நிறைந்து வழிந்த மனிதத் தடங்களைத்
தேடியலைந்து மீண்டும் வாசலில் பதிக்கவும்,
புதையுண்ட உறவொன்றின் பாதி மலர்ந்த
செடியொன்றைத் தோண்டி எடுக்கவுமாய்,
பூமரக் காற்றின் சிதைந்த புகையூடே
ஒருநாள் நான் மீளக்குடியமர்வேன்..........
மீன்பிடித்த குளமொன்றின் உடைப்படைக்கவும்,
கரும்பலகைச் சிதிலங்கள் கரிபூசி மெழுகவுமாய்,
குருதி படிந்திருக்கும் புழுதி நிலத்தூடே
ஒருநாள் நான் மீளக்குடியமர்வேன்..........
பாதியில் நிறுத்திய கவிதையை முடிக்கவும்,
பாதையில் படர்ந்த கொடிகள் அகற்றவுமாய்,
வங்கக் கடலின் வண்ண அலையூடே
ஒருநாள் நான் மீளக்குடியமர்வேன்............
தேசக்கனவில் புதைந்து வெளிவராத
தோட்டாவொன்றைச் செலுத்தவும்,
என் தேகமெங்கும் நிறைந்திருக்கும்
தமிழீழக் கனவை உயிர்க்கவுமாய்,
மனிதம் தின்ற உலகினூடே மறுபடி
ஒருநாள் நான் மீளக்குடியமர்வேன்.
நீ மீளக் குடியமர்த்தும் முன்னதாய்
நானே ஒருநாள் மீளக்குடியமர்வேன்..............
- கை.அறிவழகன்