இரவு சாம்பல் பூத்திருந்தது. 

night 360எனது பேரழுகை எனக்கே கேட்கவில்லை. என்னாலே என்னை உணர முடியவில்லை. உள்ளும் புறமும் ஒன்றாகவே இருந்தது. உலகம் வேறு திசையில் சுற்றுவதை நான் உணர்ந்தேன் அல்லது உணர்ந்தது போல பிதற்றினேன். யாவுமற்ற எப்பொழுதின் மறுபுறத்தில் நானே இருப்பதாக நம்பினேன். அதுவும் மங்கிய வெளிச்சத்தில் மந்தமான நா குழறலோடு அசைந்தது. அனைத்திலும் ஒன்றில்லை. ஆக சிறந்தவை ஒன்றுமே இல்லை என்று புள்ளியிட்ட கூக்குரலின் எதிர் காட்டு பறவையென என் ஈனக் குரல் கேட்பார் யாருமின்றி கதறியது.

என் வீதி... என் ஊர்.. என் உலகம்.. என் பிரபஞ்சம்... எனது.... நான்.....என்னுடைய..... என்று எதுவும் இல்லாத தோரணையில் என் வீட்டுக்குள் செல்ல நின்று கொண்டிருந்தேன்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். சுற்றும் முற்றும் பார்த்தது என்னை. பேரிருளில் நன்றாக என்னை எனக்கு தெரிந்தது. எங்கிருந்து வந்து பூத்துக் கொண்டதோ சாம்பல் நிறம். என்நிறம் எங்கே.. என் உடல் எங்கே.. என் உடை எங்கே....?  காற்றாகி கனவாகி புகையாகி.....நெடு நெடுவென வளர்ந்து விட்ட கத்தைப் புகைக் கூட்டத்தில் நான் கண்களுக்கும் காதுக்கும் வாய்க்கும் மூக்கும் வேற்றுத் துவாரங்களைக் கொண்டிருந்தேன்.

ஊர் பெருசுகள் கூறும். "மரித்தவர், அன்று மயானத்தில் எரிந்தாலும்..... மதி மயங்கி வீடு வருவார்" என்று. 

தவறியும் வீடு திறக்காவண்ணம் வீதி அடைந்திருந்தது. ஒவ்வொரு வீட்டுக் கதவுக்கும் ஓராயிரம் வேண்டுதலாக பூட்டுகள் இருப்பதை உணர்ந்தேன். நேற்றுவரை அத்தனை உறவுகள் சொல்லி இருந்த ஊர் ஒரே நாளில் அந்நியமாய் விட்டது. என் வீடு நடுங்கிக் கொண்டே உறங்குவது போல நடித்துக் கொண்டிருந்தது. நான் மீண்டும் ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு......வீட்டுக்குள் சென்றேன். ஏனோ காலற்ற வளைவுக்குள் சிறு நடுக்கம் இருந்தது.  என் பார்வைகளின் பெரும் ஓசை நூறு யானைகளின் பாத சப்தத்தை கொண்டிருப்பதாக யாரேனும் நம்பக்  கூடும். 

முதலில்.....முகப்பறையில் கதவோரம் ஒட்டிப்படுத்திருந்த கணவன்.... ஏதோ உணர்ந்திருக்க வேண்டும். படக்கென்று போர்வையை தலை வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு கால்கள் நடுங்குவதைக் கண்ட கணம் ஒன்றில் ஸ்தம்பித்தேன். எத்தனையோ முறை பாம்பின் புணரலைப் போல என் கால்களை பிணைந்த கால்கள் இத்தனை நடுக்கம் கொள்வதேனோ..! 

மரித்தவர் வீட்டில் எல்லா பக்கமும்... துக்கமென சூழ்ந்திருக்கிறது வெளிச்சம். இருள் மட்டுமே கர்ஜித்துக் கொண்டே தலை சிலுப்புகிறது..

