Ladyஉனக்கும் எனக்குமிடையே விதைத்தெழுந்த இப்போரில்
இன்பவாகை சூடிஇல்லத்தில் வெற்றிவலம் வருவதும்
நிமிர்வதும் நீயா, இல்லை நானா? கணிக்கவே இயலாச்
சமருக்குள் ளெனைனுழைத்துக் காதலுதய வேளையில் நீ

"அன்பிலே மிஞ்சியவள் நானே" யென்றுன் முதலம்பை
ஏவித்தான் தொடங்கி நின்றாய் என்னுடன் மல்லுக்கு!
இளைத்தவன் நானில்லை! இறுக்கியுனை அணைத்தேன்- நீயுன்
முத்தத்தின் முத்திரையால் முந்திவிட்டாய் அன்று!

காதலாய் மடலெழுதி மனதைக் களிப்பூட்டிக் காட்டினேன்.
கட்டென்ற தடைதாண்டிக் களம் வந்து வென்றாய் நீ!

வளையலென்றும் வகைவகையாய்ச் சேலையென்றும் உனக்கு
வாங்கித்தந்து விளம்பினேன் வானெட்ட என்னன்பை- எத்துணியும்
திரையிடாத் தேவதையே! உன் கட்டான தேகழகைக்
கண்ணுதலாய் நீகாட்டத் தோற்றேனே நானன்றும்!

உணவங்காடிகளில் அறுஞ்சுவையை மிஞ்சும் பலபண்டச்
சோறுகளில் படைத்தேன் என் அன்பே உயர்வெனெ- நீ
அமிழ்தூறுமுன் வளமுலையின் இளமை மதுச்சுவையில்
மயக்கியெனை மீண்டும் மீண்டும் மூழ்கடித்தாய்!

தொல்லையோ? எல்லைகொள்ளாத் துன்பமோ? துயர்துடைத்துத்
தெம்பளிக்கும் துணையாய் உடனிருக்கப் பறந்துவரும் நான்
உன் கண்ணில் நீர் கண்டால் உதிரம் கொட்டும் அன்பென்றேன்- நீயுன்
கருவறைக்கும்நானே தன்னாட்சிக்கோலோச்ச ஆயுட்கால விருதளித்தாய்

உழைத்தும் பாரினில் உயிர்கொடுத்தும் உனைக்காக்கும்
நானே நாளெல்லாம் உயர்வென்றேன் அன்பிலே!
"உனைப்போலவே உள்ளான்" என்றுலகோர் வியந்திடவே
என்னுருவிலோர் கலைபடைத்து ஏவிநீவிடுத்த அக்கணைக்கு- எக்கணையும்
ஈடாமோ? என்னன்பு அடிபணிந்துன் வெற்றிக்குத் திலகமிடும்!!!!! 

அ.முத்தன், நியூயார்க் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It