று நேரத்தில் உடைந்து அழுது விடுவான் போல இருந்தது. அனிபாவை சமாதானம் செய்யும் அளவிற்கு அந்த இடத்தில் பெரிய மனிதர்கள் யாருமில்லை. இடம் கைகலப்பாக மாறிவிடக்கூடாது என்பதால் அக்கறை கொண்ட என்னை போன்ற சிலர் அனிபாவை சமாதானம் செய்ய முற்பட்டோம்.
"அண்ணே, விடுண்ணே, எல்லாரும் பாக்குறாங்க. வீட்ல பேசிக்கலாம்!" என அனிபா அண்ணனை மெதுவாக என் பக்கம் இழுத்தேன். புரோட்டா பிசைந்து உருட்டி, தட்டி இலைக்கு கடத்தும் வேலையை வலுவாக செய்த கைகள் என் பக்கம் வர மறுத்தது. என் பக்கம் இழுத்த நானே அவர் பக்கம் மூன்றுமுறை வந்து செல்லும்படியானது. "ஏண்டா சோறு தானே திங்கிறீங்க? ஏண்டா எங்க மானத்தை வாங்கி சந்தி சிரிக்க வைக்கிறீங்க. உன் வயசென்னா அவ வயசென்னடா. நீயெல்லாம் எனக்கு மச்சானாடா. வெக்கமா இல்ல? கேக்கவே அசிங்கமா இல்ல?" என அனிபா அண்ணன் பொத்தாம்பொதுவாய் திட்டியதும் அருகில் நின்றவர்கள் சற்று தள்ளி நின்று கொண்டார்கள். அடிக்கடி தன் கைலியை கலைத்து கட்டிக்கொண்டான். வெக்கமும் வேதனையும் ஒரே நேரத்தில் சூழ்ந்து கொண்ட அனிபாவை பார்க்கும் பொழுது வருத்தமாக கூட இருந்தது.
அலாவுதீன் அமைதியில் எந்த மாற்றமும் இல்லாமல் நின்றான். கடைசியாய் அனிபா காறி துப்பும் பொழுது மட்டும் அதை அங்கீகரிப்பது போல நிமிர்ந்து பார்த்து வாங்கிக்கொண்டான். அத்துடன் ஆரம்பித்த முதல் மேட்ச் ஆரவாரத்துடன் முடிவுக்கு வந்தது. விவகாரம் பெரிதாக இருந்தாலும் இதில் அலாவுதீன் மீதான நியாயங்கள் மிகவும் குறைவாக இருந்தாலும் அவனுடன் அவனது தோப்பு வரை நடந்து சென்றோம். வெறும் கிரிக்கெட் மட்டும் வெற்றிகரமாக நடந்து முடிந்திருந்ததால் தோப்பில் இளநீர் தயாராக இருக்கும். இந்த சூழலில் இளநீர் கிடைக்குமா எனும் சந்தேகம் வேறு எங்கள் அணியில் முதல் நிலை வீரர்களுக்கு இருந்தது.
"நாளுக்கு நாள் இது அசிங்கமா போயிட்டு இருக்கு. கொஞ்சம் கூட நல்லாயில்ல. வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகும் யோசிச்சு பாத்தியா?" என அலாவுதீன் தயவில் சவூதி போய் லீவில் வந்த ரசூல் வாயை திறந்தான். மானசீகமாக எல்லோரும் ரசூல் பக்கம் நிற்பது என தீர்மானம் கொண்டோம். காரணம் இந்த விவகாரம் எல்லோர் வீட்டிலும் எதிரொலித்து சாடையாய் வசவுகளை வாங்கிக் கொண்டிருந்தோம்.
"அதுவும் என்னைய விரும்புது!" என்ற அலாவுதீனை நம்பாமல் பார்த்தோம். இதற்கு நிறைய காரணங்கள் இருந்தது. ஜைனப் அக்கா அலாவுதீனை தம்பி என பகிரங்கமாக அழைத்த நிகழ்வு நிறைய முறை நடந்திருக்கிறது. குறிப்பாய் அனிபா கல்யாணத்திற்கு அலாவுதீன் அண்ணன் அல்தாப்புடன் வேலை செய்த பொழுது மூச்சுக்கு மூவாயிரம் தடவை அவனை அழைத்து "கொஞ்சம் டீயாவது சாப்பிட்டு போ தம்பி!" என மிதமிஞ்சிய சகோதர பாசத்தை கொட்டியதை கண்ணார கண்டோம்.
