பாரதியின் சிறுகதை- தற்காலத் தமிழில்

(ஆர்எஸ்எஸ் கருத்தியலின் ஆதிக்கம் வளரும் இன்றைய சூழலில், நூறு + ஆண்டுகளுக்கு முந்தைய சமூகத்தின் காதல் - பாலியல் வாழ்க்கை பற்றி பாரதி எழுதிய கதையைப் படிப்பது நல்லது.)

'காந்தாமணி... உன் அப்பாவின் பெயர் என்ன?' பாட்டி கேட்டாள். அது ஒரு கிணற்றடி. காலை நேரம். இளைய சூரியன் வானத்தை அழகாக்கிக் கொண்டிருந்தான். அந்தக் கிணற்றில் தானே நீர் இறைத்து ஒரு கிழவர் குளித்துக்கொண்டிருந்தார். அவர் பெயர் பார்த்தசாரதி அய்யங்கார். போலீஸ் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டவர். 'ராம நாம'த்தை ஜெபித்து காலத்தைப் போக்கிக்கொண்டிருந்த கிழவர் அந்தப் பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அது வேப்பந்தோப்பில் அமைந்த கிணறு. செழித்திருந்த அந்தத் தோப்பில் மூலிகைகள் நிறைய கிடைக்கும் என்பதால் நான் அங்கே வந்திருந்தேன்.

'உன் அப்பாவின் பெயர் என்ன?' என்ற பாட்டியின் கேள்விக்கு 'எங்க அப்பாவின் பெயர் பார்த்தசாரதி அய்யங்கார்'' என்று காந்தாமணி பதில் சொன்னாள். அவளின் குரல் குழலின் இசையைப் போன்றிருந்தது.

கிழவி போலீஸ் பார்த்தசாரதி அய்யங்காரை முறைத்துப் பார்த்தாள். பார்த்தசாரதி அய்யங்காருக்கு கைகால் வெலவெலத்துவிட்டது. அய்யங்காருக்கு உடம்பு தலையெல்லாம் நரைத்த முடி. ஆனால், உடம்பு 18 வயது பையனின் உடம்பு போல உருண்டு திரண்டிருந்தது. ஆண் புலியை வேட்டையாடும் ஆள் என்றும், பாம்புகளைப் பிடிக்கும் ஆள் என்றும் தன்னைப் பற்றி பார்த்தசாரதி அய்யங்கார் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

இப்படிப்பட்ட சூராதி சூரர் ஒரு பாட்டியின் பார்வைக்கு பயந்து நடுங்குவது ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பாட்டி பார்த்தசாரதி அய்யங்காரைச் சுட்டிக்காட்டி, 'இவரா உன் தந்தை?' என்று கேட்டாள்.

காந்தாமணி, 'அடக் கடவுளே' என்பதுபோல, வானத்தை நோக்கி கையை உயர்த்தி, நக்கல் சிரிப்புடன், 'இந்த ஆள் கருப்பாக, ஆசாரி போலிருக்கிறார். எங்கப்பா செக்கச் செவேலென்று, எலுமிச்சை நிறத்தில் வாலிபராக இருப்பார்'' என்று சொன்னாள்.

அப்போது போலீஸ் பார்த்தசாரதி, காந்தாமணியைப் பார்த்து, ''உங்கப்பாவிற்கு எந்த ஊரில் வேலை?' என்று கேட்டார்.

''எங்கப்பா சங்கரநாதன் கோவிலில் சப்- இன்ஸ்பெக்டர்'' என்று சொன்னாள். சப் இன்ஸ்பெக்டர் என்ற வார்த்தை பார்த்தசாரதி அய்யங்காரின் காதில், பாம்பின் காதில் விழுந்த இடிச் சத்தம் போல விழுந்து. அப்படியே பம்மிவிட்டார்.

அதன்பின் பாட்டியும் காந்தாமணியும் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.

'நீங்கள் அக்கா, தங்கை எத்தனை பேர்? ” என்று பாட்டி கேட்டாள்.

