என்ன இன்னைக்கு காத்து இப்பிடி அடிக்குது என்ற எண்ணம் அசோக்கின் ஓட்ட பயிற்சியை வேகப்படுத்தி இருந்தாலும்... வழக்கம் போல அஞ்சு முட்டைக்கு அந்த கடை முன்னே கிரீச்சிட்டு நின்றான். பூங்கனி ஸ்டோர்ஸ் முன்னே ஒரு பூச்சாண்டி வேர்த்து பூத்து நிற்பதாக ஒரு தோரணை அவனை சுற்றிலும்.

வரும் போதே தோன்றியது தான். அந்த ஒல்லிக்குச்சி பிசாசு இருக்க கூடாது என கிட்டத்தட்ட வேண்டுதலும் தான்.

ஊரை விட்டு ஒதுக்குப்புறத்தில் குடோன் மாதிரி இருக்கற இந்த கடை கல்லாக்காரிக்கு கால்கிலோ காலு... அரை கிலோ கை... இடுப்பு கழுத்தெல்லாம் சேர்ந்து ஒரு ரெண்டு கிலோ... தலை ஒரு மூனு கிலோ... கண்ணும் உதடும் ஒவ்வொண்ணும் ஒரு ஒரு கிலோ. அப்புறம் மிச்ச கிலோ எல்லாமே... அதெல்லாம் சொல்றதுக்கு இல்ல - நினைப்பின் வாயை மூடிக் கொண்டான்.

பொதுவா அந்த பாட்டிமா தான் கடையில் இருக்கும். எப்பவாவது இந்த கார்ட்டூன்காரி திடீர்னு வெடிச்ச நாட்டு வெடி மாதிரி கல்லாவுல உக்காந்திருப்பா. பெரிய வெங்காயம் மாதிரி தான். ஆறா வாங்கிக்குங்க.. சில்ற இல்லங்கறதும்... சட்டுனு ஒரு ரூவாய்க்கு மிட்டாய் எடுத்து நீட்டறதும்... மூஞ்ச பாக்கவே மாட்டாங்க மகராணி. நாலரை அடில நட்டு வெச்ச மளிகை கடை பொம்மை மாதிரி இருந்துகிட்டு... பத்து ரூபா காயினை வாங்க மாட்டாளாம். நீங்க குடுத்துட்டு போயிருவீங்க. நாங்க யாருகிட்ட குடுக்கறது... சொல்லிட்டே கையை முடியாது முடியாதுன்னு ஆட்டுவா பாரு... சுள்ளியை உடைக்கிற மாதிரி உடைச்சு போடலான்னு தோணும். பெரிய அழகின்னு நினைப்பு பெருங்காய டப்பாக்கு.

ஒவ்வொரு முறையுமே கண்களை அவள் முன்னால் தடுத்து வைப்பது முடியாத காரியம். அட.. என்னத்த சொல்றது.. தனியா சோறு போட்டு வளப்பா போல... நினைக்கும் போதே மூச்சு முட்டியது அசோக்குக்கு.

கார்ட்டூன்காரி இருக்க கூடாது.. கார்ட்டூன்காரி இருக்க கூடாது.. - யோசித்துக்கொண்டே பார்க்க பார்க்கவே கல்லாவுக்குள் இருந்து தலையை மட்டும் தூக்கினாள். இனி மெல்ல குச்சி கைகள் மேலெழும். சிக்கென இருக்கும் சிக்கனுக்கு டைட்டாக சுடிதார் போட்டு வெற்றிடத்தில் வெடித்த வெங்காய வெடி போல எழுந்தாள். எப்பவாது தடுமாறும் அசோக்குக்கு இப்போது நன்றாகவே தடுமாறியது.

உடம்பு இத்துனூண்டு. ஆனா... இது மட்டும் எப்புறா.... - சிமிட்டாத கண்களை மம்பட்டியாக்கி உணர்ச்சி குவியலை தோண்டியவனுக்கு அதே நேரம் ஏன் இப்படி காத்து வீசுகிறது என்று திரும்பிய அனிச்சையில் வந்த வழியெல்லாம் தூசு படலமாய் சுழல்வது தெரிய.. அட கருமமே... என்ன இது... முட்டை வாங்காமயே ஓடிடலாமா என்று கூட யோசித்தான். இல்லையே முட்டை இல்லாத இரவை வயிற்றில் எந்த மூலையில் அடைக்க.

சரி சரி... இவகூட வாய் குடுக்க கூடாது.

சிந்தனைக்குள்ளும் புழுதி பறக்க காசை நீட்டினான்.

"அஞ்சு முட்டை..."

வேண்டும் என்றே காசை வாங்கி திருப்பி திருப்பி பார்த்தாள். வம்பு வளக்க வேண்டுமே... வெண்ணைக்கு..

எல்லா நல்லா தான் இருக்கு.... குடு குடு என்று முனங்க முனங்கவே... பின்னால் இருந்து எதுவோ அவனைத் தள்ளியது. சுளீர் என கழுத்தில்.. கைகளில்... கால்களில் வேகமாய் விழுந்தறைந்த இரைச்சல்... நறநறவென பிராண்டியது. அவள் கூட கண்களை மூடி நின்ற இடத்திலேயே கிட்டத்தட்ட தள்ளாடினாள். முன் இருந்த மிட்டாய் டப்பாக்கள் ஒன்றன் மீது ஒன்றாக முட்டி விழுந்தன. தொங்கிக் கொண்டிருந்த குடல் பாக்கெட்டுகள் சிப்ஸ் பாக்கெட்டுகள்... அப்படியே பிய்ந்து கொண்டு சிதறின. வாழைத்தார் கூட ஊசலாடியது. வாசலில் சுழன்ற காற்று வார்த்தைகளை கவ்வியது.

என்ன நடக்குது என யோசிக்க முடியவில்லை. காற்றின் வேகம் கழுத்து இறுகிய கோழி போல படபடத்தது. எதிரே வீசி எறியப் பட்டிருந்த மேட்டாங்காடு முழுக்க சுழலும் காற்றின் உருவத்தில் வானமும் பூமியும் மங்கலாகி விட்டன. கண்களை சுருக்கிதான் பார்க்க முடிந்தது. முகம் படபடவென அசைந்தது. தொடுவானம் கிரீச்சிடும் சத்தம்... காற்றின் குரலின் குரூரம் என சட சடவென சடை அவிழ்ந்து அப்படியும் இப்படியும் அடித்துக் கொள்வது போல இருந்தது. மூச்சுக்கு தத்தளிக்கும் தவிப்பை அசோக் கொண்டான். அவன் உடல் உள்நோக்கி சரிந்து பாதி கால்கள் வெளியே கிடக்க... எழுந்து கொள்ள முடியாமல் தடுமாறினான்.

ஸ்ஸ்ஸ் சத்தங்கள்... மரங்களின் அசைவுகள்... வானுக்கும் பூமிக்கும் சுழலும் காற்றின் இரைச்சல்கள்... புழுதியில் கூறுகெட்ட புறப்பாடு என்று சத்தங்களின் வழியே அந்த நேரத்தில் சாத்தான்களின் ஊர்வலம் அங்கே நிகழ்வதாகப் பட்டது.

கார்ட்டூன்காரி சட்டென அவன் தோள்களை உள்நோக்கிப் பற்றி உள்ளே இழுத்து போட்டாள். அத்தனை பலத்தையும் கொண்டு அவளின் மூச்சு இரையும் சத்தம் அவன் முகத்தில் வேக வேகமாய் அறைந்தது. வேர்வை வாசத்திலும் நிறைந்தது.

என்ன ஏது ஒன்றும் புரியவில்லை. உள்ளே சென்றதும் காற்றின் வேகம் கொஞ்சம் குறைந்தாற் போல இருந்தது. படபடவென வேலையைச் செய்தாள். அவனிடம் ஜாடையும் காட்டினாள். புரிந்து கொண்டான். ஆனாலும்... இல்ல நான் வீட்டுக்கு போய்டறேன் என்று மீண்டும் வெளியே செல்ல முற்பட்டான்.

