அவிநாசி சிவன் கோவிலுக்கு சென்று இருக்கிறீர்களா? கௌசிகா நதியின் கரையில் அமைந்திருக்கும் மிகப் பெரிய கோவில். ஒருபுறம் சங்கமா குளம், மறுபுறம் தேசிய நெடுஞ்சாலை. கௌசிகா நதி இவை மூன்றுக்கும் நடுவில் அமைந்துள்ளது.

எல்லா கோவில்களிலும் இருப்பது போல், மூலஸ்தானத்திற்கு முன் மகா மண்டபம் இருக்கும்; கருவறைக்கு அருகில் அர்த்தமண்டபம். உற்சவமூர்த்தி ஊஞ்சலாட ஊஞ்சல் மண்டபம். 48 கால் மண்டபம்.

48 கால் மண்டபத்தில் தான் அந்த ஊரின் முக்கிய ஆன்மீக நிகழ்வுகள் நடப்பது வழக்கம்.. திருமண நிச்சயதார்த்தம் சில நேரங்களில் திருமணங்கள் மேலும் சில நேரங்களில் சில பூஜைகள் என்று... .

ஊஞ்சல் மண்டபத்திற்கும் 48 கால் மண்டபத்திற்கும் இடையில் நவகிரக சன்னதி அமைந்திருக்கும். அதை ஒட்டி தீர்த்தக் கிணறு. இரண்டிற்கும் இடையில் இருப்பவன்தான் சித்தன்.

கலைந்த தலைமுடி, வெண்தாடி, காவி வேஷ்டி, தோளில் ஒரு காவித் துண்டு. கழுத்தில் பல்வேறு நிறங்களில், பல்வேறு பரிணாமங்களில் ஆன ஒரு மாலை அது என்ன என்பது அவனுக்கும் தெரியாது; நமக்கும் தெரியாது. நெற்றி நிறைய விபூதி பட்டை; குங்குமம், சந்தனம். சித்தன் ஒரு போதும் யாரையும் நேராக பார்த்து ஏதாவது பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடியாது சித்தனின் மௌனம் தான் அவனின் பலம் அறிவின் முதிர்ச்சி ஞானம் என்பதும் ஞானத்தின் முதிர்ச்சி மௌனம் என்பதும் அவன் அறிந்திருந்தது... 

“சித்தன்” என்று பொதுவாகவே அழைக்கப்படும் அவனுக்கு ஒரு பெயர் இருப்பதாக யாருக்கும் தெரியாது. இருந்ததா? எண்ணிப் பார்க்கவும். கோயிலுக்கு வருகிறவர்களுக்கு அதற்கான நேரமில்லை. பூர்வீகத்தில் ஒரு பெயர் இருந்திருக்கும் தானே? இப்போது அவனுடைய பெயர் ஒரு காரணப் பெயராக மாறிவிட்டது.

கோவிலுக்கு வருவோர் யாரும் அவனை புறக்கணிப்பதில்லை. ஜோசியம், ஜாதகம் பார்ப்பதில்லை. ஆனால் அவனை கடக்கும் பொழுது ஏதாவது ஒரு வார்த்தை அல்லது வார்த்தைக் கோவை அவன் வாயிலிருந்து வெளிவரும். அதை அந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுக்காகத்தான் சித்தன் ஏதோ சொல்கிறான் என்று நம்பி. பொருள் படுத்தி , நடைமுறைப்படுத்தி, வாழ்க்கையில் வெற்றி பெற்றதாக ஒரு கதை அந்தக் கோவிலில் பேசப்படுகிறது. அதனால் அவனுக்கு எப்போதும் உணவுப் பஞ்சம் இருக்காது.

கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் அவன் சொன்னது பலித்ததாக, அவிநாசி ஊர் தலைவர் ஒரு மேடையில் சொன்னதாகவும் ஞாபகம்.

தேங்காய் கடை முத்துலட்சுமிக்குக் கூட இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒருமுறை தன் குடிகார கணவனைத் திருத்த முடியாமல், கருணாம்பிகை அம்மனிடம் வேண்டிக்கொண்டு புலம்பியவாறு இவனை கடக்கும் போது, “இதுவும் கடந்து போகும்” என்று அவன் சொன்னதாகவும், அதன் பின்னர் எப்படியோ முத்துலட்சுமியின் கணவன் குடியை விட்டதாகவும் முத்துலட்சுமி நம்பினாள். அதற்காக அவள் எந்த கோவிலில் , எந்த சாமியை வேண்டினாள் என்பதும், எந்த மருத்துவமனையில் என்ன வைத்தியம் பார்த்தார் என்பதுவும், ஒரு தனி கதை. இருந்தாலும் இதையும் நம்பினாள்.