'எங்கக்காவுக்குப் பதினெட்டு வயது. போன மாசந்தான் ஸ்ரீவைகுண்டத்தில் சாந்தி முகூர்த்தம் நடந்தது; எனக்கு அடுத்த மாசம் சாந்தி முகூர்த்தம். என் தங்கை ஒருத்தி சாந்தி முகூர்த்தத்திற்குக் காத்திருக்கிறாள். நாங்கள் மூன்று பேரும் பெண்கள். எங்கப்பாவுக்கு ஆண் பிள்ளை இல்லை என்ற தீராத மனக் கவலை. என்ன செய்யலாம்? பெருமாள் கருணை கிடைத்தால் மட்டும் அவமானத்தில் இருந்து தப்பிக்க முடியும்.. வேறு வழியிருக்கா? அதற்காக அவர் சோதிடம் பார்த்தார். எங்கம்மாவுக்கு இனிமேல் ஆண் குழந்தை பிறக்காதென்று பாழாய் போன ஒரு சோதிடன் சொல்லிவிட்டான். அதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு எங்க அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறார். பெண்ணின் ஊர் மன்னார்கோவில். முகூர்த்தமெல்லாம் முடிவு செய்தாயிற்று" என்று முழு கதையையும் சொன்னாள் காந்தாமணி.

'உங்க அப்பாவுக்குப் பெண் கொடுக்கப்போறவரின் பெயரென்ன?' என்று அந்தப் பாட்டி கேட்டாள். 'அவர் பெயர் கோவிந்த ராஜய்யங்காராம். அந்த ஊரிலே அவர் பெரிய மிராசாம். அவருக்கு ஒரே பெண்தானம். கால் முதல் வைரங்களைப் போட்டு அனுப்புவாராம். தேவலோகத்து ரம்பை போல அழகாம் அந்தப் பெண்' என்று பதில் சொன்னாள் காந்தாமணி.

"அப்படிப்பட்ட அழகான பணக்கார இடத்துப் பெண்ணை இளையாளாகக் கொடுக்கக் காரணமென்ன?’ என்று பாட்டி கேட்டாள். அந்தப் பெண் பெரியவளாகி மூன்று வருஷங்களாய்விட்டன. அதன் தாயும் இறந்துபோய்விட்டாள். அதன் நடையுடை பாவனைகளெல்லாம் ஐரோப்பியர் மாதிரி. ஆதலால் இதுவரை அவளைக் கல்யாணம் செய்ய யாரும் வரவில்லை. எங்கப்பா அந்த ருதுவான வார்த்தையெல்லாம் வீண் பொய்யென்று சொல்லித் தாம் கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதப்பட்டுவிட்டார். மேலும் தனக்கு ருதுவான பெண் கிடைப்பது பற்றி இவருக்கு மனதுக்குள்ளே சந்தோஷந்தான்.. இன்றைக்குக் காலேயிலே கூட அவரும் எங்கம்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் இந்த ஊர்ச் சத்திரத்திலேதான் ஒரு வாரமாக தங்கியிருக்கிறோம். எங்கப்பாவும், அம்மாவும் பேசிக் கொண்டிருந்தபோது அம்மா சொன்னாள்: "மன்னார்குடிப் பெண் வயதுக்கு வந்து மூன்று வருஷமாய் விட்டதாக இந்த ஊரிலே கூடப் பலமான பேச்சு அடிபடுகிறது'' என்றாள். அப்பா அதற்கு : 'நெவர்மைன்ட். அந்தக் குட்டி பெரியவளானது பற்றி நமக்கு இரட்டை சந்தோஷம். நமக்குப் பணம் கிடைக்கும். ஆண் பிள்ளை பிறக்கும். குட்டி ஏராளமான அழகு. இந்த மாதிரி பெண் கிடைக்கும்போது நமக்கு சாத்திரம் முக்கியமா?'' என்றார்..... ' என்று காந்தாமணி சொன்னாள்.

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிற சத்தம் என் காதில் விழுந்தது. என்னுடைய பார்வை முழுவதும் போலீஸ் பார்த்தசாரதி ஐயங்கார் மேல் இருந்த்து. அவரைப் பார்த்துக் கொண்டிருக்கையிலே என் மனதில் திடீரென்று ஒரு யோசனை பிறந்தது.

அங்கிருந்தவர்களில் எனக்குக் காந்தாமணியின் முகந்தான் புதிது. பார்த்தசாரதி ஐயங்காரையும் தெரியும்; அந்தக் கிழவியையுந் தெரியும். அந்தக் கிழவி அய்யங்கார்ச்சியில்லை; அந்தக் கிராம முன்சீபின் தங்கை. அவளுக்கும் போலீஸ் பார்த்தசாரதி அய்யங்காருக்கும் பால்யத்தில் பலமான காதல் நடை பெற்று வந்ததென்றும், அதனால் போலீஸ் பார்த்தசாரதி அய்யங்காருக்கும் மேற்படி கிராம முன்சீபுக்கும் பல முறை மோதல் நடந்தது என்றும், அப்படியான சண்டை ஒன்றில்தான் பார்த்தசாரதி அய்யங்காருக்கு ஒரு கண்ணில் பலமான காயம்பட்டு அது பொட்டையாய் விட்டதென்றும் நான் கேள்விப் பட்டதுண்டு.

