நண்பர் ஒருவர் அடிமனதில் இருந்த உணர்வுகளுக்கு ஆங்காங்கே வார்த்தையை அடிக்கொடுத்து கவிதையாக எழுதியிருந்தார். அது நூறு பக்கங்கள் தாண்டிப் போகவே இதை என்ன செய்வது என்று புரியாமல் என்னிடம் கொண்டு வந்தார். நன்கு கத்தை கத்தையாக இருந்தது. அதை முழுமையாக என்னிடம் கொடுக்காமல், “இந்தா இதை முதலில் சாப்பிட்டு பாரு, இனிப்பா இருக்கும்! அடுத்து இத சாப்டு லேசா புளிக்கும்!” என்பது போல அவரே ஒன்றொன்றாக எடுத்துக் கொடுத்தார். “இதை படிச்சின்னா அழுதுருவ!” என்று நடுநாயகமாக இருந்த ஒரு பேப்பரை உருவி நீட்டினார். அது ஒரு அம்மா கவிதை. தலைப்பு “தாயே நீ ஒரு தாய்” என்று இருந்தது. நாயே என்று எழுதியிருக்கிறதா என்று லேசாக கண்ணை கசக்கிவிட்டு கூர்ந்து நோக்கினேன். “பாத்தியா அழுதுட்ட” என்றார்.

இன்னொன்று நிலா கவிதை. ‘ஓ நிலாவே’ என்று ஆரம்பிப்பார் என்று நினைத்திருந்தேன். தவறு “ஏ நில்லாவே” என்றிருந்தது.

“அது என்ன ஸார் நில்லா? வில்லா மாதிரி தனி வீடா?”

“அது நிலாதான். ஏ நில்லா வித்தியாசமா இல்ல? சரி வா ஒரு டீ அடிச்சிட்டு வந்துருவோம்!”

“ஓ அப்படி வர்றீங்களா? அருமையா இருக்கு. வாங்க டீ சாப்டப் போவோம்”

இவர் என் மூத்த நண்பர். பழகுவதற்கு இனிமையானவர். அரசுப் பணியில் இருப்பவர். எழுத்துத் துறையில் எதாவது சாதிக்க வேண்டும் என்று வேகம் உள்ளவர். ஒருமுறை ஏதோ எழுதப் போய் அது கவிதை போலத் தோற்றமளிப்பதாக யாரோ கூற அன்று முதல் கவிஞராக முடி சூட்டிக் கொண்டார்.

ஒருநாள் யாருக்கோ தன் கவிதையைப் படிக்க கொடுக்க, அவரோ படிக்க சங்கடப்பட்டுக் கொண்டு “இதை புத்தகமாகப் போட்டால்தான் முழுமையாக படிப்பேன். நீங்கள் எழுதிய கவிதை ஒவ்வென்றும் முத்துகள். ஆகவே இந்த தனித்தனி முத்துகளை மாலையாக அதாவது புத்தகமாகப் போட்டால் எங்கயோ போயிருவீங்க” எனக் கூற அன்று முதல் புத்தகமாகப் போட்டே தீருவேன் என்று சபதம் செய்திருக்கிறார். உடனே பரணில் ஏறி எல்லா கவிதையும் எடுத்துக்கொண்டு அதில் சிறந்த கவிதையை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். தேர்ந்தெடுத்த கவிதைகளே இப்படி என்றால் பரணில் கிடக்கும் கவிதைகள் எப்படி இருக்கும் என்ற யோசனையாக இருந்தது.

மறைமுகமாக பலமுறை சுட்டிக் காட்டியும் நண்பர் தன் கவிதைத் தொகுப்பை வெளியிடுவதில் உறுதியாக இருந்தார். நட்பு முறிந்துவிடும் அபாயம் இருந்தும் ஒருமுறை சற்று அழுத்தமாகக் கூறினேன். என்னை கூர்ந்து பார்த்தவர், “உனக்கு பக்குவம் பத்தல, கவிதைத் தொகுப்பு வந்ததும் பார்!” என்று கூறிவிட்டார். இதற்கு மேல் தடுப்பது முடியாதது என்று புரிந்து விட்டது. காரணம், வெளியீட்டு அன்று உடுத்திக் கொள்ள ஒரு வைரமுத்து பார்மெட் ஜிப்பா தைக்குமளவிற்கு நிலைமை கைமீறிவிட்டது.