தேங்காய் கடை வைத்திருப்பதால், இந்தச் செய்தியை தன் வாடிக்கையாளர்களான ஊர் பொதுமக்களிடம் அவள் மிக இலகுவாகப் பரப்பினாள். அதில் அவளுக்கு ஒரு பெருமிதம் இருந்தது. மேலும் ஊர்மக்கள் முத்துலெச்சுமியின் கணவர் கடந்த காலங்களில் செய்த குறும்புகளில் இருந்து அழும்புகள் வரை நேரில் பார்த்து , சில சமயங்களில் அதனால் வெறுத்தும் இருப்பதால் இந்த செய்தியில் உண்மை இருப்பதாகவே நம்பினார்கள்.

அதைப்போல பல சரக்கு கடை வைத்திருக்கும் சபாபதி செட்டியாருக்கும் ஒரு அசரீரி போல சித்தன் சொன்னதாகக் ஒரு கதை உண்டு. தந்தையின் மரணத்திற்குப் பிறகு, சகோதரர்களால் ஏமாற்றப்பட்டு தனித்து விடப்பட்டு, அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே அவிநாசி லிங்கேஸ்வரரிடம் முறையிட்டு பிரார்த்தனை செய்துவிட்டு, நவகிரக பூஜை செய்வதற்காக வந்தபோது சித்தன் சொன்ன வார்த்தை:

“தனித்து விடப்பட்டவனால் உருவாக்கப்படும் சாம்ராஜ்யம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பிரம்மாண்டமாக உருவெடுக்கும்.”

இதை சித்தன் தனக்க்காகவே சொன்னதாக நம்பி, சோர்வில் இருந்து மீண்டு, தன தொழில் அனுபவத்தாலும், தொழில் திறமையாலும், முன்னேறி ,இப்போது அவர் பெரிய மளிகைக் கடையையும், இரண்டு மூன்று இந்துஸ்தான் லிவர் பொருட்களுக்கு விநியோகஸ்தராகவும் இருக்கிறார். சொந்த வீடு கட்ட ஆலோசிப்பதாகவும் தகவல்.

அன்று செவ்வாய்க்கிழமை. கூட்டம் குறைவாகவே இருந்தது. முத்துலட்சுமி கடையில் அமர்ந்திருந்தாள். வெள்ளிக்கிழமைக்கு தேவையான தேங்காய், பாலம், பூ போன்ற வியாபார விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள்.

தூரத்தில் பிரபுவும் கலாராணியும் வருவது தெரிந்தது. அவர்கள் இருவரும் முத்துலட்சுமிக்கு நெருக்கமானவர்கள்; இன்னும் சொல்லப்போனால், ஒரு விதத்தில் தூரத்து சொந்தம் கூட. அதனால் வியாபாரத்தைத் தாண்டிய உறவு ஒன்று அவர்களுக்குள் இருந்தது.

பிரபுவும் கலாராணியும் திருப்பூரில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணி புரிகிறவர்கள். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், நல்ல சம்பளம் கிடைப்பதால் வசதியாகவே வாழ்ந்து வந்தார்கள். மிகச் சமீபத்தில் தான் ஒரு சிறிய வீடு கட்டிக் கொண்டு சொந்த வீட்டில் குடியேறியிருந்தார்கள். ஆனாலும், அவர்களுக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருந்தது. அதைப்பற்றி அக்கம் பக்கத்து வீடுகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்.

அப்படித்தான் நேற்று பக்கத்து வீட்டு குழந்தையின் பிறந்தநாள் விழா முடிந்து வீடு திரும்பிய கலாராணி சொன்னாள்:

“பாத்தீங்களா… அந்தக் குழந்தைக்கு கேக் ஊட்டும்போது அவங்க அப்பா அம்மா மனசுல எவ்வளவு சந்தோஷம்… நமக்கும் கொடுப்பினை இருந்திருக்கலாம்…”

“கலா, மறுபடியும் அதைப் பற்றியே பேசிட்டு இருக்காத. உனக்கு நிம்மதி போயிரும். ஏதோ ஒரு வழி கண்டுபிடிப்போம்.”