இந்த செய்திகளை மனதில் வைத்துக்கொண்டு, அய்யங்காரின் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்து எனக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. அந்தக் கிழவியின் மீதான அய்யங்காரின் காதல் இன்னும் மாறவில்லை. தனது காதலைக் கிழவியிடம் காட்ட அய்யங்கார் முயற்சிக்கிறார்.

காந்தாமணி போன்ற இளம் பெண்ணின் அருகே அந்தக் கிழவி நின்றபோதும், அய்யங்காருக்கு கிழவியே அழகியாகத் தோன்றுகிறாள். அவரின் காதல் அனலாய் பொங்கிக்கொண்டிருந்தது.

ஆனால், காந்தாமணியைப் பார்க்காமல் கிழவியை மட்டும் பார்த்து காதல் கணை வீச அய்யங்கார் சிரமப்பட்டு நடிக்கிறார் என்றும் எனக்குத் தோன்றியது. பெண்களைப் படைத்த பிரம்மனே காந்தாமணியைப் பார்க்கக் கண் கூசுவான். அவளைப் பார்க்காமல் கிழவியைப் பார்ப்பதாக நடித்த அய்யங்கார் மிகவும் சிரமப்படுகிறார் என்றும் எனக்குத் தோன்றியது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மறைவில் இருந்து நான் கிழவனைப் பார்த்துக் கொண்டிருந்தது போலவே காந்தாமணியும் கிழவியும் கிழ அய்யங்காரைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பெண்களுக்குப் பாம்பை விட கூர்மையான காது. பருந்தைக் காட்டிலும் தெளிவான பார்வை. எனவே, அய்யங்காரின் மனது என்ன யோசிக்கிறது என்று இரண்டு பெண்களும் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்திருப்பார்கள்.

இந்த சூழலில் 20 வயதுள்ள ஒரு மலையாளிப் பையன் அங்கு வந்தான். அவன் பெருங்காய வியாபாரம் செய்பவன். அவனை நான் பலமுறை கிராமத்தில் பார்த்திருக்கிறேன். அவன் பார்வைக்கு மன்மதன் போலிருந்தான். கரிய விழிகள். நீண்ட மூக்கு. சுருள் சுருளான முடி. படர்ந்த உச்சிக் குடுமி. அவனைக் கண்ட எனக்கு அவன் மீது மோகம் உண்டாயிற்று என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவன் கிணற்றுக்கு அருகே நின்று தாகத்துக்குத் தண்ணீர் வேண்டும் என்று கிழவியிடம் கேட்டான்.

அவனைப் பார்த்தவுடன் காந்தாமணி நடுங்கிப் போனாள். அந்த மலையாளி அவனைப் பார்த்தான். அவன் பார்வை பட்ட உடன், காந்தாமணி இடுப்பில் இருந்த பானை கீழே விழுந்து நசுங்கியது.

காந்தாமணி அதைக் குனிந்தெடுத்து 'ஐயோ, நான் என்ன செய்வேனம்மா ? குடம் ஆரங்குல ஆழம் அமுங்கிப் போய்விட்டதே ? எங்கம்மா எனக்குத் தூக்குத் தண்டனை விதிப்பாளே? ' என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள். மார்புத் துணியை நெகிழவிட்டாள். தூரத்தில் இருந்த பொதியை மலைத் தொடரை நோக்கினாள்.

இந்தக் காந்தாமணி மேற்படி மலையாளிப் பையனிடம் அளவுக்கு மீறிய காதல் கொண்டவள் என்பதை நான் உணர முடிந்தது. பிறகு ஒரு சமயம் நான் விசாரித்தபோது, காந்தாமணியின் அப்பாவாகிய பார்த்தசாரதி மலையாளப் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த மலையாளி சிறுவனாகவும் காந்தாமணி சிறுமியாகவும் இருந்த நாளிலிருந்தே அவர்களுக்கு நேசம் இருந்திருக்கிறது. காதல் வளர்ந்து முற்றிப் போய்விட்டது.

ஆனால், சப் இன்ஸ்பெக்டர் வேறொரு கணக்கு வைத்திருந்தார். ஓய்வூதியத்திற்கான துணை கலெக்டராகவும் கந்தலாபுரம் ஜமீனின் திவானாவும் இருந்து 55 வயதுள்ள கோழம்பாடு ஸ்ரீநிவாலாசாரியார் என்பவருக்கு விவாகம் செய்து கொடுத்து விட்டார். அந்த ஆளுடன் வாழ்வதற்கு காந்தாமணிக்குச் சம்மதமில்லை. இந்த செய்தியை எல்லாம் நான் பின்னர் விசாரித்து தெரிந்துகொண்டேன்.