வீடு ஆவென கிடந்தது. மகள் சுவரோரம் குறுக்கி படுத்திருந்தாள். எதற்கோ விழித்துக் கொண்டவளை நான் உற்றுப் பார்த்தேன். அவள் நாசி ஆழமாக சுவாசித்தது. என் வாசம் உணர்ந்திருக்க வேண்டும். படக்கென்று கண்களை இறுக மூடிக் கொண்டு பக்கத்தில் படுத்திருந்த பாட்டியை இன்னும் அழுத்தமாக அணைத்துக்  கொண்டாள். மகளென்றாலும் மானுட பயம். வீட்டில் மூலையில் படுத்திருக்கும் பொமரேனியன் நாய்க்குட்டி கண்டும் காணாமல் இருப்பது போல தன் கால்களுக்கிடையில் தலையை புதைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. தாத்தா மிரண்டு போய் சோபாவில் தலையணையை கழுத்துக்கு தந்து ஒரு பக்கமாக சாய்ந்திருந்தார். காதுகளை மட்டும் விடைக்க கொடுத்திருந்தார். அவருக்கு புரிந்து விட்டது. ஆன்மா வீட்டுக்குள் அலைகிறதென்று. தூக்கிட்டு மரணிப்பேன் என்று யாருக்குத்தான் தெரியும். தலை விரிந்து கிடக்க  என் உடல் எனக்கே பயம் ஊட்டியது இன்று மாலை.

பக்கத்து வீட்டின் பெருமூச்சு தூரத்து பூனையின் நகப் பிராண்டலாக கேட்டது. தவறியும் யாரும் யாரையும் எழுப்பி விடவில்லை. நான் வீடு முழுக்க நடந்தேன். வீடே வெம்மை சூழ கனத்து நடுங்கிக் கொண்டிருந்தது. கனவுக்குள் இருப்பது போன்ற எனது பிரம்மையை யாரிடம் கூறுவது. யாரிடமாவது கூற வேண்டும் போலிருந்தது. பையனின் போர்வையை விரலற்ற கை கொண்டு இழுத்தேன். கட்டிலோடு இன்னும் தன்னை இறுக்கினான். பூனை கண்ணை மூடிக் கொண்டு இருட்டு பூமிக்கு கதையென என் வீடு மிதந்தது.

"அய்யோ போய்ட்டியே...... இனி எங்க எப்படி உன்ன பார்ப்பேன்....." இன்று மாலையில் கணவன் விட்ட கதறல் எங்கே போனது என்று தெரியவிலை. மகனின் கதறல்.......மகளின் கத்தல்......உறவின் அலறல்...மரணத்தைக் கண்டு மிரண்ட முழு குடும்பமும் இன்று மாலையில் என் ஒருத்திக்காக தானே அல்லோலகல்லோலப்பட்டது.  இதோ இப்போது நானே வந்திருக்கிறேன். ஒருவரும் எனக்கு பதில் சொல்லவோ என்னை எதிர்கொள்ளவோ தயாராக இல்லை. பயம் அத்தனையும் பயம். பிறப்பு முதல் இறப்பு வரை எது கொண்டும் பயம். எவை கண்டும் பயம். இந்த பயம் செத்த பிறகுதான் பட்டென்று காணாமல் போகிறது. இதோ எனக்கு பயம் இல்லை. பாசம் மட்டுமே. அதுவும் மறந்து கொண்டே போகிறது. என் இருத்தலை உறுதிப்படுத்த தான் நான் இங்கே அலைந்து கொண்டிருக்கிறேன். யாராவது என்னிடம் பேசுங்கள். எனது ஈனக்குரல் லயமற்ற மொழியில் குழறுகின்ற உளறலோடு என் காது கிழிக்கிறது. மூளை கொண்டு மறுதலிக்கிறது.

நான் என் புகைப்படத்துக்கு முன்னால் வைத்திருந்த நீரை எடுத்துக் குடித்தேன். சற்று நேரம் நின்று கொண்டிருந்தேன். நிலை குத்திய உடல் எரியும் வாசத்தில் எனது ஞாபகங்கள் தீயத் துவங்கியிருந்தது. எனது புகைப்படம் யாரோ போல தெரியத் தொடங்கியது. சட்டென அங்கிருந்து வெளியேறினேன். வாசலில் அமர்ந்து நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டேன். வாசல் மண்ணில் புரண்டு அழுதேன். ஒரு நாயின் நமைச்சலோடு எல்லா பக்கமும் மண் படும்படி உருண்டேன். நின்று பெருமூச்சு விட்டேன். வீதி நாய் குரைக்கத் துவங்கியது. வால் கொண்டு அசைந்து அசைந்து நகர்ந்தேன். பக்கத்து வீட்டு ஜன்னல் ஒன்று படக்கென்று சாத்தியது. கண்டிப்பாக நாளை காய்ச்சலில் கிடப்பாள் பக்கத்துக்கு வீட்டுக்காரி. சிரிக்க தோன்றியது. எத்தனை முறை தண்ணி சண்டை போட்ருப்பா .... சனியன்...... இரு கூட்டிட்டு போய்டறேன்...ஈ என இல்லாத பல் காட்டி சிரித்தேன். ஊர் பெரியவன் ஒருவன் மீசையை முறுக்கிக்கொண்டு மாயக்கா வீட்டிலிருந்து வெளியேறுவதைக் காணுகையில்... சரி சரி......போ.... இதுக்கெல்லாம் தானே இந்த வாழ்க்கை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். 

