மாரிக்கண்ணுக்கு இது ஒன்றும் புதிதல்ல. இதுபோல் பலமுறை ஊரில் நடந்திருக்கிறது. இந்த முறை அவளின் அய்யா பாதிப்படைந்திருக்கிறார்.

சாராயக்கடையில் சண்டை என்று தான் பேசிக்கொண்டார்கள். இரண்டு ஊர்க்காரர்களும் சண்டைகள் போட்டதில் இரண்டு பக்கமும் பாதிப்பு. எல்லோரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

 மாரிக்கண்ணின் அய்யா தலையில் கட்டுபோட்டு படுத்திருந்தார். கையில் போட்டிருக்கும் கட்டிற்கு நாளை தான் எக்ஸ் ரே பார்த்து எலும்பு உடைந்திருக்கிறதா என்று சொல்ல முடியும் என்று சொன்னார்கள்.

 இவளுக்குத்துதான் அழுகை அழுகையாக வந்தது. இனி எப்பொழுது படிக்க அனுப்புவார்கள் என்று யாருக்கும் தெரியாது. அந்த ஊர்க்காரர்கள் பேருந்தில் இந்த ஊர் வழியாகத்தான் நகரத்துக்குப்போக வேண்டும். அவர்களும் உடல் நோவு தாண்டி வேறு எதற்கும் நகரத்துக்கு வரமாட்டார்கள். இந்த ஊர்க்காரப் பிள்ளைகள் அந்த ஊர் பள்ளியில் படித்தார்கள். இதுபோன்ற சூழலில் ஏன் பள்ளிக்கு வரவில்லையென ஆசிரியர்களும் கேட்கமாட்டார்கள். இதுபோன்ற பல விசயங்களுக்கு இவர்கள் எல்லோரும் தலைமுறைகள் கடந்தும் தங்களைப் பழக்கி இருந்தார்கள்.

 மேலத்தெரு சன்னாசி அண்ணன் வேனில் ஏற்றி நான்கைந்து அண்ணன்களோடு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குப் பார்க்கச் சென்றவர்களை அங்குள்ளவர்கள் அனுப்பி வைத்தார்கள். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் எல்லோருக்குள்ளும் பயம் இருந்தது.

"ஊருக்குப் போனதும் தகவல் சொல்லிடுங்க." என்று ஒவ்வொருவரும் சொன்னார்கள். மாரிக்கண்ணு அம்மா மட்டும்

"பெரியாயி இவளை புளியமரத்துக்கிட்ட விட்டுட்டு எனக்கு தகவலச்சொல்லிடு. அவ அங்கேர்ந்து வீட்டுக்குப்போயிருவா." என்று சொன்னது.

மாரிக்கண்ணுக்கு சண்டை சச்சரவுகளைக் கடந்து அம்மா நாளைக்கு கஞ்சி வச்சியாரச் சொன்னதுதான் அதிக கவலையாக இருந்தது. நான்காம் வகுப்பு படிக்கும் போது ஒரு தடவை அம்மா உடல்நிலை சரி இல்லாமல் இருந்த போது கஞ்சி வைத்தது இப்போது தன்னால் செய்ய முடியுமா என்கின்ற சிந்தனையை அவளால் கடக்க முடியாமல் இருந்தாள்.

அம்மா பெரியாயி அக்கா எவ்வளவோ வற்புறுத்தியும் கஞ்சி கொண்டு வரவேண்டாம் என்று மறுத்துவிட்டாள். பிறகு எப்போதாவது குத்திக் காட்டி விடுவார்கள் என்று வேண்டாமென சொல்லிவிட்டார். கிராமங்களில் பெரும்பாலும் அடுத்தவர்களின் உதவியை மறுத்து விடுவார்கள்.

இதனாலையே மாரிக்கண்ணு தான் செய்யும் உதவிகளை யாரிடமும் சொல்ல மாட்டாள். வகுப்பில் பலபேருக்கு ஓவியம் வரைந்து கொடுத்து இருக்கிறாள் அதை இவள் யாரிடமும் சொன்னதில்லை. ஒரு தடவை கண்மணி தேர்வு எழுதப் பேனா இல்லை என்று சொன்னதும் தனது பேனாவைக் கொடுத்துவிட்டு அவளை இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டாள். அவள் பேனாக் கொடுத்து பிறருக்கு உதவும் அளவுக்கு வசதியானக் குழந்தையும் இல்லை. தினப்படி உலை பொங்க வைப்பதற்கே அவள் அம்மா படாதபாடு படக்கூடியவர். பேனாவைத் தொலைத்ததற்காக அம்மாவிடம் பூசை வாங்கியதை கண்மணியிடம் அவள் சொல்லவே இல்லை.

வீட்டிற்குப் போகும் வழியில் கீழேக் கிடந்த கைபேசியை எடுக்கலாமா என்று யோசித்து, நிற்கலாமெனெ நினைக்கும்போதே பெரியாயி அக்கா பார்த்துக்கொண்டு இருப்பது தெரியவர எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். நர்சக்கா ஓட்டு வீட்டின் முன்புறம் உடைத்தவர்கள் தான் இந்தக் கைபேசியைத் தொலைத்துவிட்டு சென்றிருக்க வேண்டும்.

