காலம் சிலருக்கு தொடக்கத்திலேயே முட்டுக்கட்டை போட்டுவிடுகிறது. சிலருக்கு எப்போதும் கதவை திறந்தே வைத்திருக்கிறது. அவனுடைய  வாழ்க்கையும் அப்படிதான்.

man 247ஏனோ  தெரியவில்லை கடந்த சில ஆண்டுகளாக எழுத்தின் மீது  அவனுக்கு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. தூங்கும் நேரத்தை தவிற மற்ற நேரங்களில் எதையாவது சிந்தித்து கொண்டே இருக்க முயற்சிப்பான். பல நேரங்களில் தூக்கத்திலும் உளறி எழுவான்.

ஊரே மெச்சும் அளவுக்கு படித்துவிட்டான். அவன் தான் அவன்  சாதியில் முதல் பட்டதாரியும் கூட. அவனுடைய குடும்பம் இவனை பெரிதும் நம்பிக்கொண்டிருந்தது.

ஆனால் அவனுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து பணம் சம்பாதிப்பது அடிமை வாழ்க்கை போன்றது என்ற எண்ணம்  இருந்ததால்.

பிடிக்காத வேலை என்றாலும் சிறிய  நிறுவனம் ஒன்றில் சுகந்திரமாக வேலை செய்து வந்தான். அப்போதுதான் நண்பன் ஒருவன் மூலமாக புத்தகம் படிக்கும் வாய்ப்பு முதன்முதலாக அவனுக்கு கிடைத்தது.

குறுகிய காலத்தில் ஒருசில புத்தகங்களை வேகமாக படித்துவிட்டான். படித்ததின் விளைவு, தன்னை எல்லாம் தெரிந்த மேதையாக எண்ணிக்கொண்டு எழுதலாம் என்று முடிவு செய்து விட்டான்.

எதை எழுதுவது? எப்படி எழுதுவது?

எழுதியதை யாருக்கு அனுப்புவது? எதுவும் அவனுக்கு தெரியாது.

ஆனால் எப்படியாவது எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.  அப்போது சின்னதாக ஒரு கதையை மட்டும் எழுதலாம் என்று முடிவு செய்தான். எழுதும் கதை சிறுகதை தான் என்பதையும் இவனே முடிவு செய்துவிட்டான்.

ஏனென்றால் எழுதலாமென்று முடிவு செய்த போதே. அவன் தன்னை ஒரு எழுத்தாளனாக முடிவு செய்துகொண்டான்.

சிறுகதை எப்படி எழுதுவது என்ற கருத்தை மையமாக வைத்து சுஜாதா ஒரு சிறுகதையை எழுதினாராம்.அதைப்போல தானும் ஏதாவது எழுதினால் என்ன என்ற எண்ணமும் அவன் மனதில் தோன்றாமல் இல்லை..

நல்லவேலை

அப்படி எதுவும் விபரீதம் நடக்கவில்லை.

ஏதோ ஒரு பழைய கதையை நூல்பிடித்து தெரிந்த நாலு வார்த்தையை அங்குமிங்கும் போட்டு ஒரு கதையை எழுதிவிட்டேன்.கதை நன்றாக இருப்பதாக அவனே உள்ளூர  சந்தோசப்பட்டும் கொண்டான்..என்ன செய்வது எழுத்தாளன் அப்படித்தானே சந்தோசப்பட்டு கொள்ள முடியும்.

எப்படியோ கதையும் ஒருவழியாக எழுதி விட்டான்.

எழுதிய கதையை பத்திரிகைக்கு அனுப்ப வேண்டுமே எப்படி அனுப்புவது?

கூகிளில் தேடிப்பார்க்கிறான் சில பத்திரிக்கைகளின் மின்னஞ்சல் முகவரி அவனுக்கு கிடைக்கிறது.கிடைத்ததை மொத்தமாக சேகரித்து கொள்கிறான்.

எழுதிய கதையை பத்திரிக்கையின் மின்னஞ்சல் முகவரிக்கு அவசர  அவசரமாக அனுப்பினான்.

கதையை  எழுதி முடித்துவிட்டான். எழுதிய கதையை  பத்திரிக்கைக்கும் அனுப்பிவிட்டான். அடுத்து  என்ன?

அனுப்பிய  பத்திரிக்கையில் இருந்து பதில் வர வேண்டும்.

அனுப்பிய அடுத்த நிமிடத்தில் இருந்து பதில் மின்னஞ்சல் வருமா ? வராதா? என்று ஆவலோடு நிமிடத்திற்கு பத்து முறை மொபைலின் திரையை  பார்த்து  கொண்டே இருந்தான்.

நள்ளிரவு வரை எந்த பத்திரிக்கையில் இருந்தும் பதில் மின்னஞ்சல்   வரவில்லை.எழுத்தாளன் என்ற மமதையோடு அசந்து தூங்கி விட்டான்.

நள்ளிரவை தாண்டி ஒரு குறுந்செய்தி வரும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து  மொபைலை பார்த்த போது ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து குறுந்செய்தி வந்திருந்தது.மொபைலை சார்ஜ்ர் பின்னில் சொருகிவிட்டு விரக்தியோடு தூங்கி விட்டான்.

காலையில் சீக்கிரமாக எழுந்து தலை குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று எப்படியாவது தன்னுடைய கதை பத்திரிகையில் வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினான்.

பேருந்தில் அலுவலகத்திற்கு போகும் வழியில் ஒரு பத்திரிகையின் எடிட்டர் அவனுக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். பதில் மின்னஞ்சலை பார்த்ததும் அவனுக்கு ஏகப்பட்ட சந்தோசம்.

ஆஹா நம்முடைய  கதை பத்திரிகையில் வரப்போகிறது  என்ற சந்தோசம்.

ஆனால் அந்த சந்தோசம் சிறிது நேரம்கூட நீடிக்கவில்லை. இதே அந்த பத்திரிக்கை எடிட்டரின் வரிகள்.

"கதையின் உள்ளடக்கம் மிகவும் பழையது. வேறு கதை அனுப்பவும்"

இதுவரை  தான் ஒரு எழுத்தாளன் என்பதையும் தனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தையையும் எடிட்டரின் அந்த சில வரிகள் சுக்குநூறாக உடைத்துவிட்டன.

அவன் தலையில் இருந்த எல்லா அழுக்கு மூட்டைகளையும் ஓரமாக  கழட்டி வைத்துவிட்டு, இதோ  இன்னொரு கதையை எழுதி கொண்டிருக்கிறான்.

- மணிகண்டன் ராஜேந்திரன்                                                                          

     

Pin It