எழுதிய கவிதை அனைத்தும் கையால் எழுதியவை. கவிதையை எடுத்துக் கொண்டு ஒரு பதிப்பகத்திற்குச் சென்றோம் (பிரிண்டிங் பிரஸ்தான்). அதன் உரிமையாளர் வாங்கிப் பார்த்தார். ஏதோ கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு ப்ரூப் பார்ப்பது போல பார்த்துவிட்டு தட்டச்சு செய்து கொண்டு வருமாறு சொன்னார். தட்டச்சு செய்ய ஒரு இடத்தை அணுகினோம். பக்கத்திற்கு இவ்வளவு ஆகுமென்று சொல்லி வேலை ஆரம்பமானது. தட்டச்சு செய்யும் பெண்ணுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால் என்ன செய்வது என்று நண்பர் அந்தப் பெண்ணின் அருகிலேயே உட்காந்து கொண்டு தன் கவிதை டிஜிட்டல் வடிவத்தில் சுகப்பிரசவம் ஆவதை கண்டுகளித்தார். எனக்கும் அப்போது (2008ல்) வேறு வேலை இல்லாததால் அவருடனேயே பொழுது போக்க வேண்டிய கட்டாயம்.

தட்டச்சு செய்து கொண்டிருந்த பெண்ணின் முகத்தை கவனித்தேன். எழும் சிரிப்பை அடக்கிக் கொண்டு தட்டச்சு செய்து கொண்டிருந்தார். நண்பர் என் காதருகே வந்து,

“டைப் பண்ற பொண்ணு சிரிக்கிறத கவனிச்சியா?”

“ஆமா ஸார் கவனிச்சேன்!”

“என்னமோ சொன்ன, இப்ப பாரு அந்த பொண்ணு என் கவிதையை எப்படி ரசிக்கிதுன்னு!”

“சரி வாங்க, ஒரு டீ சாப்ட்டு வந்துருவோம்!”

இரண்டு நாட்களில் தட்டச்சுப் பணி முடிந்தது. ஃபைலை ஒரு சிடியில் போட்டுக் கொடுத்தார் அந்தப் பெண்மணி. பெண்மணியிடம் விடைபெறும்போது நண்பர், “தயவுசெய்து இந்த கவிதையை உங்கள் கணிப்பொறியில் இருந்து முழுமையாக அழித்து விடுங்கள். இல்லையேல் வேறு யாராவது என் கவிதையைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது” என்று உருக்கமாக ஒரு கோரிக்கை விடுத்தார். அந்த பெண்ணின் முகபாவனையை பார்க்க முடியாமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன்.

பதிவு செய்த சிடியின் சூடு ஆறுவதற்குள் பதிப்பக வாசலில் (ஆம், பிரிண்டிங் பிரஸ்) இருந்தோம். இன்று வேறு ஒருவர் இருந்தார். முன்பிருந்தவரின் மூக்கு இவரது மூக்கை ஒத்திருந்ததால் அண்ணன் அல்லது தம்பியாக இருக்கலாம். விஷயத்தைச் சொல்லி சிடியை கையில் கொடுத்தோம். நாங்கள் சொன்னதைக் கேட்டுவிட்டு அசுவாரஸ்யமாக சிடியை விநோதமாகப் பார்த்துவிட்டு அருகில் உள்ள மேசையில் வைத்தார். நண்பருக்கு பெருத்த ஏமாற்றம். சிறிது நேரத்தில் பழைய ஆள் வந்துவிட்டார். வந்தவரிடம் சிடியைக் காண்பித்துவிட்டு காத்திருந்தோம். லேஅவுட், கவர் பேஜ், ஜிஎஸ்எம் என்றெல்லாம் ஏதேதோ சொன்னார். கூடவே இதற்காக ஆகும் செலவையும் சொன்னார். சற்று பெரிய தொகை. மேலும் குறைந்தபட்சம் ஐநூறு காப்பி அடித்தால்தான் கம்பெனிக்கு கட்டுப்படியாகும் என்று சொல்லப்பட்டது. ஐநூறு காப்பியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற மலைப்பு எனக்கு. நண்பர் காதருகே வந்தார், “ஐநூறு ஒரு சுத்துக்கு காணாது, ஆயிரமா போட்ருவோமா?”

மறுநாள் நண்பர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு சிங்கிள் செட்டில்மேண்டில் அச்சகத்தில் செலுத்தினார். புத்தகம் அச்சாகி வர ஒருவாரம் ஆகும் என்றார்கள். காத்திருக்க முடியாமல் தினமும் அச்சகப் பணியை பார்வையிட்டோம். ஏதோ ஒரு கவிதைத்தனமான இயந்திர சப்தத்தைக் கேட்டு நண்பர், “நம்ம புக்தான் ஓடுதுன்னு நினைக்கிறேன்” என்றார்.