ரசூலுக்கும் அது நினைவில் வந்திருக்க வேண்டும். அதை வைத்து சரியாய் கேட்டான். "அந்த அக்காவே உன்னைய தம்பின்னு சொல்லி நாங்களே கேட்டுருக்கோம். இப்ப நீ என்ன புதுக்கதை சொல்ற!" என்றதும் அலாவுதீன் எல்லோரையும் பார்த்துவிட்டு தனது நோக்கியா போனை எடுத்து யாருக்கோ அழைத்தான். அது ஜைனப் என சைகை காட்டினான். எல்லோரும் வெட்கமறியாமல் அலாவுதீனுக்கு அருகே நெருக்கமாய் நின்று கொண்டோம். அதை விட ஜைனப்க்கு ஒரு ஃபோன் இருக்கும் விசயம் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. என்றாலும் அதிர்ச்சியை சற்று மட்டுப்படுத்தும் விதமாக இவனது அழைப்பை ஜைனப் அக்கா ஏற்கவில்லை. எல்லோரும் அலாவுதீனை சந்தேகமாக பார்க்கவில்லை. ஒருவித இயலாமையுடன் பார்த்தோம். ஊரை வாங்கும் வசதி கொண்டவன் மூத்தவள் ஒருத்தியுடன் அதுவும் வாழ்க்கை இழந்தவள் மீது இவன் கொண்ட மையல் புரியாததாக இருந்தது. சற்று நேரத்தில் ஜைனப் அக்கா இவனை போனில் திரும்ப அழைத்தாள். அலாவுதீனை பிரிந்து நின்றவர்கள் மீண்டும் அவனுடன் நெருக்கமாக நின்று கொண்டோம்.
எடுத்த எடுப்பில் அலாவுதீனை, "அனிபா உன்கூட சண்ட போட்டானா?" என்ற ஜைனப் குரலில் ஏக உரிமை. எங்களில் யாருக்கேனும் இருதய நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால் மீண்டும் இருதயம் நின்றிருக்கும். அந்தளவுக்கு அடுத்தடுத்த ஜைனப்பின் காதல் தோய்த்த வார்த்தைகள் அது. வியப்பூட்டியது ஒருபுறம் இருந்தாலும் சற்று கிறக்கமும் வந்தது எனவே உண்மை. அங்கு நின்ற எல்லோரும் ஜைனப்பை அக்கா போட்டு அழைத்தது அன்றுதான் கடைசி.
ஊருக்குள்ள விஷயம் மிகவும் அத்தியாவசிய வேகத்துடன் பயணித்தது. "ஒரு சின்ன பையனை மயக்கிட்டா பாரு!" என்ற வசையை கேட்கும்போதும் மட்டும் ஜைனப் பாவம் என இருக்கும். அலாவுதீன் ஜைனப்பை பல வழிகளில் சந்தித்து தன் காதலை வளர்த்துக் கொண்டான். அனிபாவின் அத்தா மறுவாரமே நோயில் கிடந்து செத்து போனார். அவர் சாவுக்கு முழுக் காரணம் ஜைனப்தான் என அனிபா ஊர் முன்பு குற்றம் சாட்டியும் அவர்களது காதல் எந்த தொய்வும் இல்லாமல் தொடர்ந்து வந்தது. அண்ணண் அல்தாப் அலாவுதீன் மனதை மாற்ற எங்களிடம் நிறைய பேசினார். "என்ன செய்யுறதுன்னே தெரியலப்பா. வீட்டுல உம்மா அழுதுகிட்டே இருக்காங்க. 'தோப்பு ராவுத்தர் பர்னிச்சர்'னு பேர் எடுத்தது, இப்படி ஊர்ல கேலிப் பொருளா ஆக்கவா? அவன் போடுற சட்டையை விட அவன் போடுற வேஷம் அதிகமா இருக்கு. அந்தப் பொண்ணு என்ன மந்திரம் போட்டு வச்சிருக்காளோ தெரியல. அவனுக்கு அறிவு வேலையே செய்யல. பாக்கப்போனா இது எங்க அலாவுதீனே இல்ல!'அதை அப்படியே அவனிடம் சொன்னால் எதுவும் நிகழாது என எங்களுக்கு மட்டும் உறுதியாக தெரிந்தது.
