campaignவெற்றியின் கீதத்தை
இசைத்துப் போகிறான் அவன்
குருதியில் ஒளிரும் வாளின் மகிமையை
வெளியெங்கும் நிறைக்கிறது பாடல்
புலம்பலை பரிகசிக்கும் அவன் பாடலில்
துயரில்லை
வாதையில்லை
குருதியின் பிசுபிசுப்பில்லை
களியாட்டத்திற்கான உற்சாகம்
பீறிட்டு வழிகிறது

தோற்றவர்களின் சடலங்களை
நெறித்தபடி வரும் ரதத்திலிருந்து
முடிவற்றப் போருக்கான
பேரழைப்பு கேட்கிறது
துணிவை விதைக்கும் அவ்வழைப்பில்
நடுக்கமில்லை
ஈரமில்லை
உயிரை மதிக்காத
கொலைக்களத்தின் ஆரவாரமே
நிரம்பியிருக்கிறது

பகுத்தறிவின் கழுத்தை சுருக்கிட்டுத்
தூக்கும் கேபிள்ஒயரிலிருந்து
கையசைத்து புன்னகைக்கிற
கருணையற்ற எதிர்காலம்
புராணத்திலிருந்து வருவிக்கும் எதிர்காலத்தில்
வண்ணத்ப்பூச்சியில்லை
பறவகளில்லை
மலர்களில்லை
நீ இல்லை
நான் இல்லை
சங்கீதத்தின் அமைதியில்
சாவின் ஓலம் நிரம்பி
வரலாறும் வாழ்வும்
வெளுத்து காவியாகியிருக்கும்

சம்மதமானால்
ரிமோட்டை அமுக்கு
நம் அடுப்பில் மூட்டவேண்டிய
நெருப்பைத் திருடி
அறுபத்திநாலு சேனல்களிலும்
இந்தியா ஒளிரும்.

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It