இதற்கிடையில் வாழ்த்துரை, மதிப்புரைக்காக வாலி முதல் வைரமுத்து வரை ஆளுக்கு தலா ஒரு ஜெராக்ஸ் பிரதியை அனுப்பி வைத்தார். யாரிடம் இருந்தும் பதிலில்லை. “எல்லா பயலுகளுக்கும் ஏறிப் போச்சு. ஃபீல்டுகுள்ள போயிட்டு வச்சுக்கிறேன்” என்றார்.

ஒரு நாளுக்கு முன்னதாகவே அச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துவிட்டது. காலை ஏழு மணிக்கு வீட்டுக்கு அரைத்தூக்கத்தில் இருந்த என்னை ஒரு ஆட்டோவில் என்னை அள்ளிப் போட்டு கொண்டு போனார் நண்பர். “கொஞ்சமாவது புத்தி இருக்கா? புக் இன்னிக்கு வருதுன்னு தெரியும்ல? இன்னும் தூங்கிட்டு இருக்க?” என்று சந்தோசமாகத் திட்டினார்.

ஆச்சரியமாக அச்சகம் திறந்திருந்தது. உரிமையாளர் முண்டா பனியனுடன் பற்களை பல பரிணாமங்களில் துலக்கிக் கொண்டிருந்தார். அவரது வீடும் அதுவே என்று புரிந்தது. வாயில் நுரை தள்ளியிருந்ததாலும் அதை துப்பாமல் கண்ணால் ஒரு பக்கம் வழிகாட்டினார். பெரிய பண்டல் பழுப்பு நிற பேப்பரில் சுற்றியிருந்தது. தாயும் சேயும் நலம் என்று யாரோ சொன்னது போல நண்பர் மகிழ்ச்சியுடன் ஓடிப் போய் தூக்க முயற்சி செய்தார். அனைத்தையும் ஆட்டோவில் அடைத்துவிட்டு அவரது வீட்டுக்குச் செல்ல இன்னொரு ஆட்டோ பிடித்து இறங்கினோம். 

வீட்டிற்கு வந்து எல்லா புத்தக பண்டல்களையும் பிரித்தோம். நண்பர் வெறிகொண்டு பிரிப்பதை அவரது மனைவி வந்து எட்டிப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஓராயிரம் வருட சலிப்பு ஒரு நொடியில் வந்து போனது. மனைவியிடம் நண்பர் நிறைய கவிதை வாசித்துக் காட்டியிருக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அடுக்கடுக்காக இருந்த புத்தகங்களை காண ஆவலாய் தான் இருந்தது. ஒரு புத்தகத்தை எடுத்து நடுப்பக்கத்தை விரித்தேன். “தாயே நீ ஒரு தாய்” இருந்த இடத்தில் புத்தகத்தை வைத்து விட்டேன்.

எல்லா புத்தகத்தையும் எடுத்து வரிசையாக அடுக்கினார். “சரி நா கிளம்புறேன்” என்றவனை, “இரு சாப்ட்டுப் போகலாம்” என்றார். “இல்ல கிளம்புறேன், குளிச்சிட்டு வர்றேன்” என்றவனை கோபமாகப் பார்த்தார். “இரு ஒரு நிமிஷம்” என்று ஒரு இருபது புத்தகத்தை கையில் கொடுத்தார். தன் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியை எனக்குக் கொடுத்த மகிழ்ச்சி அவரது முகத்தில் தெரிந்தது.  விற்று காசாக்கி கொண்டு வா அல்லது மனப்பாடம் செய்து நாளைக்கு ஒப்பிக்க வேண்டும் என்பாரோ என்ற அச்சம் பீடித்தது. காரணம் அன்று அவரிடம் இரண்டாயிரம் கடன் வாங்கலாம் என்றிருந்தேன்.

தெரிந்த நண்பர்களுக்கும், கவிதை விரும்பிகளுக்கும் இலவசமாக படிக்கக் கொடு என்றவர் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, “புத்தக வெளியீட்டுக்கு முன்னாடி குடுத்துறாத” என்றார்.