“ஆனா அதுவரைக்கும் அக்கம் பக்கத்துக்காரங்க கேக்குற கேள்விகளுக்கு பதில் சொல்றது… உங்களுக்கு என்ன தெரியும்? பதில் சொல்ற எனக்குத்தானே தெரியும். யாராவது கதவு தட்டினாங்கன்னா, கதவைத் திறக்கறதுக்கு முன்னாடி ஒரு புன்சிரிப்பைப் பிடிச்சு கொண்டு வந்து உதட்டுல வச்சுட்டு போய் கதவைத் திறக்க வேண்டி இருக்குது…”

“சரி போதும் டா, விடு. நாளைக்கு பேசுவோம்.”

ஆனால் கலாராணி விடுவதாக இல்லை.

“எங்க ஊர்ல சொல்லுவாங்க ‘புள்ள பெத்து கெட்டவன் இல்ல; பிச்சை போட்டு கெட்டவன் இல்ல; கொல்லி வைக்கத் தலைநாளில் ஒரு பிள்ளை வேண்டும்’ என்று. அப்ப சொன்னது இப்போதான் எனக்கு புரியுது…”

“என் தலையெழுத்து…” என்று முணுமுணுத்தபடியே முகத்தை மூன்று கோணல் ஆக்கிக்கொண்டு படுக்கையறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்.

அவர்கள் இருவரும் தங்களுக்கு தெரிந்தபடி, மற்றவர்கள் ஆலோசனைப்படியும் சில முயற்சிகள் செய்தார்கள். ஒரு வாரம் விடுப்பு எடுத்து கோயில் குளம் சுற்றினார்கள். முடிந்தவரை எல்லா விழாக்களிலும் கலந்து கொண்டு தனிமையைத் தவிர்த்தார்கள். சில நேரங்களில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அதனால் அவர்களுடைய மன அழுத்தம் அதிகமானது; சண்டை போடுவது அடிக்கடி நிகழ்வதாயிற்று.

முத்துலட்சுமிதான் பேசத் தொடங்கினாள்.

“என்ன கலா, மூஞ்சி வீங்கி இருக்குது… என்ன விஷயம்? அழுதியா?”

“இல்ல, இல்ல… அது தூங்கினா சரியாகிடும்.”

“அதுதான் புள்ள, நான் கேக்கிறேன். ஏன் தூங்கல? என்ன விஷயம்? ஏன்டா பிரபு, நீயாவது சொல்லுடா?”

“அவளுக்கென்ன வேலை? ஏதாவது ஒன்றை நினைச்சு அழணும். ரெண்டு நாளைக்கு படுத்துக்கணும். அப்புறம் சரி. கோவிலுக்கு வரணும். இது எப்பவும் நடக்கிறதுதானே? இன்னைக்கு என்ன புதுசு?”

“நீங்க அவளையே கேளுங்க.”

“சரி கலா, உள்ள வா. பிரபு, நீ கொஞ்சம் கடையைப் பார்த்துக்கோ.”

முத்துலட்சுமியும் கலாராணியும் கடைக்குள் நுழைந்தனர். இருவரும் ஏதோ பேசிக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருந்தனர். எதைப் பற்றி என்பதையும் பிரபு புரிந்துகொண்டிருந்தான்.

இருவரும் வெளியே வந்தனர்.

“எப்ப என்ன பெரிய பிரச்சனை? ரெண்டு பேரும் பேசி ஏதாச்சும் ஒரு முடிவு பண்ணிக்கோங்க. அதுக்காக சண்டை போட்டுட்டு இருந்தா என்ன அர்த்தம்? லைட் போட்டா ரெண்டு பேரும் ஒரே ரூம்லதான் தூங்க போறீங்க இல்ல? பக்கத்து வீட்டுக்குப் போயிட்டு தூங்கறீங்களா? இல்ல இல்ல? அப்புறம் என்ன. போய் சாமியைக் கும்பிட்டுட்டு வாங்க.”என்றவாறு ஒரு தேங்காய், இரண்டு பழம், வெற்றிலை-பாக்கு, ஊதுபத்தி, சூடம், மஞ்சள், குங்குமம் அடங்கிய பிரம்பு தட்டை, கலாராணியின் கையில் கொடுத்தாள் முத்துலட்சுமி.