மின்சாரம் இல்லாததால் தெரு இருளாக இருந்தது.நர்சக்கா வீட்டுப் பேட்டரியில் எரியும் மின் விளக்கு வெளிச்சம் ஒலங்கையில் பார்த்து நடக்க முடிந்தது. மாரிக்கண்ணு போட்டிருந்த பள்ளி சீருடை வெள்ளை நிறமாக இருந்ததால் அவள் வீட்டிற்குள் நுழையும் போது கையசைத்ததை தோராயமாக உறுதி செய்து புளிய மரத்திற்குப் பக்கத்தில் இருந்த பெரியாயி கிளம்பிவிட்டார்.

வீட்டில் விளக்கைக் கொளுத்தியதும் கைபேசி விலை உயர்ந்ததாக இருந்தது அறிய முடிந்தது. இதுபோன்ற கைபேசிகளை பணக்காரர்கள் வைத்திருப்பதை அவள் பார்த்திருக்கிறாள். அதை அப்படியே வைத்துவிட்டு நாளைக்கு கஞ்சி வைக்க வேண்டிய அரிசியை குண்டானில் திறந்து பார்த்துவிட்டு வந்து நந்தினியுடைய ஓவியப்புத்தகத்தில் அவள் சொன்னதுபோல வரையாமல் மீதம் இருந்த ஓவியத்தை வரைந்து முடிக்கும்போது அந்தக் கைபேசி ஒலித்தது.

"ஹலோ. "

"இது என்னுடைய போன் இதை தயவு செய்து தந்துவிட முடியுமா. இதில் என்னுடைய டாக்குமெண்ட் அதிகமாக இருக்கிறது. ப்ளீஸ். பணம் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன். நீங்க எங்க இருக்கீங்க நான் உடனே வந்து வாங்கிக்கறேன்."

"ஐயா, அதெல்லாம் வேண்டாம். எங்க ஊர்ல ஒரேப் பிரச்சினையாக இருக்கு இங்கெல்லாம் இப்ப யாரும் வர முடியாது."

அழைப்பு வரும்போது நந்தினியின் புகைப்படம் வந்ததால் அது அவளோடு தொடர்புடையர்களென நினைத்து

"ஐயா... நந்தினிக்கு நீங்கள் என்ன வேண்டும்."

"அவுங்க அப்பா."

"ஐயா அவுங்க தோழி மாரிக்கண்ணு. காலையில் மருத்துவமனைக்கு எங்கய்யாவைப் பார்க்க வருவேன். அங்க வந்து வாங்கிக்கங்க ஐயா."

"ரொம்ப முக்கியமான போன்ம்மா. நிறைய போன் இரவு பேச வேண்டியது இருக்கும்மா. உங்க ஊருப் பாலத்துக்கிட்ட வாம்மா."

"ஐயா.. எனக்குப் பயமா இருக்கு. ஊர்ல கரண்ட் இல்லைய்யா. நான் இரவுல வந்தா என்னைய எங்க ஊருக்காரங்க திட்டுவாங்க."

அவர் பலவிதமாக பேசி மாரிக்கண்ணை வர சம்மதிக்க வைத்து அவளும் வந்து காத்துக் கொண்டிருந்தாள்.

இரு சக்கர வாகனம் ஒன்று விளக்குப் போடாமல் தன்னிடம் வந்ததும் அவள் பயந்து போனாள். அவரிடம் கைபேசியைக் கொடுத்தாள்.

"ரொம்ப நன்றிம்மா. உன் போன் நம்பர் நந்தினிக்கு தெரியுமா. காலையில் நான் பேசச் சொல்றேன். "

"நந்தினிக்கு தெரியாது. போன் அம்மாகிட்டே இருக்குய்யா. அவுங்க மருத்துவமனையில் அய்யாவுக்கு துணையாக இருக்காங்க."

மாரிக்கண்ணின் பதில் அவருக்கு சங்கடத்தைக் கொடுத்தது. அந்த மௌனத்தை அவளே கலைத்தாள்.

"ஐய்யா... இந்த ஓவியப்புத்தகத்தை நந்தினிக்கிட்டக் கொடுத்திடுங்க. நான் வகுப்புக்குப் போக மூனு நாலு மாசமாவது ஆகும். அவள் சொன்னது மாதிரி வரைந்துவிட்டேன்னு சொல்லுங்கய்யா."

அவருக்கு ஏனோ மாபாதகம் செய்வதாக மனதிற்குள் தோன்றியது. குரல் தளுதளுத்து

"என்னப் படம்மா அது"

மாரிக்கண்ணு ஓவியப் புத்தகத்தைப் பிரித்து அந்தப் பக்கத்தை எடுத்துக் காட்டினாள். கோயில் மின்விளக்கு பேட்டரியில் எரிந்ததால் அதன் தூர வெளிச்சத்தில் திரும்பி நின்று பார்த்தார்.