மீசை என்னைப் பார்த்து விட்டது. வாய் கோணி.....கால் கோணி கீழே விழுந்து இழுக்கத் துவங்கி விட்டது. இதெல்லாம் ஊர் தலை... கருமம். நாளை எனக்கு பக்கத்தில் அலையும் என்று நம்புகிறேன்.... 

அடுத்த வாரம்...........அடுத்த ஊர்....................அதே நான் அல்ல. வேற நான்...

நான்-

இரவு நெருப்பை இருட்டாய் பூசியிருந்தது. 

கொய்யா மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டேன்...

"எப்ப பார்த்தாலும் கொய்யா மரத்துலயேதான கொரங்கு மாதிரி உக்காந்துட்டு இருப்பான்" என்று இன்று மாலை கதறிய அத்தையின் சொல் என் நெஞ்சு முழுக்க இலை பறித்துக் கொண்டே இருந்தது. நான் கொய்யா மரத்தில் இரவின் சாம்பலை கொஞ்சம் சிதற விடும் நிறத்தில் தலை விரி கோலமாக இருப்பதை என் வீட்டார் கவனித்திருக்க கூடும். கிசு கிசுக்கும் குரலும்.. வெம்மையின் பயமும்... ஒளிந்து நின்று பார்க்கும் லாவகமும் என் ஒரு முறை திரும்பதலுக்கு படக்கென்று பெருமூச்சு அடக்கி வீட்டுக்குள் தலையை எடுத்துக் கொள்ளும் நொடி நேர போராட்டத்தில் நான் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பட படவென ஒரு பேயைப் போல மன்னிக்கவும்.. ஒரு மனிதனைப் போல இறங்கி வந்தேன்.

அடுத்தடுத்து வீட்டுக்குள் ஆள் அரவமில்லாதது போல அனைவரும் இழுத்து மூடிப்படுத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு என்னை அரூப உருவில் பார்க்க தைரியமில்லை. மிரண்டு கிடந்தார்கள். சற்று பாவமாகத்தான் இருந்தது. வெகுநேரம் திண்ணையில் அமர்ந்திருந்தேன். வீதியே அடைத்துக் கிடந்தது. மரணம் நிகழ்ந்த வீதி அன்றைய இரவை கனத்த மூச்சுடன்தான் கடக்கிறது. நான் வீதி முழுக்க சுற்றினேன். அத்தனை கனமாக நான் எப்போதும் இருந்ததில்லை. ஏனோ என் சுமை எனக்கே தெரிந்தது. நான் கடைசியாக என்ன பேசினேன். யாரிடம் பேசினேன். எல்லாம் மறந்து விட்டது. ஆனால் எதோ ஒரு சொல் மட்டும் தொண்டைக்குள் உருண்டு கொண்டே இருந்தது. மொழியற்று திரிந்தேன். என் கால்களில் சாரத்தை இந்த பூமியின் பாரம் கொண்டுள்ளதை போல உணர்ந்தேன். யார் வேண்டுமானாலும் குழப்பி போகும் நீரோடையின் நிறத்தை உரிந்து கொண்டே நிகழ்ந்தேன். யாருமற்ற வெளி கொண்டு கண்களின் தூரத்து சுவையாய் மாறுவேடம் போட்ட மாயத்தின் சுவருக்குள் நான் பிறழ்ந்து கொண்டிருந்தேன். எனக்கு சொல்ல ஏராளம் இருப்பதாக எதிர்ப்படும் காற்றுத் துகள் நம்பியது.