"ஏய்... அஞ்சு முட்டை... அறிவிருக்கா... வெளிய பேய் காத்து அடிக்குது. என்னன்னு ஒன்னும் புரியல. கொஞ்ச நேரம் உள்ள இருந்துட்டு காத்து நின்னதும் போ... ஆள பாரு..." என்று சுழல் தகரத்தை எகிறி.... கொண்டி கொண்டு கவ்வி கீழே இழுத்தாள். இழுபட இழுபட காற்றின் தட தட படபடவென தொடர்ந்தது. வயிற்றைத் தள்ளி கொண்டு ஆவ் ஆவ் என வந்து வந்து வந்து மோதும் காற்றின் கனம் படிப்படியாக குறைந்தது. சுழல் கதவு கீழே வந்து தரையோடு முட்ட.. கப்பென நின்றுவிட்டது காற்று.

பூங்கனி மளிகை கடைக்குள் சட்டென சூழ்ந்த இருளை... கண்ணாடி ஜன்னல் வழியே ஊடுருவிய மங்கிய பகல் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக போக்கியது. வெளியே வீசிக்கொண்டிருக்கும் காற்றின் சத்தம் தூரத்தில் கனவில் விரட்டிக் கொண்டிருப்பது போல உணர முடிந்தது.

அசோக்குக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முட்டை வரிசையைப் பார்த்தான். அடுக்கி வைத்திருக்கும் அழகே அழகு. வெள்ளை முழியை மட்டும் எடுத்து எடுத்து அடுக்கி வைத்திருப்பது போல தோன்றியது. இந்தக் காட்டை விட்டு எப்ப வீட்டுக்கு போறது. வேர்த்திருந்த முகத்தை கர்சீப்பால் துடைத்தான். கழுத்து நெற்றி முகம் என மண் துகள்கள் நறநறவென உடல் கீறின. இனம் புரியாத உஷ்ணம் அவன் மீது துழாவியது.

வெளியே வீசிக்கொண்டிருக்கும் காற்றின் வேகம் கூடிக்கொண்டே இருப்பதை உணர முடிந்தது. வந்து வந்து மோதும் சுவற்று கீறல்களை உள்வாங்க உள்வாங்க பல்லில் கூச்சம். உடலில் நடுக்கம். தலைக்குள் தவிப்பு. என்ன நடந்து கொண்டிருக்கிறது. என்ன விதமான இயற்கை சீற்றம் இது.

அவள் ஜன்னலோரம் அமர்ந்து கண்ணாடி வழியே வெளியே காற்றின் கதகளியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் சுழல மௌனம் அங்கே வெக்கையைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

இங்கிருந்து எப்படி போவது... - யோசித்தபடியே கடைக்குள் இருந்த இடைவெளியில் அங்கும் இங்கும் நடந்தான். அவள் அவ்வப்போது திரும்பி அவனைப் பார்த்து ஒரு கூர்மை சிமிட்டலை கொடுத்து விட்டு மீண்டும் வெளியே வேடிக்கை பார்ப்பதைத் தொடர்ந்தாள்.

மொபைல் வேலை செய்யவில்லை. மின்சாரம் போய் விட்டது. மனித நடமாட்டம் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு இல்லை. கத்துவதை நினைத்தால்... காற்றுக்கு காது வெடிக்கும். பிரளயம் என்பது இதுதானா. ஏன் இப்படி காற்று வீசுகிறது. ஒரு செய்தியும் இல்லை. ஒரு அறிவிப்பும் இல்லை. எங்கிருந்து வந்த காற்று இது. தலைக்குள் நறநறக்கும் மணல் துகளை... யோசனை வழித்து வழித்து வீசிக்கொண்டே இருக்கிறது.

சும்மா சும்மா நோட்டம் விடாத. உன் கல்லா பெட்டிலலாம் கை வெச்சிட மாட்டேன். - பொதுவாக வம்பிழுத்தான்.

திரும்பியவள் அவன் குரலில் சிலையானாள். ஒரு நக்கல் சிரிப்போடு... கை வெச்சிட்டு வெளிய போய்டுவியா என்று எதிர் கேள்வி ஒன்றை சுழற்றி விட்டாள்.

ஏன் போக முடியாதா. ஹலோ... எதோ இடம் குடுத்துட்டமேன்னு ஓவரா சீன போடாத. காத்து நின்னதும் கிளம்பிடுவேன். நான் திருட்டு பயல்லாம் கிடையாது. - கோபம் நெற்றியில் தவழ்ந்தது

அவள் எப்போதோ திரும்பிக்கொண்டாள்.

கிறுக்கி... காது குடுத்து கேக்கறாளா பாரு.. - ஆனாலும் அவள் ஒவ்வொரு முறை திரும்பும் போதும் குலுங்கும் குடங்கள் அவனை திருட்டு பூனையாக்கி பார்த்தது.

மாடு - வாய்க்குள் முனகினான். அதுவே கிறக்கம் உண்டாக்கியது.

எல்லா மனுஷனும் சேர்ந்து செஞ்ச சதி இப்ப வெச்சு செய்யுது. மழைனா குடை புடிக்கலாம். வெயிலா முக்காடு போட்டுக்கலாம். காத்துக்கு என்ன பண்றது. எட்டி மிதிக்க ஒரு வடிவம் உண்டா. கண்களில் கோபம். காதுகளில் ரீங்காரம். தலை மேல் தகர டேன்ஸ் நடக்கிறது. மூஞ்சை நெளித்து பார்த்த கண்ணாடியில் வெளியே காற்றின் கோடி கைகள் நகம் நீண்டு அலைவதைப் பார்க்க முடிந்தது. கொஞ்சம் திறந்த ஜன்னல் வழியே மிகுந்த வேகம் வாவ் வாவ் என மீறிக்கொண்டு நாய் குரலாய் நுழைந்தது.

பைத்தியமா... என படக்கென அவன் கையோடு சேர்த்து இழுத்து அடைத்த கார்ட்டூன்காரி கனிவாய் முறைத்தாள். நிலை குலைந்து அடைந்த ஜன்னல் அதிர்ந்தது.

"அதான் பேய் காத்து அடிக்குதுல. எதுக்கு ஜன்னலை தொறக்கற.. லூசு...!" என்றாள். அவள் கண்கள் அவன் கழுத்துக்கு நேராக திறந்து உருண்டது. அவ்ளோ தான் உயரம்.

சின்ன மூஞ்சிக்கு இவ்ளோ பெரிய கண்ணா.. என்றபடியே கண்களை கீழே இறக்க இறக்க... படக்கென்று திரும்பிக்கொண்டாள். மெல்ல புன்னகைத்த மாதிரி தான் தோன்றியது.

எங்க கொஞ்சம் திரும்புன்னா சொல்ல முடியும். திரு திருவென விழித்தபடி அப்படியே நின்றான். அது நன்றாக இருந்தது. கையைத் தொட்டு காற்றை நிறுத்திய நொடி மீண்டும் மனதுக்குள் ஜன்னல் திறந்தது.

இந்த காத்து எப்ப நின்னு எப்ப வீட்டுக்கு போயி... இன்று செய்ய வேண்டிய வேலையெல்லாம் வரிசையாக மூளை மடிப்பில் கன்னத்தில் கை வைத்து குத்த வைத்திருந்தது.

சில நொடி யோசனையோடு...." யார்கிட்டயாவது ஹெல்ப் கேக்கலாம்ல. உங்க வீட்டுலருந்து யாரும் வர மாட்டாங்களா....!" என்றான்.

உடல் திருப்பி அமர்ந்திருந்தவள் வலக்கையை தூக்கி காட்டி தெர்ல என்று வெற்றிடம் திருப்பினாள். அசைந்து கொண்டிருக்கும் காற்றின் வெளியை கண்ணாடி ஜன்னல் வழியே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது அவள் அசையாமை.

