கவிதைகள் உணர்த்தியதா
தெரியாது!
மீண்டும் மீண்டும்
வலிகள் உணர்த்துகின்றன
உன் மீதான
என் அன்பின் ஆழத்தை!

நீ விட்டு சென்ற
முட்களை நினைவுச்சின்னமென
சேகரிக்கின்றேன்
கவனிக்கப்படாமல்
என்னை போல் வீழ்கிறது
விரல் நுனி ரத்தம்
அதே பாதையில்......

உன் கவிதைக்கு
மற்றுமொரு
'அசைச்சொல்'லென
அர்த்தமற்று
தொக்கிநிற்க மறுக்கிறது
என் சுயம்...

கண்ணீரோடும் சப்தத்தோடும்
காலத்தின்(காலமின்மையின்!) கைகளில்
இழுத்து செல்லப்படும்
ஓர் குழந்தையின்
கைவிரல் நீட்டிய
எதிர் திசையில்
அமைதியாய்
சிரிக்கிறது
ஒரு அழகான பொம்மை..

இலக்குமணராசா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It