நாய் வேடம் போட்டு விட மனம் பாடாய் பட்டது. நான் வீட்டுக்குள் சென்று ஒரு வழக்கத்தைப் போல அலைந்தேன். சமையலறைக்குள் பசித்த பிராண்டல்களோடு பூனையாகி விட கெஞ்சினேன். என்னால் காடு மலை என்று சுற்ற இயலாது என்று கத்தி கத்தி கூறினேன். ஒரு நாய்க்கும் கேட்கவில்லை. எல்லா நாய்களும் என் மரண களைப்பில் தூங்குவது போல நடிக்கிறார்கள். அவர்கள் அப்படித்தான். ஆழ் மன ததும்பலை என்ன செய்வதென தெரியாமல் வீட்டிலிருக்கும் நிலைக்கண்ணாடியை உடைத்து விட்டு வெளியேறினேன். பெரும் சூடு என்னை சுற்றிக் கொண்டே இருப்பதாக நம்பினேன். நாளை வந்து கொண்டிருந்தது. காற்றோடு புள்ளியாகி மறைந்தேன்.

"என்னடி...சொல்ற... கதை செமயா இருக்கு...." -தோழி கண்கள் விரிய கேட்டுக் கொண்டிருந்தாள். 

ரங்கநாயகி தொடர்ந்தாள். 

"லூசு... கதை இல்ல.... நிஜம்....நான் தான் அடிக்கடி எங்க தாத்தா கல்லறைக்கு போவேன்ல அந்த மாதிரி போன வாரம் போயிட்டு திரும்பும் போது தான் அவனை பார்த்தேன். அவனும் வெட்டியானும் பேசிகிட்டு இருந்தது என் காதுல விழுந்துச்சு. வெட்டியான் ஏதோ அட்ரஸ் சொன்னான். அவன் குறிச்சிக்கிட்டான். பதிலுக்கு அவன் காசு குடுத்தான். வெட்டியான் சிரிச்சிகிட்டே வாங்கிக்கிட்டான். அவன் ஒரு நார்மல் ஆளாவே எனக்கு தெரியல. சரி என்னதான் பண்ணுவான்னு பாக்கலான்னு ஒரு கியூரியாசிட்டில அவன பாலோ பண்ணினேன்.. அதுக்கு அப்புறம் அவன் பண்ணினது எல்லாம் ஒரு நார்மல் பெர்சன் யோசிக்கவே முடியாத விஷயங்கள்....  

தோழி நிமிர்ந்து உட்கார்ந்தாள். 

அட்ரஸ் வாங்கினவன் நேரா அந்த அட்ரஸ்க்கு போனான். நானும் பின்னாலேயே போனேன். அங்க போனா.....அது ஒரு டெத் வீடு. ஒரு அம்மா அன்னைக்கு காலைலதான் செத்துருக்கும் போல. அவனும் கூட்டத்தோடு கூட்டமாக நின்னுக்கிட்டான். எல்லாத்தையும் ஆழமா கவனிச்சிட்டே இருந்தான். நிறைய...கிழவிங்க... சொந்தக்காரங்க... அந்த செத்த பொம்பளையோட அருமை பெருமைகளை, அவங்களுக்கு என்ன பிடிக்கும் எப்படி வாழ்ந்தாங்கனு சொல்லி சொல்லி அழுதாங்க. எல்லாத்தையும் கவனிச்சிட்டே இருந்தவன்...அந்த வீட்டை சுத்தி சுத்தி பாத்துகிட்டே இருந்தான். பெருசா ஏதோ திட்டம் போடறானு என் மனசு சொல்லுச்சு. செத்த வீட்டுக்கு யார் போனாலும் நீங்க யார்னு யாரும் கேக்கறது இல்லயே......சுடுகாடு வரை கூட்டத்தோட கூட்டமா வந்தான். கண்ணுல படர மாதிரிதான் நின்னுட்டு இருந்தான். பார்த்தா கூட்டத்துல எங்கையோ மறைஞ்சுட்டான் போல... நான் மிஸ் பண்ணிட்டேன். எல்லாம் முடிஞ்ச பின்னால அவனை கூட்டத்துல தேடினேன்... ஆனா கிடைக்கல .... மனசு கிடந்து அடிச்சிக்கிச்சு...என்ன பண்றதுன்னு யோசிச்சேன்.... கண்டிப்பா அவன் அந்த டெத் வீட்டுக்கு வருவான்னு தோணுச்சு.... அவன் அந்த வீட்டை வைச்சு ஏதோ திட்டம் போட்ருக்கானு மட்டும் உள் மனசு சொல்லிட்டே இருந்துச்சு. ஒருவேளை திருடனா கூட இருக்கலாம். இல்ல இந்த டெத்க்கும் அவனுக்கும் ஏதோ சம்பந்தம் கூட இருக்கலாம். என் டிடெக்ட்டிவ் மைண்ட் பயங்கரமாக வேலை செஞ்சுது. நேரா அந்த டெத் வீட்டுக்கு போய்ட்டேன். வீட்டுக்கு முன்னால இருந்த அந்த பெரிய மரத்துக்கு பின்னால் ஒரு யட்சியை போல மறைஞ்சு நின்னு காத்திட்டிருந்தேன்.