நேரம் ஓட ஓட நெஞ்சினில் சொல்லொணா பதற்றம். என்ன ஆனாலும் சரி. வெளிய போயி ஓடிடலாம்... என்று ஜன்னலை மெல்ல தூக்கினான். ஆனால் வந்து மோதும் காற்றின் கால்கள் வேகமாய் உதைத்துக் கொண்டு உள்ளே நுழைய... "ஐயோ கொஞ்சம் அமைதியா இரேன்..." என்றபடியே வேகமாய் ஓடி வந்தவள் அவனைத் தள்ளிக்கொண்டு ஜன்னலை பிடித்து உள்ளே இழுக்க போராடினாள். வெளிய சென்று விட்ட ஜன்னலை உள்ளே பிடித்து இழுக்கவில்லை என்றால் உடைந்து நொறுங்கி விடும். அப்படி ஒரு தட தட படபடப்பு. கிடு கிடுவென உள்ளே நுழைந்து விட்ட காற்று அறைக்குள் அங்கும் இங்கும் சுழன்று அடுக்கி இருந்த பொருள்களை அப்படி அப்படியே சரித்துக் கொண்டிருக்க... நடுவே தொங்கும் மின்விசிறி அங்கும் இங்கும் பற்றிக் கொள்ள தடுமாறும் மலையுச்சி மூன்று கால் பூச்சி போல பல்டி அடிக்க... மேற்கூரையில் மோதி மோதி இந்தப் பக்கம் தலை துண்டாக போகும் முண்டமென தவியாய் தவித்தது.

"சொன்னா கேட்டியா...?" அவனை முறைத்தபடியே பலம் கொண்டு பக்குவமாய் இழுத்தாள்.

ஒரு வழியாக அவளோடு சேர்ந்து இருவரும் ஜன்னலை உள் இழுத்து அடைத்து கொண்டி இட்டார்கள். கப்பென நின்று விட்ட காற்றின் அலைச்சல் ஒரு மாய ரூபத்தை அறைக்குள் சுருக்கிக் கொண்டிருந்தது.

என்ன நடக்குது... அவனுக்குள் சுழல் காற்று திருகிக் கொண்டிருந்தது. இந்த பக்கம் ஒரு மனுஷன் கூட வர மாட்டேங்கறானே... கடையை கொண்டு வந்து எங்க வெச்சிருக்கானுங்க.... கிறுக்கனுங்க.. ஊருக்குள்ள வெச்சா என்னவாம். - மனம் பேசியதற்கு சொற்கள் சேர்ந்து கொண்டன.

ஹலோ அஞ்சு முட்ட... அது எங்க இஷ்டம். உன்ன உள்ள விட்டேன் பாரு என்ன சொல்லனும். அப்படியே காத்துல பறக்க விட்ருக்கனும்... மவனே... அப்ப தெரிஞ்சிருக்கும். - ஒல்லிப்பிச்சி கில்லி அடித்தாள்.

"வாய் இல்லனா உன்னல்லாம் ஆயா தூக்கிட்டு போய்டும்... ஐயோ...ஏய்... நீ எப்பவுமே இப்பிடி நெஞ்ச நிமித்திக்கிட்டே தான் நிப்பியா. என்ன பாடி லாங்குவேஜ் இது..!"- தலையில் அடித்துக் கொண்டான். கண்கள் சிமிட்டவில்லை.

"உன்ன யாரு இங்க பாக்க சொன்னா. திருட்டு பார்வை பாத்துட்டு... எவ்ளோ வியாக்யானமா பேசற.... பாரேன்..." என்றவள்... அவனை பார்த்துக் கொண்டே உள் அறைக்குள் சென்றாள்.

எங்க போறா என்று அவள் போகும்வரை பார்த்தபடியே நின்றவன்...அவள் தலை மறையவும் அங்கே தொங்கிக் கொண்டிருந்த குடல் பாக்கெட்டுகளில் ஒன்றை பிய்த்து பிரித்து ஒவ்வொரு குடலாய் எடுத்து கடித்தான். நினைப்பின் அனிச்சை ஐந்து விரலுக்கும் ஒவ்வொரு குடலையும் மாட்டிக் கொண்டது. மன விரல்களில் மஞ்சள் கற்கண்டு போல கை விரல்களில் கறகறக்கும் குடலின் சுவை. ஸ்டூலில் அமர்ந்து ஜன்னல் வழியே காற்றின் வெளியை பார்த்தபடியே ஒவ்வொன்றாக கடித்தான். துக்கத்திலும் ஒரு தூக்கல் அவனை நொறுக்கியது.

உள்ளிருந்து கறாராக குரல் வந்தது.

"பத்து ருபா..."

தின்னுவதை நிறுத்திய தலை திரும்புதல்... ச்சே என்ன மாதிரி ஆளு இவ.. - முனகினான். ஆனாலும் குடலை விரல் விடவில்லை. நொறுங்க தின்னும்போது சுவை கூடும் பால்யத்தை நினைக்க நினைக்க வேகமாய் அடுத்த விரலை கடித்து நொறுக்கினான். அதே நேரம் என்ன இது முட்ட வாசம் வருதே என்றபடியே வேகமாய் எழுந்து வாசம் வழி காட்ட அப்படியே அந்த அறை பக்கம் நடந்தான். எதிரே அறைக்குள் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தவள் கையில் ஆம்லெட் சுட சுட ஆவி கொப்பளித்தது. ஹையோ... அநியாய சுவையின் வாசம் இப்படி அந்த அறைக்குள் அல்லாடியதை உணர உணர தவிப்பு தாங்கவில்லை.

"அய்யயோ அடி பாவி.." என்றபடி அவளையே பார்க்க அவள் அவனை கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை. ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடியே ஆம்லெட்டை வலிக்காமல் கிழித்து ஊதி ஊதி வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தாள்.

என்ன குடுக்காம திங்கறா. ஏய்... லூசு கொஞ்சம் குடுத்தா என்னடி... சீச்சீ...இவள மாதிரி ஒரு புள்ளய நான் பாத்தது இல்லப்பா... முட்டையா தின்னு தின்னு தான் மூஞ்சிய விட பெருசா வளத்து வெச்சிருக்கா போல. - முனங்கல் யோசனை அவனை சூழ்ந்தாலும்.. பேச்சுக்கு கூட ஒரு வார்த்தை கேக்க மாட்டேங்கிறா என்று எச்சில் ஊற ஊற நா தடுமாறியது.

என்ன புள்ள வளத்து வெச்சிருக்கானுங்க. ஒரு சக மனுஷன பாக்க வெச்சிட்டே இப்பிடி திங்கறா. அதுவும் ஆம்லெட்டு. - கண்ணீரே வந்து விடும் போல.. அப்படி ஒரு முக நடுக்கம் அவனுக்கு.

சுவற்று கடிகாரம் மணி 2 என்று காட்ட... அப்போது தான் உணர முடிந்தது. அவனுக்கும் பசி வயிற்றில் முட்டை உடைக்கிறது.

இவள்லாம் இன்னும் கொஞ்சம் ஒயரமா இருந்தா என்னல்லாம் பண்ணுவா. இந்த மூஞ்சிக்கே இந்த திமிரு. பாரு... திரும்பிக் கூட பாக்க மாட்டேங்கறா. ஒரு வாய் ஒரே ஒரு துண்டு இந்தான்னு குடுத்தா என்ன குறைஞ்சிரும். அதான் இத்தனை முட்டை இருக்கே.- இயலாமை அவனை சுற்றி சுற்றி பார்க்க செய்தது. பற்களைக் கடித்துக் கொண்டான்.

திரும்பி பார்க்கையில் முட்டையை அடுக்கிய வரிசை முட்டை முட்டையாய் கொழுக் மொழுக் என வெள்ளை முழி பிதுங்கி அவனையே பார்ப்பது போல இருந்தது.

