சௌதி வளநாட்டுச் சாலை - பல
சங்கடங்கள் தரும் சோலை;
பீதி நடமாடும் பாலை - நமைப்
பிழிந்தெடுத்து விடும் ஆலை!

தினமும் புற்றீசல் போலே - இவண்
திரளும் வாகனங்கள் கோடி;
கணமும் நாமறியும் முன்னே - உயிர்
கவர்ந்த சம்பவங்கள் கோடி

கூட்ட நெரிசலொடு முந்தும் - நகர்க்
கோடி வரையில் மகிழுந்தும்;
ஓட்டும் திறமைகள் இருந்தும் - வண்டி
ஒதுக்க முடியாது எங்கும்!

சைக்கிள் பலநூறு திரியும் - அதில்
சௌதிப் ‘பொடி’கள் வலம் புரியும்;
பைக்குள் இருக்கும் பொருள் பறிக்கும் - அதைப்
பார்த்தபடி கூட்டம் வெறிக்கும்!

காதில் அலைபேசி வைத்துச் - சிலர்
கதையளந்தபடி செல்வார்;
ஓடி வந்து சில உள்ளூர் - நபர்
உரசியே திருடிக் கொள்வார்!

மஞ்சள் டாக்சிகளில் பயணம் - இங்கு
மடியில் கனமிருப்பின், கவனம்;
அஞ்ச வேண்டுவது உயிரை - இது
அரபுச் சாலைகளின் சரிதை!

தொலைவுப் பயணத்தின் போது - நமைத்
துரத்தி வரும் தொல்லை நூறு;
நிலைகுலைந்த மணற் காடு - அதில்
நெடிய சாலை ஒரு கோடு!

வேகத் தடையுள்ள போதும் - உடல்
‘வேக’த் தடையற்ற பலிகள்…
சாகத் தயங்காத மடையோர் - தினம்
சாலையோரத்துப் பழிகள்!

சாலை விதிமீறல் செய்தால் - இங்கு
சாட்டையடிகள் தருகின்றார்;
ஏழையெனினும் பிடிபட்டால் - உடன்
இழுத்துச் சிறையில் இடுகின்றார்!

சௌதிக்(கு) எவரேனும் வந்தால் - அதன்
சாலைகளை முதலில் அறிவீர்;
மீதி அறிவதற்கு முன்னால் - உயிர்
மிஞ்சுமெனில், நீவிர் பெரியீர்!...

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It