அது நடந்தது.

எங்கிருந்தோ ஒருத்தன் பேய் மாதிரி வந்தான்...... நானே ஒரு நொடி திக்க்ன்னு பயந்து அலறிட்டேன். அவன் அந்த மரத்துக்கு அந்த பக்கம் நின்னு அவன் போட்ருந்த ட்ரெஸ்ஸ கழட்டி கையோட கொண்டு வந்திருந்த பேக்குக்குள்ள வைச்சான்.. உள்ள ஏற்கனவே வெள்ளையா கால் மறைக்கற மாதிரி ஒரு பேய் ட்ரெஸ் போட்ருந்தான். தலைல விக் எடுத்து மாட்டினான். முகத்துல கழுத்துல கைல எல்லாம் பேக்குக்குள்ள இருந்து எடுத்த சாம்பலை பூசினான். மரத்துக்கும் அந்த இருட்டுக்கும் நடுவுல அப்டியே ஜல் ஜல்னு இடுப்பை அழகா அளவா அசைச்சு அசைச்சு நடந்து பார்த்தான். அப்போ தான் மின்னல் மாதிரி புத்திக்குள்ள ஒரு வெட்டு வெட்டுச்சு. அன்னைக்கு சாயந்திரம் ஒரு கிழவி.... அந்த செத்து போன அம்மாவை பத்தி அழுதுகிட்டே ஒப்பாரி வைக்கும் போது "மகராசி நடந்தானா அப்டி இருக்கும்......அப்டியே மோஹினி நடந்த மாதிரி அத்தனை அழகா இருக்கும்..." ன்னு சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு. அவன் அதை உத்து கேட்டுட்டு இருந்தான். இப்போ நடந்து பாக்கறான்னு புரிஞ்சுது. ஆனா இதையெல்லாம் ஏன் செய்யறான்னு புரியல. அடுத்த கொஞ்ச நேரத்துல அவன் அந்த வீட்டுக்குள்ள போய்ட்டான்... கொஞ்ச நேரம் அமைதி. ரெம்ப பயங்கரமான அமைதி அது. எனக்கு என்ன சுத்தி அந்த அம்மா நிக்கற மாதிரி தோணுச்சு. பயந்து நடுங்கி நின்னுட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்துல அவன் வெளிய வந்தான். மண்ணுலயெல்லாம்  புரண்டு அழுதான். அப்டியே கிளம்பி போய்ட்டான். அவனை பின் தொடர முடியல. எனக்கு மயக்கமா வந்துருச்சு. நான் என் வண்டிய எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன். ஆனா மனசு முழுக்க கேள்வி. அடுத்த நாள் சுடுகாட்டுக்கு போய் அந்த வெட்டியானை பார்த்தேன். முதல்ல அவன் பேசல. அப்புறம் புது ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு அவனை பேச வெச்சிடுச்சு. 

"அதெல்லாம் எனக்கு தெரியாதும்மா... சுத்து வட்டாரத்துல எந்த வீட்டுல சாவு விழுந்தாலும் நான் அவனுக்கு போன் பண்ணி சொல்லணும்னு சொல்லுவான். நானும் சொல்லுவேன். கிளம்பி வருவான். அட்ரெஸ வாங்கிட்டு ஐநூறு ருபாய் குடுத்துட்டு போவான். அப்புறம் அந்த பொணம் வரும் போது அந்த குடும்பத்தோட வருவான். எல்லாம் முடிஞ்ச பின்னால கூட்டத்தோட கூட்டமா போயிடுவான். அவ்ளோதான் தெரியும்...." என்றபடியே அடுத்த ரவுண்டை அப்படியே வாய்க்குள் விட்டார் வெட்டியான்.