அவள் முடித்து விட்டாள். பக்கத்தில் இருந்த தண்ணி கேனை பிரித்து பாதி வயிற்றுக்குள் குபுக் குபுக்கென கொட்டினாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு அடிவயிறு பற்றிக் கொண்டு எரிந்தது.

கடை அவளுதுங்கற திமிரு. அதெல்லாம் இன்னைக்கு ஆகாது. எனக்கும் தான் பசிக்குது... நினைத்தபடியே வேகமாய் உள் அறைக்குள் நுழைந்தான்.

ஒரு சிறு எடுப்பு சமையலறை. சின்ன தோசைக்கல். சின்ன அடுப்பு... அப்பிடி இப்படி என்று எல்லாமே இருக்கிறது. வேகம் வேகமாய் மூனு முட்டைகளை எடுத்து உடைத்து ஒரு குண்டாவில் ஊத்தி கலக்கினான். வெங்காயம் நறுக்கி உள்ளே சேர்த்தான். பச்சை மிளகாய் பிடிக்காதே. மிளகு தூள் தேடி எடுத்து தூவினான். கரண்டி கொண்டு நன்றாக அடித்தான். அடுப்பைப் பற்ற வைத்தான். தோசைக்கல்லை அடுப்பில் அமர்த்தினான். அப்போது தானே செய்து விட்டு போயிருக்கிறாள். அது சூட்டுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டது. எண்ணெய் அங்கேயே இருந்தது. எடுத்து பூ போல தூவினான். முட்டை குழைவை ஊற்றினான். சொய்ய்ய்ங் சத்தம் அறைக்குள் மதி மயக்கியது. முட்டை வேக வேக எழும் மணம்... மனதில் தலை விரித்தாடும் பருவத்தை பொரித்தது.

சில நொடிகளில் தட்டில் மூனு முட்டையும் பொது பொதுவென உப்பி இருக்க முகம் மலர்ந்தான். அவசரம் பொறுக்கவில்லை. அப்போதே பெருந்துண்டாய் கிழித்து வாய்க்குள் திணித்தான். சுட சுட சூடு பறக்க மென்று கொண்டே வெளியேறினான். நாங்களும் ஆம்லெட் போட்டு தின்போம் என்பது போல ஒரு உடைந்த முட்டையின் பார்வையோடு அவள் அருகே சென்று நின்று அடுத்த ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தான்.

அவன் தட்டை ஒரு முறை நோட்டம் விட்டவள்.... மூனு முட்டை... வெங்காயம் மிளகு பொடி... கேஸ்... தோசைக்கல் உபயோகம். எல்லாம் சேர்ந்து அறுபது ரூபாய். கணக்கு வெச்சிக்கோ என்றாளே...

அப்படியே கழுத்தை நெறிச்சு கொன்னு போட்டுட்டா என்ன என்று தோன்றியது.

கல்லாக்காரி புத்தி கரெக்டா வேலை செய்யுது. சரி... பசிக்கு என்ன பண்ண...

"குடுத்தறேன் முதலாளி... நீங்க வேடிக்கை பாருங்க..." என்றபடியே மிச்ச முட்டையை பிய்த்து வாய்க்குள் திணித்தான்.

மணி இரவு 7 என்றான பிறகு பதற்றம் இன்னும் கூடியது.

"ஏய்... ஹலோ...முதலாளி... எதாவது பண்ணு. இப்பிடியே இங்கயே உங்காந்துட்டுருந்தா எப்பிடி..." - கலக்கம் முகத்தில் கூடிக்கொண்டே போனது அவனுக்கு.

அவள் அவனை கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் ஜன்னல் வழியே யாராவது போகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

மொபைலை எடுத்து பார்த்துக் கொண்டான். ம்ஹும். டவர் இல்லை. என்ன கருமம் இது. பூமி இன்னையோட அழிய போகுதா. ஜன்னல் வழியே கசிந்து கொண்டிருக்கும் காற்றின் கீறல்... குரூரக் குளுமையை அறைக்குள் புக செய்து கொண்டிருக்கிறது. கண்ணை அந்த கீற்றில் கொண்டு பார்க்க... ச்சில் என ஊசியாய் குத்துவது காற்றின் நுட்பம்.

அறைக்குள்ளிருக்கும் இடைவெளியில் அவன் அப்படி இப்படி நடந்தபடியே யோசித்துக் கொண்டிருந்தான்.

என்ன பண்றது. வெளியே போனா திசையே தெரியாது போலயே. இருட்டும் சேர்ந்து கொண்டு வானத்தையும் பூமியையைம் புரட்டுவது ஜன்னல் வழி காட்சியாய் பயப்படுத்தியது. முடிவெடுக்க முடியாத பதற்றம். இந்நேரம் ஆட்கள் வந்திருக்க வேண்டுமே. அப்படி வரவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசம் என்று தானே அர்த்தம். என்ன நடக்கறதோ. இதுவரை கதவை பிய்த்துக் கொண்டு காற்று உள்ளே வரவில்லை. ஆனாலும் மேலே டெர்ரசில் காற்றின் கால்தடங்கள் அவ்வப்போது படீர் படீர் என விழுவதை உணர முடிகிறது. ஒருவேளை கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து விட்டால் கதை முடித்தது...

அவன் யோசித்தபடியே இருக்க அவள் ஜன்னல் வழியே இருட்டையும் பார்த்தபடியே அமர்ந்திருந்தது ஒரு மாதிரி கடுப்பேற்றியது.

நைட்டுக்கு ஏதும் சமைக்கலாம்ல... லூசு. பாரு... ஒரு பயம் இருக்கா. இங்கிருந்து தப்பிக்க ஏதாவது யோசிக்குதா... மெண்டல் முதலாளி. - மனம் முனங்க அவளையே பார்த்து கொண்டிருந்தான். அவ்வப்போது அவள் திரும்புகையில் மலை இரண்டு பெயர்ந்தது போல அப்படி ஒரு கதகதப்பு.

ஏதாவது சமைக்கலாம் ல. மேகில முட்டை போட்டு....- மெல்ல கேட்டே விட்டான்.

ஆமா இவர் புருஷரு... இவர் கேட்டா உடனே செஞ்சு குடுக்கணும். ஹலோ அஞ்சு முட்டை... பாவமேன்னு உள்ள இடம் குடுத்துருக்கேன். அதுக்கும் வாடகை தரனும். பாத்துக்கோ...- திரும்பாமலே பேசியவள் பூச்சிக்கு புஷ்டி ஏறியது போல அப்படியே அமர்ந்திருந்தாள்.

திமிரு புடிச்சவ... - முனங்கிக் கொண்டே ஒரு முட்டையை எடுத்து உள்ளங்கையில் வைத்து பார்த்தான். மிருதுவான விரல்களால் உருட்டி தடவினான். எவ்ளோ குளுமையா இருக்கு இந்த முட்டை என்ற அவன் நோக்கு அதன் வடிவத்தின் மீது வாகாய் சுழன்றது. முட்டையைப் பார்த்துக் கொண்டே அவளையும் பார்த்தான். அவளே ஒரு முட்டை வடிவத்தில் அமர்ந்திருப்பது போல தான் தெரிந்தது. முட்டையை தூக்கி தூக்கி போட்டு பிடிப்பதில் இருக்கும் திரில்லிங்... அட்டகாச அதிர்வை உண்டாக்கியது. இந்த சின்ன ஓட்டுக்குள் இருக்கும் கருவின் குழைவில் தான் எத்தனை சுவை. எப்படி இந்த உருவாக்கம் நிகழ்கிறது. இயற்கையின் இசையை மூளை நரம்புகள் குறிப்பாக்கி கொண்டிருந்தன. உள்ளங்கை கொண்டு முட்டையை மூடினான். புடைத்துக்கொண்டு நிற்கும் கூமாச்சி முனை நடுவிரலில் புறுபுறு செய்தது. பெருவிரலாலும் நடுவிரலாலும் முட்டையை லாவகமாக பிடித்து மெல்ல அழுத்தினான். பிறகு கூடுதல் அழுத்தமும் கொடுத்தான். அப்படி அழுத்தி உடைத்து விடவே முடியாது என்றும் தெரியும். அப்படியே அந்த முட்டையை கண்ணுக்கு நேராக நிறுத்தி ஒரு கண்ணில் முட்டையும் மறு கண்ணில் அவளும் தெரிவது போல கால கிளிக்- ஐ நிகழ்த்தினான். வெளியே வீசிக்கொண்டிருக்கும் காற்றின் வாய் ஆவ் ஆவென திறந்து திறந்து மூடுவதை உணர முடிந்தது. வெளியின் வயிறு கிழிந்து தொங்குவதை புரிந்து கொள்ள முடிந்தது.