ஊரில் அலாவுதீன் கூட்டாளிகளுக்கு தனிபெயர் கிடைத்தது. தன்னை விட அதிக வயதுள்ள பெண்களிடம் மோகம் கொள்வதே இவர்களது முழுநேர பொழுதுபோக்கு என பேசிக் கொண்டார்கள். நாங்கள் கும்பலாக நின்றாலே ஏதோ ஒரு குடி கெடப்போவதாய் ஊர் பேசியது. போதாக்குறைக்கு அனிபா எங்களை பார்க்கும் போதெல்லாம் பாதத்தை தரையில் அழுத்தமாக பதித்தான். வெறும் கையை காற்றுக்கு மத்தியில் மைதா அடிப்பது போல அடித்தான். அனிபா கூடுமான அளவுக்கு அலாவுதீன் மீது கட்டுக்கடங்காத வெறுப்பை நேரில் பார்க்கும் போதெல்லாம் கக்கினான். அனிபாவால் அதை மட்டுமே செய்ய முடிந்தது. அலாவுதீனுக்கும் கோபம் வராமலில்லை என்றாலும் அது வரும் போதெல்லாம் அந்த வெப்பத்தை ஜைனப் தன் சிரிப்பு கொண்டு குளிர்ச்சி செய்தாள். ஊர் பெரிய தலைகள் காராசாராக விவாதித்து கொண்டதே தவிர எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஊர் ஜமாத் கட்டிடம் அலாவுதீன் வகையறாவுக்கு சொந்தம் என்பதால் அவர்கள் அனிபாவிற்கு ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது. நமது நபிகள் கூட தன்னை விட மூத்த பெண்ணையே மணந்து கொண்டார். நபிகள் நாயகம் அவர்களுக்கு 25 வயது, கதீஜா அவர்களுக்கு 40 வயது என்ற அதிகாரபூர்வ ஹதீஸ் அனிபாவிடம் எடுபடவில்லை. இந்த விசயத்தில் நபி மீது வருத்தம் கூட ஏற்பட்டது அனிபாவுக்கு! இனி இதுகுறித்து பேசுவதில்லை என ஊர் தலைகள் முடிவு செய்து கொண்டார்கள்.
தான் உயிருடன் இருக்கும் வரை இந்த திருமணம் நடக்காது என்று அனிபா எடுத்த முடிவு மிக உறுதியாக இருந்தது. ஜைனப் தம்பி மீது அளவு கடந்த பாசமாக இருந்தாள். அவன் தன் மீது வெறுப்பாக இருந்தாலும் அவன் சம்மதமில்லாமல் திருமணம் எனும் பேச்சுக்கே இடமில்லை என்பதில் ஜைனப் உறுதியாக இருந்தது அலாவுதீனுக்கு பெரிய பின்னடைவாக இருந்தாலும் அதை அவளை நேரில் சந்தித்து ஆறுதல் பெற்றுக்கொண்டான். மாவு பிசைந்து கல்லில் புரோட்டாவை வீசி எறியும் போதே அனிபா திடீரென உடலில் ஜின் புகுந்தது போல வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு போவான். இவர்கள் இருவரும் சந்திக்கும் விசயம் அரசல்புரசலாக காதுக்கு வந்த நாள் முதலே இப்படித்தான். அதை அறிந்து கொண்ட அலாவுதீன் நிரந்தரமாக அனிபாவை உளவு பார்க்க ஒரு ஆளை வேலைக்கு அமர்த்தியிருந்தான். அனிபாவின் எல்லா அசைவும் அவனுக்கு அத்துபடி. ஒரே ஆள் தன்னை சுற்றி வருவது அவனுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஆளை மாற்றிக்கொண்டே இருந்தான். நிறைவான சம்பளம், சீரான ஊதியம் தேவைக்கேற்ப விடுமுறை என்பதால் அந்த வேலைக்கு அனிபாவின் உறவினர்களே தயாராக இருந்தார்கள். காரணம் அந்த சந்திப்பு அலாவுதீனுக்கு மிகவும் தேவைப்பட்டது. மாதம், வாரம் என இருந்த அவர்களது சந்திப்பு தினசரி என ஆன பின்பு அலாவுதீனுக்கு திருமண அவசியம் இல்லாமல் போனது. முக்கியமாக அனிபாவின் மனைவி சரிபா இவர்கள் காதலுக்கு மிகவும் உறுதுணையாக நின்றாள். அலாவுதீனை தம்பி என உரிமையாக அழைத்து வீட்டில் உட்கார வைத்தாள். சந்திப்புகள் யாவும் கண்ணியமானதாக இருக்கும் என சொல்லும் அலாவுதீன் வாழ்க்கை ஜைனப் எனும் வட்டத்திற்குள் முடங்கியதை உணர முடிந்தது. அத்தா, அண்ணன் அல்தாப் என எல்லோர் கட்டுப்பாட்டில் இருந்தும் அலாவுதீன் தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டான். என்றாலும் ஜைனப் ஆலோசனையின் பேரில் தனக்கு சேர வேண்டிய வருவாய் விபரங்களில் தெளிவாய் இருப்பதாக அல்தாப் சொன்னதை நம்புவதா வேண்டாமா என புரியாமல் நின்றோம். எங்கள் சந்திப்பு கூட வாரம் ஒருமுறை என்று பின் எப்பொழுதாவது என இருந்தது.
அவர்கள் இருவரும் கொஞ்சிக் கொள்ளும் காட்சி எங்கள் கற்பனையில் தாறுமாறாய் ஓடிக் கொண்டிருந்தது. அவள் மடியில் வைத்து அவனை செல்லப்பெயர் வைத்து சொல்வதாக யாரோ சொன்னார்கள். அனிபாவின் வீட்டை சுற்றி பெரிய கம்பௌண்ட் சுவர்கள் எழுப்பட்டது. அது தன் மானத்தை மறைத்து கிடக்கும் என அனிபா நினைத்து செய்தது. அதையும் அலாவுதீன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக சொன்னார்கள். ஜைனப் அவ்வளவாக வெளியே வருவதில்லை. ஆனால் அவள் பெயர் ஊரில் எல்லா பக்கங்களிலும் தெளிவாய் உச்சரிக்கப்பட்டது. ஜைனப் பெயர் கொண்ட வேறு பெண்கள் கூட ஏதோ ஒருவகையில் அவமானமடைந்ததாய் நினைத்தார்கள்.
அனிபா கடையில் வியாபாரம் குறைந்தது. இருபது கிலோ மாவு உருட்டிக்கொண்டிருந்தவன் ஐந்து கிலோ மைதாவை கூட யோசித்து பிசைந்தான். வேலைக்கு இருந்த இருவரை விரட்டி விட்டு மனைவி சரிபாவை வேலைக்கு வைத்துக் கொண்டான். வீட்டில் தனியாக இருந்த ஜைனப்பை அலாவுதீன் பார்த்துக் கொள்வான் என ஊர் கேலி பேசியது.
அவனிடம் கிடைத்த சலுகை யாவும் இப்பொழுது முற்றிலும் நின்று போய் வேலைக்கு அவள் அளித்த வாக்குறுதி காணாமல் போனது. எல்லோரும் அவனை விட்டு விலகி சென்றதை அவன் பொருட்படுத்தவில்லை.