புத்தக வெளியீட்டுக்கு ஒரு பெரிய ஹாலை பிடிப்பார் என்று நினைத்திருந்தேன். நல்ல வேலையாக அப்படியேதும் செய்யாமல் விழாவை வீட்டு மொட்டை மாடியில் சாமியானா பந்தல் போட்டு வைத்திருந்தார். எல்லா ஊரிலும் காதுகளை வதம் செய்யும் பேச்சாளர் ஒருவர் இருப்பார். அப்படிப்பட்ட ஒருவர் நண்பரின் நண்பர். ஆகவே அவரே சிறப்பு விருந்தினர் மற்றும் புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுவதும் அவரே. டேபிளில் ஜமுக்காளம் போட்டு ஒரு ஓரத்தில் உயர்ரக ஊதுபத்தி புகைந்து கொண்டிருந்தது. உலக ரணங்கள் ஒன்று கூடிய கிலியில் கடைசி வரிசைக்கு முன் வரிசையில் பதுங்கியிருந்தேன். விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும் நண்பரின் உறவினர்களே, கவிதை தொகுப்பிற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏதோ ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த மூடில் இருந்தார்கள். இதில் ஒரு நன்மையும் இருந்தது. யாருமே கவிதையை விமர்சனம் செய்யவோ, இடித்துரைத்தோ பேசவே இல்லை. பரிமாறப்பட்ட மெதுவடை மற்றும் கேசரி மீதே அனைவரது கவனமும் இருந்தது.

சிறப்பு அழைப்பாளர் கவிதை புத்தகத்தை வாசித்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். நண்பர் வைரமுத்து உடையில் வேறு யாரோ போல இருந்தார். அவ்வப்போது மேலே பார்த்து ஏதோ யோசித்தார். அது அடுத்த கவிதை தொகுப்பிற்கான யோசனையாக இருக்குமோ என்ற அச்சம் வேறு. அதற்குள் ஒரு நல்ல வேலைக்கு போய்விட வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. தலைமை சொற்பொழிவாளர் வந்த இடத்திற்கு பொருத்தமில்லாமல் பேச்சாளர் நிலையும் பெட்ரோமாக்ஸ் விலையும் என்கிற ஒரு தலைப்பில் ஒரு பேருரையை ஆற்றினார். அழைத்த பாவத்திற்குத் கவிதை தொகுப்பை திறந்து ஒன்றை வாசித்துக் காட்டினர். “தாயே நீ ஒரு தாய்!”

ஒருவழியாக விழா நிறைவுற்றது. விழாவிற்கு வந்த அனைவர்க்கும் ஒரு புத்தகம் இலவசமாக கொடுக்கப்பட்டது. நல்லவேளையாக யாரும் கவிதைத் தொகுப்பை கிழித்து வீட்டுக்கு மெதுவடையை பார்சல் செய்யவில்லை.

ஒரு சில நாட்களுக்கு பின்னால் அவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். புத்தகம் அடுக்கி வைத்திருந்த அறையைப் பார்த்தேன். என்னூறு பிரதிகளுக்கு குறைவில்லாமல் இருந்தது. நண்பர் முகத்தில் லேசான சோர்வு.

“என்ன ஸார் ஒரு மாதிரியா இருக்கீங்க?”

“இல்ல ராஜா, வாங்கிட்டு போன ஒருத்தன் கூட புத்தகத்தைப் பத்தி பேசவே இல்ல. வெக்கத்தை விட்டு போன் அடிச்சு கவிதை பத்தி கேட்டா, பேச்சை மாத்துறானுங்க!”

“விடுங்க ஸார், போக போக பிக்கப்பாகும்!” என்று ஆறுதலாக சொன்னேன். அதில் திருப்தி அடையவில்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது.

“அது கிடக்கட்டும் மகனுக்கு காது குத்து வச்சிருக்கேன். கண்டிப்பா வந்துரு” என்றார்.

காது குத்துக்கு ஆஜரானேன். பெரிய ஹாலில் நடந்தது. நான் உள்ளே நுழையும் போது காது குத்து நிகழ்ச்சி முடிந்து சாப்பாட்டு படலம் ஆரம்பமாகியிருந்தது. விழாவிற்கு வந்த அனைவரது கையிலும் அன்னாரின் கவிதைத் தொகுப்பு இருந்தது. வயதை கணக்கிடாமல் தலைக்கு ஒரு புத்தகம் என்று கொடுக்கப்பட்டதால் ஆறுவயது குழந்தை கையிலும் ஒரு கவிதைத் தொகுப்பு தவழ்ந்து கொண்டிருந்தது. நண்பரைப் பார்த்தேன், ஏதோ ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியில் தெரிந்தார்..

சாப்பாடு வைக்கும் இடம் நோக்கி நகர்ந்தேன். கூட்டம் அதிகமாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து வருவோம் என்ற யோசனையில் வெளியே வந்தேன். ஒருவர் மொய் எழுதிக் கொண்டிருந்தார். அவர் அருகே புத்தகத்தின் கடைசி பண்டல் இருந்தது. இன்னும் எத்தனை புத்தகம் இருக்கிறது என்ற அற்ப ஆவலில் எட்டிப் பார்த்தேன். என் கையிலும் ஒரு புத்தகத்தைத் திணித்தார்கள்.

“ஏ நில்லாவே”

- கா.ரபீக் ராஜா

Pin It