முட்டையை கண்ணிலிருந்து இறக்கி விட்டு அவளையே பார்த்தான். அவள் ஒரு அற்புத சிலையாய் செதுங்கி கொண்டவள் போல அப்படியே அமர்ந்திருந்தாள். அவளுக்கு எதிரே இருந்த கண்ணாடி ஜன்னலில் வந்து மோதும் காற்றுவெளி அதற்கு கனவு கலைந்த கோபம் போல.

ஏய்... கல்லாக்காரி...- கூப்பிட்டான்.

அவள் சட்டென திரும்பினாள்.

இவன் திடும்மென கையில் வைத்திருந்த முட்டையை அவளை நோக்கி வீசினான்.

திக்கென காலத்தின் வேகம் குறைந்தது. அவள் என்ன ஏதென்று உணராத கண் சிமிட்டலை மெல்ல நிகழ்த்தினாள். காற்றில் பலம் கொண்டு வீசப்பட்ட கையை மெல்ல பின்னோக்கி இழுத்தான். அதே நேரம் காற்றில் உருண்டபடியே சென்ற முட்டை ஒரு கூமாச்சி பூமியாய் சுழன்றபடியே சென்று அவள் நெற்றியில் பட்டென்று பட்டு உடைந்து ஒழுகியது. பட்டென பட்டு உடைந்த நொடி மீண்டும் எதிரொலியாய் ஒழுகியது.

ஆவென முகம் திறந்திருந்த அவளுக்கு அந்த முட்டை அடி நினைவுக்கு திருப்பியது. பறந்து கொண்டிருந்த வேகத்தை தடுத்து நிறுத்திய அவள் நெற்றி... முட்டை உடைத்தலில் கூழாகி மஞ்சள் கருவையும் வெள்ளை கருவையும் வழுக்கியது. அது அவள் ஒரு கண்ணில் பட்டு கணம் தொட்டு நாசி நனைத்து வாயில் வழிந்து... கழுத்துக்கும் இறங்க... ஒரு மாதிரி கூச்சத்தில் வ்வே.. என மேலே பல்லி விழுந்தவள் போல தலையை வேக வேகமாய் ஆட்டிக் கொண்டு சிலுப்பி எழுந்தாள்.

அட லூசுப்பயலே.. என்ன வேலை பண்ணிருக்க...- உணர்ந்தபடியே யோசிக்க யோசிக்க எதிரே ஒரு போருக்கு தயாராக நின்ற மஞ்சள் வெள்ளை வீரனைப் பார்த்தாள்.

தாக்குதல் என்று ஆரம்பித்து விட்டால் இடைவெளி கூடாது. அடுத்த முட்டையை இடது பக்க நெற்றியில் வீசி அடித்தான். அந்த முட்டையும் அழகின் கூறுகளோடு குப்புற குப்புற விழுந்து புரண்டு காற்றில் கரங்களில் தவழ்ந்து அவன் நினைத்தபடியே சிதறியது.

டேய்... அடேய் டேய்.... என்னடா பண்ற.. - அவள் வாய்க்குள் மஞ்சள் கரு வழிந்து நெளிய தூ தூவென துப்பிக்கொண்டே முகத்தை வழித்து கீழே இழுத்தது அவளின் தற்காப்பு அனிச்சை.

விடுவானா விடிய காத்திருக்கும் இரவன். அடுத்த முட்டையை எடுத்து வீசி அடித்தான். அது அவள் நெஞ்சில் பட்டு.... பட படவே அவள் பிடிக்க வேகம் தாங்காமல் கையில் மடங்கி நொறுங்கியது. கையை உதறியவள்.. என்னடா பண்ற என்று கேட்டுக்கொண்டே அவனை நோக்கி நகர நகர அடுத்த முட்டையை நடு நெற்றியில் படும்படி விசிறி அடித்தான். தாக்குதலை சமாளிக்க முடியாமல் உடலை நெளித்து தடுத்து தடுமாறி தவித்தாள்.

ஐயோ கிறுக்கா என முகத்தை திருப்பிக் கொண்டு சுத்தம் செய்ய முயற்சிக்க... அடுத்த முட்டை அவள் பின்னந்தலையில் விழுந்தது.

மத்த கடைலலாம் ஆறு ருபாய். உங்க மொக்க கடைல ஆறம்பதா... இந்தா வாங்கிக்கோ என்று அடுத்த முட்டையை எடுத்து முதுகில் சாத்தினான்.

என்ன செய்வதென புரியாமல் நொடிகளில் தடுமாறியவள்... சட்டென சண்டைக்கு தயாராகி விட்டாள். இருடா உன்ன... என்றபடியே...கல்லா பக்கம் முன்னாலேயே இருந்த முட்டை அடுக்கில் இருந்த முட்டையை எடுத்து திரும்பிய வேகத்தில் அவளும் அடித்தாள். பெண்களின் குறி எப்போது தப்பி இருக்கிறது. அதுவும் இது ராட்சசி.

அவன் மூக்கில் அடித்து சிதறியது.

சற்று நிலை குலைந்து போனான் தான். ஆனாலும் அடுத்த நொடியே சம நிலைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டான். உடல் புல் பாமில் இருக்க... வாயில் வழிந்த முட்டை புல் பாயில் ஆனது. நாக்கை நீட்டி சப்பு கொட்டிக் கொண்டே... அப்படியா இந்த வாங்கிக்க என்று அடுத்த முட்டையை எடுத்து அவள் முகத்தை நோக்கி வீசினான். அவள் சரியாக குறி பார்த்து முஷ்டி கொண்டு தடுத்து தெறிக்க விட்டு.. அதே வேகத்தில் அடுத்த முட்டையை அவன் வயிற்றை நோக்கி வீச... அவன் அய்யோ லூசு எங்க குறி வைக்கறா பாரு என்றபடியே திரும்பிக் கொள்ள இடுப்பு எலும்பில் பட்டு தெறித்தது. கல்லாக்காரி குறுக்கு நோக ஒரு களுக் சிரிப்பை சிதறி அடித்தாள்.

அவன் ஒரு முட்டையை எடுத்து அடித்தால் அவள் ரெண்டு முட்டையை சராமாரியாக வீசி நொறுக்குகிறாள். முட்டை முகத்தில் முட்டை தலையில் முட்டை நெஞ்சில் முட்டை கைகளில் முட்டை கால்களில் என்று முட்டை மழையில் இருவரும் மாறி மாறி அடித்து துவசம் செய்ய அந்த இடமே உடைந்த முட்டைகளால் வழிந்து சொத சொதவென கால் வைத்தாலே வழுக்கி விடுமளவுக்கு ஆகி விட்டது. முட்டை குறைய குறைய அடுத்த முட்டை எடுக்க அவனும் அடுத்த முட்டை எடுக்க அவளும் என மாறி மாறி நகர்ந்து ஒருவரை ஒருவர் விரட்டி அந்த மளிகை கடைக்குள்ளே இருந்த குறுக்கு சந்து முட்டு சந்து முகப்பு சந்து கிட்சன் சந்து பாத்ரூம் சந்து என மாறி மாறி நகர்ந்தபடியே இருந்தார்கள். நகர்தல் ஒளிந்து... விரட்டி... விழுந்து பிடித்து... ஒருவர் மீது ஒருவர் சரிந்து உருண்டு... கிட்டத்தட்ட அவள் கழுத்தை அவன் பிடிக்க... அவன் தலையை அவள் பிடிக்க... முட்டை வழியும் உடல்களால் புரண்டு ஒருவர் மீது ஒருவர் ஏறி உருண்டு.... மூச்சு வாங்க.... எப்படி அவள் மேலே போனாள்... எப்போது எவன் கீழே போனான். தெரிவில்லை. மேலும் கீழுமாய் இருவர் முட்டை கண்களும் அத்தனை அருகே உடைய காத்திருக்கும் வேகத்தில் பார்க்க.