வானத்தின் நீல நிறப் பின்னணியில் சிறு சிறுப் பறவைகள் ஒரு ஓரமாக பறக்க இரண்டு சிறுமிகள் நடுவில் இவர்களின் பள்ளி சீருடையில் சிறகுகள் அசைத்து பறப்பதாக வண்ணமாக இருந்தது. சிறுமிகளின் வண்ணச் சேர்க்கைகள் சிந்தனை செய்ய வைத்தது.

அதேப் போல ஓவியம் அடுத்தப் பக்கத்தில் அப்படியே வரைந்து அதில் ஆற்றின் மேல் படகில் ஒரு சிறுமி சிறகில் வழிந்த இரத்தத்திற்கு மருந்திடுவதாக பறக்கும் இரண்டாவது சிறுமியின் தலையிலிருந்து முட்டை வடிவ சங்கிலி போன்ற ஒன்று படகின் சிறுமியின் தலையில் வந்து முடிந்திருந்தது.

இந்த ஓவியங்கள் பற்றி மாரிக்கண்ணுவிடம் கேட்க அவருக்கு ஆசையாக இருந்தது. சூழ்நிலை சரி இல்லாததால் தன் மகளிடம் தன் தோழி ஓவியங்கள் பற்றிச் சொன்னதைக் கேட்கலாமென நினைத்து கிளம்பிவர் அருகில் வந்து அவள் தலை மீது ஆதுரமாக கை வைத்ததை கூட வந்த நபர் தட்டிவிட்டார்.

"அறிவு கெட்டவனே... நீ லூசாடா... எனக்கே குற்றவுணர்வு குருகுருக்குதுடா."

"ஒரு வாரத்தில நீ ஸ்கூலுக்குப் போகலாம்மா." என்று சொல்லிவிட்டு அழைத்துக்கொண்டு போகும்போது அந்த ஆள் ஏதோ சொல்லிக் கொண்டு போனார். நந்தினி அப்பா நல்லவரா. நல்லவராக இருந்தால் அவரது கைபேசி நம் தெருவிற்கு எப்படி வரும். அவர் இப்போது நல்லவராக இருக்கிறார். எப்படி அதுபோல மாறினார். யோசித்துக்கொண்டு அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

வண்டியின் சத்தம் கேட்டு யாரும் தங்களைத் தாக்க வந்துவிடக் கூடாதென்று அவர்கள் இரு சக்கர வாகனத்தை தூரமாக சென்று ஓட்டிச்செல்லலாமென தள்ளிக்கொண்டுப் போனார்கள்.போகும்போதே இருவரும் காதில் கேட்காதவாறு விவாதம் செய்து கொண்டே சென்றார்கள். அவர்களை முதலில் பார்ப்பவர்கள் கரும்பு வெட்ட வந்த வெளியூர்க்காரர்கள் என்று தான் நினைப்பார்கள். அப்படித்தான் அவர்கள் இருந்தார்கள்.

வண்டி லேசாக நகரும்போது பின்னால் உட்கார்ந்து இருந்த ஆள் கீழே இறங்கி மாரிக்கண்ணுவை நோக்கி ஓடி வந்தார். நந்தினியின் அப்பா இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேகமாக வந்து அவரின் சண்டையைப் பின்னால் பிடித்து இழுத்து அறைந்தார். அவர் திமிரி மீண்டும் வர மீண்டும் மீண்டும் அடித்தார். அவர் நந்தினியின் அப்பாவை அடிக்கவில்லை. மாரிக்கண்ணுக்கு அவர்கள் ஊர் ஆட்கள் வந்துவிடுவார்களோ என்று பயமாக இருந்தது.

காவல் அதிகாரிகள் முதல்வர் பக்கத்து நகரத்துக்கு வருவதால் காவல் நிலையத்திலையே எழுத்தரும் ஒரு பெண் காவல் அதிகாரி மட்டும் தான் இருப்பதாக ஊர் ஆட்கள் மருத்துவமனையில் பேசிக்கொண்டு இருந்தார்கள். இல்லை என்றால் இப்போது இரண்டு ஊரிலும் அவர்கள் குவிக்கப்பட்டிருப்பார்கள். மாரிக்கண்ணு நல்ல வேலை காவல் அதிகாரிகள் இல்லை நாம் வந்தபடியே வீட்டிற்கு சென்றுவிடலாமென இருக்கும் போது இவர்கள் சச்சரவுகள் செய்வது பயமாக இருந்தது.

ஒரு வழியாக நந்தினி அப்பா அவரை வண்டியை ஓட்டச் சொல்லி பின்னால் உட்கார்ந்தவர் திரும்பி மாரிக்கண்ணுவைப் பார்த்து கும்பிட்டார். அப்போது அவரின் தலை சற்றே தாழ்ந்து மன்னிப்பு கேட்பதைப்போல இருந்தது.மாரிக்கண்ணுக்கு கும்பிடுவதா அல்லது டாட்டா காட்டுவதா என்று குழப்பமாக இருந்தது. கோயில் பேட்டரி விளக்கு மின் சேமிப்பு இல்லாமல் அணைந்துவிட்டது. மாரிக்கண்ணு பழகிய பாதையில் நிதானமாக இருட்டிற்குள் நடக்க ஆரம்பித்தாள்.

 - ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.