பிரபுவும் கலாராணியும் சாமி தரிசனம் செய்து 48 கால் மண்டபத்தில் அமர்ந்து பேசத் தொடங்கினர். பேசிக்கொண்டே இருந்தனர். இடையில் சாமிக்கு உடைத்த தேங்காயை உடைத்து, பகிர்ந்து சாப்பிட்டனர்.

கையோடு கொண்டு வந்திருந்த துணிப்பையில் பழத்தையும் வெற்றிலை-பாக்கையும் வைத்து எழுந்திருக்கும் போது, சித்தன் அவர்களைத் தாண்டி தனக்குள் பேசிக்கொண்டே நடந்து சென்றான்.

என்ன பேசினான் என்பது தெளிவாக கேட்கவில்லை. ஆனால் இரண்டு வார்த்தைகள் மட்டும் அவர்களுக்கு தெளிவாகப் புரிந்தது:

“பெற்றால் தான் பிள்ளையா…”

======================================

சித்தன் தங்களுக்காகவே ஏதோ சொல்லிவிட்டு சென்றதாக பிரபு நினைத்தான். கலாராணியிடம் கொஞ்ச நாட்களாகத் தனது மனதில் வைத்திருந்த ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கினான்.

“கலா… நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு குழந்தையைத் தத்தெடுத்துட்டா என்ன? ஊர் உலகத்துல இல்லாத விஷயம் கிடையாது. நமக்கு ஒரு வாரிசு இருக்கும். அடுத்த இருபத்தைந்து வருடம் நம்ம வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும். என்ன நினைக்கிற?”

கலாராணி நீண்ட பெருமூச்சு விட்டாள். இரண்டு நிமிடம் மௌனமாக இருந்தாள். அதன் பின்னர் பல்வேறு யோசனைகள் அவள் மனதில் தோன்றின.

“சரி… வாங்க வீட்டுக்குப் போகலாம். சொன்னதைக் யோசிக்கிறேன். நல்ல முடிவுதான்… பார்ப்போம்.”

முத்துலட்சுமியிடம் தேங்காய், பழம், தீபாராதனைக்கான காசை கொடுத்துவிட்டு பிரபு சொன்னான்:

“அக்கா, நாங்க ரெண்டு நாளைக்கு இருக்க மாட்டோம். கோயம்புத்தூர் போறோம். அந்த செயற்கை முறையில் கரு தரித்தல் விஷயமா பெரிய டாக்டரிடம் ஆலோசனை கேக்கணும்.”

என்று சொல்லிவிட்டு காலணியை அணிந்து நடக்கத் தொடங்கினான்.

கலாராணி: "என்னங்க, டாக்டர் இன்னைக்கு சொன்னத பத்தி யோசிச்சீங்களா? இயற்கையான முறையில நமக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு கம்மிதான், 'IVF' முயற்சி பண்ணலாம்னு சொன்னாரே... உங்களுக்கு என்ன தோணுது?"

பிரபு: (மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு) "ம்ம்.. யோசிச்சேன். இது திடீர்னு எடுத்த முடிவு இல்ல, நாம பல வருஷமா காத்துட்டு இருக்கோம். டாக்டர் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா, இதை நீ எப்படி பார்க்குற? இது உனக்கு உடல் ரீதியாவும் மன ரீதியாவும் கொஞ்சம் கஷ்டம் தரும்னு சொல்றாங்களே?"

கலாராணி: "நிச்சயமா, எனக்கும் கொஞ்சம் பயமா தான் இருக்கு. நிறைய ஊசிகள் போடணும், அடிக்கடி மருத்துவமனை போகணும்னு தெரியும். ஆனா, நமக்காக ஒரு குழந்தை வேணும்னு நினைக்கும்போது இதையெல்லாம் தாங்கிக்கலாம்னு தோணுது. நம்ம சுத்தி இருக்கவங்க என்ன நினைப்பாங்கன்ற தயக்கம் மட்டும் தான் மனசுல இருக்கு."

பிரபு: "மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு நாம ஏன் கவலைப்படணும்? இது நமக்கும் நம்ம குழந்தைக்கும் இடையில இருக்க விஷயம். அறிவியல் துணையோட ஒரு உயிரை உருவாக்கப்போறோம், இதுல தயக்கப்பட எதுவுமே இல்லை. உனக்கு நான் முழு துணையா இருப்பேன்."