அலாவுதீன் குழாம் முற்றிலும் கலைந்து போனது. ஆளுக்கொரு திசையாய் கலைந்தோம். சொல்லியது போல அலாவுதீன் எங்களுக்கு ஒரு ஏற்பாட்டை செய்யவில்லை. அதை உரிமையோடு கேட்க முடியவில்லை. அப்படி கேட்டாலும் அவன் உறுதி கூறும் நிலையில் இல்லை. அவன் பேசும் யாவும் தட்டிக் கழிப்பவை போல இருந்தது. எப்பொழுதும் வானத்தை பார்த்து பரவசம் கொள்ளும் நிலையில் இருந்த ஒரு மாலையில் தான் அவனை கடைசியாக பார்த்தோம். ஊரில் இருக்கும் தாய்மாமன் மலேசிய வேலைக்கு சொன்னார். சந்தன வாப்பா கந்தூரி நாளுக்கு முந்திய ஒரு வாரத்தில் பயணம். அவனுக்கு சொல்லிவிட்டு கிளம்ப நினைக்கையில்தான் ஒரு தகவல் வந்தது. ஜைனப் ஒரு பலமான கட்டளையை அலாவுதீனுக்கு வைத்திருந்தாள். அதாவது அலாவுதீன் இனி சிறுவர்களுடன் நட்பு கொள்ளக் கூடாது என்பதாகும். தன்னை விட வயது குறைந்தவனை தன் வயதுக்கு உயர்த்த ஒரே வழி அவனது வயதை மறக்கச் செய்வதே எனும் நூதனத்தை கையில் எடுத்தாள். இதன் மூலம் தம்பி அனிபாவை சற்று சங்கடத்தில் இருந்து மீட்டெடுக்கலாம் என நினைத்திருக்கலாம்.
ரசூலுக்கு ஏற்பட்ட சிறிய விபத்தில் வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு ஊருக்குள் வந்து ஒரு கடையை வைத்தான். அவன்தான் ஊருக்குள் நடக்கும் எல்லா செய்தியையும் எங்களுக்கு கடத்தினான். அவன் சொன்ன தகவல்கள் யாவும் விளங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது.
அனிபாவின் புரோட்டா கடை நிரந்தரமாக மூடப்பட்டது. அனிபா மீண்டெழ முடியாத மனச்சிதைவுக்கு போனதாக சொன்னான். அவர்கள் நேரில் சந்திப்பதை தடுக்க முடியாத முயலாமை அப்படி ஆக்கியிருக்கும் என அவனே சொன்னான். அனிபாவின் சம்மதமில்லாமல் எப்படி அவர்கள் திருமணம் நடக்கும்? ஒருவேளை புறஉலகு சிந்தனை இல்லாத ஒருவனின் சம்மதத்திற்குதான் ஜைனப் காத்திருந்தாளோ என தோன்றியது. அனிபா, ஜைனப் இடையே நிகழும் பாசம் வெகு மர்மம் பொருந்தியது போல இருந்தது. ரசூல் கூற்றுப்படி அவளை பெண், ஆண் மயக்கி, குடும்ப ஒழுக்கம் இல்லாதவள் என அழைப்பதில் இருந்து ஊரை அழிக்க வந்த சூனியக்காரி என்றார்கள்.
ரசூல் உற்சாகமாக பேசுவது இதுகுறித்து மட்டுமே என்பதில் அவனும் ஒரு கட்டத்தில் என புரிந்து கொண்டு அலாவுதீன் கதை சொல்வதை தவிர்த்துக் கொண்டான். நாங்களும் கேட்பதை குறைத்துக் கொண்டோம்.
வாழ்வு குறித்த பாரங்கள் நீங்கும் போதுதான் அடுத்தவன் கதையை கேட்பதில் ஒரு சுவாரஸ்யம் பிடிக்கும். மலேசியாவில் எனக்கு அப்படி ஒன்றும் பிரமாதமான வேலை இல்லை. கார் துடைக்கும் பணி. இன்னும் சற்று கவுரவம் பாராது அலாவுதீனை சகித்துக் கொண்டிருந்தால் அவன் சொன்ன சவூதி வேலையில் கொஞ்சம் காசு பாத்திருக்கலாம். சோதனையாக இங்கு கார் துடைக்கும் ஏஜென்சி வைத்திருக்கும் முதலாளியின் மனைவியின் பெயர் ஜைனப். வானளாவிய அதிகாரம் கொண்டவள் போல இருந்தாள். வேலையாட்களுடன் சேர்ந்து அவளது கணவனும் அவளுக்கு சேர்ந்து பயந்து செத்தான். உலகின் ஒரு பெயர் எல்லா அதிகாரமும் பெற்றதாய் தோன்றியது. அலாவுதீனை மறந்த நாட்களில் எல்லாம் இங்கிருந்த ஜைனப் அதை நினைவுபடுத்திக் கொண்டிருந்தாள்.
