எல்லாவற்றுக்கும் இருப்பது போல இதற்கும் ஆப் இருக்கிறது.

மெரூன் முதலில் தயங்கினாலும் வேறு வழி இல்லை என்று நம்பினான். அவனுக்கு இங்கிருந்து தப்பிக்க வேண்டும். இல்லையெனில் இந்த வாழ்வு அவனை முடக்கி ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும். அவனுக்கு தெரிந்து விட்டது. சுற்றிலும் அழுத்தம். சூழல் கை மீறி விட்டதாக அவன் மனம் நம்பியது. சோர்வின் உச்சத்தில் என்ன செய்வதென தெரியாத தவிப்பு அவனை அலைக்கழித்தது. தன் வாழ்வின் போதாமைக்குள் கிடந்து கொந்தளிப்பது தாங்கொணா காயம். இந்த மாயத்தில் இருந்து மறைந்து விட விரும்பினான்.

மீண்டும் புதிதாக ஆரம்பிக்க வழி இருப்பதாக தெரிய வருகையில்... அதை செய்து பார்க்க முழுதாக விரும்பினான்.

வலை போட்டு தேடினான். சரியான பொருத்தம் எதுவென கண்டறிவது கடினம். ஒற்றைக் கடையில் இதுதான் பொருள் என்று பிடிபட்டு விடும். மொத்தக் கடையில் எதுவும் பொருள் என எதுவோ விடுபட்டு விடும்.

ஒவ்வொருவராக பார்த்தான். வயது ஒத்துப் போகிறது. வாழ்க்கை ஒத்து போகுமா. சந்தேகம் மானுட அரிப்பு. மண் அரிப்பு போல மனதின் அரிப்பும் முடக்கி விடும். ஏற்கனவே முடங்கிதான் கிடக்கிறான். தொட்டதெல்லாம் தோல்வி. மெரூன் தனக்கு பிடித்த கனவை மீண்டும் காண.... வேண்டிக்கொள்கிற தூக்கம் போல ஒரு தூளியின் மாயத்தை மனக்காற்றில் அசைத்தபடியே இருந்தான். வேட்டைக்கு போனால்கூட வெற்றி கிட்டும். மனதுக்கு பிடித்த மனிதர்களைத் தேடுவது மகத்தான தோல்வி பயத்தை உருவாக்கி விடும்.

ஆகவே... அதே வேலையாக இருந்தான்.

எந்நேரமும் தனக்கு தோதான ஆளைத் தேடிக் கொண்டே இருந்தான். வேறு வழி இல்லை. அது ஒன்றுதான் வழி. விழி நிறைந்த தன் சோகம் எப்போது வேண்டுமானாலும் தன் மழையைக் கொட்டி விடும். பொறுமை இனி இல்லை. அப்படி இருந்தால் அதற்கு பொருளும் இல்லை. பொறுமையின் கனம் கொஞ்சம் கொஞ்சமாக அவனில் ஏறுகிறது. இனியும் சிறுமையாக முடியாது. சித்திரத்தில் மொட்டை மரமாகவே எத்தனைக் காலம் நிற்பது. ஒருவரும் வண்ணம் பூச தோன்றாத வாழ்வு இது. தப்பித்துக் கொள்ள வேண்டும். தாகத்தில் இருந்து தப்பித்து தடாகத்தில் குதித்து விட வேண்டும். தடாகத்தில் நீர் குறைந்திருந்தாலும்... சிறு வாலென நீந்தும் வேட்கைக்கு காத்திருந்தான்.

நல்லவேளை இப்போதெல்லாம் எதற்கும் ஆப்ஷன் இருக்கிறது.

மானுடன்... மிக கவனமாக கையாள வேண்டிய பொருள். அவன் கண்டுபிடிப்புகள் மானுட நகர்வுக்கு உறுதுணையானவை. எங்கே எப்படி எதன் பொருட்டு எதைக் கையாள வேண்டும் என்பதே உட்பொதிந்த உன்னதம். மகோன்னத மரியாதைக்கு இதுதான் பொருள் சேர்க்கும் என்ற முடிவுக்கு வந்த போது... இப்படி ஒரு வாழ்வு முறை இருக்கிறது எனத் தெரிய வந்தது. உள்ளம் மகிழ்ந்தான். இது வரை கொண்ட துயரங்களைத் துடைத்தெடுக்கப் போவது பற்றி எப்போதும் சிந்தித்தான். இன்னமும் ஒரு படி மேலேறி சென்று கனவும் கண்டான். பகல் கனவு மானுடத்துக்கு மிக மிகத் தேவை. அது கொண்ட வலிமையே பிறகு சிந்தனைக்கு வல்லமை கொடுக்கும் சிறகு பொருத்தும்.

கண்டுபிடித்த மென் பொருளாளனுக்கு மானசீகமாய் வணக்கம் தெரிவித்தான். நன்றிகளின் நரம்புகள் தோல்வியில் இருப்பவனுக்கு நன்றாகப் புலப்படும். பகிரங்கமாய் பொதுவாக வானம் பார்த்து காட்டினான்.

ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டே வந்தான். போட்டோவில் அழகாக இருக்கிறார்கள். பயோடேட்டாவில் அவனை விட துயரமாக இருக்கிறார்கள். ம்ஹும். கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்த ஐந்து வருடத்துக்காவது நினைத்த மாதிரி வாழ்ந்து விட வேண்டும். இந்த வாழ்வுக்கு கொடுத்த விலை அதிகம். ஆப் கேட்ட நுட்பமான கேள்விக்கெல்லாம் மிக நியாயமாக பதில் உரைத்தான்.