முகத்தில் வழியும் முட்டை அவன் முகத்தில் விழ... அவள் இதழில் வழியும் முட்டை அவன் இதழில் நுழைய... வழு வழுக்கும் முட்டை கருவின் நொங்கு நீள் குழைவு அப்படியே இருவர் உதட்டையும் நூலாடையில் இணைத்தது. அனல் மூச்சு அவிழ்ந்த முட்டையில் கொப்பளிக்க... வழுவழுக்கும் முகம் முழுக்க தளதளக்கும் பளபளப்பை ஆளுக்கு கொஞ்சம் வழுக்கினார்கள்.

யார் ஆரம்பித்தது என்று தெரியாத நொடியில் இருவர் இதழ்களும் பச்சை முட்டை பாசத்தோடு கவ்வ தொடங்கின. முட்டை வாசத்தில் உடல் கிறக்கம் வழிந்தது. வழுக்கல் நெகிழ்ந்து உருண்டு கொண்டே போன ஈருடலும் ஓருடல் என்றே நம்ப செய்யும் நசநசப்பு. சொத சொதவென நனைந்திருந்த முட்டை குழைவுகளுக்கு இடையே... ஆழ்கடல் மீனென நீந்தும் வித்தை தானாகவே தெரிந்து கொண்டது. ஆடை எப்படி அவிழும்... ஆலிங்கனம் எப்படி நிகழும். முட்டை வாசத்தில் அவர்கள் வாசத்தை எப்படி அறிவார்கள். அறிந்தார்கள். அவிழ்ந்தார்கள். அலசினார்கள். ஆழ்ந்தார்கள்.

சின்ன சின்ன ஊடல்களின் ஒட்டு மொத்தம் இப்படி உடல் வழியே உடைந்து வழியும்தான் போல. தலைகீழ் மந்திரம்.. தாந்த்ரீக தவ நொறுங்கல்... என தத்தும் தளாங்கு தத்தோம். வெளியே காற்று தலை கால் தெறிக்க பறக்க... உள்ளே முட்டை வழுக்கலில் சுலபமாய் உடல் பொருத்திக் கொண்டு கொளுத்தியது.

நிஜமாவே ராட்சசிதான்டி நீ. ம்க்கும்... மெதுவா... டி...- முனகினான்.

சரிங்க அஞ்சு முட்டை... - அவளும் முனகினாள்.

காதோரம் வழியும் முட்டை வழிசல் காதோடு சேர்ந்தே கழுத்து இறங்கியது. கழுத்து கவ்விய போதும் மஞ்சள் கரு பற்களில் வர்ணம் அடித்தது. முட்டை பைத்தியங்கள் இரண்டு மோதி மோதி வெடித்து உடைந்து கொண்டிருந்த காட்சிக்கு மிச்ச முட்டைகளே சாட்சி. உருண்டு புரண்டதில் முட்டை அடுக்கை தட்டி விட... அதுவும் அவர்கள் மேலே விழுந்து நொறுங்க... வெள்ளி ஓடுகளின் உடல் திறந்த திறந்து மஞ்சள் வெள்ளை கலவைகள் அபிஷேகம் நடந்தது. குளு குளு குவியலின் அடியே குலை பொங்க குவளை நிரம்ப... ஏக்கத்தில் எம்பினாள். மூச்சுக்குள் முயல் பிடித்த அவனோ மூர்க்கத்தில் ததும்பினான். முட்டை குழைவுகளுக்கு மத்தியில் மூச்சு சப்தம் மாற்றி மாற்றி முனங்க... பிசுபிசுப்பில் ஒட்டிக்கிடந்த சிலையைப் பிரிக்க அவர்களும் முயற்சிக்க வில்லை. கதவு சந்தில் விசில் அடிக்கும் காற்றும் கணக்கில் இல்லை.

காதுக்குள் கேட்டான்.

உன் பேர் என்ன...

கண்கள் மூடி களிப்பில் கிடந்தவள்... மெல்ல கண்கள் திறந்தாள். இமை பிசுபிசுக்க முகம் ஒட்டிய பாலாடை ஒப்பனை போல முட்டையின் வழிசல் காய்ப்பு.. மெல்ல விரிந்து சிறு புன்னகைக்கு கடினப்பட்டு வழி விட்டது.

இப்பவாது கேட்டியே... அஞ்சு முட்டை...

ஏய் ... அப்புறம் என் பேரும் அஞ்சு முட்டை இல்ல.. அசோக்.

அய்யடா... பேர பாரு அசோக்... என்று மேலிருக்கும் அவனை மெய் மறந்து பார்த்தாள். கண்களில் குறும்பு. புருவத்தில் பருவம்.

சரி உன் பேர் என்னடி கல்லாக்காரி...

கடை பேர் பார்த்தல்ல... அது தான் என்று வெட்கம் தாளாமல் நாக்கை நீட்டி அவன் மூக்கு நிமிண்டினாள்.

கொஞ்சம் யோசித்தவன்... ஓ பூங்கனி. நல்ல பேர் கல்லா.. என்றான். அவன் கைகள் இப்போது அவள் முகம் ஏந்தி இருந்தன.

வீட்டுல செல்லமா இன்னொரு பேர் இருக்கு... ஆனா நான் சொல்ல மாட்டேன்.. - இப்போது கொஞ்சம் தலையை எக்கி அவன் காது கடித்து இழுத்தாள்.

ஏய்... சொல்லேன்... சொல்லு பூங்கனி... பிளீஸ்...-- கழுத்தில் புறுபுறு செய்தான்.

அவள் ம்ஹும்.. மாட்டேன் என்றாள்.

அவள் கழுத்தில் நா நீட்டி... சொல்லல.... கழுத்தை கடித்து உரிஞ்சிருவேன்... என்றான்.

சரி உரி.. நான் சொல்லல... என்றாள். கண்கள் பெரிதாகி புதிர் போட்டது.

கடிப்பது போல வேகமாய் சென்று மெல்ல பொய்க்கடி கடித்து விட்டு... சொல்லேன்டி என்றான். உடலில் பலம் கொடுத்து தரையோடு அழுத்தினான்.

வாயில் மூச்சு விட்டபடியே...சரி சொல்றேன்.. ஆனா கிண்டல் பண்ண கூடாது. என்றாள். மேல் நோக்கி அழுத்தி சமன் படுத்தினாள்.

சரி பண்ணல.. - மூக்கு உரசினான்.

சொல்ல வாயெடுத்து விட்டு... ம்ஹும்.... சிணுங்கினாள்.

அட சொல்லுனா.... சிரித்தான்.

சுராங்கனி.

என்னது...

சுரா......ங்கனி

ஹா ஹ ஆஹா... அறை அதிர சிரித்தவன்... ஹேய் சுராங்கனி... பேர் சூப்பர்டி.. ஹலோ சுராங்கனி..

வெட்கம் தாங்காமல் கையில் இருந்த முட்டையை அவன் வாய்க்குள் வைத்து உடைத்தாள்.

ம்ம்ம்ப்பே.... எப்ப்ப.... அவன் வாயில் இருந்து வழியும் முட்டையை அப்படியே கவ்வினான்.