மலேசியா முதலாளி திருவாரூர்காரன். மலேசிய தாய்மாமன் மகளை கட்டிக் கொண்டு இங்கேயே இருக்கிறான். ஊதியம் குறைவாக கொடுத்தாலும் என்னிடம் பாசமாக நடந்து கொண்டான். எங்கள் ஊர் ஜைனப் கதையை இவனிடம் கூறலாமா என நிறைய முறை யோசித்திருக்கிறேன். ஆனால் அதை இவனிடம் கூறி அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க நினைத்து சொன்னதாய் நினைத்தால் தவறாகி விடும் என்பதால் அமைதியாக இருப்பேன். அதையும் தாண்டி சில நேரம் அதற்கான உரையாடல் அமைந்துவிடும். "முதலாளி, அம்மா பேரைச் சொன்னாலே எல்லாரும் நடுங்குறாங்க. அவங்ககிட்ட எப்படி நீங்க இவ்வளவு பணிவா இருக்கீங்க?" என்பேன். அவன் "இது பயம் இல்ல தம்பி, ஒருவிதமான கட்டுப்படுதல். சில பொண்ணுங்களுக்கு அந்த அதிகாரம் இயல்பாவே இருக்கும். அவங்க அன்பு காட்டினாலும் சரி, அதட்டினாலும் சரி... அதுக்குள்ள ஒரு வசியம் இருக்கும். அந்த வசியத்துல விழுந்தவன் மீளவே முடியாது. அது ஒரு அழகான சிறை!" என சொல்லிவிட்டு புகையை இழுத்து விடுவான். அது கவித்துவமாக இருப்பதாய் நினைத்துதான் அவன் வானத்தை பார்த்திருக்க வேண்டும். ஊரிலிருக்கும் ஜைனப், இங்கிருக்கும் ஜைனப் இருவருக்கும் உண்டான வேறுபாடுகள் பகிரங்கமாக இருந்தாலும் அதை இனம் பிரித்து பார்க்காத்தான் நேரமில்லாமல் இருந்தது.
அன்று வேலை முடிந்து ரூமுக்கு வரும் வழியில் ரசூல் இரண்டு மிஸ்ட் கால் கொடுத்திருந்தான். அது அவனிடமிருந்து மூன்று மாதத்திற்கு பிறகு வந்த அழைப்பு இது. திரும்பி அழைத்தேன். எதிர்பார்த்தது போல அலாவுதீன் ஜைனப் பற்றிதான் இருந்தது அந்த பேச்சு. அலாவுதீன் அவனது மாமா மகளை திருமணம் செய்து இரண்டு வாரங்கள் முடிந்ததாக சொன்னான். ஜைனப் குறித்து கேட்க ஒரு வித தயக்கமிருந்தாலும் இயல்பாகவே அந்த உரையாடலின் கணம் ஜைனப் நோக்கியே போனது. சற்று மௌனம் கழித்து ஜைனப் தற்கொலை செய்து கொண்டதாக சொன்னான். காரணம் அலாவுதீன் என்பதற்கான வாய்ப்பு குறித்து அவனே சொன்ன கருத்துக்கள் என் காதில் விழவேயில்லை. அனிபா மனநிலை சரியாகி தன் புரோட்டா கடையை புதுப்பித்து வருவதாக சொன்னான். அதற்கு அலாவுதீன் உதவி செய்வதாக ரசூல் சொன்னதை சரியாக காதில் வாங்கி மூளைக்குள் ஏற்ற சற்று நேரம் பிடித்தது.
- கா.ரபீக் ராஜா