ஊர்க்குருவிக் குலமே! - நீங்கள்
உச்சிவானிலே உலாவரும் போதும்
கழுகுகள் ஆவதில்லை - உங்களது
கர்வத்தில் உண்மையில்லை!

வான்கோழிக் கும்பல்களே! - நீங்கள்
வானம் வரைக்கும் சிறகு விரிப்பினும்
வண்ண மயில்களில்லை - உங்களின்
வரிசை நடனமில்லை!

மின்மினிப் பூச்சிகளே! - நீங்கள்
மிக்கப் பளபளப்போடு பறக்கினும்
மெழுகு வர்த்தியில்லை - தியாகம் உங்கள்
மேனிக்குச் சொந்தமில்லை!

காக்கைகள் கூட்டங்களே! - நீங்கள்
காடு முழுதும் திரண்டு கரையினும்
காதுக்(கு) இனிமையில்லை - குயிலிசை
கற்றவர் நீங்களில்லை!

நாணல் குடும்பங்களே! - நீங்கள்
நாற்புறமும் அசைந்தாடிய போதிலும்
நாற்றுகள் ஆவதில்லை - நெல்லின் மணி
நற்கதிர் நீங்களில்லை!

எருக்குத் தோட்டங்களே! - உம்
இலைவழிப் பல்துளிப் பால்சுரந்(து) ஓடினும்
ஏந்த விருப்பமில்லை - விஷம் உம்பால்
என்பதில் சர்ச்சையில்லை!

காகிதத்துப் பூக்களே! - நீங்கள்
கண்ணைப் பறிக்கும் வனப்பில் இருப்பினும்
காதல் விளைவதில்லை - தேனை உங்கள்
காம்பு சுமப்பதில்லை!

கண்மாய்த் தவளைகளே! - நீங்கள்
காற்றைத் ‘தம்’பிடித்துக் காட்டினும் நாங்கள்
கலங்கிடப் போவதில்லை - நீங்கள் ஒன்றும்
காங்கேயம் காளையில்லை!

வெற்றுப் பட்டாசுகளே! - ஒளி
வெள்ளத்தினை நீங்கள் வாரி இறைப்பினும்
வெந்தழல் நீங்களில்லை - நான்கைந்து
வினாடிக்குள் நீங்கள் இல்லை!

சாதிச் சழக்கர்களே! - உங்கள்
சாகசங்கள் கோடி தாண்டிய போதும்
சரித்திரம் உங்கட்(கு) இல்லை! - அந்தோ! உம்மில்
சற்றும் ‘மனிதம்’ இல்லை!

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It