கலாராணி: "அது போதும் எனக்கு. ஆனா இதுக்கு செலவு ரொம்ப அதிகமாகுமே? நம்ம சேமிப்பு இதுக்கு போதுமா?"

பிரபு: "பணத்தை பத்தி நீ யோசிக்காத. அதுக்காகத் தான் நான் இப்போ கூடுதல் வேலைகளை பார்த்துட்டு இருக்கேன். நம்ம குழந்தையோட சிரிப்புக்கு முன்னாடி இந்த பணம் ஒண்ணுமே இல்லை. முதல்ல நீ மனசளவுல தைரியமா இருக்கணும், அதுதான் ரொம்ப முக்கியம்."

கலாராணி: "நிச்சயமாங்க. நீங்க கூட இருந்தா என்னால எதையும் சமாளிக்க முடியும்.

பிரபு: "கண்டிப்பா போவோம். இது நம்ம வாழ்க்கையில ஒரு முக்கியமான படி. நம்பிக்கையோட இருப்போம், எல்லாம் நல்லபடியாவே நடக்கும்."

=======================

“கலாராணியின் கணவர் மிஸ்டர் பிரபு … வாங்க, டாக்டர் கூப்பிடுறார்…”என்று செவிலியரின் குரல் கேட்டது.பயம் கலந்த எதிர்பார்ப்புடன் பிரபு உள்ளே விரைந்தான்.

“காங்கிராஜுலேஷன்ஸ்.”

ஒரே வார்த்தையில் டாக்டர் விஷயத்தை விளக்கினார்.

பிரபுவின் முகத்தில் ஒரு கூடை மல்லிகைப் பூவின் வாசமும், ஒரு சொம்பு பன்னீர் தெளித்த தெளிவும் இருந்தது. அதை பார்த்து கலாராணி மகிழ்ந்தாள்.

கருவறையில் சுமந்தால் தான் தாய் என்று இல்லை… சரிந்த பிறகும் அழகாய் இருக்க, நீராய் இருக்க வேண்டும்…கலாராணி நீராய் இருந்தாள்.

===================================

கோயம்புத்தூரில் மருத்துவர் சொன்ன “காங்கிராஜுலேஷன்ஸ்” என்ற ஒரே வார்த்தை, அவர்கள் பல ஆண்டுகளாக சுமந்திருந்த அமைதியான கண்ணீருக்கு பதிலாக வந்த வரம்.

ஆனால் அந்த இரவு, வீடு திரும்பியபோது கலாராணி மெதுவாகச் சொன்னாள்:

“பிரபு… டாக்டர் சொன்னது நம்ம வாழ்கையில ஒரு அதிசயம். ஆனா அந்த நாள் நீ சொன்னது… ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம்னு… அது என் மனசுல இன்னும் இருக்கு.”

பிரபு அவளைப் பார்த்தான்.

“ஏன் கலா?”

“நமக்கு கிடைத்த இந்த மகிழ்ச்சி நமக்கே மட்டும் இருக்கணுமா? எங்கோ யாரோ ஒரு குழந்தை… ‘அம்மா’ன்னு சொல்ல யாரும் இல்லாம இருக்கலாம்…”அதுவும் கொஞ்சம் மகிழட்டுமே!!

பிரபுவின் நாசியில் மீண்டும் அந்த மல்லிகைப் பூ வாசம்.

மாதங்கள் கடந்து சென்றது. அவிநாசி கோயிலில் மீண்டும் ஒரு நாள்.

இந்த முறை 48 கால் மண்டபத்தில் நிச்சயதார்த்தம் இல்லை.ஒரு சிறிய விழா.

கலாராணி கருவுற்றிருந்தாள். அவர்களுடன் இன்னொரு கையைப் பிடித்தபடி நின்றாள் அவர்கள் தத்தெடுத்த சிறுமி, அகிலா.

முத்துலட்சுமி கண்ணீருடன் பார்த்தாள். “சித்தன் சொன்னது பொய்யா போச்சுன்னு நினைச்சேன்… ஆனா இப்போ புரியுது.”

அதே சமயம் சித்தன் அங்கேயே நின்றிருந்தான். அவன் மெதுவாகச் சொன்னான்:

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் …”

யாருக்குச் சொன்னான்?
அவர்களுக்கா?
அல்லது உலகத்துக்கா?

யாருக்கும் தெரியாது.

- யுவராஜ் சம்பத்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.