நமக்கு பிடித்த ஆளுக்கு நம்மை பிடிக்க மாட்டேன் என்கிறது. நம்மை பிடித்த ஆளை நமக்கு பிடிக்க மாட்டேன் என்கிறது. மும்முரமாக களைந்து அடுக்கி தேடிக்கொண்டே இருந்தான்.

இந்த மாதிரி டைப் ஆளுக்கு அந்த மாதிரி டைப் ஆளுங்க தான் சரி என்று ஒரு லிஸ்ட்டை காட்டியது ஆப். ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டே வந்தான்.

அவன் இவன்.... அவன் இவன்... அவன் இவன்... என தட்டிக்கழித்துக் கொண்டே வந்தான். சட்டென ஒரு புள்ளியில் பிரகாசமாக ஒருவன் தெரிந்தான். பெயர் ஆழ்முகன். ஒத்த வயது. அப்படியே தனக்கு பிடித்த வாழ்க்கைக்குள் இருக்கிறான்.

ஹாய் ஆழ்முகன்... என்று தன்னை அறிமுகம் செய்தான்.

ஹாய் மெரூன் என்று பதிலும் வந்தது.

பேசினார்கள். ஆழ்முகன் தன் அயற்சியைப் பகிர்ந்தான். மெரூனுக்கு பரவால்ல போல தோன்றியது. மெரூன் தன் தோல்விகளைப் பகிர்ந்தான். இதெல்லாம் ஒரு விஷயமா... என்று பட்டது அவனுக்கு. மாற்றி மாற்றி பேசினார்கள். ஒருவனுக்கு பெரிதாக தோன்றியவைகள்... இன்னொருவனுக்கு ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. ஒருவன் கண்ணீர் விடும் விஷயம் இன்னொருவனுக்கு சப்பை மேட்டராக தெரிந்தது. வாழ்வின் கோணமே இது தான். அதன் சிறப்பு வாய்ந்த வளைவுகளே இம்மாதிரி எதிர் எதிர் பார்வை தான்.

நிறைய அலசி ஆராய்ந்து.... மொத்தத்தில் அவன் வாழ்வு இவனுக்கு பிடித்திருந்தது. இவன் வாழ்வு அவனுக்கு பிடித்திருந்தது. இக்கரைக்கு அக்கரை பச்சை சரி தான்.

பேசி பேசி... இருவருமே ஒரு புள்ளியில் சரி என்றாகி விட்டார்கள். ஒருவருக்கு ஒருவர் பிடித்து விட்டது. நாள் குறித்தார்கள். ஒருவர் வாழ்வின் மீது ஒருவருக்கு இருக்கும் தேடலின் தீர்க்கம் இருவரிடமும் இருந்தது.

மெரூனுக்கு மனம் நிறைந்த நிம்மதி. இனி இந்த சோகம் இல்லை. பிரச்சனை இல்லை. பதற்றம் இல்லை. அயர்ச்சி இல்லை. அலுப்பு இல்லை. இதுவரை செய்த தவறுகளுக்கான குற்ற உணர்ச்சி இல்லை. தப்பிக்க போகிறோம். இனி புது வாழ்வு. புது பெயர். புது நோக்கம். புது உணர்வு. புது உள்ளுணர்வு. கிட்டத்தட்ட புது இதயம் கிடைத்தது போல. மூளை தயாராகி விட்டது. செல்கள் பழக கொஞ்ச நாட்கள் எடுக்கும். பழக்கி விடலாம்... நம்பினான். தன்னிலிருந்து தன்னை உதறி விட்டு இன்னொரு மனிதனாக மாறி விட கிடைத்த அறிய வாய்ப்பு இது. சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சந்திக்கும் வேளை வந்தே விட்டது.

மெரூனும் ஆழ்முகனும் ஒருவரையொருவர் ஆசையாய் பார்த்துக் கொண்டார்கள். ஏற்கனவே ஒருவரையொருவர் தெரிந்து கொண்ட எல்லாவற்றையும் பொருத்திப் பார்த்து உடல் மொழியைப் பெற்றுக் கொண்டார்கள். ஆழமாய் மூச்சிழுத்தபடி இருவருமே அவரவர் இடத்தில் இருந்து மாறினார்கள். ஆழ்முனாக மெரூனும்.... மெரூனாக ஆழ்முகனும்... மாறிக் கொண்டார்கள்.

அவன் வீட்டுக்கு இவனும் இவன் வீட்டுக்கு அவனும் செல்லப் போகிறார்கள். இனி இவன் தான் அவன்... அவன் தான் இவன். அவன் விட்ட வாழ்வை தொடரும் இவன். இவன் விட்ட வாழ்வைத் தொடரும் அவன்.

மெரூனை விட்டு விட்டு ஆழ்முகனை உள்வாங்கி கொண்டு அவனாகவே மாறினான். அந்த நொடியில் இருந்து அதுதான் அவன் வாழ்வென்று ஆழமாய் நம்பினான். ஆழ்முகனும் அப்படியே நம்பினான். இனி தான் ஆழ்முகன் அல்ல. மெரூன். மெரூனாக வாழ்க்கையைத் தொடர போகிறான். உயிரோடு உடலோடு ஒரு மறுபிறப்பு.
இன்னொருவர் வாழ்வை வாழ ஒருவர் தேர்ந்தெடுக்கையில்.. அந்த ஒருவர் வாழ்வையும் வாழ இன்னொருவர் இருக்கிறார். உனக்கு கீழே உள்ளவர் கோடி இது தான் போல.

இவன் அவனாகவும் அவன் இவனாகவும் நடை உடை பாவனை பேச்சு மொழி என மாறிய புது வாழ்வை இதோ இந்த நொடி ஆரம்பித்து வைத்திருந்தது.

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.