"தலையே சுத்துதுடி" என்ற தோழி...யின் உடல் நடுங்கத் துவங்கியிருந்தது. ஏனோ மின்விசிறி வேகமாய் சுழலுவது போல தோன்றியது அவளுக்கு.

அவள் கைகளை பிடித்துபடியே  "பயப்படாதடி... அடுத்து கேளு..." என்று கண்ணடித்த ரங்கநாயகி தொடர்ந்தாள்.

அடுத்தடுத்து அதே மாதிரி.... ஒவ்வொரு டெத் வீட்டுக்கும் போய் அந்த செத்த ஆள் மாதிரியே பிஹேவ் பண்றான்னு புரிஞ்சுது. ஆனா ஏன் அப்டி பண்றான்னுதான் புரியல.  

"ஒருவேளை பேய் புடிச்சிருக்குமோ....." தோழி கண்கள் உருட்டிக் கேட்டாள்

அயே.... அதெல்லாம் ஒண்ணுமில்ல. இது ஒரு வகை மெண்டல் டிஸ் ஆர்டெர்ன்னு நினைக்கறேன். செத்து போனவங்களுக்கும் அவனுக்கும் எந்த தொடர்பு இல்லடி. நான் கவனிச்ச வரைக்கும் செத்தவங்க யாரு என்ன எப்படி செத்தாங்க....அவுங்க எப்டிப்பட்டவங்க எல்லாமே செத்த வீட்டுல மற்றவங்க பேசறதை வைச்சுதான் அவன் கெஸ் பண்றான். அதுக்கப்புறம்தான் மேக்கப் போடறான். பேய் மாதிரி வெள்ளை ட்ரெஸ் போடறான். அப்புறம் செத்தவங்க மாதிரியே நடந்து பாக்கறான். அவுங்களுக்கு பிடிச்சு செஞ்சதா மத்தவங்க சொன்னதை செஞ்சு பாக்கறான்.. அப்புறம் அவுங்க வீட்டை சுத்தி சுத்தி வர்றான். வாசல்ல உக்காந்துக்கறான். அழறான். சிரிக்கறான். சில நேரத்துல வாய்ப்பு அமைஞ்சா வீட்டுக்குள்ளேயே போய்டறான். ஒருத்தர் செத்தா.....செத்த வீட்டுக்காரங்க, ஏன் அந்த வீதியே பயந்து நடுங்கி மூச்சு காட்டாம படுத்து கிடக்குதுங்க. அது அவனுக்கு வசதியா போயிடுது.

"இதெல்லாம் நிஜமா, இல்ல கதை விடறியா...." என்று வார்த்தைகளை மெல்ல மெல்ல பற்களுக்கு இடையே பயப்பட வைத்த தோழியை கண்கள் உருட்டி ஈ என பற்கள் காட்டி பயங்கரமாக சிரித்தாள் ரங்கநாயகி.

"வேண்டாம் நாயகி... பயமா இருக்கு" என்று கிட்டத்தட்ட அழும் நிலைதான் தோழிக்கு. இரவு, திறந்திருந்த அவர்களின் அறை ஜன்னலில் சதுரமாய் வெளிறிக் கொண்டிருந்தது.

விடியக் காத்திருந்தது கதை.

நேரம் மறந்திருந்த ரங்கநாயகிக்கு ஏனோ அவனின் நினைவாகவே இருந்தது. வாழ்வுக்கு காத்திருக்கும் வயதில் யாரோ ஒருவரின் மரணத்திற்கு காத்திருக்க தொடங்கினாள். உள்ளுக்குள் உருவமில்லாமல் அவன் சுழலத் துவங்கி இருந்தான். காரணம் தன்னையே கேட்டாள். ஜஸ்ட் கியூரியாசிட்டி. அவளோதான் என்பதில் சிறந்த உடன்படிக்கை  வரவில்லை. 

"அவன் ஏன் அப்டி பண்றான்....? தெரிஞ்சுக்கணும்.!"

ஊரை சுற்றி நிகழும் மரண வீட்டுக்கு போய் நின்றதுதான் மிச்சம். அவனைக் காணவில்லை. 

"ஒரு வேளை பேயாத்தான் இருப்பானோ.....?!"