இப்போது கதைக்கு வருவோம். 'குடத்தை உடைத்தேனென்று அம்மா திட்டுவாளே' என்று அழுதபடியே கிணற்றை விட்டுப் புறப்பட்ட காந்தாமணி தன் தாய் தந்தையர் இருந்த சத்திரத்துக்குப் போகவில்லை. அந்த ஊருக்கு மேற்கேயிருந்த நதிக்குப் போனாள். அதன் பின் அந்த மலையாளியும் அங்கே போய்ச் சேர்ந்தான்.

இதற்குள் எனக்கு சந்தியாவந்தனம் செய்ய வேண்டிய நேரம் கடந்துவிட்டபடியால், நான் மறைவிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.

அன்று மாலை என் வீட்டுக்கு மேற்படிக் கிராமத்து வாத்தியார் சுந்தர சாஸ்திரி வந்தார். வந்தவர் திடீரென்று, ''கேட்டீர்களோ விஷயத்தை வெகு ஆச்சரியம்! வெகு ஆச்சரியம் !'' என்று கூக்குரலிட்டார். '

'என்ன ஒய் ஆச்சரியம்? கடந்ததைச் சொல்லிவிட்டுப் பிறகு கூக்குரல் போட்டால் எனக்குக் கொஞ்சம் வசதியாக இருக்கும்' என்றேன்.

'சத்திரத்திலே சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி அய்யங்கார் சங்கரநாதன் கோவிலிலிருந்து வந்து இறங்கியிருக்கிருரோ, இல்லையோ? அவர் ஒரு பெண்ணையும் கூட்டிக்கொண்டு வந்தார். அவருடைய மகள், அந்தக் குட்டி வெகு அழகாம். திலோத்தமை, ரம்பையையெல்லாம் இவளுடைய காலிலே கட்டி அடிக்கவேண்டுமாம். அதற்குப் பெயர் காந்தா மணியாம். சொல்லுகிறபோதே நாக்கில் ஐலம் சொட்டுகிறது. காந்தாமணி... காந்தாமணி.... என்ன நேர்த்தியான காமம். ரஸம் ஒழுகுகிறது' என்று சுந்தர சாஸ்திரி காந்தாமணியை வர்ணித்துக் கொண்டு போவதை நான் இடையே மறித்து : “மேலே நடந்த கதையைச் சொல்லும் ' என்றேன்.

"அந்தக் காந்தாமணியைக் காணவில்லையென்று விடியற் காலமெல்லாம் தேடிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் அம்பாசமுத்திரத்திலிருந்து ஒரு தந்தி கிடைத்ததாம். இன்று பகல் 8 மணிக்கு மேற்படி காந்தாமணியும், ஒரு மலையாளப் பையனும் கிறிஸ்தவக் கோவிலில் விவாகம் செய்து கொண்டார்களென்று அந்தத் தந்தி சொல்லுகிறதாம்” என்றார்.

சில தினங்களுக்கப்பால் மற்றொரு ஆச்சரியமான செய்தி வந்தது.

கிராமத்து மாஜிப் போலீஸ் சேவகர் நரைத்த தலைப் பார்த்தசாரதி அய்யங்காரும், அன்று கிணற்றங்கரையில் அவருடைய காதற் பார்வைக்கிலக்காயிருந்த கிழவியும் ரங்கூனுக்கு ஒடிப் போய் விட்டார்கள்.

அதன்பின், அந்தக் கிழவி தலையில் முடி வளர்த்துக்கொண்டாள் என்றும், பார்த்தசாரதி அய்யங்காரும் அவளும் புருஷனும் பெண்சாதியுமாக வாழ்கிறார்களென்றும் அய்யங்கார் அங்கொரு நாட்டுக்கோட்டைச் செட்டியிடம் வேலை பார்த்து, தக்க சம்பளம் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார் என்றும் ரங்கூனிலிருந்து செய்தி வந்தது.

====================================================

(பாரதியார் எழுதிய காந்தாமணி என்ற கதையை தற்காலத் தமிழர்களுக்குப் புரியும் வகையில் மாற்றி எழுதியிருக்கிறேன். முடிந்தவரை பாரதியின் வார்த்தைகளை வைத்துக்கொண்டு, தற்கால நிலைமைக்கு ஏற்ப சுருக்கவும் செய்திருக்கிறேன். எனது தவறுகள் பற்றிய உங்கள் கருத்தை வெளிப்படையாகத் தெரிவியுங்கள். மகிழ்வேன்.)

- சி.மதிவாணன்

Pin It