குச்சி மாதிரி இருக்க.. ஆனா இது மட்டும் எப்பிடிடி இவ்ளோ...

முட்டைகள் இன்னும் மிச்சம் இருக்கின்றன.

எப்போது விடிந்தது என்று தெரியவில்லை.

*

பிரெட் ஆம்லெட் போட்டு கொடுத்தாள்.

குளித்த புது நாளை ஆடையின்றி அமர்த்தி இருந்தான். அவன் கால்களுக்கு நடுவே முதுகு காட்டி அமர்ந்தவள் கைகள் அவன் தொடைகளில் கை பிடியாயிருந்தன.

இப்பிடி எங்க வீட்டுல பாக்கணும். முட்டை குடோன்லயே புதைச்சிருவாங்க. என்கண்ணன் பாக்கணும். விரட்டியே வெட்டுவான்.

ஏன் அவ்ளோ பெரிய ரவுடியா உங்கண்ணன்...

அய்யே அவனை எதுக்கு இப்ப நினைச்சிட்டு... முட்டைல நனைஞ்ச துணிகளை அலசி போட்டாச்சு. காயட்டும். அது வரைக்கும் தான் இப்படி என்றாள்.

எப்பவுமே இப்படியே இருந்தா எப்பிடி இருக்கும்.

அப்போ இந்த உலகத்துல நீ நான் மட்டும் தான் இருக்கனும்.

ஷாம்பூ வாசம் அவள் தலையில் கமகமத்தது.

அவன் அவள் காது கடித்து ம்ம்ம்ம் ம்ம்ம் என முயங்கினான்.

என்ன அசோகரே... இப்பவே வா...

ஏன் இப்பன்னா என்னவாம்...

ஏய்... அத விடு...உன்ன பத்தி சொல்லு... என்ன முன்னமே உனக்கு பிடிக்கும்தான.. இங்க வர்றதே என்ன பாக்கதான அஞ்சு முட்டை - மூக்கை பிடித்து திருகினாள்.

ஆமா இவுங்க பெரிய வாத்து முட்டை.. இவுங்கள பாக்க வராங்க.. நான் ரன்னிங் வருவேன். இந்த பக்கம் இந்த கடை இருக்கறதுனால முட்டை வாங்குவேன். அவ்ளோ தான்.

அப்டியா... அப்புறம் ஏன் அப்பிடி முழுங்குற மாறி பார்ப்ப...

அப்புறம் தீக்கோழி முட்டய சட்டைக்குள்ள வெச்சிருந்தா பாக்காம என்ன பண்ணுவாங்க...

டேய்... என்றாள். முட்டைக்கண்ணு வந்து போனது.

காதுக்குள் என்னவோ கேட்டான்.

அவள் பொய்க்கோபம் காட்டியபடியே அவளும் காதுக்குள் பதில் சொன்னாள்.

ஐயோ... என்று கண்களை முட்டையாக்கியவன்... எப்பிடிடி கேப்பீங்க... என்றான். அவன் கைகள் அளவில் ததும்பின. போதவில்லை போகம் என்ற வெளிக் காற்று இப்போது தாளவில்லை தாகம் என்றது.

இப்போது முட்டை அற்ற தரையில் முத்தங்கள் உடைய தழுவிக் கொண்டார்கள். நித்திரைக்கு பின் ஓடிய நேரம் திடும்மென விழித்த போது மதியம் வந்திருந்தது. வெளியே காற்று குறையவில்லை.

பூங்கனி.... கல்லாக்காரி...ஏய் சுராங்கனி... இப்படியே இருந்தா எப்பிடி. வெளிய போகணும். ஏதாவது பண்ணு.

ஒன்னும் பண்ண முடியாது. பாரு என்ன அடி அடிக்குதுனு என்று ஜன்னல் வழியே கண்களை காட்டினாள். காற்றின் வேகம் கூடிக்கொண்டே இருக்கிறதே தவிர குறைந்த பாடில்லை. அவன் கண்களில் தவிப்பு.

"புயல் காத்து போலடா. மெல்ல மெல்ல குறைஞ்சிரும் பாரேன். ஏன் பயப்படற. மாசக்கணக்குல ஆனா கூட சாப்பிட உள்ள இருக்கு. பாத்துலாம். எப்படியும் என்ன தேடி எங்க வீட்ல வந்துருவாங்க. நான் இருக்கேன்ல" என்றவளை தாண்டி ஜன்னல் வழியே கூர்ந்து பார்த்தான். காற்று வெளியில் சிறு சிறு கற்களாய் சுழன்று கொண்டிருந்தது மதியம்.

யோசித்துக் கொண்டே நின்றவள்... அவனை சமாதானப் படுத்தி இயல்பாக்க அதே வேலையை ஆரம்பித்தாள். எடுத்த முட்டையை சுழற்றி வீசி அடித்தாள். அவன் தலையில் பட்டுத் தெறிக்க... சட்டென திரும்பி என்ன செய்வதென தெரியாத இந்த அடைப்புக்கு இந்த விளையாட்டு தான் சரியான திறவு என்று சிரித்தான். அடைபட்ட இறுக்கம் தன்னை தளர்த்திக் கொள்ள பசி ஆறுவது தான் இயல்பு.

அப்பிடியா.... இருடி.... கண்ணழகி சுரா....ங்கனி.... என்று அவனும் கைக்கு அகப்பட்ட ஒரு முட்டையை எடுத்து வீசினான். வீசிக்கொண்டே அவளை விரட்ட அவளும் வீசிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தாள்.

"சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா
மாலு மாலு மாலு
சுராங்கனிகா மாலு
சுராங்கனிகா மாலு கெனவா"

முட்டை குடோன்க்குள் சென்ற போது பாடல் எதிரொலித்தது.

"அரிசி இருக்கு பருப்பு இருக்கு ஆக்க முடியலே
அடுப்பு இருக்கு நெருப்பு இருக்கு சேக்க முடியலே
ஆசைப்பட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே
அடுத்த வீட்டு அக்காமகள பாக்க முடியலே"

முட்டையை வீசி விட்டு இந்த பாட்டெல்லாம் உனக்கு தெரியுமா சுராங்கனி..

இந்த பாட்ட பாடி ஆடி தான் எனக்கு இந்த பேரே வந்துச்சு...

அவளும் வீசினாள்.

இருவரும் ஒருசேர பாடினார்கள். பேசுவது போல நடனத்தில் பாடல் அசைந்தது. காற்றுக்கு மீறும் குரலின் உச்சத்தில் இருவரும் ஆழத்தில் கத்தினார்கள்.

"சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா
மாலு மாலு மாலு
சுராங்கனிகா மாலு
சுராங்கனிகா மாலு கெனவா"

ஜன்னல் மோதும் காற்றும் பாட்டில் கலந்து கொண்டது. அடுத்த முட்டையை எடுத்து விசிறி அடித்தான்.

பாடல் பட்டென நிற்க... அவள் ஆஅ என அலறியபடி விழுந்தாள். விழ விழவே அடுத்த முட்டையும் எடுத்து அடித்து அதற்கு அடுத்த முட்டையும் அடித்து விட்டான். அவள் சுருண்டு விழுந்து புரண்டாள். தொண்டை கிழியும் சத்தம். கால்கள் ஒன்றோடு ஒன்று உரசி புரண்டன. அவள் உடலில் நடுக்கம். தூக்கி தூக்கி போடுகிறது.

சும்மா நடிக்காத சுராங்கனி... உனக்கு நடிக்கவும் வரும்னு காட்டறயா...

"சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா
மாலு மாலு மாலு
சுராங்கனிகா மாலு
சுராங்கனிகா மாலு கெனவா"

அவள் கத்துவதை பொருட்படுத்தாமல் விட்ட இடத்தில் இருந்து பாடிக்கொண்டே அடுத்த முட்டையை எடுத்து கீழே விழுந்து தரையில் தத்தளிக்கும் அவள் பின் மண்டையில் அடித்து விட்டு அடுத்த முட்டையை வீச முயற்சிகையில் தான் உணர்ந்தான். என்ன இது.. முட்டை மாதிரியே இல்லயே.. பட்டென கையில் இருந்து நழுவிய முட்டை மாதிரி இருந்த ஓடு தரையில் விழுந்து உடைந்து அமிலம் போல எதுவோ சிதறியது. சூடு கொப்பளிக்க ஐயோ என அவன் அனிச்சை அவனை சற்று ஒதுக்கி அந்தப்பக்கம் தள்ளிக் கொண்டது.

எடுத்து வீசிய நாலு முட்டையும் அடுத்தடுத்த மைக்ரோ நொடிகளில் அவள் தலை கழுத்து முகம் என்று உடைந்து வழிந்து ... உருண்டு விழுந்த புரண்டவள் சட்டென அமைதி ஆனாள். இப்போது அவள் உடம்பு திரும்பி இருந்தது.

எரிந்து புகைந்து என்ன இது....

என்ன நடக்குது -

கண்கள் திகைக்க... அப்படியே தலையை சுற்றிக் கொண்டு வந்தது. நிற்க முடியாத குழப்பம். வேகமாய் ஓடியவன் அவளை குனிந்து கூர்ந்து பார்க்க.... முகம் முழுக்க வெந்து கண்கள் உருகி வெளியே வழிந்து முகமே கூழாகி புகைந்து கொண்டிருந்தது. அனிச்சையாய் தூக்கி இருந்த கழுத்தை அப்படியே விசுக்கென விட்டான். அவனுக்கு குமட்டிக்கொண்டு வந்தது.

அவளை வெறித்த கண்களால் அப்படியே பார்த்தபடியே நின்றான். காலம் ஸ்தம்பித்தது போல இருக்கிறது. அப்படியே நிற்கிறான்.

எல்லாம் கனவு போல இருக்கிறது. என்ன நடந்தது. முட்டையை எடுத்து அடித்தோம். முகம் ஏன் வெந்து கிடக்கிறது. அவள் சற்று முன் துடித்த துடிப்பு கண்களில் நடுக்கத்தோடு திரும்பவும் தெரிந்தது. விளையாடுகிறாள். நடிக்கிறாள் என்று தானே நினைத்தோம். என்ன இது. ஏன் இப்படி கிடக்கிறாள். வீசியது முட்டை இல்லையா. எப்படி அது அமிலம் கக்குகிறது. அவன் கால்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக துள்ளின. அங்கு நிற்க முடியவில்லை. அவனைச் சுற்றி முட்டைகளால் யாரோ அடிப்பது போல இருக்கிறது. தொடர்ந்து அவனைச் சுற்றிச் சுற்றித் தாக்கும் முட்டைகளில் அமில வெடிப்பு. கத்துகிறான். நின்று கொண்டே அவன் மேல் விழுவதாக நம்பும் முட்டைகளைத் தடுக்கிறான்.

அவனுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று மறப்பது போல இருக்கிறது. நினைவுகளில் முட்டைகளின் வீச்சு தொடர்ந்து வந்து வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன.

மீண்டும் மீண்டும் அதே நினைப்பை மீட்டெடுக்க கடினப்பட்டான். முட்டையதான வீசினோம். ஏன் முகம் வெந்திருக்கு.

சுரா...ங்கனி... சுராங்க...னி - கத்தினான். அவனுக்கே கேட்கவில்லை. விரிந்த கால்களில் அவள் நிர்வாணம் விரைத்து கிடந்தது.

நெற்றி மேல் விழும் முட்டைகளின் சப்தம் சுத்தியலின் அடியாய் இறங்க இறங்க மெல்ல திரும்பி நடந்தான். அந்த முட்டை அடுக்கில் அருகே நின்றான். அவன் எடுத்து வீசிய அந்த அஞ்சு முட்டைகள் இருந்த இடத்தில் ஒரு சிறு காகிதம் ஒட்டி இருந்தது. கூர்ந்து பார்த்தான். குவித்த கவனத்தை கூட்டி வருவது சிரமத்திலும் சிரமமாக இருந்தது.

கூர்ந்து பார்த்தான். மூளை குவிந்து படித்தது.

அதில் ஒரு பேர் இருந்தது. சுருங்கிய நெற்றியோடு அப்படியே அவன் கண்கள் கொஞ்சம் தள்ளி அடுத்த ரேக்கிற்கு நகர அங்கே இருந்த மூன்று முட்டைகளின் மேல் இருந்த துண்டு சீட்டில் இன்னொரு பெயர் எழுதி இருந்தது. அடுத்து இன்னொரு பெயர். அப்போது தான் புரிந்தது. அதெல்லாம் ஆசிட் சப்ளைக்கு வைத்திருக்கிறார்கள்.

ஐயோ.. சுரா.. உன் கடைல என்ன நடந்துட்டுருக்கு... நானே உன்ன கொன்னுட்டனே... எனக்கு தெரியலயே.. முட்டை மாதிரிதான இருந்துச்சு...

கையை கையை ஆட்டுகிறான். தலையை சுழற்றுகிறான். விக்கல் தொடர்ந்து வருகிறது. அவன் கால்கள் நடுங்கி கொண்டே இருக்கிறது. எல்லாமே மாயைக்குள் நடப்பது போல இருக்கிறது. இதெல்லாம் கனவு தான். அதிலிருந்து வெளியே வந்து விட்டால் மீண்டும் நேற்று காலைக்கு சென்று விடலாம். என்னென்னவோ மண்டைக்குள் பிராண்டுகிறது. ஒரு குச்சிக்கால் தேவதை இப்பிடி சட்டுனு செத்து போய்ட்டாளே. கொன்னுட்டமே. யார் கொன்னது. நானா... அயோ... அவன் தலைக்குள் நூறு வண்டுகளின் சத்தம். மூளை மடிப்பில் உருகும் நினைவு வழிந்து காது வழியாக சொட்டுகிறது. அவன் வாயில் இருந்து வழியும் முட்டையின் வாசத்தில் இப்போது ஒவ்வாமை...குமட்டிக் கொண்டே இருக்கிறது.

அவனுக்கு எல்லாமே மறந்து விட்டது போல தோன்றுகிறது. அவன் கண்கள் முட்டையாக உடைந்து வழிவதாக நம்பினான். அவள் மீது கிடந்த அந்த நேரங்கள் அப்படி அப்படியே உருகி காணாமல் போகிறது.

நின்றிருந்தபடியே தன் சுமையை தானே இன்னும் இன்னும் ஏற்றுகிறான்.

போதாமை.. வெறுப்பு.. பயம்... பலவீனம்... தொடர்ந்து யோசிக்க முடியவில்லை. நின்று கொண்டே இருந்தான். ஒன்றும் புடிபடவில்லை. உலகம் அடைத்துக் கொண்ட அந்த கடைக்குள் ஒரு அரூபம் போல நின்றான். அவனுக்கு மூச்சு முட்டியது. சுவாசத்துக்கு அவன் உடல் ஏங்கியது. வேர்த்து ஒழுகும் அவன் உடல் சாவுக்கு அருகே நிற்பதாக நம்பியது. நினைவு அழிந்த சின்னம் போல நின்றவன் திடும்மென தன்னை உடைத்துக் கொண்டு தானே வெளியேறுவது போல... வேகமாய் அந்த ஜன்னலை உடைத்துக் கொண்டு காற்று வெளியில் தன்னை விசிறி அடித்தான். மாயைக்குள் மவுனத்துக்கு ஏங்கும் ஓருடல் காற்றில் சில்லு சில்லாக சிதறியது.

உடைந்த ஜன்னல் வழியாக பெரும் பூதமாக கடைக்குள் புகுந்தது காற்றின் கோடி கைகள்.

உடைந்து நொறுங்கத் தொடங்கின மிச்ச முட்டைகளும்.

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.