மனதுக்குள் ஆழமாய் ஒரு கல் விழுந்து குபுக்கென்று மூழ்கியது. இல்லை. இந்த நவீன காலத்தில் கண்டிப்பாக பேய்களுக்கு சாத்தியமில்லை. அவன் மனநலம் பிறழ்ந்த மனிதன். அவனுக்கும் இந்த மரணத்துக்கும் ஏதோ தேடல் இருக்கிறது. அவன் மரணத்தைப் பற்றி ஆராய்கிறான். அவன்.. மரணத்துக்கு பின் என்ன இருக்கிறது என்று தேடுகிறான். அவன் ஒரு நிம்மதியற்ற மனிதன். அவன் காலத்தில் எல்லாமே கேள்விகளால் நிறைந்து வழிகிறது.

அவள் தேடிக் கலைத்தாள். சுடுகாட்டுக்கு சென்று வெட்டியானிடம் பேசினாள். அவன் பேச மறுத்தான். கண்ணீர் வழிய நின்றாள். 

"சரி சொல்றேன்......இப்போல்லாம் அவன் வர்றது இல்ல. வந்தா சொல்றேன்" என்றவன் அவள் திரும்பி நடக்கத் துவங்குகையில்...."இந்த பொண்ணே... கவனமா இரு... நீ அவனை காதலிக்க ஆரம்பிச்சிட்ட" என்றான் கல்லறையை படக்கென்று திறந்தவன் போல.

கல்லறை திறந்து கிளியோபாத்ரா ஆகி விட்டது போல இருந்தது நாயகிக்கு. திரும்பாமலே சிரித்து சென்றாள். அவள் பாதை எங்கும் இனித்து நகர்ந்தன எறும்புகள்.

எங்கிருந்து ஆரம்பித்திருக்கும் இப்படி ஒரு பழக்கம். அவன் ஆன்மாவின் பின்னால் பயணிப்பவனாக இருப்பான். அவனின் நடுங்கும் தேகத்தில் மரணத்தின் விடையை சுமந்து கொண்டே திரிபவனாக இருப்பான். மரணித்த ஆன்மாவின் தேடல்....ஆசை......பயம்...அன்பு.....காதல்.....கோபம்.....சாபம் என்று எல்லாமுமாக அவன் திரிந்து கொண்டிருக்கிறான். அவன் இன்னொருவராக மாறுவதில் தன் மரணத்துக்கு பின்னால் இருக்கும் முகமூடியை கிழிக்க முயலுகிறான். இந்த மனித உறவுகளை அவன் தன் கிறுக்குத்தன செயல்களால் எடை போடுகிறான். அவன் ஒரு தீர்க்கத்தின் வழி நின்று தன்னையே பலி கொடுக்கிறான். அவன் யாரோவாகி அந்த யாரோவுக்கு அன்பை பொழிகிறான். அத்தனை வாழ்வையும் ஒரு சிறு மரணம் கொண்டு செல்வதில் உடன்பாடு அற்றவனாக இருந்திருப்பான்.

அவன் தேடுகிறான். நின்று நிதானமாக ஒரு தர்க்கத்தின் குரல்வளை நெரித்து ஆன்மாவின் பாதங்கள் தொடர்கிறான். மரணித்த உடல் சுமந்து உள்ளம் சுமந்து உயிர் தேடி அலைகிறான். ஒரு நாள் ஒரே ஒரு நாள் நாமும் அவனை போல இருந்தால் என்ன என்று தோன்றிய எண்ணத்தில் அவள் அவனையே அவளுள் கண்டாள். கடவுளைப் போல பேய் சுமந்து திரிந்தவன் திடும்மென காணாமல் போனதை உள் வாங்க முடியாத புள்ளியில் தன்னையே அவனை போல மாற்றிக் கொண்டு ஆவி உடை அணிந்து தன் வீட்டுக்குள் நடை பழகினாள். அவனைப் போலவே கனத்துப் பார்த்தாள்.

பனம் பழம் உட்கார காகம் விழும் மாற்றுக் கனவுக்குள் நிமிண்டெழும் நித்திய ஜீவனின் காலை சரிவுகளை போல வெட்டியான் அழைத்திருந்தான்.

"அவன்கிட்ட இருந்து ஒரு தகவலும் இல்ல. ஆனா அவன் ஏரியால ஒரு சாவு விழுந்திருக்கு. அவன் வந்தாலும் வருவான். போய் புடிச்சுக்கோ..." 

இரவெல்லாம் பிணமாகி பார்த்தாள். கனமாகி புரண்டாள். வனமாகி அகன்றாள்.

எல்லாம் முடிய காத்திருந்தாள். இரவு துருவும் வெளிக் கருப்புகள் சிராய் சிராய்களாக சில்லிட... அந்த வீட்டுக்கு முன்னால் செத்த உயிரைப் போல நின்றாள். அன்று மாலை செத்த வீட்டு வாசலில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று செத்த உயிரைப் பற்றிய செய்திகளை உள் வாங்கிக் கொண்டாள். அங்கும் இங்கும் தேட எங்குமே அவன் காணக் கிடைக்கவில்லை. ஒருவேளை அவனை பின் தொடர்வது கண்டு சட்டென தன்னை இந்த கண்ணியில் இருந்து விலக்கிக் கொண்டானோ என்னவோ...? காணவில்லை. ஒரு வேளை இரவு இந்த வீட்டுக்கு வந்தாலும் வருவான் என்ற நம்பிக்கையை போர்த்திக் கொண்டு அந்த வீட்டின் முன் நின்றாள். ஒரு கிழவி கத்தி அழுத்த வார்த்தையின்படி கைகளை கட்டிக் கொண்டு அந்த வாசலில் ஒரு ஜென் துறவியைப் போல நின்று பார்த்தாள்.

மெல்ல திறந்திருந்த வீட்டுக்குள் முயலைப் போல பதுங்கி பதுங்கி சென்றாள். திக் என்று நின்றது இதயம். ஊரெல்லாம் தேடப்பட்டவன் கிடைத்திருந்தான். அவளை ஆக்கிரமித்திருந்த அவன்...அந்த வீட்டுக்குள் கைகளை பறவையின் சிறகைப் போல அசைத்தசைத்து மெல்ல மெல்ல அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். ஓடிச்சென்று தழுவிக் கொள்ளத் தோன்றியது. தான் செய்வதை போல அவனும் செய்து கொண்டிருந்தது அத்தனை சுகமாய் இருந்தது அவளுக்கு. வெளியே சில்லிட துவங்கிய சிறுமழையை அப்படியே விட்டு விடுவதுதான் நலம். 

"பறவை மாதிரி காத்துல கைய விரிச்சு நடப்பியே" என்று ஒழுகிய ஒப்பாரிக்கு நிகழ்ந்ததுதான் அவனின் அவளின் செயல்கள். அவள் புரிந்து கொண்டாள். எங்கு சென்றாய். ஆகச்சிறந்த ஆன்மாவின் அற்புதம் சுமந்த உன்னை எந்த நட்சத்திரம் பூமிக்கு அனுப்பியது. ஆரவாரம் சுமந்த அந்த பெண் மனதுக்குள் பூத்துக் கொண்டிருந்த புதிய நிகழ்வின் மூச்சுக்குள் வியர்வை சொட்டியது.

அவன் திரும்பட்டும். அவனைப் போலவே பாவனையில் இருக்கும் தன்னை பார்க்கட்டும். அதிர்ச்சியில் மிரண்டு நிற்கட்டும். தன் கிறுக்குத்தனம் இவளுக்கு எப்படி தெரியும் என்று வியக்கட்டும்.  ஓடிச் சென்று "வா காதலிக்கலாம்" என்று அவன் காதோரம் கேட்க வேண்டும். ஏன் இந்த நாடகம் என்று....காது கடித்து காதலை எச்சிலாக்க வேண்டும்.

மெல்ல நாணம் பூக்க நா கடித்தேன். அது நான் கடித்த தேன் என்றாள் அவளுள் பூத்த மலை உச்சி பூவின் வாசம் பிரித்து.

அவன் திரும்பினான். ஒரு காற்றைப் போல திரும்பினான். அத்தனை இலகுவாக அவனின் திரும்புதல் இருந்தது. அவள் தேகமற்று சில நொடியில் நடுங்கத் துவங்கினாள்.

அத்தனை நேரம் அவன் பின்னால் மறைந்திருந்த அவனுடைய புகைப்படம் அவளுக்கு தெரிய ஆரம்பித்தது. 

அதில் மாலையிட்டு இருந்தது.

திக்கென புரிந்தது........................ அது.................. அவன் வீடு......!

- கவிஜி 

Pin It